Thursday, October 24, 2024

எல்லீஸ்- திருக்குறளைத் தீயிலிட்டார்களா ?

 திருக்குறளைத் தீயிலிட்டார்களா ? 

பொ வேல்சாமி

நண்பர்களே….
இணையக் காணொளியில் ( youtube ) கடந்த ஓரிரண்டு ஆண்டுகளாக மாங்கா மடையர்களால் பாராட்டப்பட்ட இரண்டு சொற்பொழிவாளர்கள் தங்களுடைய பேச்சில் தமிழ்நாட்டில் பனை ஓலைகளில் திருக்குறள் எழுதப்பட்டிருந்த சுவடிகள் அனைத்தும் குளிர்காய்வதற்காக அறிவற்ற மக்களால் எரிக்கப்பட்டு விட்டது என்றும் அதனால் திருக்குறள் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் தமிழ்நாட்டில் கிடைக்காமல் போய்விட்டது என்றும் எனவே 19 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் திருக்குறளை அச்சிடுவதற்கான திருக்குறள் ஓலைச்சுவடிகளே கிடைக்காமல் போய்விட்டது என்றும் இப்படியான சூழ்நிலையில் அயோத்திதாசரின் தாத்தா எரிவாயிலிருந்து தப்பித்த ஒரு ஓலைச்சுவடிக் கட்டை 1812 இல் சென்னையில் கவர்னராக இருந்த ( உண்மையில் அவர் கவர்னரே கிடையாது, அவர் சென்னையில் கலெக்டராக இருந்தார்.) எல்லீஸ் துரையிடம் கொடுத்ததாகவும் அந்த ஓலைச்சுவடியை வைத்துதான் திருக்குறளை எல்லீஸ் முழுமையாக அச்சிட்டு வெளியிட்டார் என்றும் அபத்தமாக உளறி வருகின்றனர்.


உண்மையில் இப்படியான எந்தவொரு நிகழ்ச்சியும் வரலாற்றில் நடைபெற்றதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. மாறாக 1812 இல் திருக்குறளை மட்டுமல்ல நாலடியாரையும் திருவள்ளுவமாலையும் சேர்த்து முழுமையாக அச்சில் வெளியிட்டவர் தஞ்சை மலையப்ப பிள்ளையின் மகன் ஞானபிரகாசன் என்பவர்தான். எல்லீஸால் வெளியிடப்பட்ட திருக்குறள் பாடல்கள் வெறும் 129 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ( திருக்குறளை எல்லீஸ் முழுமையாக வெளியிடவில்லை )
தஞ்சை ஞானபிரகாசன் அந்தக் காலத்தில் திருக்குறள், நாலடியார், திருவள்ளுவமாலை சார்ந்த ஓலைச்சுவடிகளைத் தேடும்போது பல ஓலைச்சுவடிகள் கிடைத்ததாகவும் அந்தச் சுவடிகளைக் கொண்டு ஒப்பிட்டு ஆராய்ந்து பிழைகளை நீக்கி சுத்தமான பதிப்பாக திருக்குறளை அச்சில் கொண்டு வந்ததாகக் குறிப்பிடுகின்றார். தஞ்சை ஞானபிரகாசன் 1812 இல் பதிப்பித்த திருக்குறள் நாலடியார் நூல்களின் இணையதள இணைப்பை இத்துடன் இணைத்துள்ளேன்.
18 ம் நூற்றாண்டின் இறுதியில் புகழ்பெற்ற தமிழறிஞராக விளங்கிய “சிவஞான முனிவர்” “சோமேசர் முதுமொழி வெண்பா” என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூல் 1770 – 1785 காலகட்டத்தில் எழுதப்பட்டது. இந்த நூலில் 100 திருக்குறளை சைவ சித்தாந்த கருத்துகளுடன் இணைத்து பாடல்களாகப் பாடியுள்ளார். இந்த நூலின் இணையதள இணைப்பையும் தந்துள்ளேன். எல்லீஸ் சென்னை வருவதற்கு சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நூல் எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
1794 இல் திருக்குறள் நாலடியார் போன்ற அறம் உரைக்கும் தமிழ்நூல்களிலிருந்து பல பாடல்களைத் திரட்டி கிண்டர்ஸ்லே (Kindersley) 400 பக்கங்களில் ஒரு நூலை வெளியிட்டார். அதில் 51-82 ம் பக்கம் வரையில் திருக்குறள் பாடல்கள் உள்ளதாக “பிரிட்டிஷ் மியூசியம்” நூலகத்தில் பதிவாகியுள்ளது. அந்தப் பக்கத்தின் படத்தையும் இணைத்துள்ளேன்.
குறிப்பு
திருக்குறள் இயற்றப்பட்ட காலத்தை அடுத்து வந்த புகழ்பெற்ற புலவர்கள் – அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் திருக்குறளையும் திருவள்ளுவரையும் தங்களுடைய நூலில் தொடர்ந்து பாராட்டி குறிப்பிட்டு வந்துள்ளனர். எனவே திருக்குறள் சுவடிகள் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் எல்லா காலங்களிலும், எல்லா இடங்களிலும் எளிதில் கிடைக்கக்கூடியதாக இருந்தது. குறிப்பிட்டு கூறவேண்டுமானால் திருக்குறளை அமெரிக்க ஐரோப்பிய பாதிரியார்கள் ( 18,19 ம் நூற்றாண்டுகளில் ) அனைவரும் அறிந்திருந்தனர் என்பதும் திருக்குறளையும் பரிமேலழகர் உரையையும் மிகவும் பாராட்டி பல இடங்களில் பதிவுசெய்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எல்லீஸ் பதிப்பித்த திருக்குறள்





புதுச்சேரியில் வாழ்ந்த ஆனந்தரங்கப்பிள்ளை தனது நாட்குறிப்பின் பல இடங்களில் குறளைப் பயன்படுத்தி இருக்கிறார்.
1749 நொவம்பர் 16 கார்த்திகை 5 ஆதிவாரம் நாட்குறிப்பில், சென்னப்பட்டணம் சித்துக்காட்டு சின்னதம்பி முதலியாரைச் சந்தித்த குறிப்பு இடம்பெற்றுள்ளது.
"என்னைக் கண்ட உடனே கும்பிட்டு தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதில்லார் தோன்றலின் தோன்றாமை நன்று என்கிற திருவள்ளுவர் குறளைச் சொல்லி" என குறிப்பு தொடர்கிறது.
18ஆம் நூற்றாண்டின் மத்தியிலேயே குறள், பரவலாகப் பரவி இருந்தது என்பதற்கு ஆனந்தரங்கரின் இக்குறிப்பு ஆகச் சிறந்த உதாரணம் ஆகும்.

No comments:

Post a Comment

எல்லீஸ்- திருக்குறளைத் தீயிலிட்டார்களா ?

  திருக்குறளைத் தீயிலிட்டார்களா ?   பொ வேல்சாமி நண்பர்களே…. இணையக் காணொளியில் ( youtube ) கடந்த ஓரிரண்டு ஆண்டுகளாக மாங்கா மடையர்களால் பாரா...