Friday, November 7, 2025

UPI மூலமாக பணம் கொள்ளை- மீட்ட சோக கதை- நமக்கு பாடம்

 2 வாரத்துக்கு முன்பு என்னோட Priyadharshini Gopal வங்கிகணக்கு அடையாளம் தெரியாத நபர்களால் முடக்கப்பட்டு என்னுடைய பணம் ரூ.7800 UPI மூலமாக எடுக்கப் பட்டது.

பலருக்கு இது சிறிய தொகையாக இருக்கலாம். ஆனால் எனக்கு அது மிக முக்கியம். இந்த பணத்தை நான் எப்படி இழந்தேன் அதனால் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளானேன், என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொண்டேன் என்று விளக்குவதற்கான ஒரு விழிப்புணர்வு பதிவு. இது வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

மகனோட பள்ளி வாட்ஸப் குழுவில் ஒரு மெசேஜ். PM KISAN மட்டும் இருந்தது. அரசு பள்ளில அவர் படிப்பதால் பள்ளி நிர்வாகம் தான் அனுப்பி இருக்குமென்ற அனுமானத்தால் அதை கிளிக் செய்துவிட்டேன். அது மட்டும் தான் நான் என்பக்கத்துல இருந்து செய்த தவறு. அது ஒரு apk file. அதாவது புதிதாக ஒரு application install செய்வதற்கான link. ஒரு மாதிரி சந்தேகமா இருந்ததால் அப்பவே installation cancel செய்துவிட்டேன். வேறு வேலையாலும் மோசமான மன நிலையிலும் இருந்ததால் எனது கைபேசியை சரியாக கவனிக்கவில்லை. நான் லிங்க் தொட்டவுடன் எனது கைபேசி அவர்களின் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிட்டது. எனது கைபேசியில் எந்த அழைப்பு வந்தாலும் SMS, whatsapp, Application, Gmail, Third party UPI application like Gpay, Phonepe என அனைத்தும் அவர்களது கட்டுப்பாடின் கீழ் வந்து விட்டது. கணக்கில் இருந்த பணம் 7800ம் புது UPI ID Create செய்து, எனக்கு வந்து OTP படித்து அவர்களுக்கு பரிமாற்றம் செய்தனர். அது 1 மணி நேரம் பின்பு எனது கைபேசியை எடுத்து பார்த்த பிறகு தான் தெரிய வந்தது. இனி நான் செய்தது தான் மிக முக்கியம்.
வங்கிக் கணக்கு இருக்கும் HDFC customer care க்கு அழைத்து எனது Account, Net banking, Debit card, Mobile banking, All UPI’s deactivate செய்தேன். கூடவே நடந்ததை விளக்கி அவர்களிடத்தில் ஒரு புகார் அளித்தேன். மற்றும் மாற்றப்பட்ட பரிவர்த்தனைகள் அனைத்தின் Transaction ID எண்ணை வாங்கிக் குறித்துக் கொண்டேன். அடுத்து 1930 என்ற cybercrime எண்ணுக்கு அழைத்து அங்கேயும் ஒரு புகார் அளித்தேன். அவர்களிடம் புகார் கொடுக்கும் போது மேற்கூறிய Transaction details and Account Number கைவசம் இருப்பது அவசியம்.
திருட்டு நடந்தது வார இறுதி. திங்கள் காலை வங்கிக்கு சென்று எனது statement copy வாங்கிக்கொண்டேன். அவர்களுக்கு காவல் நிலைய புகார் எண் தேவை.
அடுத்து நேரடி புகார்களுக்கான நேரம். என் விலாசத்துக்கு அடையார் துணை ஆணையர் அலுவலகத்தில் இருக்கும் cyber crime dept சென்று எழுத்துப்பூர்வமாகவும் புகார் அளித்தேன். அப்போது online புகார் எண் கைவசம் இருத்தல் அவசியம்.
அடுத்த பயணம் எங்கள் பகுதி காவல் நிலையம். அங்கு திரும்ப ஒரு எழுத்து புகார், எனது bank statement, online cyber complaint number, Address proof, கைபேசி பாதிக்கப்பட்டிருபதற்கான ஆதாரம் என எல்லாமே சமர்ப்பித்து ஒரு நாள் காத்திருந்து CSR complaint online file செய்து வங்கியிலும் ஆணையர் அலுவலகத்திலும் கொடுத்துவிட்டேன்.(இது மிக மிக அவசியமானது)
இத்தனைக்குப் பின் வங்கியிலும், காவல் நிலையத்திலும் ஆணையர் அலவலகத்திலும் கூறிய ஒரு பதில். எதாவதுன்னு நாங்க கூப்டுறோம் போயிட்டு வாங்க’. கைல தீபாவளி காசு 500, வண்டியில பெட்ரோல் 200, தேதி 27 தான். மனதிற்குள் ‘போதும் 4 நாள்ல்ல சம்பளம் வரப்போது’.
மண்டைக்குள் மணி அடித்தது. ‘அய்யயோ சம்பளம் வரப்போகுது’.
ஆமாம் இத்தனைக்கு பிறகும் எனது கைபேசி அவர்களது கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்பதை என்னால் உணர முடிந்தது. விரைவாக சூடேருவதும், எந்த application தொட்டாலும் மிக மெதுவாக வேலை செய்வதும் என இன்னும் அந்த சுழலில் இருந்து நான் வெளிவரவில்லை என்பதை உணர்ந்திருந்தேன். சரி அடுத்து நான் செய்யவேண்டியது என்ன?
திரும்ப காவல் நிலையம், வங்கி என அலைந்தேன். வங்கியில் பணம் வரலாம் ஆனால் அது வெளியே எடுக்க முடியாத படி பெரிய பூட்டாக போட்டென்(அலவலகத்தில் சொல்லி சம்பளத்தை நிறுத்தலாம். ஆனால் எனக்கு அது அவசியம். எனக்கு சம்பளமும் வேண்டும் அது வேறு யாரும் எடுத்துவிடவும் கூடாது). ஏற்கனவே கைபேசியை Factory reset செய்திருந்தாலும், cyber crime ல் பணிபுரியும் நண்பர் ஒருவர் Flash செய்வது தான் பாதுகாப்பானது என்று கூற கைபேசி, ரிச்சி தெருவில் ஒரு நாள் கிடந்தது.
பூட்டேல்லாம் போட்ட பிறகு கூட whatsapp code, Phonepe installation OTP, Gmail password reset mail எல்லாம் எனக்கு வந்த வண்ணம் இருந்தது. சம்பளத்தேதி இரவு 2 மணிக்கு Phone pe OTP வந்திருந்தது. Restroom சென்று வந்து பார்க்க அன்று முற்றிலும் தூக்கம் தொலைத்தேன்.
வெறும் மாத வருமானத்தை மட்டும் நம்பி ஜீவனம் செய்பவள், சிறுது சருக்கினாலும் எந்திரிக்க நாள் பிடிக்கும், சம்பளப்பணத்தை தொலைப்பதை நினைத்துப்பார்க்க முடியவில்லை. 2 நாள் மோந்தா புயலால் ஆன மழையோடு அலைந்திருந்தேன். எதாவது பாதுகாப்பு என் தரப்புலிருந்து செய்ய வேண்டியது விட்டிருக்கிறதா என்று யோசித்த வாரே திரிந்தேன். வங்கி ஊழியர்கள், நண்பர்கள், என விசயம் தெரிந்தவர்களெல்லாம் ‘ என்னம்மா படிச்சவங்களே இப்டி பண்றீங்க. யோசிக்க வேண்டாமா’ என்று கேக்கும் போது, ‘அந்த பணம் எல்லாம் வராது எதுக்கு அலையுற’,ந்னும் சொல்லும் போது அதில் எனது அறியாமை தெரிகிறதா அல்லது என் மீதான ஏளனம் தெரிகிறதா என்று தேடிக்கொண்டே இருந்தேன். போதா குறைக்கு மென்பொருளாளர் என்று தெரிய வரும் போது கிடைக்கும் பேச்சு இருக்கிறதே அவ்வளவுதான். போதும்டா சாமின்னு இருக்கும்.
சம்பளம் பாதுகாப்பாக உள்ளது. ஆனால் முன்பு போல் ஒரு swipe ல் அதை செலவளிக்க முடியவில்லை. 10 நாள் கழித்து இன்று தான் எனக்கு Debit card வந்தது. அதுவரையில் தேவையான பணத்தை காசோலை மூலமாக எடுத்துக்கொண்டேன் (இனிமேன் பூட்டுப்போடாதீங்கன்னு வங்கில எழுதி வாங்க்கிட்டு காசு குடுத்தாங்க). சரி இனி UPI எப்படி? எனக்கு கிடைத்த ஆலோசனைகள் சில. (அனைத்தும் வங்கியிலும் காவல் நிலையத்திலும் கிடைத்தது)
UPI தான் சமீபத்திய அவர்களுது ஆயுதம் ஆக அதை சம்பள கணக்கில் வைத்திருக்க வேண்டாம். ஒரு secondary account வைத்து தேவையான பணத்தை IMPS மூலம் சம்பள கணக்கிலிருந்து அனுப்பக்கலாம். அப்போதைக்கு செலவு செய்யலாம். குறைந்த பட்சம் 1000 - 5000 maintain செய்யலாம்.
வங்கி mobile application லையே UPI வசதி இருந்தது. Third party application க்கு பதிலாக அதை உபயோகிக்கலாம். வங்கிகளில் செயல்படும் Wallet வசதியை பயண்படுத்தலாம்.
E-vaagan, PM KISAN என்று அரசு பெயர்களை பயன்படுத்தி வரும் எந்த மெசேஜயும் தொடவோ பொருட்படுத்தவோ வேண்டாம். ( நமது அரசு சலுகைகள் மெசேஜ் மூலம் வரா. முதல்ல சலுகைகளே வராது வந்தாலும் இதுல வராது).
இந்த பணம் எல்லாம் வராது தான? பின்ன ஏன் இவளோ அலைச்சல்?
வரும்ன்னு உறுதியா எப்டி சொல்ல முடியாதோ அதே போல வராதுன்னு சொல்ல முடியாது, சில தவறான transaction complaint எல்லாம் 24 மணி நேரத்துல சரி ஆயிருக்கு. எனக்கு பணம் வந்திரும்ன்னு, நம்பல வந்தா நல்லது.
நேற்று வங்கி என்னுடைய புகார் பேர்ல நடவடிக்கை எடுத்து தற்காலிகமா அந்த தொகையை எனக்கு வரவு வச்சிருக்காங்க. வழக்கு 17ம் தேதி நிறைவுற்றதும் அதை பயன்படுத்திக்கலாம்ன்னு தகவல் கிடைச்சிருக்கு. செமல்ல
ஆக கடமையை செய் பலன் நிச்சயம் கிடைக்கும். அலைச்சலுக்கு பயந்தோ, பணம் கிடைக்காதுன்னு நான் நம்பியிருந்தாலோ, வெளியே சொன்னால் அவமானமாக இருக்கும் என்று நினைத்தாலோ, மன உளைச்சலில் நகராமல் இருந்திருந்தாலோ எனக்கு தீர்வு கிடைக்காது. மனிதன் தவறு செய்வது இயற்கை, அதுவும் தொழில் னுட்பம் மிகுந்திருக்கும் இந்த நாளில் ஓடிக்கொண்டிருப்பவர்களிடம் திருடுவது சுலபம். ஏனென்றால் அவனுக்கு நிற்க நேரம் இருக்காது. ஆனால் தவறுகளை நின்று எதிர்கொள்ள வேண்டும். கனிசமான நேரத்தை அதற்கு ஒதுக்க வேண்டும். இதே பூதம் வேறு வடிவிலும் வரலாம். எத்தனை முறை வந்தாலும் முடிந்த அளவு நமது பக்கம் பிழையில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பிழையே நடந்தாலும் அதனால் ஏற்படும் சிக்கல்களை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.
பணம் திரும்ப கிடைக்கவேண்டுமென்று நான் இத்தனையும் மெனெக்கெடவில்லை. I did a mistake, அதற்கு இந்த அலைச்சல் மெனெக்கெடல் எல்லாம் ஒரு தண்டனையாகவே மேற்கொண்டேன். ஒரு நகர்த்தலில் அல்லது 4 இலக்க எண்ணை வெகு சுலபமாக கைபேசியில் போட்டு, சம்பாதியத்தை 10 நாளில் காலி செய்யும் எனக்கு அது இல்லாமல் போனால் என்ன ஆகும் என்று 1 வாரம் தலையைப் பிய்த்துக்கொள்ள வைத்து புரியவைத்திருக்கிறது காலம்.

No comments:

Post a Comment

UPI மூலமாக பணம் கொள்ளை- மீட்ட சோக கதை- நமக்கு பாடம்

  2 வாரத்துக்கு முன்பு என்னோட Priyadharshini Gopal வங்கிகணக்கு அடையாளம் தெரியாத நபர்களால் முடக்கப்பட்டு என்னுடைய பணம் ரூ.7800 UPI மூலமாக எட...