சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு: ரூ.100 கோடிக்கு மேல் லஞ்சம் - குற்றச்சாட்டை அடுக்கிய அறப்போர் இயக்கம்!
ராம்சார் வன (மத்திய அரசு நிதி பெறும்) நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதி கொடுத்த வனத்துறை, தமிழ்நாடு சுற்றுசூழல்துறை, சிஎம்டிஏ நிர்வாகம், சம்மந்தப்பட்ட அதிகாரிகள், அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ETV Bharat Tamil Nadu Team
Published : October 23, 2025 at 8:52 PM IST
சென்னை: பாதுகாக்கப்பட்ட நிலமாகக் கருதப்படும் ‘ராம்சார் குறியீடு’ பெற்ற பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட தமிழ்நாடு அரசு எப்படி அனுமதி வழங்கியது? என அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை பள்ளிக்கரணையில் ராம்சார் நிலமாக அறிவிக்கப்பட்ட சதுப்பு நிலத்தில் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான 1,250 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதி வழங்கியதை கண்டித்தும், வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து ராம்சார் நிலத்தை மீட்க கோரியும் அறப்போர் இயக்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் பேசினார். அவர் கூறுகையில், "சென்னை பெரும்பாக்கம் பள்ளிக்கரணை ராம்சார் சதுப்புநில பகுதியில், தனியார் நிறுவனம் சார்பில் 1,250 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கு சுற்றுசூழல் மற்றும் கட்டுமான திட்டக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
ராம்சார் நிலம் என்பதால், அங்கு கட்டுமானங்கள் மேற்கொள்ளக்கூடாது. ஆனால், சட்டவிரோதமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுசூழல் துறையும், வனத்துறையும், சென்னை பெருநகர மேம்பாட்டுக் கழகமும் (CMDA அல்லது சிஎம்டிஏ) சட்டவிரோதமாக இதற்கு அனுமதி கொடுத்துள்ளன. இது தொடர்பாக ஏற்கனவே முதலமைச்சர், தலைமை செயலாளர் உள்பட பல துறை சார்ந்த அதிகாரிகளுக்கு புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத கட்டுமானம்
ராம்சாராக அறிவிக்கப்பட்ட நிலத்தில் எந்த கட்டுமானத்துக்கும் அனுமதி கொடுக்க முடியாது. அதை பாதுகாக்கும் வேலையை அரசு செய்ய வேண்டும். இந்த சூழலில், குறிப்பிட்ட இடத்தை ராம்சார் நிலத்துக்கு அருகே உள்ள நிலம் என்று வனத்துறை பொய் சொல்கிறது.இதை எல்லாம் மறைத்து தமிழ்நாடு சுற்றுசூழல் துறை அனுமதி கொடுத்து இருக்கிறார்கள். அந்த நிறுவனம் அனுமதி கோரிய 2 நாட்களில், சென்னை பெருநகர மேம்பாட்டுக் கழகம் எப்படி அனுமதி கொடுத்தது?
சி.எம்.டி.ஏ சென்னையின் வளர்ச்சிக்காக வேலை செய்ய வேண்டும். பள்ளிக்கரணை போன்ற ஈர நிலத்தை பாதுகாக்க வேண்டும். ஆனால், சி.எம்.டி.ஏ, இந்த நிலத்தை சரிபார்க்காமல் அனுமதி கொடுத்துள்ளனர். எனவே, இப்படி தமிழ்நாடு சுற்றுசூழல்துறை, சி.எம்.டி.ஏ., வனத்துறை அனுமதி கொடுத்துள்ளது.
எத்தனை கோடி கைமாறியது?
இதில் எத்தனை கோடி ரூபாய் கை மாறியது? எவ்வளவு கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டது? இதை அனுமதிக்க முடியாது. எனவே அந்த நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட வேண்டும். அந்த நிலத்தை மீட்க வேண்டும். அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீதும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற திட்டங்கள் அழிவை நோக்கிதான் கொண்டு செல்லும்.
இதில் ரூ.100 கோடிக்கு மேலாக லஞ்சமாக கைமாற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதில் பலரும் பயனடைந்து இருபார்கள். பொதுமக்கள் இதுபோன்ற இடங்களில் வீடுகளை வாங்க கூடாது. பெரும் வெள்ளத்துக்கு பிறகு நிலங்களை காப்பாற்றும் அவசியம் ஏற்பட்டுள்ளது. நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். இல்லையெனில், நாங்கள் நிதிமன்றத்தை நாடுவோம்” என அவர் கூறினார்.

No comments:
Post a Comment