Tuesday, November 18, 2025

கட்சிக்கு தாவிய பிஆர்எஸ் எம்எல்ஏகள் தகுதி நீக்க வழக்கில் தெலுங்கானா சபாநாயகருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்சுப்ரீம் கோர்ட் அதிரடி

தெலுங்கானா சபாநாயகருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்; எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி


புதுடில்லி: 'தெலுங்கானாவில், ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு தாவிய பி.ஆர்.எஸ்., எனப்படும் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின், 10 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்வதற்கான மனு மீது சபாநாயகர் ஏன் இதுவரை முடிவு எடுக்கவில்லை?' என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், 'இது மோசமான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை' எனவும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தெலுங்கானாவில் கடந்த, 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில், சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ்.,சை தோற்கடித்து, காங்., முதல் முறையாக ஆட்சியை பிடித்தது. இதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றார்.

ஆட்சி மாற்றம் ஏற் பட்டதை அடுத்து, பி.ஆர். எஸ்., கட்சியை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.,க்கள், ஆளும் காங்., கட்சிக்கு தாவினர்.

அறிவுறுத்தல் இதனால், அதிர்ச்சி அடைந்த கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ், அந்த 10 எம்.எல்.ஏ.,க்களையும் தகுதி நீக்கம் செய்யும்படி சபாநாயகர் கடம் பிரசாத் குமாரிடம் முறையிட்டார்.

அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், பி.ஆர்.எஸ்., சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த ஜூலை 31ல் இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வு, 'பி.ஆர்.எஸ்., கட்சியை சேர்ந்த, 10 எம்.எல்.ஏ.,க்களையும் தகுதி நீக்கம் செய்வது குறித்து மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்' என, சபாநாயகருக்கு அறிவுறுத்தி, வழக்கை ஒத்திவைத்தது.

கேள்வி இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றாமல் சபாநாயகர் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதால், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எடுக்கக்கோரி, கடந்த 10ம் தேதி பி.ஆர்.எஸ்., சார்பில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, 'தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகர் ஏன் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

சபாநாயகர் கடம் பிரசாத் குமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி மற்றும் அபிஷேக் சிங்வி, 'தகுதி நீக்க மனுக்கள் மீது முடிவு எடுக்க மேலும் எட்டு வாரங்கள் அவகாசம் தேவைப்படுகிறது' என தெரிவித்தனர்.

ஒத்திவைப்பு இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், ''இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். முந்தைய உத்தரவுகளை மதிக்காதது மிக மோசமான நீதிமன்ற அவமதிப்பு செயல். முடிவெடுக்கும் உரிமை சபாநாயகரிடம் தான் இருக்கிறது.

''அதற்கு ஏன் அவர் காலம் தாழ்த்துகிறார். புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கால அவகாசம் கேட்கிறாரா?'' என, கடும் அதிருப்தி தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தின் உணர்வுகளை தனிப்பட்ட முறையில் சபாநாயகரிடம் எடுத்துரைப்பதாக வழக்கறிஞர் ரோஹத்கி அப்போது தெரிவித்தார்.

எனினும், இதை ஏற்காத நீதிபதிகள், தெலுங்கானா சபாநாயகருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

இட ஒதுக்கீடு - 50% தாண்ட முடியாது- தமிழகத்தை சுட்டிக்காட்டிய தெலுங்கானா! ரிசர்வேஷனையே ரத்து செய்த உச்சநீதிமன்றம்

ஓபிசி  இட ஒதுக்கீடு  50% உச்சவரம்பு தமிழகத்தை சுட்டிக்காட்டிய தெலுங்கானா! ரிசர்வேஷனையே ரத்து செய்த உச்சநீதிமன்றம்  By Vigneshkumar Updated: ...