ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: 12 பேர் பலி
நமது சிறப்பு நிருபர் UPDATED : டிச 14, 2025
சிட்னி: ஆஸ்திரேலியாவின் பாண்டை கடற்கரையில் யூத மதத்தினரின் 'ஹனுக்கா' (ஜெருசலேம்- யாவே கர்த்தர் தெய்வ ஆலய மறுஅற்பணிப்பு) பண்டிகை கொண்டாட்டம் நடந்த பகுதியில் புகுந்த இரு பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டதில், 11 பேர் கொல்லப்பட்டனர்.
இதில், 12 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும், இரு காவல்துறை அதிகாரிகள் உட்பட 29 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆஸ்திரேலியாவின் பிரபலமான சுற்றுலா தலம் பாண்டை கடற்கரை, அந்நாட்டின் முக்கிய நகரமான சிட்னிக்கு அருகில் உள்ளது. இன்று விடுமுறை தினம் மற்றும் யூத மதத்தினரின் முக்கிய பண்டிகையான ஹனுக்கா எனப்படும் ஒளியை கொண்டாடும் பண்டிகையின் முதல் நாள் என்பதால், கடற்கரையில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர்.
அப்போது, கடற்கரைக்கு கருப்பு உடையில் வந்த இரு நடுத்தர வயது நபர்கள், மிகப்பெரிய இயந்திர துப்பாக்கியை எடுத்து அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி கண்மூடித்தனமாக சுடத் துவங்கினர். துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இரு பயங்கரவாதிகளும் 10 நிமிடங்களுக்கும் மேலாக 50க்கும் மேற்பட்ட முறை சுட்டனர். இதில் பொது மக்களில், 11 பேர் உயிரிழந்தனர்; 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவல் அறிந்து உடனடியாக அப்பகுதியை நியூ சவுத் வேல்ஸ் போலீஸ் படையினர் சுற்றி வளைத்தனர்.
போலீசார் மறைந்திருந்து பயங்கரவாதிகளை சுட முயற்சித்த நேரத்தில், பொது மக்களில் ஒருவர் துணிச்சலாக செயல்பட்டு, அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு இடையே பதுங்கி சென்று, வெறும் கையால் பயங்கரவாதியை தாக்கி அவரது துப்பாக்கியை பிடுங்கி அடித்து விரட்டினார்.
பயங்கரவாதிகளை நோக்கி போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் சுடப்பட்டு பிடிக்கப்பட்டார். அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இருவரும் பயங்கரவாதிகள் என போலீசார் உறுதிப்படுத்தினர். எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், எதற்கு தாக்குதல் நடத்தினர் என்ற விபரங்கள் விசாரணைக்கு பின்பே தெரியவரும் என்றனர்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்த பெண் ஒருவர், செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், 'பயங்கரவாதிகள் இருவரும் முதியவர்கள், குழந்தைகளை குறிவைத்து தாக்கினர்' என்றார்.
பாண்டை கடற்கரை துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனீஸ் முதலில் வெளியிட்ட அறிக்கையில் 'நடந்த தாக்குதல் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களை எண்ணி வருந்துகிறேன்' என தெரிவித்தார்.
இதற்கு ஆஸ்திரேலிய யூத சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 'யூத வெறுப்பு தாக்குதல் குறித்து பிரதமரின் அறிக்கையில் ஒரு வார்த்தைக் கூட இல்லை' என கண்டித்தது.
இதையடுத்து சிறிது நேரத்தில் பிரதமர் அல்பனீஸ் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், “இது யூத ஆஸ்திரேலியர்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல். மகிழ்ச்சியும், நம்பிக்கையும் நிறைந்த நாளாக இருக்க வேண்டிய ஹனுக்கா விழாவின் முதல் நாளை, பயங்கரவாதிகள் சிதைத்துள்ளனர். நம் நாட்டில் பயங்கரவாதத்துக்கு இடமில்லை. அதை ஒழித்துக் கட்டுவோம்,” என்றார்.
ஆஸ்திரேலியாவில் நடந்த தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
வெடிகுண்டு கண்டெடுப்பு
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். அதில் ஒருவன் கொல்லப்பட்ட நிலையில், மற்றொருவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். சம்பவ இடத்தில் இருந்த கார் ஒன்றின் அருகே ஐஇடி வகை வெடிகுண்டு கண்டுடெடுக்கப்பட்டுள்ளது. இதனை தாக்குதல் நடத்தியவர்கள் கொண்டு வந்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
அடையாளம்
தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவன் நவீத் அக்ரம்(24) என அவனது டிரைவிங் லைசென்ஸ் மூலம் போலீசார் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். போனிரிக் பகுதியில் உள்ள அவனது வீட்டை கண்டுபிடித்துள்ள போலீசார், அங்கு சோதனை செய்து வருகின்றனர்.
ஹமாஸ் தாக்குதலில் தப்பியவர் காயம்
கடந்த 2023 ம் ஆண்டு அக்., 7 ல் இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தப்பிய ஒருவர், சிட்னியில் நடந்த தாக்குதலில் காயம் அடைந்துள்ளார்.
பெயர் வெளியாகாத நிலையில் அவர் அளித்த பேட்டியில், எனக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. ரத்தம் கசிகிறது. தாக்குதல் நடந்த போது எனது குடும்பமும் அங்கு இருந்தது. என்ன நடந்தது என தெரிவதற்குள் துப்பாக்கிச்சூடு சம்பவம்நடந்துவிட்டது. ஆஸ்திரேலியாவில் இதுபோன்று நடக்கும் என தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பயங்கரவாதியை மடக்கிய வீராதி வீரர்
துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததும், அங்கிருந்தவர்கள் பதறியடித்து ஓட்டம் பிடித்தனர். வாகனங்கள், கட்டடங்களுக்கு பின் பதுங்கினர். இத்தகைய சூழ்நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய ஆசாமியை தேடிச் சென்று மடக்கினார் ஒருவர்.துப்பாக்கி வைத்திருந்த நபரை பின்பக்கமாக சென்று கட்டிப்பிடித்து, அவனிடம் இருந்து துப்பாக்கியை பறித்தார். அவரது வேகத்தில், அந்த கொடூரன் பின்புறமாக கீழே விழுந்தான். ஆயுதம் எதுவும் இல்லாத நிலையில் அங்கிருந்து எழுந்து ஓடத் தொடங்கினான். இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பயங்கரவாதியை பிடித்தவரது பெயர் அஹமது எல் அஹமது, 43, என தெரியவந்துள்ளது. பழக்கடை நடத்தி வருகிறார். மற்றொரு பயங்கரவாதி சுட்டதில் அவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மோடி கண்டனம்
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய மக்கள் சார்பில், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும், இந்த துயரமான தருணத்தில் ஆஸி., மக்களுடன் தான் இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜெய்சங்கர் கண்டனம்
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட அறிக்கையில், ஆஸ்திரேலியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கடுமையான வார்த்தைகளில் கண்டிக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக இருப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment