இராஜராஜ சோழரின் இறுதிக்காலம் குறித்து கல்வெட்டு செய்திகள் உள்ளன.
இராஜராஜ சோழன் தனது இறுதிக் காலத்தில் ஆட்சி அதிகாரம் அனைத்தையும் இராஜேந்திர சோழனிடம் ஒப்படைத்தார். சிவனடியாராக மாறினார். சிவபாதசேகரன் என்னும் பெயர் பெற்றார்.
கும்பகோணம் பழயாறை அருகே உள்ள ஒரு அழகான கிராமத்தில் தங்கினார். உடையார் தங்கிருந்த ஊர் உடையாளூர் என்றழைக்கப்பட்டது.
உடையாளூர் கும்பகோணத்தில் இருந்து எட்டு கி. மீ தொலைவில் அமைந்து உள்ளது. உடையாளூரில் கைலாசநாதர் கோயில் உள்ளது. இவ்வூருக்கு சிவபாதசேகரமங்கலம் என்று சோழர் காலத்திய புகழ்பெற்ற பெயரும் உண்டு. இராஜராஜ சோழனின் நினைவிடம் திருமாளிகை இங்கு அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
" அருமொழிதேவ வளநாட்டு திருநறையூர் நாட்டு சிவபாதசேகர மங்கலம் " என்றே இவரது பெயராலே இவ்வூர் அமைந்தது. இவ்வூரில் இவர் தங்கியிருந்த அரண்மனை " ஸ்ரீராஜராஜதேவர் சிவபாதசேகர திருமாளிகை " என்ற பெயரில் அழைக்கப்பட்டது.
இவ்வூரில் உள்ள மாளிகையில் தனது அந்திமக்காலத்தில் அமைதியாகவும் ஆனந்தமாகவும் இருந்தார். இவ்வூரிலேயே இறைவனடி சேர்ந்தார். இவரதுபூத உடல் , இவர் தங்கியிருந்த மாளிகையின் முன் இருந்த பெரிய மண்டபத்தில் வைக்கப்பட்டு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செய்தனர்.
" சிவபாதசேகர மங்கலத்து எழுந்தருளி நின்ற ஸ்ரீராஜராஜதேவரான ஸ்ரீசிவபாதசேகரத்தேவர் திருமாளிகை முன்பில் பெரிய திருமண்டப முன் " என்று கல்வெட்டு உள்ளது.
மாமன்னன் ராஜ ராஜ சோழன் கி பி 1012 இல் ராஜேந்திர சோழனுக்கு இளவரசு பட்டம் கட்டி தன் பொறுப்புகளை குறைத்துகொண்டு, கிபி 1014 இல் கும்பகோணத்திற்கு அருகே உள்ள திருவியலூரில் (திருவிசலூர்) தன் இறுதிகாலத்தில் சிவப்பேறு அடைய விரும்பிச் செய்யக் கூடிய துலாபாரதானம், ஹேமகர்ப்பதானம் போன்ற சடங்குகளை செய்துவிட்டு, பின்பு திருவலஞ்சுழியில் உள்ள சேத்ரபால தேவரை இருவரும் தங்கத் தாமரை மலர் கொண்டு வழிபட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.அந்திம காலத்தில் செய்ய வேண்டிய சடங்குகளை நிறைவேற்றிய மாமன்னன் ராஜராஜ தேவர், தங்கள் ஆதி பூமியாகிய பழையாறையில் ஒரு பகுதியாக விளங்கும் சிவபாத சேகர மங்கலத்தில் (உடையாளூர்) இருந்த ஒரு மாளிகையில் தங்கி இருந்து வானபிஸ்தம் எனக் கூறப்பெறும் அந்திமகால ஆன்மிக வாழ்கையை மேற்கொண்டு அம்மாளிகையிலே அவர் உயிர் துறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. அதனால் தான் அங்கு உள்ள கல்வெட்டு, சிவபாத சேகர மங்கலத்து எழுந்தருளி நின்ற ஸ்ரீ ராஜராஜ தேவரான ஸ்ரீ சிவபாத சேகர தேவர் திருமாளிகை என்று குறிப்பிடுகின்றது.
திருவலஞ்சுழியில் ராஜேந்திர சோழன் தனது தந்தையான ராஜராஜ சோழனுக்கு, 6 ஜனவரி 1015 அன்று முதல் திவசம் செய்தான்.
http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1544
குடந்தை சேதுராமனின் ஆய்வுக் கட்டுரைகள்-2 என்ற புத்தகத்தில் இவர் "உடையாளுர் இராஜராஜசோழன் அமரரான இடம்" என்ற கட்டுரையில் உடையாளுரில் இருக்கும் பால்குளத்து அம்மன் கோயிலில் உள்ள கல்வெட்டை ஆதாரமாக வைத்து,
"சிவபாதசேகரமங்கலத்தில்[உடையாளுரில்] எழுந்தருளி நின்ற ராஜராஜதேவரான சிவபாதசேகருக்குத் திருமாளிகை இருந்தது. இதன்முன் இருந்த பெரிய திருமண்டபம் ஜீரணித்துவிட்ட்தால் இதனைப் பிடவூர் வேளான் அரிகேசவனான கச்சிராஜன் சார்பாக ஜெயசிங்க குலகால வளநாட்டு குளமங்கல நாட்டு சாத்தமங்கலத்து புகழனிநடன் என்னும் பிடாரன்[தேவரம் ஓதுவார்] திருப்பணி செய்துவைத்தான்" (2) என்றும் தெரிவித்து,
"இராஜராஜனின் நினைவாக ஒரு கோயில் கட்டி இருக்கிறார்கள். அவனது அமரத்துவத்தைக் குறிக்கும் வகையில் இராஜராஜனின் உருவச்சிலையை வைத்து வழிபட்டு இருக்கிறார்கள். இவ்வூரில் இராஜராஜன் இறந்திருக்கவேண்டும். அவனது பூத உடல் மீது கட்டப்பட்ட சிவன் கோயிலின் திருமாளிகையில் இராஜராஜனது திருஉருவச்சிலையை வைத்து வழிபட்டு இருக்கலாம்" (3) என்று தனது அனுமானத்தையும் தெரிவித்துள்ளார்.
ஆய்வாளர் குடவாயில் சேதுராமன், உடையாளூரில் இருக்கும் பால்குளத்தம்மன் கோயில் மண்டபத்தில் இருக்கும் கல்வெட்டுத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு கட்டுரை எழுதினார்.
பால்குளத்தம்மன் கோயில் தூணில் உள்ள கல்வெட்டுச் செய்தி
அந்த கல்வெட்டில் உள்ள வாசகங்கள் இது தான் :
1 ஸ்வஸ்திஸ்ரீ ஸகலபுவந சக்கரவர்த்திகள் ஸ்ரீகு
2 லோத்துங்க சோழ தேவற்கு யாண்டு நாற்ப
3 த்திரண்டாவது ஸ்ரீசிவபாதசேகரமங்கலத்து
4 எழுந்தருளிநின்ற ஸ்ரீராஜராஜதேவரான ஸ்ரீ
5 சிவபாதசேகரதேவர் திருமாளிகை முன்பில்
6 பெரிய திருமண்டப முன்[பி¦]லடுப்பு ஜீர்
7 ந்நித்தமையில் இம்மண்டபம் எடுப்பி
8 த்தார் பிடவூர் (பிடவூர் வேளான்) வேளா
9 ன் அரிகேசவனாந கச்சிராஜற்காக இவ்வூர்
10 நாயகம் செய்து நின்ற ஜயசிங்ககுலகா
11 ல வளநாட்டு குளமங்கல நாட்டு சா
12 த்தமங்கலத்து சாத்தமங்கலமுடை
13 யான் நம்பிடாரன் நாடறிபுகழன் இ
14 வருடன் விரதங்கொண்டு செய்தார் இ
15 வ்வூர் பிடாரகளில் ராஜேந்த்ரசோழனு
16 தைய நாயகநான ஈசானசிவரும் தேவ
17 நபயமாந அறங்காட்டி பிச்சரும்
பொருள்: ஸ்ரீசிவபாதசேகரமங்கலம் என்னும் ஊரில் கட்டப்பட்டிருந்த ஸ்ரீஇராஜராஜதேவரான ஸ்ரீசிவபாதசேகரதேவர் திருமாளிகையின் முன்பிருந்த பெரிய திருமண்டபம் பழுதுபட்டதால் பிடவூர் வேளான் அரிகேசவனான காசிராஜன் அதைத் திருப்பணி செய்ய விழைந்தார். ஜெயசிங்ககுலகால வளநாட்டு சாத்தமங்கலத்து பிடாரன் நாடறிபுகழன், அவருக்காக இப்பணியை மேற்கொண்டார். ஸ்ரீசிவபாதசேகரமங்கலத்துப் பிடாரர்களில் ராஜேந்திர சோழன் உதைய நாகனான ஈசானசிவரும் தேவன் அபயமான அறங்காட்டிப் பிச்சரும் இப்பணிக்கு உறுதுணையாக அமைந்தனர்.
பால்குளத்தம்மன் கோவில் கல்வெட்டு சாசனம் உள்ள தூண் https://www.vikatan.com/spiritual/temples/155923-the-history-behind-rajaraja-cholam-pallipadai-inscriptions
https://www.facebook.com/photo/?fbid=615777528502700&set=pcb.615777608502692
இக் கல்வெட்டில் முதலாம் குலோத்துங்க சோழனின் நாற்பத்தி இரண்டாவது அட்சியாண்டான கி பி 1112 இல், சிவபாத சேகர மங்கலத்தில் எழுந்தருளி நின்ற ஸ்ரீ ஸ்ரீ ராஜ ராஜ தேவரான ஸ்ரீ சிவபாதசேகர தேவர் திருமாளிகை ஒன்று இருந்ததாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இம் மாளிகையின் பெரிய மண்டபத்தின் முன் பகுதி சிதைந்தால், பிடவூர் வேளாண் வேளிர் அரிகேசவனான கச்சிராஜர் என்பவர் புணரமைத்ததாக கல்வெட்டின் முலம் அறியமுடிகிறது. அவருக்காக அவ்வூர் நாயகம் செய்து நின்ற சாத்தமங்கலமுடையான நம்பிடரான் நடாறிபுகழன் விரதங்கொண்டு செய்தார் என்ற குறிப்பும், ஈசான சிவர் அறங்காட்டிப் பிச்சர் என்பார் துணை நின்றமையும் கூறப்பெற்று உள்ளன.
இக் கல்வெட்டை ஆராய்ந்த குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் தனது குடவாயில் சிறப்பு கட்டுரைகள் நூலில், இதில் உள்ள “எழுந்தருளி நின்ற ஸ்ரீ ராஜராஜ தேவரான ஸ்ரீ சிவபாத சேகர தேவர் திருமாளிகை” என்ற வாசகத்தை உற்று கவனித்தால் இரு பொருள் தருவதாக அமைத்துள்ளது என்று கூறுகிறார் அவை, ஒன்று மாமன்னன் ராஜ ராஜ சோழனின் திரு உருவச்சிலை நிறுவப் பெற்ற திருமாளிகை என்பது ஒரு பொருளாகும். இரண்டு, ராஜராஜ சோழன் தங்கி வாழ்ந்த திருமாளிகை என்பது மற்றொரு பொருளாகும். எனவே எப்படி நோக்கினும் அங்கிருந்த திருமாளிகை ராஜராஜனின் நினைவு மாளிகை என்பது உறுதி என்றும், ஆகவே தான் அவர் மறைந்து (கி பி 1014) 88 ஆண்டுகள் கழித்து அம்மாளிகையின் முன் மண்டப பகுதி சிதைந்தமையால் அதை குலோத்துங்க சோழன் காலத்தில் (கி பி 1112 இல்) கச்சிராஜன் என்பவருக்காக சிவபாத சேகர மங்கலத்தை (உடையாளூர் ) நிர்வகிக்கும் நடாறிபுகழன் என்பாரும் அவருடன் ஈசான சிவர், அறங்காட்டி பிச்சர் ஆகியோரும் விரதம் மேற்கொண்டு திருப்பணி செய்தனர் என்பதை அறிய முடிகிறது என்று பாலசுப்ரமணியன் ஐயா கூறுகிறார். மேலும் அவர் கூறுகையில், விரதம் மேற்கொண்டு திருப்பணி நிகழ்ந்தது அக்கட்டிடம் (ராஜராஜ தேவர் திருமாளிகை) ஒரு புனித இடமாகவும், வழிபடக்கூடிய இடமாகவும் கருதப் பெற்றது என்பதை குறிப்பதாகும், என்று அவரின் குடவாயில் சிறப்பு கட்டுரைகள் புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
தற்பொழுது உடையாளூரில் உள்ள சிவாலயத்தில் காணப்பெறும் கல்வெட்டுகளில், அவ்வூராகிய சிவபாத சேகர மங்கலத்தை ஸ்ரீமாகேஸ்வரதானம் என்றும் மாகேஸ்வர பெரும் தரிசனத்தாரால் நிறுவிக்க பெற்ற ஊர் என்பதும் கூறப்பெற்று உள்ளது. மேலும் அவ்வூரில் அபிமுக்தம் என்ற கோவிலும் இருந்ததாகக் குறிப்பும் காணப் பெறுகின்றது. மாகேஸ்வர பெருந்தரிசனத்தார் என்பவர் பாசுபத சைவ மார்க்கத்தை சார்ந்த மாவிரதிகளாவர். இவர்கள் சமாதி கோவில்களான பள்ளிப்படைகளையும், பிறவற்றையும் நிருவகிப்பவர்கள் ஆவர்.அபிமுக்தம் என்பதும் மோட்சம் தரக்கூடிய கோவிலாகும். இது காசி சேத்திரத்தின் பெயரால் எடுக்க பெற்றதாகும். அங்கு வித்யாசிவபண்டிதர் என்ற சிவபாத சேகர மங்கலத்துப் பண்டிதர் ஒருவர் இருந்தார் எனவும் அறிய முடிகிறது. எனவே உடையாளூர் சோழர் காலத்தில் முக்தி அடைய விரும்புவோர் தவ வாழ்க்கை வாழ்ந்த ஊர் என்பது உறுதியாகிறது.
அம்மாளிகையிலே அவருக்கு பள்ளிப்படை எடுத்திருக்ககூடிய சாத்திய கூறுகளும் உள்ளன. அந்த இடமே ராஜராஜ சோழனின் பள்ளிப்படை என்று குடந்தை என்.சேதுராமன் போன்ற ஆய்வு வல்லுனர்களும் கருதினார்கள் என்று குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள் தன்னுடைய குடவாயில் சிறப்பு கட்டுரைகள் நூலில் குறுப்பிடுகிறார்.
நமது மாமன்னனின் சமாதி
நமது மாமன்னனின் சமாதி
இத்தனை ஆதாரங்கள் இருந்தும் இன்னமும் இந்த இடம் ராஜ ராஜ சோழனின் சமாதியாக இருக்கக்கூடும் என்று தான் நம்பபடுகிறதே தவிர முறையான அகழ்வாராய்ச்சி இது வரை நடைபெறவில்லை. முறையாக அகழ்வாராய்ச்சி நடைபெற்றால் இன்னும் கூடுதல் வரலாற்று உண்மைகள் வெளியே வரலாம்.ஆனால் அகழ்வாராட்சி செய்து உண்மை நிலையை கண்டறியாமல் ஒரு சில ஆய்வாளர்களும், யாரென்றே முகவரி இல்லாதவர்களும், சமூக வலைதளங்களில் போடும் செய்திகள் இருக்கின்றதே .. அப்பப்பா !!! கண்கொடுத்து பார்க்க முடியவில்லை.
ராஜராஜ சோழனின் சமாதி அங்கு இருகின்றதோ இல்லையோ, ஆனால் அங்கு எதோ ஒரு வரலாற்று உண்மை புதைந்து கிடக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. அங்கு ஒரு மண்டபம் இருந்தது என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது. அங்கு ஒரு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு உள்ளது. அங்கு எதோ ஒரு புரதான நினைவு சின்னம் உள்ளது என்று தெரிந்தும் அரசு ஏன் அந்த இடத்தை அரசுடைமை ஆக்காமல், அதை ஒரு பாதுகாப்பட்ட நினைவு சின்னமாக அறிவிக்காமல் இருக்கிறது என்பதே மிகப் பெரிய கேள்வி. அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய ஆய்வறிஞர்களோ அதற்கான எந்த முயற்சியும் செய்யாமல், முயற்சி எடுக்கும் சிலரையும் இது ராஜ ராஜன் சமாதி அல்ல என்று சண்டையிடுகிறார்கள். ராஜ ராஜா ! உன்னை பார்த்தால் படை நடுங்கியது அன்று மட்டும் தானா ??? இன்றும் நீ பலருக்கு சிம்ம சொப்பனம் தான். ராஜராஜ! எங்கே உன் சமாதியை ஆராய்ந்தால் தங்கள் பதவி போய்விடுமோ ? உயிர் போய்விடுமோ ? என்ற பயம்.
தமிழா !!! அங்கே புதைந்து கிடப்பது நம் பெருமை, நம்முடைய வரலாறு. நம் பழம்பெரும் நாகரிகத்தையும், உயரிய காலச்சரதையும், நாமே இந்த உலகிற்கு முன்னெடுத்து செல்லமால், இப்படி சண்டையிட்டால் வேறு யார் செய்வார் கள் ?? முறையாக ஆராயாமல் இப்படி சண்டையிட்டும் பயந்து ஒதுங்கியும் இருப்பதால் யாருக்கு லாபம் ??? இந்த உலகிற்கு நம் பெருமைகளை எப்படி சொல்ல முடியும் ? யார் சொல்ல முடியும் ? ஒன்று படு தமிழா, உன் இனம் காக்க !!! உன் பழம்பெருமைகளையும் புரதானங்களையும் மீட்டுக்க !!!!
இறுதியாக, இந்த இடத்தை ராஜ ராஜன் சமாதி என்று கூறிவரும் என் போன்றவர்களை எள்ளி நகையாடும் கூட்டத்தை பார்த்து ஒன்றே ஒன்று மட்டும் கூறி இந்த கட்டுரையை முடிக்கிறேன், நான் அங்கு செல்லும் பொழுது எனக்குள் அளவில்லாத இன்பமும் சொல்ல முடியாத துன்பமும் என்னை ஆட்கொண்டதை உணர்ந்தேன். எனக்கு அகழ்வாராய்ச்சியை விட அங்கு செல்லும் பொழுது என் மனசாட்சி என்ன சொல்லியதோ அதையே நம்புகிறேன். அங்கே சென்றதும் என்னையறியாமல் நான் வணக்கம் செய்தேன். காலில் விழுந்தேன். தொட்டு வருடினேன். கட்டி அணைத்தேன். இது ஏன் ??? என்று எனக்கே புரியவில்லை. அங்கே எதோ ஒரு சக்தி என்னை ஆட்கொண்டு அவ்வாறு என்னை செய்ய வைத்திருகின்றது என்று நான் நம்புகிறேன். இந்த இடம் முறையாக அகழ்வாராய்ச்சி செய்து ராஜராஜ சோழன் சமாதி இல்லை என்று நிருபிக்கட்டும் , அப்பொழுது உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதற்கும் நாங்கள் தாயார்.இந்த இடம் ராஜராஜ சோழன் சமாதி இல்லை என்று அகழ்வாராட்சியில் நிருபிக்கபடாதவரை உலகமே அதிர உரக்க சொல்வோம் இது எங்கள் மாமன்னன் ராஜ ராஜ சோழன் சமாதி என்று !!
சோழம் !!!! சோழம் !!!! சோழம் !!!!
கல்வெட்டு மற்ற ஆதாரங்களும் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களின் குடவாயில் சிறப்பு கட்டுரைகள் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது. பாலசுப்ரமணியம் ஐயாவிற்கு எனது நன்றிகள்
எனக்காக ஆதாரங்களை திரட்டி தந்து பல வரலாற்று உண்மைகளை என்னுடன் பகிர்ந்துகொண்ட சசிதரன் அவர்களுக்கும், எனக்கு பல செய்திகள் சேகரித்து தந்த கோவிந்தராஜன் ஐயாவிற்கும், என்னை அழைத்து சென்ற வடிவேல் பழனியப்பன் ஐயாவிற்கும், என்னோடு பயணித்த விஜயகரன் , லோகேஷ், அன்பரசு மற்ற அனைவருக்கும், பிரதி பார்த்து திருத்தி கொடுத்த அஷ்வினி மற்றும் செந்திலுக்கும், என்னுடைய அனைத்து பதிவிற்கும் ஊக்கம் தரும் வார்த்தைகளை சொல்லி என்னை உற்சாகப்படுத்தும் சுரேஷ் குமார் ,ஜெயலக்ஷ்மி உள்ளிட்ட அனைவர்க்கும் என்னுடைய பணிவான நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்
சோழம் !! சோழம் !!! சோழம் !!!
சோழம் !! சோழம் !!! சோழம் !!!
நன்றி
கணேஷ் அன்பு



No comments:
Post a Comment