ஓபிசி இட ஒதுக்கீடு 50% உச்சவரம்பு தமிழகத்தை சுட்டிக்காட்டிய தெலுங்கானா! ரிசர்வேஷனையே ரத்து செய்த உச்சநீதிமன்றம்
By Vigneshkumar Updated: Thursday, October 16, 2025
டெல்லி: ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை 50% மேல் உயர்த்திய தெலுங்கானா அரசின் நடவடிக்கைக்கு அம்மாநில உயர் நீதிமன்ற இடைக்காலத் தடை விதித்திருந்தது. இந்த விவகாரத்தில் தெலங்கானா அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை வியாழக்கிழமை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
நமது நாட்டில் வரலாறு ரீதியாக வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதில் பெரும்பாலான மாநிலங்களில் 50%க்கு கீழ் மட்டுமே இட ஒதுக்கீடு இருக்கிறது. 1992 இந்திரா சஹானி வழக்கில் உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த 50 சதவீத வரம்பே இதற்குக் காரணமாகும். இதற்கிடையே சமீபத்தில் தெலுங்கானா அரசு உள்ளாட்சித் தேர்தல்களில் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க முடிவு செய்தது.
ஓபிசி இட ஒதுக்கீடு
ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42% இட ஒதுக்கீடு வழங்குவதாகத் தெலுங்கானா அரசு அறிவித்தது. இதன் மூலம், ஒட்டுமொத்த இட ஒதுக்கீடு 67%ஆக உயரும். இது தொடர்பான வழக்கில் அம்மாநில ஐகோர்ட் கடந்த மாதம் தீர்ப்பளித்திருந்தது. ஐகோர்ட் தலைமை நீதிபதி அபரேஷ் குமார் சிங் மற்றும் நீதிபதி ஜி.எம். மொயுத்தீன் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இட ஒதுக்கீடு அறிவிப்பிற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தெலுங்கானா அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதி விக்ரம் நாத் மற்றும் நீதிபதி சந்தீப் மேத்தா ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, இது ஒரு 'கொள்கை முடிவு' என வாதிட்டது.
தமிழகத்தை சுட்டிக்காட்டி வாதம்
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது இந்த இட ஒதுக்கீடு தேர்தலுக்கு முன்பு ஏன் அமல்படுத்தப்படவில்லை என தெலங்கானா அரசு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வியிடம் நீதிபதி நாத் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த சிங்வி, ஆளுநர் மசோதாவை நிலுவையில் வைத்திருந்ததாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டி, ஆளுநர் காலம் தாழ்த்தியதால் அது தானாகவே சட்டமாகிவிட்டதாகவும் தெரிவித்தார்.
அபிஷேக் சிங்வி மேலும், "இந்த கொள்கையை அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஆதரித்தன. எந்தவித கோரிக்கையும் இல்லாமல் இதை எப்படி தடை செய்ய முடியும்? உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் முதல் சில பக்கங்களைத் தவிர, தடைக்கான காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. சட்டமன்றத்தால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ஒன்றை, எந்தவித கோரிக்கையும் இல்லாமல் எப்படி தடை செய்ய முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.
மீறலாம்
இட ஒதுக்கீடு 50% உச்சவரம்பு தொடர்பாக சிங்வி மேலும், "இந்திரா சஹானி வழக்கில் உச்ச நீதிமன்றம் 50% உச்சவரம்பை நிர்ணயித்தது என்றும்.. அதை மீறவே கூடாது என்ற தவறான கருத்து பொதுவாக நிலவுகிறது.. ஆனால், அப்படி இல்லை.. விதிவிலக்கான சூழ்நிலைகளில் இந்த வரம்பை மீறப்பட்டுள்ளன. இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன" என்றார்.
எதிர்த் தரப்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், இட ஒதுக்கீட்டு உச்சவரம்பு குறித்த முந்தைய உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மேற்கோள் காட்டினார். அவர் மேலும், "ஓபிசி இட ஒதுக்கீட்டை 42%ஆக உயர்த்தினால் ஒட்டுமொத்த இட ஒதுக்கீடு 60%க்கும் மேல் சென்றுவிடும்" என்றார். மேலும், 2010ல் உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டிய சங்கரநாராயணன், அத்தீர்ப்பில் 50% இட ஒதுக்கீடு உச்சவரம்பு அரசியல் சாசன அமர்வு உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ரத்து செய்த உச்ச நீதிமன்றம்
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்றம், தெலுங்கானாவில் பழங்குடியினர் மற்றும் பட்டியல் இனப் பகுதிகள் இல்லாததால், உச்ச வரம்பை மீறுவதற்கான விதிவிலக்குகள் பொருந்தாது என்று தெரிவித்தது. எனவே, ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே தேர்தல்களை நடத்தலாம் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
அப்போது சிங்கி, மாநில அரசுக்கு இட ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளதாக சிங்வி வாதிட்டார். விரிவான சர்வே அடிப்படையிலேயே இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இருப்பினும், இதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், பழங்குடியினர் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் இல்லாத இடங்களில் இட ஒதுக்கீடு 50%ஐ தாண்டக்கூடாது என்று கூறி, தெலுங்கானா அரசின் மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்தது. முன்னதாக, மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் கூட இட ஒதுக்கீடு வரம்பை அதிகரிக்கும் முயற்சிகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
https://tamil.oneindia.com/news/delhi/supreme-court-rejects-telangana-obc-quota-hike-major-setback-for-revanth-reddy-govt-in-reservation-743537.html
https://tamil.oneindia.com/news/delhi/supreme-court-rejects-telangana-obc-quota-hike-major-setback-for-revanth-reddy-govt-in-reservation-743537.html

No comments:
Post a Comment