தீபாவளி சமணப் பண்டிகையோ பௌத்தப் பண்டிகையோ அல்ல. அப்படி யார் சொல்லி இருப்பினும் அது தவறான அனுமானமே தவிர உண்மை அல்ல.
வரலாற்றுப் 
பொருள்முதல்வாத நோக்கில் 
இந்திய சமூக வரலாற்றை (அல்லது தமிழ்ச் 
சமூக வரலாற்றை) ஆராயாமல், குட்டி 
முதலாளிய அரைவேக்காட்டுத் தனத்துடன் 
வந்தடைந்த முடிவுகளே தீபாவளி ஒரு 
பௌத்தப் பண்டிகை என்ற அயோத்திதாசரின் 
அனுமானமும், தீபாவளி ஒரு சமணப் பண்டிகை 
என்ற குட்டி முதலாளியத் தமிழறிஞர் மயிலை 
சீனி வெங்கக்கடசாமியின் அனுமானமும் ஆகும்.  
இவை முற்றிலும் தவறானவை மட்டுமின்றி 
முழுமூடத்தனத்தின் வெளிப்பாடுகள் ஆகும்.
பின் தீபாவளி யாருடைய பண்டிகை?
அது வேளாண் குடிமக்களின் பண்டிகை!
குறிஞ்சி பாலை நிலங்களில் வேட்டுவச்
சமூக வாழ்க்கை நிலவி வந்த காலத்தில் 
வேட்டுவச் சமூகத்திற்கு அடுத்த கட்டச் 
சமூகமான மேய்ச்சல் சமூக வாழ்நிலையை 
எட்டி நின்றன முல்லை மருதத் திணைகள். 
மேய்ச்சல் சமூகம் அதன் இயக்கப் போக்கில் 
வேளாண்மையைக் கண்டறிந்தது. மேய்ச்சல் 
சமூகமும் வேளாண் சமூகமும் அக்கம் பக்கமாக
நிலவின.
ஆண்டாளின் திருப்பாவை இந்நிலையை அழகுறக் 
காட்டுகிறது.
"ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகளப் 
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப 
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்"
என்கிறாள் ஆண்டாள்.
தமிழ்ச் சூழலில், நிலவுடைமைச் சமூகம் தோற்றம் 
பெற்ற ஒரு காலக்கட்டத்தில், சமூகத்தின் 
பொருளுற்பத்தி முறையாக வேளாண்மை ஏற்றம் 
பெறத் தொடங்கியிருந்த ஒரு காலக்கட்டத்தில்
தீபாவளி பிறந்தது.
விலங்குகள் விளைச்சலை அழித்திடாமல்
பாதுகாக்கும் நோக்கத்துடன் ஏற்பட்டது 
தீபாவளிப் பண்டிகை. சமூகத்தின் உற்பத்தி 
முறையில் இருந்துதான் பண்டிகைகள் 
தோன்றுகின்றன என்பது வரலாற்றுப் 
பொருள்முதல்வாத பால பாடம்.
முல்லை நிலத்தில் மனிதனும் விலங்கும்
ஒன்றாகவே வாழ்ந்தனர். வாழிடமான 
முல்லை நிலம் மனிதன் விலங்கு உள்ளிட்ட 
எல்லாத் தரப்பினருக்கும் பொதுவானது.
வேளாண் உற்பத்தி முறைக்கு மாறிய அந்த 
ஆரம்பக் கட்டத்தில், வயலில் விளைந்த 
விளைச்சலை விலங்குகள் பாழ் படுத்தின.
விலங்குகளை விரட்டியடித்து வேளாண்மையைப் 
பாதுகாக்க வேண்டிய தேவை அன்று இருந்தது.
விளைந்த வயலில் கூட்டம் கூட்டமாக விழுந்து 
பயிர்களைத் தின்றும் அழித்தும் உழவர்களுக்குப்  
பேரிழப்பை ஏற்படுத்தும் விலங்குகளை 
தீப்பந்தங்களைக் கொளுத்திக் கொண்டும்
 கருவிகளைக் கொண்டு ஓசை எழுப்பியும்  
விரட்டி அடிக்க வேண்டிய தேவை அப்போது 
இருந்தது.
கேரளத்தின் செண்டை மேளம் என்பது இப்படிப்பட்ட 
ஒரு கருவியே. அன்றைய பயன்பாட்டின் மிச்ச 
சொச்சமாக அது இன்றளவும் ஒரு சான்றாதாரமாக 
நீடிக்கிறது.
ஆக விலங்குகளை ஒலி ஒளி மூலமாக 
(தீப்பந்தம், ஓசை செய்யும் கருவிகள் வாயிலாக)
விரட்டியடிப்பது ஒரு வேளாண் செயல்பாடு.
ஒரு பொருளுற்பத்திச் செயல்பாடு. இதைத் 
தொடர்ந்து செய்ய வேண்டிய தேவை அன்று 
இருந்தது. ஒரு சமூகத்தில் எந்தச் செயலைத்  
தொடர்ந்து செய்ய வேண்டியிருக்குமோ அந்தச் 
செயலை அச்சமூகம் ஒரு பண்டிகையாக ஆக்கி 
விடும். பண்டிகையாக்கம் என்பதன் மூலம் 
அச்செயல் தங்குதடையின்றியும் காலத் 
தொடர்ச்சியோடும் நடைபெறுவதை அச்சமூகம் 
உறுதி செய்து கொள்கிறது.
ஆக இவ்வாறு பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் 
பொருளுற்பத்தியின் தேவையில் இருந்து 
பிறந்ததே தீபாவளி. தீபாவளி ஒரு வேளாண்
பண்டிகை. தமிழ்ச் சமூகம் வேளாண் 
உற்பத்திமுறையின் சிக்கல்களுடன் அல்லாடிக் 
கொண்டிருந்த ஒரு காலக்கட்டத்தில் தீபாவளி பிறந்தது.
தீபாவளி தோன்றிய இந்த ஆயிரம் ஆயிரத்தைந்நூறு 
ஆண்டுகளில் அது பல்வேறு மாற்றங்களைக் 
கண்டுள்ளது. சமூகம் முதலாளிய உற்பத்திமுறைக்கு 
மாறிவிட்ட தற்காலத்தில், அது முதலாளிய 
உற்பத்தியின் மையமான பண்டிகையாக 
மாறி  விட்டது. முந்தைய உற்பத்திமுறையில்
தீபாவளியானது வேளாண் உற்பத்தியின் 
முதன்மையான பண்டிகையாக இருந்தது போல 
தற்கால முதலாளிய உற்பத்தி முறையிலும் அது தனது 
முதன்மையான இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
அப்படியானால் நரகாசுரன் கதை? அது முற்றிலும் 
போலியான ஒரு புனைவு! விஜயநகரத் தெலுங்கு 
மன்னர்கள் தமிழகத்தை ஆக்கிரமித்து வல்லாட்சி
நடத்திய காலத்தில் அவர்கள் கட்டவிழ்த்து விட்ட, 
அறிவியலுக்கு எதிரான ஒரு பொய்க்கதையே
நரகாசுரன் கதை. இக்கதையை பல பத்தாண்டுகளாக 
தமிழர்கள் சீந்தவில்லை. தெலுங்குத் தற்குறியான
ஈ வெ ராமசாமி என்னும் தமிழ்ப் பகைவர், தமிழர்களை 
இழித்துப்பழிப்பதற்கு நரகாசுரன் கதை வசதியாக
இருப்பது கண்டு அக்கதையை மூடர்களாகிய தனது 
தொண்டர்கள் மூலம் தமிழ்நாடெங்கும் பரப்பினார்.    
இந்தியச் சமூகத்தின் தனித்துவம் என்னவெனில்,
இங்கு பண்டிகைகளை உருவாக்கியது சமூகத்தின் 
பொருளுற்பத்தி முறையே தவிர, மதங்கள் அல்ல.
இந்தியச் சமூகத்தில் மதங்கள் பண்டிகைகளை 
உருவாக்கவில்லை. பொருளுற்பத்தியின்போது,
அதன் தேவைகளில் இருந்து இயல்பாக எழுந்தவையே  
இந்தியப் பண்டிகைகள். மக்களின் செல்வாக்கைப் 
பெற்ற பண்டிகைகளை  மதங்கள் சுவீகரித்துக் கொள்ளும்.
இவ்வாறே தீபாவளி திருக்கார்த்திகை உள்ளிட்ட 
பண்டிகைகளை இந்து மதம் சுவீகரித்துக்  கொண்டது.    
இதனால்தான் இன்று நாம் கொண்டாடி வரும் 
பல்வேறு பண்டிகைகளை மதங்கள் உருவாக்கியதாக 
நாம் பிறழ உணர்கிறோம். 
அதே நேரத்தில் இந்து மதத்திற்கு மாற்றாக, ஆபிரகாமிய மதங்களில் பண்டிகைகளை அம்மதங்களே உருவாக்கின. 
அவை பாலைவன மதங்கள். பொருளுற்பத்திக்கோ 
உபரிக்கோ இடம் தராத சமூகங்களில் பண்டிகைகளை 
மதங்களே செயற்கையாக உருவாக்கும்.
இந்தியாவில் இந்து மதமோ பௌத்த சமண 
மதங்களோ எந்த ஒரு பண்டிகையையும்
உருவாக்கவில்லை. இங்கு உருவான 
பண்டிகைகள் அனைத்துமே பொருளுற்பத்தியில் 
இருந்து பிறந்தவை. காலப்போக்கில் மதங்கள் அவற்றை
சுவீகரித்துக கொண்டன. 
******************************************************
பின்குறிப்பு:
1) மார்க்சியம் கற்றிராத, குறிப்பாக வரலாற்றுப் 
பொருள்முதல்வாதம் என்றால் என்னவென்றே 
தெரியாத வாசகர்களால் எடுத்த எடுப்பில் 
இக்கட்டுரையைப் புரிந்து கொள்ள இயலாது.
அவர்கள் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை 
முதலில் அறிந்து கொண்டு, அதன் பின் இந்தக் 
கட்டுரையைப் படிக்கவும்.
2) இக்கட்டுரையின் பதிப்புரிமை ஆசிரியர்க்கு.
எனவே எவரும் கவர வேண்டாம். அதே நேரத்தில் 
இன்னார் எழுதியது என்று குறிப்பிட்டு கட்டுரையை 
எடுத்தாளலாம், Due attribution is a must.
No comments:
Post a Comment