Friday, October 18, 2024

“நீட் எழுதாமல் மருத்துவராகலாம்” என யோகா, நேச்சுரோபதி மருத்துவக் கல்லூரிகள் செய்யும் பித்தலாட்டம்

“நீட் எழுதாமல் மருத்துவராகலாம்” என யோகா, நேச்சுரோபதி மருத்துவக் கல்லூரிகள் செய்யும் பித்தலாட்டம் !Gnana Prakash 5 ஜனவரி, 2023

சில மாதங்களுக்கு முன்னர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது நீட் எழுதாமல் நீங்கள் மருத்துவராகலாம் என்ற விளம்பர பதாகையைப் பார்க்க நேர்ந்தது. ஒரு மாநில அரசு நீட் தேர்வை ரத்து செய்வோம் எனத் தேர்தல் வாக்குறுதி அளித்து ஒன்றிய அரசுடன் போராடி வருகிறது. ஆனால், சர்வ சாதாரணமாக 'நீட் தேர்வு எழுதாமல் மருத்துவராகலாம்' என ஒருவர் விளம்பரம் கொடுக்கிறார் என்றால் அவர் மாநில அரசை விட பலம் மிகுந்தவராக இருக்க வேண்டும் அல்லது ஊரை ஏமாற்ற ஒரு விளம்பரம் கொடுத்திருக்க வேண்டும்.


ஆர்வம் மேலோங்க வண்டியின் வேகத்தைக் குறைத்து, 'யு டர்ன்' அடித்துத் திரும்பி வந்து அப்பதாகையை மீண்டும் படித்துப் பார்த்தேன். அது ஒரு யோகா, நேச்சுரோபதி மருத்துவக் கல்லூரியின் விளம்பரம். இதற்கான கலந்தாய்வே தமிழ்நாடு அரசு தான் நடத்துகிறது.

நீட் தேர்வு என்பது MBBS-க்கு மட்டுமல்லாது ஆயுர்வேதம், சித்தா, ஹோமியோபதி போன்ற இந்திய மருத்துவமுறை படிப்புகளுக்கும் கட்டாயம் என உச்ச நீதிமன்றம் நீதிபதி நாகேசுவர ராவ் 2020 பிப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்கினார்.

இந்நிலையில் யோகா, நேச்சுரோபதி படிப்பான BNYS (Bachelor of Naturopathy & Yoga Science)-க்கு மட்டும் எப்படி நீட் தேர்விலிருந்து விலக்கு பெறப்பட்டது என்ற கேள்வி எழுகிறது. இங்குதான் ஒன்றிய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதனை தற்போதுள்ள தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு யாரேனும்  கொண்டு சென்றார்களா என்பது தெரியவில்லை.



ஒரு பக்கம் நீட் கல்வித் தரத்தினை உயர்த்தும் என ஒன்றிய அரசு கூறி வருகிறது. இதற்கு ஏதுவாக ஒன்றிய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் 2018, பிப்ரவரியில் அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்,  அனைத்து இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கும் (BAMS, BSMS, BHMS, BUMS, BNYS) நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், அதே அமைச்சகத்தின் செயலாளர் 2019, பிப்ரவரியில் BNYS படிப்புக்கு மட்டும் நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை வேண்டாம் எனக் கடிதம் அனுப்பியுள்ளார்.



அக்கடிதத்தில், BAMS, BSMS, BUMS, BHMS ஆகிய நான்கு மருத்துவ படிப்புகளும் Central Council of Indian Medicine மற்றும் Central Council of Homeopathy எனும் சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்ற ஒன்றிய அரசு நிறுவனங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், BNYS படிப்பைக் கண்காணிக்க எந்த சட்டப்பூர்வ அமைப்பும் இல்லை. எனவே BNYS-க்கு நீட் தேவை இல்லை என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரிகளை (MBBS) கண்காணிக்கவும், அதன் கல்வியின் தரத்தை வரையறுக்கவும் National Medical Commission (Medical Council of India) என்ற அமைப்புள்ளது. நர்சிங் கல்லூரிகளுக்கு நர்சிங் கவுன்சில், இந்திய மருத்துவத்திற்கு NCISM (CCIM ) என்ற அமைப்புகள் உள்ளது. ஆனால் யோகா- நேச்சுரோபதி என்ற மருத்துவமுறையை இந்தியத்துறை மருத்துவமாக ஒன்றிய அரசின் IMCC Act 1970 குறிப்பிடவில்லை. எனவே, NCISM, BNYS என்ற பட்டப்படிப்பிற்கு அங்கீகாரம் வழங்கவில்லை.



தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலமாக BNYS படிப்பு குறித்து சில கேள்விகளை ஆயுஷ் அமைச்சகத்திடம் கேட்கப்பட்டது. இப்படிப்பை முறைப்படுத்த ஏதேனும் சட்டப்பூர்வ அமைப்பு உள்ளதா?  BNYS கல்வியை முறைப்படுத்தவும், கல்லூரிகளின் உட்கட்டமைப்பை உருவாக்க ஒன்றிய அரசு ஏதேனும் சட்டம் நிறைவேற்றி உள்ளதா? இது ஒரு தொழில் படிப்பா போன்ற அனைத்து கேள்விகளுக்கும் ‘இது தொடர்பான எந்த தகவலும் எங்களிடம் இல்லை’ என்ற பதிலை மட்டுமே ஆயுஷ் அமைச்சகம் அளித்துள்ளது. இதிலிருந்து BNYS என்ற பட்டப்படிப்பு சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாத ஒரு மருத்துவ படிப்பு என்பது தெளிவாகிறது.

யோகா உடற்பயிற்சியா அல்லது மருத்துவ முறையா ?

யோகா என்பது பாரம்பரியமாக ஒருவகை உடற்பயிற்சியாகவே சித்தர்களாலும் ஞானிகளாலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இதன் மூலம் சில நோயின் நிலைகளில் ஏற்படும் மாற்றம் குறித்து மட்டுமே பழமையான நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் இதனை ஒரு முழுமையான மருத்துவ முறையாகக் குறிப்பிடவில்லை.

B.K.S.ஐயங்கார் என்பவர் மல்யுத்த உடற்பயிற்சியையும், யோகா முறையையும் இணைத்து சில உடற்பயிற்சி நிலைகளை உருவாக்கினார். அவற்றிற்குச் சமஸ்கிருத பெயர்களை வைத்து 'Light on Yoga' என்ற நூலினை வெளியிட்டார். இதன் மூலம் பழமையான நூல்களில் இல்லாத பல யோகாசனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

 B.K.S.ஐயங்கார்

இந்நிலையில். மேற்கத்திய நாடுகளில் இந்த யோகாசன உடற்பயிற்சிகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனால், யோகாவை ஒரு தனி மருத்துவமுறையாக மேம்படுத்திக் காண்பிக்கும் ஆர்வம் மேற்கத்திய நாடுகளிலிருந்த யோகா பயிற்சியாளர்களுக்கு ஏற்பட்டது. ஆனால், சித்தா, ஆயுர்வேத மருத்துவ நூல்களில் யோகா ஒரு பாகமாக ஏற்கனவே நிலைப்பெற்றிருந்தது. எனவே, நமது நாட்டின் சட்டங்களும் யோகாவைத் தனி ஒரு மருத்துவ முறையாக அங்கீகரிக்கவில்லை.

நேச்சுரோபதி என்றால் என்ன ?

நேச்சுரோபதி என்ற மருத்துவமுறை முதன்முதலில் ஜெர்மனியில் உருவானது. ஜெர்மனியைச் சேர்ந்த பெனடிக்ட் லஸ்ட் என்பவர் நேச்சுரோபதியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். நேச்சுரோபதி மருத்துவமுறையை காந்தியடிகள் தீவிரமாக ஆதரித்தார். பெனடிக்ட் லஸ்டினின் ஆசிரியரான அடால்ப் ஜஸ்ட் எழுதிய 'Return to Nature' என்ற நூலால் காந்தியடிகள் மிகவும் ஈர்க்கப்பட்டிருந்தார். 'All India Nature cure foundation trust' என்ற அமைப்பை 1945-ல் பூனேவில் காந்தியடிகள் நிறுவினார். 

இப்படி காந்தியடிகள் முன்னிறுத்திய ஒரு மருத்துவமுறைக்கு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டிய சூழலில் அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் இருந்தது. ஆனால், நேச்சுரோபதி ஒரு மேற்கத்திய முறை. எனவே அதை இந்தியப் பாரம்பரிய மருத்துவமுறையாக முன்னிறுத்த முடியவில்லை.

நேச்சுரோபதி மருத்துவ முறைக்கு ஒரு இந்திய முகம் தேவைப்பட்டது. அதே சமயம் யோகாவுக்கு ஒரு தனி மருத்துவமுறை என்ற அங்கீகாரம் தேவைப்பட்டது. இவை இரண்டையும் இணைத்துத் தனி மருத்துவத்துறையாக முன்னிறுத்தினால் அந்த தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என்பதின் அடிப்படையில் உதயமானது தான் யோகா- நேச்சுரோபதி என்ற ஒரு செயற்கை கூட்டணி.

பிறகு, வாஜ்பேயின் ஆட்சிக்காலத்தில், ஆயுர்வேதா A, யோகா-நேச்சுரோபதி Y, யுனானி U, சித்தா S, ஹோமியோபதி H என்ற ஐந்தும் சேர்ந்தது 'AYUSH' என்ற புதிய பெயர் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறைக்குச் சூட்டப்பட்டது. 

BNYS பட்டப்படிப்பில் சட்டச்சிக்கல்கள்:

கடந்த 2006, செப்டம்பர் மாதம் ஒன்றிய சுகாதாரத்துறை நேச்சுரோபதி கல்வியை ஒழுங்குபடுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து மாநில சுகாதாரத் துறை செயலாளர்களுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், நேச்சுரோபதி மருத்துவ பயிற்சியை ஒழுங்குபடுத்த ஒன்றிய அரசின் சட்டங்கள் எதுவும் இல்லாத நிலையில், மாநில அரசுகள் அதனை வரை முறைப்படுத்தச் சட்டம் இயற்ற வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  



அவ்வாறு இயற்றும் போது, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள யோகா- நேச்சுரோபதி கல்லூரிகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பாக மத்திய அரசின் Central Council for Research in Yoga and Naturopathy (CCRYN) செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 16 வருடங்களுக்கு பிறகும் இன்று வரை CCRYN அப்பொறுப்பை ஏற்கவில்லை.



மேலும், BNYS படித்த ஒருவர் தனியாக ஒரு மருத்துவமனையை நடத்தும் மருத்துவராகத் தகுதி பெற்றவரா? அவர் வழங்கும் மருத்துவ சான்றிதழ் மற்றும் இறப்பு சான்றிதழ் சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படுமா? என்ற கேள்விகள் RTI மூலம் ஆயுஷ் அமைச்சகத்திடம் கேட்கப்பட்டது. இது தொடர்பான எந்த தகவலும் எங்களிடம் இல்லை என CCRYN-ம் பதில் அளித்துள்ளது.

BNYS படித்த ஒருவர் மருத்துவமனை நடத்துவதோ, மருத்துவ சான்றிதழ் வழங்குவதோ சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாது. இந்நிலையில் ஒரு சில கார்ப்பரேட் சாமியார்களின் மனிதவள தேவைக்காகத் தான் இந்த பட்டப்படிப்பு என்பது தெளிவாகிறது.

இப்படிப்பு குறித்து தமிழ்நாடு அரசு மற்றும் பிற மாநில அரசுகளின் அணுகுமுறை என்ன? 

இந்தியாவில் 9 மாநிலங்களில் மட்டுமே BNYS பட்டம் பெற்றவர்கள் தனி மருத்துவமனை பயிற்சி செய்கிறார்கள். அதிகபட்சமாகக் கர்நாடகாவில் 1770 பேரும், அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் 1073 பேரும் பயிற்சி செய்கிறார்கள். குஜராத், கோவா, உத்தராகாண்ட் மாநிலத்திலோ, உத்தரப்பிரதேசத்திலோ BNYS பட்டம் பெற்றவர் யாரும் தனிப் பயிற்சி செய்யப் பதிவு செய்யவில்லை. 



கடந்த 10 ஆண்டுகளில் (2012-2022) தமிழ்நாட்டில் டாக்டர்.எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் கீழ் சித்தா 4, ஆயுர்வேதம் 3, ஹோமியோபதி 3 மற்றும்  யோகா - நேச்சுரோபதி (BNYS) 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் யுனானியில் ஒரு மருத்துவக் கல்லூரிக்குக் கூட அனுமதி அளிக்கவில்லை.  



கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானிக்கு தலா ஒரு நிரந்தர மருத்துவ பணியிடம் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. அதே சமயம்  யோகா - நேச்சுரோபதிக்கு 59 நிரந்தர மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.



அதேபோல், கடந்த 10 ஆண்டுகளில் சித்தா, ஆயுர்வேத, ஹோமியோபதி ஆகிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் எந்தவொரு நிரந்தர ஆசிரியர் பணியிடமும் உருவாக்கப்படாத நிலையில், யோகா நேச்சுரோபதி மட்டும் 32 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 



குறிப்பாக, இக்காலக்கட்டத்தில் தான் சித்த மருத்துவக் கல்லூரிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால், கல்லூரி இயங்க ஒன்றிய அரசின் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர், தற்காலிக பேராசிரியர்களை நியமித்து தமிழ்நாடு அரசு மேற்கொள்ளப்பட்ட சிக்கன நடவடிக்கை இன்றுவரை பின்பற்றப்பட்டு வருகிறது.

யோகா பயிற்றுநர் உதவிப் பேராசியரான கதை : 

1997-ம் ஆண்டு சென்னை அறிஞர் அண்ணா இந்திய மருத்துவமனையில் யோகா பயிற்றுநர் ஒருவரைத் தற்காலிக பணியாளராக நியமிக்கப்படுகிறார். அவர் N.D என அழைக்கப்படும் Diploma in Naturopathy பட்டய படிப்பை ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளார். இந்த பணியிடம் Paramedical தகுதியுடையது. பின்னர், 1999ம் ஆண்டு ஒரு அரசாணை மூலம் அவர் மருத்துவ அலுவலர் (யோகா) என்று மருத்துவராகத் தரம் உயர்த்தப்படுகிறார். பின்னர் அரசே ஒரு யோகா-நேச்சுரோபதி மருத்துவக்கல்லூரி தொடங்குகிறது. பின்னர், 2002ம் ஆண்டு ஒரு அரசாணை மூலம் அதே நபரின் பணியிடம் நிரந்தரமாக்கப்பட்டு, உதவிப் பேராசியராக பதவி உயர்வு செய்யப்படுகிறார்.



அவர் படித்திருக்கும் Diploma in Naturopathy, UGC act 1956- பிரிவு 22ன் படி அங்கீகாரம் பெறாத ஒரு படிப்பாகும். பயிற்றுநராகத் தற்காலிக பணியில் சேர்ந்த ஒருவர் ஐந்தே வருடத்தில் அரசாணைகள் மூலமாக மருத்துவராகவும், மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியராகவும் மாற முடிவது தமிழ்நாட்டில் மட்டுமே சாத்தியம். 

இந்திய மருத்துவத்தில் யோகா- நேச்சுரோபதி வகைப்படுத்தப்படவில்லை:

Tamilnadu Admission in professional educational Institution act 2006ன் படி தொழிற்படிப்புகளில் (Professional courses) மாணவர் சேர்க்கை 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடத்த வேண்டும். எனவே இந்திய மருத்துவத்துறை மற்றும் ஹோமியோபதி படிப்புகளைத் தொழிற்கல்வி படிப்புகள் (Professional education course) என்று வகைப்படுத்தும் வகையில் Tamilnadu Admission in Professional Educational Institutions act 2006, பிரிவு 2 இல் சேர்க்கும்படி தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு சுகாதாரத்துறை கோரிக்கை வைத்தது.

இதில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி என்ற பட்டியலில் யோகா- நேச்சுரோபதியையும் இணைத்து கோரிக்கை வைக்கப்பட்டது. அக்கோரிக்கை அப்படியே நிறைவேற்றப்பட்டது. ஆனால், IMCC act 1970ன் படி இந்திய மருத்துவம் என்பதில் யோகா- நேச்சுரோபதி வகைப்படுத்தப்படவில்லை.

மேலும், இந்திய அரசின் சுகாதாரத்துறை 2003ம் ஆண்டு வெளியிட்ட அரசாணையில் போலி சிகிச்சை முறைகளை முறைப்படுத்தும் நோக்குடன் Magnet therapy, Reiki ஆகிய சிகிச்சை முறைகள் அங்கீகாரமற்ற மருத்துவ முறைகள் எனக் குறிப்பிட்டுள்ளது. ஆனால், இந்த அங்கீகாரமற்ற சிகிச்சை முறைகளை BNYS பாடத்திட்டத்தில் டாக்டர்.எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் சேர்த்துள்ளது.

மாணவர்களுக்குப் பாதிப்பு : 



2016ம் ஆண்டு கள்ளக்குறிச்சியில் SVS யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேர் கூட்டாகத் தற்கொலை செய்து கொண்டனர். "கல்லூரி நிர்வாகம் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் அதிக கட்டணம் வாங்குகிறது. கல்லூரி தாளாளர் வாசுகி சுப்பிரமணியன் மட்டுமே கல்லூரி ஆசிரியராக உள்ளார். அவரைத் தவிர வேறு ஆசிரியர்கள் கிடையாது. இங்குப் படிப்பதற்கு ஒன்றுமே இல்லை" என்று தற்கொலை செய்யும் முன் அவர்கள் கடிதம் எழுதி வைத்துள்ளனர்.

















2015ம் ஆண்டு 6 மாணவர்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் எலி மருந்தை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். மாணவர்களைச் சமைக்கச் சொல்வது, கார் கழுவ கூறுவது, கட்டிட பணிகளைச் செய்ய நிர்ப்பந்திப்பது போன்ற பணிகளைக் கல்லூரி நிர்வாகம் செய்துள்ளது.  

இந்நிலையில், "கல்லூரியில் எல்லா அடிப்படை வசதிகளும் சிறப்பாக உள்ளது. போதுமான பேராசிரியர்கள் உள்ளனர். எனவே கல்லூரி செயல்படுவதில் எந்த தடையும் இல்லை." என்று தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் ஒவ்வொரு முறையும் அறிக்கை அளித்து கல்லூரி நிர்வாகத்தைக் காப்பாற்றி வந்ததால் மாணவர்களின் போராட்டத்தால் எந்த பலனும் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து 3 மாணவிகளின் தற்கொலைக்குப் பிறகு கல்லூரிக்குச் சீல் வைக்கப்பட்டது. ஆனால், கல்லூரிக்கு அனுமதி அளித்த பல்கலைக்கழக கண்காணிப்புக் குழு மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

ஆனால், இதைப் பற்றி எல்லாம் எந்த அக்கறையும் இல்லாமல், சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லை என்று தெரிந்தும் BNYS படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடத்த இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

'நீட் எழுதாமல் நீங்களும் மருத்துவராகலாம்' என்று கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் கல்வி வியாபாரிகள் கடை விரித்து அப்பாவி மாணவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆர்வமுள்ள மாணவர்களை மருத்துவக்கல்வி பெற முடியாமல் தடுக்க 'நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம்' என்று ஒரு பக்கம். போலியான அங்கீகாரம் இல்லாத மருத்துவ கல்வியை மாணவர்களிடம் திணிக்க நீட் தேவை இல்லை என்று மற்றொரு பக்கம். நீட் என்பது மாணவர்களை நோக்கிப் பாயும் இருபக்க ஆயுதம்.

-மருத்துவர். சித் (சித்த மருத்துவர்)

 புனைபெயர் 

 

< இதுகுறித்து யூடர்ன் தரப்பில் கள்ளக்குறிச்சி SVS மற்றும் சேலம் சிவராஜ் யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவக் கல்லூரிகளைத் தொடர்பு கொண்டு பேசிய போது, " BNYS படிப்பிற்கு நீட் தேர்ச்சி தேவையில்லை என்றும், 12ம் வகுப்பு மதிப்பெண்களே போதும் " என பதில் அளித்து இருந்தனர் >

links : 

hfw_e_80_2015 (1)

bnys-08122016

open_record_view

No comments:

Post a Comment

Egmore 1800 Crore Land - Kirk church is Indian Govt Defence Land

St. Andrew's Church claim on land rejected https://www.thehindu.com/news/national/St.-Andrews-Church-claim-on-land-rejected/article16147...