ரூ.119 கோடியில் ஆட்சியர் அலுவலகம்: இன்னும் திறக்கப்படாதது ஏன்? நீதிபதிகள் அதிரடி கேள்வி! By ETV Bharat Tamil Nadu Team Published : November 15, 2025

புதிதாக கட்டப்பட்டுள்ள தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறக்க கோரிய வழக்கில் வருவாய்த்துறை செயலர், மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர், ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மதுரை: ரூ.119 கோடியில் தென்காசி ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்ட நிலையில் இவ்வளவு காலம் திறக்கப்படாதது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்நிலையில் புதிய மாவட்ட ஆட்சியர் கட்டிடத்தை கட்டுவதற்காக ரூ.119 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2021இல் கட்டுமான பணிகள் 90% நிறைவடைந்தன. இருப்பினும் இன்று வரை திறக்கப்படாமல் இருப்பதாகவும், இதனால் ஆட்சியரை தேடி வரும் மக்கள் பெரும் அவதியடைவதாகும் கூறி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டம் ஆவுடையனூரை சேர்ந்த ராம உதயசூரியன் தாக்கல் செய்த அந்த மனுவில், “மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல், மோசமான நிலையில் உள்ளது. இதனால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கட்டுமான பணிகள் 2021இல் நிறைவடைந்து விட்டதாக தெரிகிறது.
ஆனால், திறக்கப்படுவதற்கு முன் முத்துராமன் என்பவர் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கட்டுமான பணிகள் முறையான சுற்றுச்சூழல் தடையில்லா சான்று பெறாமல் நடைபெறுவதாக வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, உரிய சுற்றுச்சூழல் தடையில்லா சான்றை பெறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலர், சுற்றுச்சூழல் தடையில்லா சான்றை பெற உரிய நடவடிக்கை எடுக்கவில்லை” என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இதன் காரணமாகவே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. ஆகவே புதிதாக கட்டப்பட்டுள்ள தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும்” எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நிலுவையில் இருந்தது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கட்டிடப் பணிகள் முடிந்தும் ஆட்சியர் அலுவலகம் இவ்வளவு காலமாக திறக்கப்படாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, வழக்கு தொடர்பாக தமிழக வருவாய்த்துறை செயலர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலர், தென்காசி மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment