கிறிஸ்துவ சர்ச் சொத்து - கல்வி நிறுவனங்கள் முழுவதும் ஊழல் -சென்னை உயர் நீதிமன்றம் - அரசு கிறிஸ்துவ சொத்து நிர்வாக வாரியம் தேவை
மதுரை : ஹிந்துக்கள், முஸ்லிம்களின் அறக்கட்டளைகள் சட்டப்பூர்வ வரன்முறைகளுக்குட்பட்டவை. கிறிஸ்தவ நிறுவனங்களின் நிர்வாக விவகாரங்களை வரன்முறைப்படுத்த ஒரு சட்டப்பூர்வ வாரியம் அமைப்பது தொடர்பான நிலைப்பாட்டை மத்திய, மாநில அரசுகள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லுாரி செயலாளராக பிஜு நிஜேத் பால் நியமிக்கப்பட்டார். இதற்கு கன்னியாகுமரி மறைமாவட்ட சி.எஸ்.ஐ.,பிஷப் தடை விதித்தார். இதற்கு எதிராக பிஜு நிஜேத் பால் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். பிஷப் உத்தரவிற்கு ஏற்கனவே தனிநீதிபதி தடை விதித்தார்.
மீண்டும் விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார் அளித்த உத்தரவு: மறைமாவட்ட கவுன்சிலின் தீர்மானங்களை சஸ்பெண்ட் செய்வதற்கு பிஷப்பிற்கு உரிமை உண்டு. சர்ச் கூட்டத்தை வழிநடத்த அவருக்கு அதிகாரம் உள்ளது. அவர் விரும்பினால் சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கலாம். உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பு மறைமாவட்ட சபை.
இரண்டு மாதங்களுக்குள் மறைமாவட்ட கவுன்சில் கூட்டத்திற்கு பிஷப் அழைப்பு விடுக்க வேண்டும். மனுதாரருக்கு நோட்டீஸ் அளித்து மறைமாவட்ட கவுன்சில் இப்பிரச்னைக்கு 2 மாதங்களில் முடிவு காணும்.
பிஷப்பின் உத்தரவிற்கு ஏற்கனவே இந்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை நீட்டிக்கப்படுகிறது.சர்ச் சொத்துக்கள் மற்றும் அதன் நிதிகளை தவறாக நிர்வகித்தல், தவறாக பயன்படுத்துதல் போன்ற பல்வேறு நிகழ்வுகளை இந்நீதிமன்றம் கண்டுள்ளது.
பல்வேறு சர்ச்சுகள் தொடர்பாக ஒருவருக்கு எதிராக மற்றொரு பிரிவை சேர்ந்தவர்கள் வழக்குகள் தொடர்கின்றனர். பதவிகளில் உள்ளவர்களை நிர்வாகத்தில் பலப்படுத்திக் கொள்வதற்காக வழக்குகளுக்கு சர்ச் நிதி பயன்படுத்தப்படுகிறது. சர்ச்சுகள் சொத்துக்களை மட்டுமல்ல, கல்வி நிறுவனங்களையும் கொண்டுள்ளது.
இவற்றை நிர்வகிக்க தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்படும் நபர்கள் அதிகாரப் போட்டியில் ஈடுபடுகின்றனர். இதனால் நிர்வாகம், நிதி ரீதியாகவும் பாதிப்பு ஏற்படுகிறது. இப்பிரச்னையை தீர்க்க தற்காலிக நடவடிக்கையாக அவ்வப்போது பல்வேறு மறைமாவட்டங்களுக்கு நிர்வாகிகளை நியமிப்பது இந்நீதிமன்றத்தின் வழக்கமான நடைமுறை. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டிய தருணம் இது.
ஹிந்துக்கள், முஸ்லிம்களின் அறக்கட்டளைகள் சட்டப்பூர்வ வரன்முறைகளுக்குட்பட்டவை. கிறிஸ்தவர்களுக்கான அறக்கட்டளைகளுக்கு அத்தகைய வரன்முறைகள் இல்லை. சிவில் நடைமுறைச் சட்டத்தின்படி இந்நிறுவனங்களின் விவகாரங்கள் மேற்பார்வை செய்யப்படுகின்றன. அறக்கட்டளைகள், அறங்காவலர்கள், அறம் சார்ந்த பணியில் ஈடுபடும் நிறுவனங்கள், மத அறக்கட்டளைகள், மத நிறுவனங்கள் இந்திய அரசியலமைப்பின் பொதுப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.எந்தவொரு மத்திய சட்டமும் இல்லாததால், சூழ்நிலையை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசு ஒரு சட்டத்தை கொண்டு வருவதற்கு எந்த தடையும் இருக்க முடியாது. கிறிஸ்தவ நிறுவனங்களின் நிர்வாக விவகாரங்களை வரன்முறைப்படுத்த ஒரு சட்டப்பூர்வ வாரியம் இருக்க வேண்டும் என்பதில் இரு தரப்பிலும் எந்த சச்சரவும் இல்லை.
இந்நீதிமன்றம் தானாக முன்வந்து இவ்வழக்கில் மத்திய உள்துறை செயலர், தமிழக தலைமைச் செயலரை ஒரு தரப்பினர்களாக இணைத்துக் கொள்கிறது. இவ்விவகாரம் தொடர்பான நிலைப்பாட்டை அறிக்கையாக நவ.18 ல் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment