திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடந்த 5 ஆண்டுகளில் 68 லட்சம் கிலோ கலப்பட நெய் விநியோகம்

திருமலை: ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக இருந்தபோது, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் லட்டு பிரசாதம் தயாரிக்க கலப்பட நெய் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிபிஐ தலைமையிலான சிறப்பு ஆய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. சமீபத்தில் இக்குழு முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்
ஒய்வி. சுப்பாரெட்டியின் உதவியாளரை கைது செய்தது.
இவர் கொடுத்த தகவலின் படி, உத்தராகண்டின் போலே பாபா ஆர்கானிக் டையரி நிறுவனத்திற்கு நெய்யில் கலப்படம் செய்ய சில ரசாயனங்களை விநியோகம் செய்த அஜய் குமார் சுகந்த் என்பவரை கைது செய்துள்ளது. இவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரசாதம் தயாரிக்க ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சி காலத்தில் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள போலேபாபா டையரிக்கு ஒப்புதல் வழங்கியது. ஆனால், இங்கிருந்து தரமற்ற நெய் விநியோகம் செய்ததால் இதனை 2022-ல் பிளாக் லிஸ்ட்டில் வைத்தது. இதனை தொடர்ந்து,
தமிழகத்தில் உள்ள ஏஆர் டையரி, திருப்பதி அருகே உள்ள வைஷ்ணவி டையரி, உத்தர பிரதேசத்தில் உள்ள மால் கங்கா டையரி ஆகியோர் மூலம் போலேபாபா டையரி நிறுவனத்தாரே திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் விநியோகம் செய்துள்ளனர்.
ஒரு லிட்டர் பால் கூட உற்பத்தி செய்யாத இந்த நிறுவனம் ரூ.250 கோடிக்கு டெண்டர் எடுத்து 68 லட்சம் கிலோ கலப்பட நெய்யை 5 ஆண்டுகளுக்கு விநியோகம் செய்துள்ளது. இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் திண்டுக்கல் ஏஆர் டையரியில் இருந்து திருப்பதி தேவஸ்தானத்திற்கு வந்த 4 கன்டெய்னர்களை ஆய்வு செய்து,
அதில் கலப்படம் உள்ளதாக அந்த லாரிகளை திருப்பி அனுப்பினர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருப்பதி அருகே உள்ள வைஷ்ணவி டையரியில் மீண்டும் நெய் வாங்கப்பட்டது. ஆனால், ஜூலை மாதம் திருப்பி அனுப்பப்பட்ட நெய்யையே இவர்கள் லேபிள் மாற்றி அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கலப்பட நெய் விவகாரத்தில் முன்னாள் அறங்காவலர்கள், அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா? என சிபிஐ விசாரணை நடத்த உள்ளது.
No comments:
Post a Comment