ஸ்டெர்லிங் நிறுவனத்தின் ரூ.14,000 கோடி வங்கி கடன் மோசடி - சந்தேசரா சகோதரர்கள் ரூ.5,100 கோடி செலுத்த முடிவு செய்திப்பிரிவு Updated on: 26 Nov 2025,
சந்தேசரா சகோதரர்கள் என்று அழைக்கப்படும் நிதின், சேத்தன் ஆகியோர் ஸ்டெர்லிங் பயோடெக்கின் நிறுவனர்களாவர். இவர்கள், வங்கிகளில் ரூ.14,000 கோடி அளவுக்கு கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, சந்தேசரா சகோதரர்கள், குடும்ப உறுப்பினர் உட்பட 4 பேர் கடந்த 2017ல் வெளிநாட்டுக்கு தப்பியோடினர். 2020 செப்டம்பரில் இவர்கள் அனைவரும் தேடப்படும் பொருளாதார குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு சொந்தமாக வெளிநாட்டில் உள்ள எண்ணெய் கிணறு உள்ளிட்ட ஏராளமான சொத்துகளை முடக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இருப்பினும், அமலாக்கத் துறையின் உத்தரவுகளுக்கு வெளிநாடுகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் விஜய் பிஷோனி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியதாவது: ஸ்டெர்லிங் பயோடெக் வங்கி கடன் மோசடி வழக்கில் அதன் நிறுவனர்கள் ரூ.5,100 கோடியை திருப்பிச் செலுத்த ஒப்புகொண்டுள்ளனர். இதனை மத்திய அரசும், அமலாக்கத் துறையும் ஏற்றுக்கொண்டுள்ளன. பொதுமக்களின் பணம் மீண்டும் வங்கிகளுக்கே திரும்ப உள்ளது.
இதற்கு மேலும் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகளை தொடர்வது எந்த பயனையும் அளிக்காது. அனைத்து தொகையையும் வரும் டிசம்பர் 17ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். ஆனால், இந்த உத்தரவு இந்த ஒரு வழக்குக்கு மட்டுமே பொருந்தும். இதனை முன்னுதாரணமாக கருதக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment