எஸ்.ஐ.ஆர் கூட்டம்: த.வெ.க புறக்கணிப்பு ஏன்? தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கடிதம்- ஆலோசனைக் கூட்டங்களுக்கு அழைக்க கோரிக்கை
வரவிருக்கும் தேர்தல்களில் மாநிலம் முழுவதும் போட்டியிட உள்ளோம். ஒவ்வொரு குடிமகனின் குரலும் கேட்கப்படும் வகையில், ஜனநாயக செயல்முறையை மேம்படுத்துவதற்கு எங்கள் கட்சி உறுதியாகவும், அர்ப்பணிப்புடனும் செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தற்போது எஸ்.ஐ.ஆர். (Special Summary Revision) எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், எஸ்.ஐ.ஆர். தொடர்பாக முன்னதாக நடத்தப்பட்ட அரசியல் கட்சி கூட்டத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இதையடுத்து, எஸ்.ஐ.ஆர். தொடர்பான மற்றும் இதர அரசியல் கட்சி ஆலோசனைக் கூட்டங்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தையும் அழைக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய், தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “தேர்தல் ஆணைய கூட்டத்துக்கு தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை. வரவிருக்கும் தேர்தல்களில் மாநிலம் முழுவதும் போட்டியிட உள்ளோம். ஒவ்வொரு குடிமகனின் குரலும் கேட்கப்படும் வகையில், ஜனநாயக செயல்முறையை மேம்படுத்துவதற்கு எங்கள் கட்சி உறுதியாகவும், அர்ப்பணிப்புடனும் செயல்பட்டு வருகிறது.
தேர்தல் ஆணையம் இந்திய தேர்தல் அமைப்பில் முக்கிய பங்குதாரர். பதிவு பெற்ற கட்சி என்ற அடிப்படையில் தவெகவிற்கும் அழைப்பு விடுக்க வேண்டும். சமத்துவத்தையும், ஜனநாயக சமநிலையையும் பாதிக்கும் வகையில் இந்த செயல்பாடு உள்ளது.
தேர்தல் செயல்முறைகள் முழுமையாக, வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றால், தவெக-வையும் அடுத்தடுத்த ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு கூட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் அழைக்க வேண்டும் .ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றி ஒவ்வொரு குடிமகனின் குரலையும் தவெக பதிவு செய்ய விரும்புகிறது. தேர்தல் ஆணையத்திற்கு முழு ஒத்துழைப்பை வழங்க தவெக தயாராக இருக்கிறது.
தமிழக மாநில தேர்தல் ஆணையத்திற்கும், தமிழக முதன்மை தேர்தல் அதிகாரிக்கும் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு நடத்தப்படும் அரசியல் கட்சிகளுடனான அனைத்து ஆலோசனை கூட்டங்களிலும் தவெக சேர்க்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்”
இவ்வாறு விஜய் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.


No comments:
Post a Comment