Monday, March 22, 2021

தி.மு.கவின் அந்த 28 ஊழல்கள் -ஆய்வு செய்த நீதிபதி சர்க்காரியா

 தி.மு.கவின் அந்த 28 ஊழல்கள்

கருணாநிதி தலைமையிலான திமுக அரசை 31.01.1976 அன்று இந்திரா காந்தி கலைத்தார். அந்த அதிர்ச்சியிலிருந்து திமுக மீள்வதற்குள்ளாகவே அடுத்த அதிரடி பாய்ந்தது. ஆம். திமுக அரசு மீதான ஊழல் குற்றச்சாற்றுகள் குறித்து விசாரணை நடத்த நீதிபதி சர்க்காரியா தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
கலைஞர் அரசு மீது எம்.ஜி.ஆர், கல்யாண சுந்தரம் உள்ளிட்டோர் அளித்த புகார்களை ஆய்வு செய்த நீதிபதி சர்க்காரியா மொத்தம் 28 குற்றச்சாற்றுகள் குறித்து விசாரணை நடத்தினார். அக்குற்றச்சாற்றுகளின் விவரம் வருமாறு:
1. மேகலா பிக்சர்ஸ் ஊழல் :
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கருணாநிதிக்கு சொந்தமான மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்தின் கணக்கில் அடையாளம் தெரியாதவர்களின் பெயர்களில் பணம் செலுத்தப்பட்டது. ஆட்சியாளர்களால் பயனடைந்தவர்கள், அதற்கான லஞ்சத்தை இவ்வாறு செலுத்தியிருக்கலாம் ; முரசொலி மாறன் தான் இதன் மூளையாக செயல்பட்டார்.
2. அஞ்சுகம் பிக்சர்ஸ் ஊழல்:
கருணாநிதிக்கு சொந்தமான அஞ்சுகம் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கணக்கில் போலியான பெயர்களில் பணம் செலுத்தப்பட்டது.
3. டிராக்டர் ஊழல்:
லண்டன் நிறுவனத்தின் மூலம் அரசுக்காக வாங்கப்பட்ட டிராக்டர் குறித்த காலத்தில் பதிவும் செய்யப்பட வில்லை. இதற்கான காரணம் குறித்து விசாரித்த போது தான், அந்த டிராக்டர் திருவாரூரில் உள்ள கருணாநிதிக்கு சொந்தமான நிலத்தை உழும் பணியில் அது ஈடுபடுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.
4. கருப்பு பணத்தில் கோபாலபுரம் இல்லம் விரிவாக்கம்:
முதலமைச்சராக கருணாநிதி பதவியேற்ற பின்னர் கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லம் மேம்படுத்தப்பட்டது. இதற்காக ரூ.20,000 செலவானது. இதற்கான கணக்குகளை திரித்துக்காட்டி, கருப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டது.
5. முரசொலி ஊழல்:
கருணாநிதி முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முரசொலி நாளிதழில் வருவாயை அதிகரித்துக் கொண்டது.
6. திருவாரூர் வீட்டு ஊழல்:
கருணாநிதி முதலைமைச்சராக பதவியேற்ற பிறகு திருவாரூரில் உள்ள கருணாநிதியின் மகன் இல்லம் பெரும் பொருட்செலவில் விரிவாக்கப்பட்டது. இதற்கான பணம் ஊழல் மூலம் ஈட்டப்பட்டது.
7. ராஜா அண்ணாமலைபுரம் வீடு ஊழல்:
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கருணாநிதி துணைவியார் தர்மாம்பாளுக்கு (ராஜாத்தி அம்மாள்) சொந்தமான வீடு விற்கப்பட்டது தொடர்பாக தவறாக கணக்கு காட்டப்பட்டிருக்கிறது. அப்போது அமைச்சராக இருந்த கருணாநிதி இந்த சொத்தை கணக்கு காட்டாமல் மறைத்தார்.
8. கோபாலபுரம் வீட்டு மதிப்பு ஊழல்:
கோபாலபுரத்தில் கருணாநிதியின் உறவினர் அமிர்தத்தின் வீட்டு மதிப்பு குறைத்துக்காட்டி பதிவு செய்யப்பட்டது.
9. ஊழல் அதிகாரிக்கு ஆதரவு:
கலைஞரின் துணை செயலாளராக இருந்த வைத்திலிங்கம் என்பவர் ஊழல் பேர்வழி என்பதை அறிந்த பிறகும் அவரை அவர் மீதான குற்றச்சாற்றுகளில் இருந்து கருணாநிதி காப்பாற்றினார்.
10. வீராணம் ஊழல்:
வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டுவருவதற்கான வீராணம் திட்டத்திற்கான ஒப்பந்தம் வழங்குவதில் பெருமளவு ஊழல் நடந்திருக்கிறது. சத்யநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்திற்கு சலுகை காட்டும் வகையில் ஒப்பந்த வடிவம் உருவாக்கப்பட்டிருந்தது என்பது தான் குற்றச்சாற்று.
11 (அ).நாதன் பப்ளிகேசன்ஸ் ஊழல்:
தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் புத்தகங்களை விற்பனை செய்யும் வினியோகஸ்தராக அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்துக்கு நெருக்கமான நாதன் பப்ளிகேசன்ஸ் நியமிக்கப்பட்டதில் பெருமளவில் முறைகேடுகள் நடந்தன. இந்த நிறுவனத்தில் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்துக்கும் பங்கு இருப்பதால் தான் அந்த நிறுவனத்திற்கு வினியோக உரிமை வழங்கப்பட்டது. இதனால் அமைச்சர் தர்மலிங்கமும், நாதன் பப்ளிகேசன்ஸ் நிறுவனமும் பெரும் பணப் பயன் அடைந்தன.
11. (ஆ) பூச்சி மருந்து தெளிப்பு ஊழல்:
கருணாநிதி முதலமைச்சராக பதவியேற்றதற்கு அடுத்த ஆண்டிலேயே பூச்சி மருந்து தெளிப்பதற்கான ஒப்பந்தம் வழங்குவதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றது. 1970&ஆம் ஆண்டில் ஓர் ஏக்கருக்கு ரூ.8 என்ற கட்டணத்தில் பூச்சி மருந்து தெளிக்கத தயாராக இருப்பதாக புஷ்பகா ஏவியேஷன்ஸ் என்ற தனியார் நிறுவனம் முன்வந்தது. ஆனால், அந்த நிறுவனத்தின் உரிமையாளரை அழைத்துப் பேசிய அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி, ஓர் ஏக்கருக்கு ரூ.9 தருவதாக கூறி ஒப்பந்தம் வழங்கினார். இதற்காக ஒரு ஏக்கருக்கு 90 காசுகள் (10%) வீதம் லஞ்சம் பெற்றார். அதன்பின் 1971 ஆம் ஆண்டில் ஏக்கருக்கு ரூ. 11 என கட்டணம் உயர்த்தப்பட்டது. அதற்காக கலைஞரும், அப்போதைய வேளாண்மை அமைச்சர் அன்பில் தர்மலிங்கமும் ரூ.3.87 லட்சம் லஞ்சம் பெற்றனர்.
12. மணி அரிசி ஆலை கடன் ஊழல்:
முதலமைச்சருக்கு நெருக்கமாக இருந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் கந்தப்பனின் மாமனார் ரங்கசாமி கவுண்டருக்கு சொந்தமான அரிசி ஆலைக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மூலம் சட்டவிரோதமாக ரூ.1.77 லட்சம் கடன் வழங்கப்பட்டது. இந்தக் கடன் செலுத்தப்படவில்லை.
13. ஜெ.கே.கே. குழுமத்தின் விற்பனை வரி ஏய்ப்பு ஊழல்:
முதலமைச்சர் கருணாநிதி, விற்பனை வரித் துறை அமைச்சர் ப.உ.சண்முகம், சட்டம் மற்றும் தொழில்துறை அமைச்சர் மாதவன் ஆகியோருக்கு நெருக்கமாக இருந்த அங்கப்ப செட்டியாருக்குச் சொந்தமான ஜெ.கே.கே. குழுமம் 7 லட்சம் ரூபாய் அளவுக்கு விற்பனை வரி ஏய்ப்பு செய்தது. ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்களாக இருந்ததால், அவர்களிடம் இருந்து விற்பனை வரியும், அதற்காக செலுத்த வேண்டிய தண்டத் தொகையும் சேர்த்து 14 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படாமல் விடப்பட்டது.
14. சமயநல்லூர் மின்திட்ட ஊழல்:
சமயநல்லூர் அனல் மின் நிலையத்தை விலைக்கு வாங்கியவர்கள் குறித்த காலத்தில் அதை அகற்றவில்லை. அதுமட்டுமின்றி அந்த மின்நிலையத்திற்கு தேவையான உதிரி பாகங்களை வழங்கும்படி தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அழுத்தம் தரப்பட்டது. இவற்றை செய்து தருவதற்காக சமயநல்லூர் அனல்மின் நிலைய உரிமையாளர்களிடம் இருந்து அப்போதைய மின்துறை அமைச்சர் ஓ.பி.ராமன் 1.30 லட்சம் ரூபாய் கையூட்டு பெற்றார்.
15. குளோப் தியேட்டர் வாடகை சட்டத் திருத்த ஊழல்:
1972, 73 ஆகிய ஆண்டுகளில் சென்னை மாநகர வாடகை குடியிருப்பாளர்கள் பாதுகாப்பு சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அப்போதைய ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக இருந்த குளோப் தியேட்டர் உரிமையாளர் வரதராஜ பிள்ளை என்பவருக்கு சாதகமாகவே இந்த சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதன்மூலம் கருணாநிதி, அமைச்சர்கள் ப.உ.சண்முகம், மாதவன் ஆகியோர் பயனடைந்தனர்.
16. பிராட்வே டைம்ஸ் ஊழல்:
பிராட்வே டைம்ஸ் குழும உரிமையாளர் மாத்யூ செரியன் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து நன்றாக ஆராயப்பட்ட பிறகு வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அவருக்கு சலுகை காட்டும் வகையில் அவர் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. அவர்களுக்கு சொந்தமான தாம்சன் அண்ட் கோ நிறுவனம் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அந்த பட்டியலில் இருந்து அந்நிறுவனத்தை அகற்ற முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டார். குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மாத்யூ செரியன், முதலமைச்சர் கருணாநிதிக்கும், அவரது மருமகன் முரசொலி மாறனுக்கும் நெருக்கமானவர் என்பதாலேயே இந்த முறைகேடுகள் செய்யப்பட்டன.
17. சர்க்கரை ஆலை ஊழல்:
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை ஆலைகள் அளவுக்கு அதிகமாக சர்க்கரையை இருப்பு வைத்ததால் ஏற்பட்ட சூழலை பயன்படுத்திக் கொண்டு குறிப்பிட்ட சர்க்கரை ஆலைகளுக்கு சலுகை காட்டுவதற்காக அந்த சர்க்கரை ஆலைகளிடம் இருந்து முதலமைச்சர் கருணாநிதியும் , உணவு அமைச்சர் ப.உ.சண்முகமும் சர்க்கரை ஆலைகள் சங்கத் தலைவர் மருத பிள்ளை என்பவர் மூலம் 16 தவணைகளாக 13 லட்சத்து 21 ஆயிரத்து 296 ரூபாய் லஞ்சம் வாங்கினர். இதற்காக அரசு வழங்கிய சலுகைகளைப் பயன்படுத்தி சர்க்கரை ஆலைகள் லாபம் பார்த்தன.
18. கூட்டுறவு சங்க ஊழல்:
முதலமைச்சர் கருணாநிதியின் சொந்த ஊரைச் சேர்ந்தவரான வி.எஸ்.டி.முதலியார் என்பவர் தஞ்சாவூர் கூட்டுறவு மார்கெட்டிங் ஒன்றியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். கருணாநிதியுடனான தொடர்பை பயன்படுத்தி அவர் 2 கோடி ரூபாய் பணத்தை கையாடல் செய்தார். அவர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவிடாமல் கருணாநிதி தடுத்தார்.
19. மது ஆலை ஊழல்:
முதலமைச்சர் கருணாநிதிக்கு நெருக்கமாக இருந்த ஏ.எல்.சீனிவாசன் என்பவருக்கு மது ஆலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. இதற்கான வழிமுறைகள் எதுவும் முறையாக பின்பற்றப்படவில்லை. மது ஆலை அமைப்பதற்கான இடம் ஏ.எல்.சீனிவாசனிடம் இல்லை. இதற்கான விண்ணப்பத்தைக் கூட அவர் முறையான வடிவத்தில் தாக்கல் செய்யவில்லை. அதுமட்டுமின்றி மது ஆலை அமைப்பதற்காக சென்னையை ஒட்டியிருந்த 100 ஏக்கர் அரசு நிலத்தை அவர் அபகரிக்க முயன்றார். இவை அனைத்தும் தெளிவாக தெரிந்தும் இதற்கு காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
20. கொடைக்கானல் - பழனி சாலை ஊழல்:
கொடைக்கானல் - பழனி சாலை அமைக்கும் திட்டம், கோயம்புத்தூர் மேம்பாலம் அமைக்கும் திட்டம் ஆகியவற்றுக்காக அகமது அண்ட் கோ என்ற நிறுவனத்துக்கு தேவையில்லாமல் சட்ட விரோதமாக பல லட்சம் முன்பணம் தரப்பட்டது.
21. தி.மு.க. அறக்கட்டளைகள் ஊழல்:
தி.மு.க.வுக்கு சொந்தமான சென்னை தி.மு.க. அறக்கட்டளை, மதுரை மாவட்ட தி.மு.க. அறக்கட்டளை, நாவலர் நெடுஞ்செழியன் கல்வி அறக்கட்டளை, பேரறிஞர் அண்ணா அறக்கட்டளை, கருணாநிதி அறக்கட்டளை உள்ளிட்ட 10 அறக்கட்டளைகளில் கணக்கில் வராத பணம் பெருமளவில் நன்கொடையாக சேர்க்கப்பட்டது. இந்தப் பணம் ஊழல் மூலம் வந்ததாக இருக்கலாம் என்ற ஐயம் எழுகிறது.
22. நில ஆக்கிரமிப்பு - கொலை குற்றச்சாட்டு:
தாத்தாச்சாரி என்பவருக்குச் சொந்தமான தாத்தாச்சாரி எஸ்டேட்டில் வாடகைக்கு குடியிருந்தவர்களை அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் தனது செல்வாக்கை பயன்படுத்தி விரட்டியடித்தார். அதேபோல் ஜங்கமராஜபுரம் கொலை வழக்கில் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்துக்கு நெருக்கமான மூன்று பேரை காப்பாற்றுவதற்காக சட்டம் வளைக்கப்பட்டது. இந்த வழக்கில் மூவரும் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வாய்ப்பிருந்த போதிலும் தி.மு.க. அரசு எந்த மேல் முறையீட்டையும் செய்யவில்லை.
23. ஊழல், கிரிமினல் குற்றவாளிகளுக்கு ஆதரவு:
தி.மு.க.வைச் சேர்ந்த மற்றும் தி.மு.க.வுக்கு நெருக்கமான பலர் மீது ஊழல் மற்றும் கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், அவை வலுவிழக்கச் செய்யப்பட்டு, குற்றம் செய்தவர்கள் காப்பாற்றப்பட்டனர்.
24. தொழிற்சங்க ஊழல்:
தொழிற்சங்க நிர்வாகங்களில் தி.மு.க. அரசு தேவையின்றி குறுக்கிட்டது. அனைத்து தொழிற்சங்கங்களிலும் தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் நிர்வாகிகளாக்கப்பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தாக்கப்பட்டனர். சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
25. ஊடகங்களுக்கு மிரட்டல்:
தி.மு.க. அரசின் ஊழல்கள், விதிமீறல்கள் குறித்து செய்தி வெளியிட்டு வந்த ஆனந்த விகடன், அலை ஓசை உள்ளிட்ட ஊடகங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.
26. மின் திருட்டு:
1972ம் ஆண்டு ராஜபாளையத்தில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டுக்கு திருட்டுத்தனமாக மின்சாரம் எடுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, பிரிவினையை தூண்டும் வகையில் முதலமைச்சர் கலைஞரை வங்கதேச தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மானுடன் ஒப்பிடும் வகையில் பதாகைகள் வைக்கப்பட்டன. இது பிரிவினையை தூண்டும் செயலாகும்.
27. எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல்: 1971 முதல் 73 வரை தி.மு.க. அரசுக்கு எதிராக செயல்பட்ட எதிர்க்கட்சிகள், மாணவர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
28. இழப்பீட்டு தொகை ஊழல்: தி.மு.க. அரசுக்கு நெருக்கமாக இருந்த பொள்ளாச்சி மகாலிங்கம் என்பவருக்கு சொந்தமான சக்தி பைப்ஸ் நிறுவனத்திற்கு 2 கோடி ரூபாய் இழப்பீடு தரும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. இவ்வாறு இழப்பீடு வழங்குவதன் மூலம் அதில் ஒரு பகுதியை கையூட்டாக பெற்றுக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில் தான் இவ்வாறு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

No comments:

Post a Comment

M.Karimanidhi achievements - Rajiv Gandhi