Friday, October 11, 2024

“தமிழகத்தில் 114 பட்டியலின ஊராட்சித் தலைவர்களிடம் சாதிய பாகுபாடு” - ஆய்வு முடிவு வெளியிட்ட ‘எவிடன்ஸ்’ வின்சென்ட் ராஜ்

“தமிழகத்தில் 114 பட்டியலின ஊராட்சித் தலைவர்களிடம் சாதிய பாகுபாடு” - ஆய்வு முடிவு வெளியிட்ட ‘எவிடன்ஸ்’ வின்சென்ட் ராஜ்  கதிர் Last Updated : 20 Apr 2023 06:19 PM

மதுரை: ‘தமிழ்நாட்டில் பட்டியலின ஊராட்சித் தலைவர்களுக்கு எதிராக தீண்டாமை, வன்கொடுமை நடக்கிறது. இதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என, எவிடன்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிர் (எ) வின்சென்ட்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.

பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் மீது தொடர்ந்து சாதிய ரீதியான தீண்டாமைகளும், வன்கொடுமைகளும் நடப்பது குறித்து புகார்கள் எழுந்தன. இவற்றை முன்வைத்து எவிடென்ஸ் அமைப்பு மாநிலம் முழுவதும் 19 மாவட்டங்களில் 114 பட்டியலின ஊராட்சி தலைவர்களிடம் 40 நாட்கள் ஆய்வு மேற்கொண்டது. ஆய்வின் முடிவு அறிக்கையை எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிர் (எ) வின்சென்ட்ராஜ் இன்று வெளியிட்டார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியது: ''தமிழகத்தில் 114 பட்டியலின (பட்டியல் சமூக) ஊராட்சித் தலைவர்கள் மீது சாதியப் பாகுபாடு கடைபிடிக்கப்படுகிறது - 12 ஊராட்சிகளில் தேசிய கொடி ஏற்றவிடாத அவலம், பட்டியலின பெண் தலைவர்களுக்கு பாலியல் துன்புறுத்தலும் அரங்கேறியுள்ளது. ஆய்விற்கு அதிகமான பஞ்சாயத்து தலைவர்கள் எடுக்கப்பட்ட முதல் மாவட்டம் தேனி (16 தலைவர்கள்) 2-வது மதுரை (14பேர்) சிவகங்கை (3 பேர் ), மூன்றாவது கள்ளக்குறிச்சி (10 பேர்), விருதுநகர் (10 பேர்), நான்காவது கோவை, கடலூரில் 8 பேரிடமும் ஆய்வு செய்தோம். 

நேர்மையாக பணி செய்த ஊராட்சி தலைவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகிலுள்ள தாரவேந்திரம் பஞ்சாயத்து தலைவர் நரசிம்ம மூர்த்தி என்பவர் அடித்து கொல்லப்பட்டுள்ளார். கடந்த உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு 30 வகையான தீண்டாமை கொடுமை நடந்துள்ளது. ஓராண்டில் மட்டுமே தேசிய கொடியை ஏற்றவிடாமல் 12 ஊராட்சித் தலைவர்களை தடுத்துள்ளனர். 11 தலைவர்களை இருக்கையில் அமர விடாமல் செய்துள்ளனர். தலைவருக்கான தேர்தலில் பட்டியலின பட்டதாரிகளை போட்டியிடவிடாமல் 5ம் வகுப்பு வரை படித்தவர்களை போட்டியிட வைத்துள்ளனர். கோயில் திருவிழாக்களில் 45 ஊராட்சித் தலைவர்களை கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை.

மதுரை பேரையூர் அருகே பழையூர் ஊராட்சி தலைவரான வித்யாவை சாதி ரீதியாக இழிவுப் படுத்தப்பட்டிருக்கிறார். இது குறித்து சாப்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. தற்போது, பட்டியலின ஊராட்சி தலைவர்கள் பலர் கூலி வேலைக்கு செல்கின்றனர். அவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் அரசு வழங்கவேண்டும். பட்டியலினத் தலைவர்களுக்கு எதிரான சாதிய பாடுபாடு, நிர்வாகத்தில் குறுக்கீடு, பொது நிகழ்ச்சி களில் பங்கேற்க மறுப்பது, வன்கொடுமைகளும் நடக்கின்றன. இவை தடுக்கப்படவேண்டும். தேசிய கொடி ஏற்றவிடாமல் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை தேவை. சமூக நீதி குறித்து திமுக அரசு பேசுகிறது. பிராமண எதிர்ப்பு மட்டுமே சமூக நீதி அல்ல.

பட்டியல் இன சமூக மக்களை மேம்படுத்துவதுதே சமூக நீதி. 94 பட்டியலின தலைவர்கள் பதவி வகிக்கும் கிராமங்களில் சமத்துவ மயானங்கள் இல்லை. சாதிய ரீதியாக பேசும் வழக்குகளில் ஒரு சதவிதம் கூட தீர்ப்பு கிடைப்பதில்லை. 32 மாவட்டத்தில் எஸ்சிஎஸ்டி ஆணைய கூட்டங்கள் முறையாக நடப்பது இல்லை. இக்கூட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களே பங்கேற்பதில்லை. தமிழக முழுவதும் பட்டியலின தலைவர்கள் பதவி வகிக்கும் ஊராட்சிகளில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க வேண்டும், பட்டியலினத் தலைவர்கள் பாகுபாடு குறித்து தமிழக அரசு ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். ஆய்வின் அறிக்கை அரசுக்கு அனுப்பி வைப்போம். நடவடிக்கை இல்லையெனில் பொது நல வழக்கு தொடருவோம். ஏப்.29-ல் பட்டியலின ஊராட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளோம்'' என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment

'சிங்கம்' போன்ற படங்கள் ஆபத்தான செய்தியை அனுப்புகின்றன: பாம்பே உயர்நீதிமன்ற நீதிபதி

   Films Like 'Singham' Send Dangerous Message: Bombay High Court Judge https://www.newspointapp.com/news/india/films-like-singham-s...