ஈஷா மையத்தில் போலீஸ் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை! நமது நிருபர் UPDATED : அக் 03, 2024 11:55 PM
புதுடில்லி : கோவையில் உள்ள ஈஷா வளாகத்தில் போலீஸ் சோதனையிட உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அங்கு வசிக்கும் இரு பெண் துறவிகளிடம், 'வீடியோ- கான்பரன்ஸ்' வாயிலாக விசாரித்த நீதிபதிகள், அப்பெண்களின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை, சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
மையத்தில் தன் மகள்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக, அவர்களின் தந்தை வழக்கு தொடர்ந்தார். அவர் பெயர் காமராஜ்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர். கீதா, 42, மற்றும் லதா, 39, ஆகியோரை ஈஷா மையத்தில் இருந்து மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என ஆட்கொணர்வு மனுவில் கேட்டிருந்தார்.
தள்ளுபடி
இருவரும் முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள்; யோகா கற்பதற்காக சென்றவர்களை துறவறம் மேற்கொள்ளும்படி ஈஷா மையம் மூளைச்சலவை செய்ததாகவும், அங்கே தரப்பட்ட உணவு மற்றும் மருந்துகளால் அவர்கள் சுயமாக சிந்திக்கும் திறனை இழந்து, அங்கேயே தங்கி விட்டதாகவும் காமராஜ் குற்றம் சாட்டி இருந்தார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நேரில் ஆஜரான இரு பெண்களும், தாங்களே மனம் விரும்பி ஈஷா மையத்தில் வசிப்பதாகவும், உறவுகளை துறந்து துறவியர் ஆகிவிட்டதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஈஷா மையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.ராஜேந்திரகுமார், ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்யுமாறு கோரினார்.
நீதிபதி சுப்ரமணியம் அக்கோரிக்கையை நிராகரித்து, சில சந்தேகங்களுக்கு விளக்கம் தேவைப்படுவதால் ஈஷா மையத்தில் போலீஸ் ஆய்வு நடத்த உத்தரவிட்டார்.
என்ன சந்தேகம் என ராஜேந்திரகுமார் கேட்டபோது, 'சொந்த மகளுக்கு திருமணம் செய்து இல்லற வாழ்க்கையை தொடர ஏற்பாடு செய்த ஜக்கி வாசுதேவ், மற்ற பெண்களை மொட்டையடிக்க வைத்து துறவறம் மேற்கொள்ளும்படி ஏன் வலியுறுத்த வேண்டும் என்பது தான் கேள்வி' என, நீதிபதி சிவஞானம் தெரிவித்தார்.
ராஜேந்திரகுமார் அதை ஆட்சேபித்தார். ஆட்கொணர்வு மனுவின் வரம்பை தாண்டி உயர் நீதிமன்றம் செல்வதாக வாதிட்டார்.
மேல்முறையீடு
முழு உண்மைகளை தெரிந்து கொள்ள அவ்வாறு செய்வதற்கு நீதிமன்றங்களுக்கு அரசியல் சாசனம் அதிகாரம் வழங்கி இருப்பதாக அமர்வு தெரிவித்து, அவரது ஆட்சேபத்தை நிராகரித்தது.
துறவறம் மேற்கொண்ட இரு பெண்களும், தங்களை எவரும் கட்டாயப்படுத்தவில்லை என மீண்டும் தெரிவித்தனர். பெற்றோரை மதிக்க தெரியாதவர்கள் துறவறம் பூண்டு என்ன பயன் என அவர்களுக்கும் டோஸ் விழுந்தது.
அதை தொடர்ந்து, அரசு இயந்திரம் மின்னல் வேகத்தில் செயல்பட்டது. கோவை போலீஸ் படை ஈஷா மையத்தில் நுழைந்து விசாரணையை துவங்கியது. அரசின் பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் உடன் சென்றனர்.
உயர் நீதிமன்ற உத்தரவையும், அரசின் நடவடிக்கையையும் எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஈஷா அவசர மேல்முறையீடு செய்தது.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் அது நேற்று விசாரணைக்கு வந்தது.
சென்னை உயர் நீதிமன்றம் தன் விசாரணைக்கு வந்த மனுவின் விசாரணை வரம்பை மீறி ஒரு உத்தரவை பிறப்பித்து, அதன் விளைவாக 500 போலீசார் கொண்ட படையே ஈஷா ஆசிரமத்தில் நுழைந்து ரெய்டு செய்வதாக மேல்முறையீட்டாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகில் ரோத்தகி தெரிவித்தார். அதை கேட்ட நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏற்கத்தக்கது அல்ல
ஆன்மிக பணிகளில் ஈடுபட்டுள்ள ஓர் அமைப்பின் வளாகத்துக்குள் போதுமான முகாந்திரம் இல்லாமல் போலீஸ் படை நுழைந்து சோதனையிடுவது ஏற்கத்தக்கது அல்ல என தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட பெண்களிடம் தாங்களே பேச விரும்புவதாக தலைமை நீதிபதி தெரிவித்தார். இதற்காக நீதிபதிகள் அங்கிருந்து தமது அறைக்கு சென்றனர்.
இரண்டு பெண்களில் ஒருவரிடம், நீதிபதிகள் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பேசினர். தங்களுடைய சொந்த விருப்பத்திலேயே, ஈஷா வளாகத்தில் தங்கியுள்ளதாக அந்த பெண் தெளிவாககுறிப்பிட்டார். நீதிபதிகளின் கேள்விகளுக்கு அவர் விளக்கம் அளித்தார்.
அதை தொடர்ந்து அமர்வு பிறப்பித்த உத்தரவு வருமாறு:
யோகா மற்றும் ஆன்மிகத்தை கற்றுத் தரும் அறக்கட்டளை வளாகத்தில் போலீஸ் படை நுழைந்து ரெய்டு நடத்துவது ஏற்புடையது அல்ல. ஈஷா மையத்தின் அனைத்து இடங்களிலும் சோதனை செய்துள்ளனர்; அனைவரையும் தனித்தனியாக விசாரித்தனர் என கூறப்படுகிறது. விசாரணை முடிந்து இரவே அவர்கள் திரும்பிவிட்டதாக தமிழக அரசு வழக்கறிஞர் கூறுகிறார். ஆனால், இன்னமும் போலீசார் அங்கேயே இருப்பதாக ஈஷா தரப்பில் கூறுகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, போலீசார் ஈஷா வளாகத்துக்குள் செல்லக் கூடாது. சோதனையிடக் கூடாது. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபடி, போலீஸ் நடத்திய விசாரணை அறிக்கையை, கோவை போலீசார் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பதிலாக இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கையும், இங்கு மாற்ற உத்தரவிடுகிறோம். அதை நாங்களே விசாரிப்போம்.
இரு பெண்களும் தங்களுடைய, 24 மற்றும் 27வது வயதில் ஈஷாவுக்கு சென்றுள்ளனர். தற்போது அவர்களுக்கு, 39 மற்றும் 42 வயதாகிறது. அந்தப் பெண்களிடம் நாங்கள் பேசியதில் இருந்து, அவர்கள் சொந்த விருப்பத்திலேயே அங்கு சென்றுள்ளதாகவும், அடைத்து வைக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளனர். ஈஷா மையத்தில் சேர்ந்த பிறகும் பலமுறை தங்களுடைய பெற்றோரை சந்தித்தாகவும், வெளியூர்களுக்கு சென்று வருவதாகவும் தெரிவித்தனர். இந்த பெண்களின் தாய், எட்டு ஆண்டுக்கு முன் இதேபோல் ஆள்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். அப்போதும், சென்னை உயர் நீதிமன்ற விசாரணையில் ஆஜரான இந்த பெண்கள், தங்கள் விருப்பத்தை தெளிவாக தெரிவித்துள்ளனர். அதனால், போலீசார் தொடர்ந்து ஈஷா வளாகத்தில் விசாரணை நடத்த தேவையில்லை. அங்கிருந்து வெளியேற வேண்டும்.
இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது. வழக்கின் விசாரணை, 18ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஹிந்து முன்னணி வேதனை
கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் ஆன்மிகத்தோடு, மண் வளம் பாதுகாத்தல், மரங்களை நடுதல், பாரம்பரிய கலைகளை ஊக்குவித்தல் மற்றும் கிராம புத்துணர்வு இயக்கம் என்ற பெயரில் மருத்துவச் சேவைகள் என, பல தன்னார்வ பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இங்கிருந்து மட்டுமின்றி, பல வெளிநாடுகளில் இருந்தும், தியானம் மற்றும் யோகா கற்பதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மையத்துக்கு வந்து செல்கின்றனர். மையத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், தனிநபர் விமர்சனங்களும், சில தனியார் அமைப்புகளின் எதிர்ப்புகளும் தொடர்ந்து வருகின்றன.
துறவறம் மேற்கொள்ளுதல் மற்றும் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வேண்டிய நீதிபதிகள், தனிநபர் காழ்ப்புணர்ச்சியோடு ஈஷா மையம் மீது தொடர்ந்த வழக்கில், ஈஷா நிறுவனர் சத்குரு மகளின் திருமணத்தை குறிப்பிட்டு பேசியது, தனிநபர் தாக்குதலாகவே அமைகிறது.
இத்தகைய போக்கு நீதி, பரிபாலனம் மீதே மக்கள் சந்தேகப்படும் நிலையை ஏற்படுத்தி விடும். நீதிபதிகள், தனிநபர் உணர்வுகளை புண்படுத்தாமலும், தனிநபர் உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் தங்கள் கருத்தை வெளிப்படுத்த வேண்டும்.- காடேஸ்வரா சுப்ரமணியம்ஹிந்து முன்னணி தலைவர்
'தவறான தகவல் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை'
ஈஷா அறக்கட்டளை நேற்று வெளியிட்ட அறிக்கை: ஈஷா யோகா மையம், எவரையும் திருமணம் செய்து கொள்வதற்கோ அல்லது துறவறம் மேற்கொள்வதற்கோ கட்டாயப்படுத்துவது இல்லை. திருமணமான, ஆகாத ஆயிரக்கணக்கான மனிதர்கள் மற்றும் பிரம்மச்சரிய பாதையில் இருக்கும், ஒரு சிலரின் இருப்பிடமாக ஈஷா மையம் உள்ளது.
உண்மை இவ்வாறு இருக்கையில், இரு பெண் பிரம்மச்சாரிகளின் பெற்றோர், எட்டு ஆண்டுகளாக பல்வேறு பொய் வழக்குகளை பதிவு செய்தும், உள்நோக்கம் கொண்ட சிலரின் துாண்டுதலால், போராட்டங்களை நடத்தியும் தேவையில்லாத சச்சரவுகளை
ஏற்படுத்தி வருகின்றனர்.
சென்னை ஐகோர்ட்டில் காமராஜ் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணையில், இரு பெண் பிரம்மச்சாரிகளும் கோர்ட்டில் ஆஜராகி, 'தங்களின் சொந்த விருப்பத்தின்படிதான் ஈஷா யோகா மையத்தில் தங்கியுள்ளோம்' என்று தெளிவுபடுத்தி உள்ளனர். ஈஷா யோகா மையத்தில் தன் மகள்களை காமராஜ் சமீபத்தில் சந்தித்த 'சிசிடிவி' காட்சிகளையும் சமர்ப்பித்துள்ளோம்.
கடந்த 2016ல் காமராஜ் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள், 'பெற்றோர் தொடுத்த வழக்கில் உண்மை இல்லை. பிடித்து வைக்கப்பட்டு இருக்கின்றனர் என்று சொல்லப்பட்டவர்கள், சுய விருப்பத்திலேயே தங்கி இருக்கின்றனர் என்று திட்டவட்டமாக தெரிவிக்கிறோம்' என, கூறியுள்ளனர்.
ஈஷாவிற்கு எதிராக செயல்படும் காமராஜ், பிற அமைப்புகள் மற்றும் நபர்களுடன் சேர்ந்து, பழங்குடியின மக்களுக்காக கட்டப்பட்டு வரும் மின் தகன மேடை குறித்து தொடர் பிரச்னைகளில் ஈடுபட்டு வந்தார். மேலும், அரசின் எவ்வித அனுமதியின்றி தன்னிச்சையாக, 'உண்மை கண்டறியும் குழு' என்ற பெயரில் குழுவாக ஈஷா வளாகத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்று போலீசால் தடுக்கப்பட்டார்.
பின், எவ்வித முகாந்திரமுமின்றி, ஈஷா தன்னார்வலர்கள் மீது கிரிமினல் புகார் அளித்தனர். இது தொடர்பான வழக்கில், போலீசாரின் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. தவிர மனுதாரர் பொய்யாக குறிப்பிட்டதை போல, அறக்கட்டளைக்கு எதிராக வேறு எந்த கிரிமினல் வழக்குகளும் இல்லை. எனவே, ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
https://economictimes.indiatimes.com/news/india/sadh-gurus-isha-foundation-moves-supreme-court-challenging-habeas-corpus-petition-filed-in-madras-high-court/articleshow/113897170.cms?from=mdr
https://www.dinamalar.com/news/india-tamil-news/supreme-court-bans-police-investigation-in-isha-center-/3747321
No comments:
Post a Comment