Friday, June 5, 2015

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் -நெல்லைச் சொக்கர்

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - நான்மறை (9-16)

அப்பரடிகளும் வேதங்களும்: நெல்லைச்சொக்கர் http://nellaichokkar.blogspot.in/
வைதிக நெறியே பரவியிருந்த பாரத தேசமெங்கணும் அவைதிக நெறிகளான சமண பௌத்தங்கள் பரவின. ஆரம்பத்தில் இவை மிக்கோங்கி வளர்ந்தாலும் நாளடைவில் ஏற்பட்ட சமூக நெருக்கடிகளினாலும், இந்நெறிகளுக்கிடையே ஏற்பட்ட உட்பூசல்களினாலும், துறவிகளின் போலித்தனத்தாலும் நலிய ஆரம்பித்தன.

இச்சமயத்தில் தான் வேதநெறி தழைத்தோங்கவும் மிகுசைவத் துறை விளங்கவும் சமயக்குரவர் அவதரித்தனர். இவர்கள் தலந்தோறும் சென்று இறைவனைப் பண்பொருந்தப்பாடி வைதிக சைவ நெறியினைப் பரப்பலானார்கள்.

 சைவம் இசையையும் பிறகலைகளையும் இறைவனின் வடிவமாகவும் இறைவனை வழிபடும் நெறியாகவும் போற்றியது. இந்நிலை அக்காலத்துச் சமணர், கலை நிகழ்ச்சிகளை ஆன்மிக நெறிக்கு எதிரியாகக் கருதியதற்கு முரணானதாகும்.43

இவர்களுள் அப்பர் சம்பந்தர் காலத்தவர். (கி.பி.570-650). வயதில் மூத்தவர். இறைவன் திருவருளால் இவர் சமண சமயத்திலிருந்து சைவத்துக்கு வந்தடைந்தார். எனவே இவருடைய பாடல்கள் உணர்ச்சி மிகுந்தவை. எளியவை. தாம் வழிபடும் பொருளிடத்தில் இணைந்து தம்மையே அழித்துக் கொள்ளும் அவரது அன்புக்கு இணையாக வேறு எங்கும் காணலரிது. இவர் சமண சமயத்திலிருந்து மாறி வந்ததால் இவர் பாடும் சிவனுடைய புகழ் சிறந்து விளங்குகிறது.44

அப்பரடிகள் தத்துவ சாத்திர உலகிற்குத் தமது திருவாக்குகளினால் வழங்கியுள்ள செய்திகள் விழுமிய பயனுடையவை. ஏனெனில், சமணம் சைவம் முதலான பல சமய ஆராய்ச்சிகளில் தமது இளமையைக் கழித்தவர். மிக்க இளமைப் பருவத்திலேயே இத்தகைய அறிவு வேட்கை அடிகளார்க்கு இனிது எழுந்தது என்று சேக்கிழார் கூறுவது இங்கு நினையத் தக்கது.

நில்லாத உலகியல்பு கண்டு நிலையா வாழ்க்கை
அல்லேன் என்(று) அறத் துறந்து சமயங்களானவற்றின்
நல்லாறு தெரிந்துணர நம்பர் அருளாமையினால்
கொல்லாமை மறைந்துறையும் அமண்சமயம் குறுகுவார்.

உலகின் இயல்பு நிலையாது என்று கண்டுகொண்டபின் நிலையற்ற இவ்வாழ்க்கைக்குத் தான் உரியவனல்லன் என்ற துறவுணர்வு தோன்றியவராய், எல்லாச் சமயங்களின் நன்னெறியை அறிந்து கொள்ள அப்பரடிகள் ஆசைமிகக் கொண்டார் என்பது இங்கு அறியத் தக்கது.45

இனி, மூவர் முதலிகள் அருளிச் செய்த பதிகங்களுக்கு முதலில் வெவ்வேறு பெயர்கள் வழங்கப்பட்டன. 

ஞானசம்பந்த சுவாமிகள் பாடலை `திருக்கடைக்காப்பு' என்றும், அப்பரடிகள் பாடல்களை`தேவாரம்' என்றும், சுந்தரமூர்த்திகள் பாடல்களை `திருப்பாட்டு' எனவும் அழைத்தனர்.

இவர்களுள் அப்பரடிகள் பாடியவை 49,000 பாடல்கள் என்பர். ஆயினும் இன்று கிடைப்பவை3066 மட்டுமே`தேவாரம்' என்னும் சொல்லுக்கு தெய்வத்திடம் அன்பை விளைவிப்பது; தெய்வத்தன்மை பொருந்திய பாடல் எனப் பல பொருள்கள் வழங்கப்படும்.

அப்பரடிகளின் தேவாரப் பாடல்கள் அவர் காலத்து சமய, சமூக, அரசியல் சூழ்நிலைகளை நாம் தெரிந்து கொள்ள உதவுகின்றன.

மேலும் அப்பரடிகள் இளமையிலேயே சமய ஆராய்ச்சியில் தலைப்பட்டு நின்றமையால் அவர் தமிழ் வடமொழி பாலி ஆகிய மொழிகளிலுள்ள சாத்திரங்களிலும் வல்லவராய் இருந்திருப்பார் என்பதை அவரருளிச் செய்தவற்றில் வரும் சொல்லாட்சிகளே நிரூபிக்கின்றன.

வேதவேள்வியை நிந்தனை செய்த சமணசமயத்தின் கண் இருந்தவராதலின் அவ்வேதங்களின் அருமையைப் பின்பு நன்கு உணர்ந்திருப்பார் என்பதிலும் ஐயமில்லை.

ஏனெனில், யஜுர் வேதத்தின் ஸ்ரீருத்ரத்திலுள்ள கருத்துக்கள் அப்பரடிகளின் நின்ற திருத்தாண்டகத்தில் காணலாம். ஸ்ரீருத்ரத்தில் கூறியபடியே சிவபிரானுடைய எண்வகை நிலைகளை (அஷ்டமூர்த்தம்) அடிகளார் இப்பதிகத்தில் எடுத்து ஓதியுள்ளார். 

சிவஞான போத மகாபாஷ்யத்தில் மாதவச் சிவஞான சுவாமிகள் ஸ்ரீருத்ரம் - நின்ற திருத்தாண்டகக் கருத்தொப்புமையைக் குறித்து இருக்கின்றார். மேலும் புராணங்களில் வரும் பல்வேறு சம்பவங்களையும் தமது பதிகங்களில் அப்பரடிகள் குறிப்பிட்டுள்ளார். 45அ

வேதங்கள் பற்றி அப்பரடிகளின் குறிப்புகள்:
ப்பரடிகள் தேவாரத்தில் வேதங்களின் பழமையையும் தொன்மையையும் நிலையான தன்மையையும் குறிப்பிடும் அடைகள் கொடுத்தல்; வேதங்கள் கூறும் வேள்விகளைக் குறிப்பிடுதல்; இறைவன் எழுந்தருளியுள்ள தலங்களில் மறையவர்கள் வாழ்தல்; மறையவர் இசைக்கும் வேதவொலி, வேள்விப்புகை ஆகியவற்றைக் குறிப்பிடுதல் ஆகியன இங்குக் கவனிக்க வேண்டியவையாகும். (எண்கள் திருமுறை - பதிகம் - பாடல் எனும் முறையில் அமைந்தவை)

1. "வேதமும் வேள்விப் புகையும் ஓவா விரிநீர் மிழலை" - 6-2-2
2. "அருமறை" - 6-1-1, 6-1-6
3. "தூயமறை" - 6-17-5
4. "நான்மறை" - 6-18-4
5. "பெரிய வேதம்" - 6-26-5
6. "ஓமத்தால் நான்மறைகள் ஓதலோவா ஒளிதிகழும் ஒற்றியூர்" - 6-45-2
7. "தெய்வநான் மறைகள்" - 6-63-4
8. "மறையோடு அங்கம் கொண்டாடும் வேதியர்" - 6-73-10
9. ”சொல்மலிந்த மறைநான்கு ஆறு அங்கம்" - 6-75-1
10. "மாமறைகள்" - 6-76-2
11. "சீராகும் மறை" - 6-83-4
12. "தகை நால்வேதம் ஓர்ந்தோதிப் பயில்வார்வாழ் தரும் ஓமாம்புலியூர்” - 6-88-8
13. "தீதிலா மறையோனை" - 6-90-8
14. "அரிய நான்மறை" - 5-10-4
15. "நல்ல நான்மறை" - 5-17-6
16. "ஆரண நான்மறை" - 5-38-7
17. "அழகாகிய நான்மறை" - 5-51-4
18. "சொல்லா மறை" - 5-68-8
19. "வேள்வியை வேட்க வைத்தார்" - 4-30-2
20. "பண்டைநான் மறைகள்" - 4-40-4
21. "ஓமத்துள் ஒளியதாகும்" - 4-45-4
22. "ஆறுமோர் நான்கு வேதம் அறமுரைத் தருளினானே" - 4-51-3
23. "மன்னுமறைகள்" - 4-100-3
24. "சதுர்வேதங்கள்" - 4-100-8
25. "வேதம் நான்கும், கல்லாலின் நீழற்கீழ் அறங்கண்டானை" - 6-20-8
26. "ஊனமில் வேதம்" - 4-93-2
27. "குற்றமில் வேதம்" - 4-93-5


வேதங்களையும் ஆறு அங்கங்களையும் இறைவனே அருளிச் செய்தனன்; சனகாதி நால்வர்க்கும் அருளிச் செய்தனன்; தேவர்களும் ரிஷிகளும், மனிதர்களும் அவ்வேதத்தைச் சொல்லியே அவனை வழிபடுகின்றனர்; இறைவன் வேதப் பொருளானவன்; வேதத்திற்கும் அப்பால் இருப்பவன் என்பனவாதிய திருவாக்குகள் இவை:

1. "விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்" - 4-7-8
2. "கூறினர் வேதமும் அங்கமும்" - 4-10-2
3. "அங்கமும் வேதம் வைத்தார்" - 4-30-8
4. "அங்கங்கள் ஆறு நான்கும் அந்தணர்க்கருளிச் செய்து" - 4-29-10
5. "நங்களுக் கருளதென்று நான்மறை ஓதுவார்கள் தங்களுக்கு அருளும் எங்கள் தத்துவன்" -4-32-3
6. "வேதங்கள் நான்கும் கொண்டு விண்ணவர் பரவியேத்த" - 4-35-5
7. "விடுத்தனன் கைநரம்பால் வேதகீதங்கள் பாடக் கொடுத்தனர் கொற்ற வாணாள்"- - 4-49-10
8. "இந்திரன் பிரமன் அங்கி எண்வகை வசுக்களோடு மந்திர மறையதோதி வானவர் வணங்கி வாழ்த்த" -4-65-5
9. "தொண்டனேன் பட்டதென்னே தூயகாவிரியின் நன்னீர் கொண்டிருக்கு ஓதியாட்டிக் குங்குமக் குழம்பு சாத்தி" - 4-75-1
10. "மந்திரிப்பார் ஊனைக் கழித்துய்யக் கொண்டருள் செய்வன" - 4-92-14
11. "ஓதிய ஞானமும் ஞானப் பொருளும் ஒலிசிறந்த வேதியர் வேதமும் வேள்வியும் ஆவன" -4-92-17
12. "மாமறைகள் சொன்ன துறைதொறும் தூப்பொருளாயின" - 4-100-1
13. "ஆரணத்தின் வேண்டும் பொருள்கள் விளங்கநின்று ஆடின" - 4-100-6
14. ”
கூடவொண்ணாச் சயம்புவென்றே தகு தாணுவென்றே சதுர்வேதங்கள் நின்று, இயம்பும் கழலின இன்னம்பரான்தன் இணையடியே" - 4-100-8
15. "மறை தேடும் எந்தாய்" - 4-113-7
16. "ஆரணப் பொருளாம் அருளாளனார்" - 5-68-2
17. "அருமறையின் அகத்தானை" - 6-1-1
18. "மந்திரமும் மறைப் பொருளும் ஆனார் தாமே" - 6-3-4
19. "மறைகலந்த மந்திரமும் நீருங்கொண்டு வழிபட்டார் வானாளக் கொடுத்தியன்றே" -6-40-2
20. "நம்பியையே மறைநான்கும் ஓலமிட்டு வரமேற்கும்" -6-40-5
21. "ஆறங்கம் நால்வேதத்து அப்பால் நின்ற பொருளானை" - 6-54-4
22. "வேதியனை வேதவித்தை" - 6-54-7
23. "நால்வேதத்து அப்பாலானே" - 6-63-9
24. "ஆலதன் கீழ் இருந்து நால்வர்க்கு அறம்பொருள் வீடின்பம் ஆறங்கம் வேதம் தெரித்தானை" -6-66-2


வேதங்களின் பெயர்களைக் குறிப்பிடுதல், இறைவனின் பெயர்களைக் குறிப்பிடுதல், ஐவகை வேள்வியினைக் குறிப்பிடுதல் ஆகியன இவை:

1. "பாடினார் சாமவேதம்" - 4-27-2
2. "முந்திய தேவர் கூடி முறைமுறை இருக்குச் சொல்லி" - 4-29-4
3. "சாமத்து வேதமாகி நின்றதோர் சயம்புதன்னை" - 4-45-4
4. "சமயமேலாறுமாகித் தானொரு சயம்புவாகி" - 4-45-5
5. "எண்ணுடை இருக்குமாகி இருக்கினுட் பொருளுமாகி" - 4-48-3
6. "சாமவேதர்" - 4-64-7
7. "உருத்திர மூர்த்தி போலும்" - 4-72-7
8. "உலகமூர்த்தி" - 4-75-7
9. "உம்பரானை உருத்திர மூர்த்தியை" - 5-62-7
10. "வாமதேவன்" - 5-92-6
11. "சாமவேத கந்தருவம் விரும்புமே" - 6-4-1
12. "அம்மை பயக்கும் அமிர்து கண்டாய்" - 6-23-8
13. "ஓங்காரன் காண்" - 6-24-2
14. "நின்மலன் காண்" - 6-24-5
15. "சிவனென்று நானுன்னை எல்லாம் சொல்ல" - 6-37-8
16. "பரமயோகி" - 6-45-2
17. "பவித்திரனைப் பசுபதியை" - 6-46-5
18. "சந்தோக சாமம் ஓதும் வாயானை" - 6-50-4
19. "சதாசிவன் காண்" -6-52-7
20. "ஐவேள்வி ஆறங்கமானார் போலும்" - 6-53-4
21. "அமலன் கண்டாய், அவிநாசி கண்டாய், பகவன் கண்டாய்" - 6-73-7
22. "எரிபுரியும் இலிங்கபுராணத்துளானை" - 6-74-8
23. "சங்கரனைச் சம்புதன்னை" - 6-80-10
24. "உருத்திரனை உமாபதியை" - 6-90-5
25. "பராபரன் என்பது தமது பேராக் கொண்டார்" - 6-96-11
26. "மாதேவா மாதேவா என்று வாழ்த்தி" - 6-98-3
27. "தீர்த்தமான தியம்பகன்" -6-12-7
28. "சிவமூர்த்தி" - 6-12-9
29. "சாமத்தின் இசைவீணை தடவிக் கொண்டார்" - 6-96-10

இங்கு அருளிச் செய்த பெயர்கள் எல்லாம் வடமொழியின என்பதைக் கருத்தில் கொள்க.
ரிக் வேதமும் அப்பரடிகள் தேவாரமும்:
"னி, வடமொழிநூல்கள் எல்லாவற்றுள்ளும் மிகப் பழையதாகிய இருக்கு வேதத்தின் முதன் மண்டிலம், 43 ஆம் பதிகம் உருத்திரன் ஒருவனே அறிவிலும் வரங்களை மிக வழங்குதலிலும் ஆற்றலிலும் சிறந்தோன் என்றும், எல்லா உயிர்களின் நோய்த் துன்பத்தை நீக்குவோன் என்றும், அவனே பாட்டுகட்கும் வேள்விகட்கும் தலைவன் என்றும், அவன் கதிரவன் ஒளியைப் போலவும், பொன்னைப் போலவும் விளங்குவோன் என்றும் கடவுளர் எல்லார்க்கும் அவனே தலைவன் (ச்ரேஷ்டோ தேவாநாம்), எல்லா தேவரிலும் அவனே ஈகையிற் சிறந்தோன் என்றும் எல்லாவுயிர்கட்கும் நலங்களை அருள்வோன் அவனே என்றும் வலியுறுத்திக் கூறுதல் காண்க." 46

இதனை அப்பரடிகள்,

"எத்தேவும் ஏத்தும் எம்மான் தன்னை" -6-54-3
"வரும்பிறவி நோய் தீர்ப்பான் காண்" -6-64-4
"அன்புடைத் தொண்டர்க்கு அமுதருத்தி இன்னல் களைவன" -4-100-1
"பொன்னுள வார்சடைக் கொன்றையினாய்" -4-105-4
"முனிகள் ஏத்தும் இன்பனை, இலங்கு சோதி இறைவனை" -4-74-2
"முந்தியிவ் வுலகமெல்லாம் படைத்தவன் மாலினோடும்
எந்தனி நாதனே என் றிறைஞ்சிநின் றேத்தல் செய்ய
அந்தமில் சோதி தன்னை அடிமுடி அறியா வண்ணஞ்
செந்தழல் ஆனார்" -4-73-8
"பேரிடர் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான்" -4-58-8
"நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய்" -4-57-6
"ஏத்துவாரிடர்கள் தீர இன்பங்கள் கொடுப்பர்" -4-56-10
"ஆத்தமாம் அயனும் மாலும் அன்றிமற் றொழிந்த தேவர்
சோத்தமெம் பெருமானென்று தொழுதுதோத்திரங்கள் சொல்ல" -4-50-2
"பொன் பொதிந்த மேனியனை" -6-68-6
"வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்" -6-23-1
"அடியார்கள் வேண்டிற்றீயும் விண்ணவனே
விண்ணப்பம் கேட்டு நல்கும் செய்யவனே" -6-44-10
"மெய்யடியார் வேண்டுவதே வேண்டுவானை" -6-80-3
"அந்தணாளர் ஆன்நெய்யால் வேட்கும் வெந்தழல் உருவர்" -4-64-7 


என்று அருளிச் செய்தனர்.

"அங்ஙனமே அதன் (இருக்கு) 114 ஆம் பதிகமும் சிவபிரான் ஒருவனே முழுமுதற் கடவுளாதலைத் தேற்றுவதோடு, அவன் சடைமுடியுடையோனாய், உருத்திர கணங்களுக்குத் தலைவனாய், அருளிரக்க ஈகையில் மிக்கோனாய், வேள்விப்பயனை நிறைவேற்றுவானாய், ஞானியாய் (அறிவோனாய்), உயர்ந்த மருந்துகளைக் கையில் வைத்திருப்போனாய், இறப்பிலியாய்த் திகழுமாற்றை வகுத்துரைக்கின்றது."47

"வேதங்கள் வேள்வி பயந்தார் போலும்" -6-16-3
"துலையாக ஒருவரையும் இல்லாதானை" -6-19-10
"விண்ணுலகின் மேலார்கள் மேலான் தன்னை" -6-19-2
"மூவன்காண் மூவர்க்கும் முதலானான் காண்" -6-85-4
"அணைவரியர் யாவர்க்கும் ஆதிதேவர்" -6-83-7
"மந்திரமும் தந்திரமும் மருந்துமாகி" -6-54-8
"மூதறிவாளன்" -4-39-10
"மூவாத பிறப்பிலாரும்" -4-29-9
"உருத்திர கணத்தினார் தொழுதேத்தும் கருவிலி" -5-69-8
"மற்றமரர் உலந்தாலும் உலவாதானே" -6-50-5 


என அப்பரடிகள் இதனை அருளிச் செய்தார்.

"(இருக்கின்)இரண்டாம் மண்டிலத்து 33 ஆம் பதிகமும் அங்ஙனமே சிவபிரான் தேவர்கள் எல்லாரினும் மிகச் சிறந்தோனாதல் தெரிப்பதுடன், அவனே வலிமையின் மிக்கார் எல்லாரினும் வலிமையிற் சிறந்தோனாவன் என்றும், அவனே சாந்தனாய் (அமைதிமிக்கவனாய்) அடியார்க்கு எளியனாம் எனவும், ஏனைத் தேவர்களாற் போதருந் தீமைகளை எல்லாந் துடைப்பவனாம் எனவும், அவனைவிட ஆற்றலின் மிக்கது எதுவும் இன்றெனவும், புகழ்மிக்கோனாய் என்றும் இளையோனாய்த் தன் தேர்மீது அமர்ந்து முப்புரங்களை அவித்தக்காற் பெரிதும் அஞ்சத் தக்கோனாய் கிளர்ந்தனன் எனவும் அறிவுறுத்துகின்றது... ஆறாம் மண்டலத்தில் 16 ஆம் பதிகமானது உக்கிரனாகிய சிவபிரான் மூன்று பட்டினங்களைப் பொடி செய்தான் என நுவல்கின்றது". 48

அப்பரடிகளும்,

"நிலைவலியின்றி எங்கும் நிலனோடு விண்ணும் நிதனஞ்செய்தோடு புரமூன்று
அலைநலி அஞ்சியோடி அரியோடு தேவர் அரணம் புகத்தன் அருளால்
கொலைநலி வாளிமூள அரவங்கை நாணும் அனல்பாய நீறு புரமாம்
மலைசிலை கையில் ஒல்க வளைவித்த வள்ளல் அவனா நமக்கொர் சரணே" -4-14-5
"வீரமும் பூண்பர்" -4-17-2
"ஏறேற்ற மாவேறி எண்கணமும் பின்படர
மாறேற்றார் வல்லரணஞ் சீறி" -4-19-4
"பெரியன புரங்கள் மூன்றும் பேரழல் உண்ண வைத்தார்" -4-30-4
"மூவாதமேனி முக்கண்ணா போற்றி" -6-56-2
"சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கல்லால் நலமிலன்" -4-11-6
(சலமிலன் - கோபம் என்பது சிறிதும் இல்லாதவன்) (காண்க - திருவருட்பயன் - 9 ஆம் குறள்)
"எளியவர் அடியார்க் கென்றும்" -4-72-5
"கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய்" -6-23-1
"எத்திசை புகினும் எமக்கொரு தீதிலை
தெத்தே யெனமுரன்று எம்முள் உழிதர்வர்
முத்தீ யனையதொர் மூவிலை வேல்பிடித்(து)
அத்தீ நிறத்தார் அரநெறியாரே" - 4-17-1
"திப்பிய சாந்தனாகி" -4-32-6


என்றும் அருளிச் செய்துள்ளனர்.

"அதன் 136 ஆம் பதிகமானது, சடைமுடியோனான (கேசி) சிவபிரான் தீ மண்டிலம் நீர்மண்டிலம் இம்மை மறுமையுலகங்கள் எல்லாவற்றையுந் தாங்குவோன் என்பதூஉம், அவன் வெறுவெளியாய்ச் (சிற்றம்பலமாய்) நோக்கப்படுவோன், அவனே ஒளிவடிவினன் (கேசி இதம் ஜ்யோதிர்) என்பதூஉம், அவன் முனிவர்க்கெல்லாம் முனிவன் (தக்ஷிணாமூர்த்தி) ஆவான் என்பதூஉம், அவன்தன் உருத்திர கணத்திலுள்ள ஒருவரால் நஞ்சினை வருவித்து அதனைப் பருகினன் (கேசி விஷஸ்ய பாத்ரேணயத் ருத்ரேணாபிபத்ஸஹ) என்பதூஉம் தெரித்துரைத்தல் காண்க". 49 

கோதில் மொழிக் கொற்றவனாராகிய அப்பரடிகளும்,

"பொறையவன் காண் பூமியேழ் தாங்கியோங்கும் புண்ணியன் காண்" -6-65-3 என்றும்,
"நீள்வான முகடதனைத் தாங்கி நின்ற மலையானை" -6-66-4 என்றும்,
"பற்றி உலகை விடாதாய் போற்றி" -6-55-6 என்றும்,
"பூதலமும் மண்டலமும் பொருந்தும் வாழ்க்கை செய்வானை" -6-50-6 என்றும்,
"விட்டிலங்கு சடைமுடியர்" -6-35-6 என்றும்,
"முன்பின் முதல்வன் முனிவனெம் மேலை வினை கழித்தான்" -4-90-3 என்றும்,

"பருவரை யொன்று சுற்றி அரவங்கை விட்ட இமையோர் இரிந்து பயமாய்த்
திருநெடு மால்நிறத்தை அடுவான் விசும்பு சுடுவான் எழுந்து விசைபோய்ப்
பெருகிட மற்றி தற்கொர் பிதிகாரம் ஒன்றைஅருளாய் பிரானே எனலும்,
அருள்கொடு மாவிடத்தை எரியாமல் உண்ட அவன் அண்டர் அண்டர் அரசே" -4-14-1 என்றும்

"வடங்கெழு மலைமத்தாக வானவர் அசுரரோடு,
கடைந்திட எழுந்த நஞ்சங் கண்டுபஃறேவர் அஞ்சி
அடைந்துநுஞ் சரணமென்ன அருள்பெரிதுடையராகித்
தடங்கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவினரே" -4-65-2 என்றும்
"கடல் நஞ்சினைப், பங்கி உண்டதோர் தெய்வம்
உண்டோ சொலாய்" -5-33-6 என்றும்
"சங்கை ஒன்றின்றியே தேவர் வேண்டச்
சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச் சிங்கமே" - 6-99-2 என்றும்
"தக்கணா போற்றி" - 6-5-10 என்றும்

போற்றி அருளிச் செய்தனர்.

சிவம் அழிவற்றது:
1. நாஸதாஸீந்நோ ஸதாஸீத் -ரிக் - 10-129-1
2. ததேகம் (ஆஸீத்) -ரிக் - 10-129-2
3. காமஸ்ததக்ரே ஸமவர்த்ததே -ரிக் - 10-129-4


"(மகாப்பிரளய காலத்திலே) அசத்தும் இல்லை; சத்தும் இல்லை; அந்த ஒன்று இருந்தது; அதனின்று முதற்கண்ணே காமம் எனப்படும் பராசக்தி உளதாயிற்று" 50

இறைவனொருவனே ஊழிகளைக் கடந்து நிற்கின்றான்; அவன் ஒருவனே எப்போதும் இருக்கின்றான் என்பதை வாகீச மூர்த்திகள்,

"பெருங்கடல் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும் போய்
இருங்கடல் மூடி இறக்கும் இறந்தான் களேபரமுங்
கருங்கடல் வண்ணன் களேபரமுங் கொண்டு கங்காளராய்
வருங்கடன் மீளநின்று எம்மிறை நல்வீணை வாசிக்கும்மே" - 4-112-7 என்றும்,


"ஊழியளக்க வல்லானும்" - 4-4-5 என்றும்,
"அளவிலாப் பல்லூழி கண்டுநின்ற தீர்த்தனை ” - 6-19-11 என்றும்
"ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ" - 6-34-1 என்றும்
"மலையார் பொற்பாவையொடு மகிழ்ந்த நாளோ" - 6-34-2 என்றும்

"ஓதத்தொலி மடங்கி ஊருண்டேறி
ஒத்துலகமெல்லாம் ஒடுங்கிய பின்
வேதத்தொலி கொண்டு வீணைகேட்பார்" - 6-35-2 என்றும்


வியந்து அருளிச் செய்கின்றனர்.

1. சிவம் அக்ஷரம் அவ்யயம் - பஸ்ம ஜாபால உபநிஷத்.

சிவம் அழிவற்றது; முக்காலங்களாலும் அளவிடப்படாதது;

2. ஸதாசிவோக்ஷரம் விமலம் - திரிபுராதாபிநி உபநிஷத்.
சதாசிவன் அக்ஷரம்; மலமற்றவன்.

3. தத்ர சதுஷ் பாதம் ப்ரஹ்மவிபாதி
ஜாகரிதே ப்ரஹ்மா ஸ்வப்நே விஷ்ணு:
ஸுஷுப்தௌ ருத்ரஸ் துரீயம் அக்ஷரம்           
- ப்ரஹ்ம உபநிஷத்.

அங்கு நான்கு பாதங்களுள்ள பிரமம் விளங்குகின்றது. ஜாக்ரத்தில் பிரமா, சொப்பனத்தில் விஷ்ணு, சுழுத்தியில் ருத்ரன், துரீயம் அக்ஷரம்.
(இங்கு நான்காவது பாதமாகிய துரீயம் அக்ஷரப் பிரம்மம் எனப்படுகிறது. எனவே மூவருக்கும் மேலான பொருளே பரம்பொருளென்பதும், அது முக்காலத்தும் அழிவின்றி, சிருஷ்டிக்கு முன்னும் பின்னும் திகழ்கின்ற பரப்பிரமம்.) 


இக்கருத்துக்களை,

"ஏணிலார் இறப்புமில்லார் பிறப்புமில்லார்" -4-27-8 என்றும்
"ஈறிலாதவன் ஈசனொருவனே" - 5-100-3 என்றும்
"தந்தை தாய் இல்லாதாய் நீயே" -6-41-9 என்றும்
"பிறவாதும் இறவாதும் பெருகினான்" -6-74-6 என்றும்
"மூலமாகிய மூவர்க்கும் மூர்த்தியை" -5-57-5 என்றும்
"முன்னுமாய்ப் பின்னுமாய் முக்கண் எந்தை" -6-12-2 என்றும்
"மூவன்காண் மூவர்க்கும் முதலானான் காண்" -6-85-4 என்றும்

தாண்டக வேந்தர் மொழிந்துள்ளனர்.
மூவரைப் படைக்கும் முதல்வன்:

1. ப்ரஹ்மா விஷ்ணுச்ச ருத்ரச்ச ஸ்ர்வேவா பூத ஜாதய:I
நாசமேவாநுதாவந்தி ஸலிலா நீல பாடபம்II                                       
-மஹோபநிஷத்

பிரமனும் விஷ்ணுவும், உருத்திரனும் எல்லாப் பூதங்களோடும் சிவத்தால் படைக்கப்படுகின்றனர். வடவைத் தீயால் ஜலம் லயமடைதல் போல அப்பூதங்களோடு அவர்களும் லயமடைகின்றார்கள்.

2. ஸர்வம் இதம் ப்ரஹ்ம விஷ்ணு ருத்ரேந்த்ராஸ்தே
ஸம்ப்ரஸுயந்தே ஸர்வாணி சேந்த்ரியாணி
ஸஹபூதைர் ந காரணம்I                                                                          
-அதர்வசிகோபநிஷத்
பிரமன் விஷ்ணு ருத்ரன் இந்திரன் ஆகிய இவரெல்லாம் படைக்கப்படுகின்றனர். இந்திரியங்களெல்லாம் பூதங்களோடு பிறப்பிக்கப்படுகின்றன. ஆகலின் அவர்களும் அவைகளும் காரணமாகா.
 3. அவஸ்தாத்ரிதயாதீதம் துரீயம் ஸத்யசித்ஸுகம்I
ப்ரஹ்மவிஷ்ண்வாதிபிஸ் ஸேவ்யக் ஸர்வேஷாம் ஜிநகம்பரம்II 
-பஞ்சபிரஹ்மோபநிஷத்
ஜாக்ராதி மூன்றவஸ்தைகளுக்கு அதீதரும், துரீயரும், சச்சிதாநந்தமாயுள்ளவரும், பிரமவிஷ்ணு முதலியோரால் சேவிக்கப்படுபவரும், யாவருக்கும் பிறப்பிடமானவரும்.
4. யொதேவாநாம் ப்ரபவச்சோத்பவச்ச
விச்வாதிகோ ருத்ரோ மஹர்ஷி: I
ஹிரண்யகர்ப்பம் ஜநயா மாஸபூர்வம்
ஸநோபுத்யா சுபயா ஸம்யுநக்து II                 
- ஸ்வேதாஸ்வதரம்
எந்த ருத்ரன் என்ற மகரிஷி தேவர்கள் அனைவருக்கும் உற்பத்தி லய ஸ்தானமாயுள்ளான்?; உலக நாயகனாயிருக்கின்றான்?; ஆதியில் ஹிரண்ய கர்ப்பனை சிருஷ்டித்தான்?;அந்தத் தேவன் எமக்கு நல்லறிவை ஊட்டுவானாக.
 4. ஹிரண்யகர்ப்பம் பச்யதஜாயமாநம்  -ஸ்வேதாஸ்வதரம்
ஹிரண்யகர்ப்பனைப் பிறக்கக் கண்டான்.                         என வரும் வேத மொழிகளை,

"இந்திரனோடு தேவர் இருடிகள் ஏத்துகின்ற
சுந்தரமானார் போலும்" - 4-33-1 என்றும்
"ஆதித்தன் அங்கி சோமன் அயனொடு மால்புதனும்
போதித்து நின்றுலகில் போற்றிசைத்தார் இவர்கள்" - 4-36-7 என்றும்
"மாலும் நான்முகனும் கூடி மலரடி வணங்க" - 4-40-2 என்றும்
"இந்திரன் பிரமன் அங்கி எண்வகை வசுக்களோடு
மந்திர மறைய தோதி வானவர் வணங்கி வாழ்த்த" - 4-65-5 என்றும்
"அரி அயன் இந்திரன் சந்திராதித்தர் அமரரெல்லாம்
உரியநின் கொற்றக் கடைத்தலையார் உணங்காக்கிடந்தார்" - 4-99-7 என்றும்
"அயனொடு மால் இந்திரன் சந்திராதித்தர் அமரர் எல்லாம்
சயசய என்று முப்போதும் பணிவன" -4-100-9 என்றும்
"சந்திரன்னொடு சூரியர் தாமுடன்
வந்துசீர் வழிபாடுகள் செய்தபின்
ஐந்தலை அரவின் பணி கொண்டருள் மைந்தர்" - 5-52-4 என்றும்
"மங்கலக்குடி ஈசனை மாகாளி
வெங்கதிர்ச்செல்வன் விண்ணோடு மண்ணும்சேர்
சங்குசக்கர தாரி சதுர்முகன்
அங்கு அகத்தியனும் அர்ச்சித்தாரன்றே" - 5-73-3 என்றும்
"ஆக்காதே யாதொன்றும் ஆக்கினானே" - 6-11-5 என்றும்
"முறைமையால் எல்லாம் படைக்கின்றானே" - 6-44-1 என்றும்
"உலகுக்கெல்லாம் வித்தவன் காண்" - 6-48-4 என்றும்
"பூதலமும் மண்டலமும் பொருந்தும் வாழ்க்கை செய்வானை" - 6-50-6 என்றும்
"உலகனைத்தும் ஒளித்தளித்திட்டு உய்யச் செய்யும் வித்தகன் காண்" - 6-52-8 என்றும்
"உலகமெல்லாம் பெற்றானைப் பின் இரக்கஞ் செய்வான் தன்னை" - 6-63-3 என்றும்
"படமூக்கப் பாம்பணையானோடு வானோன்
பங்கயன் என்றங்கு அவரைப் படைத்துக் கொண்டார்" - 6-96-8 என்றும்

ஆண்ட அரசுகள் அருளிச் செய்தனர்.


சூரிய சந்திரரைப் படைப்பவன்:
1. ஸுர்யா சந்த்ர மிஸௌ தாதா யதா பூர்வமகல்பயத்  - ரிக் -10-190-3 
கடந்த கல்பங்களில் சூரியசந்திரர்களை அவருடைய ஞானத்தினின்றும் தோற்றுவித்தார்.

2. நதத்ர ஸுர்யோ பாதி நசந்த்ர தாரகம் நேமா வித்யுதோ
பாந்தி குதோSயமக்னி: I
தமேவ பாந்த மனுமாதி ஸர்வம் தஸ்ய பாஸா
ஸர்வமிதம் விபாதிII                                                                                              
-கடோபநிஷத்
சூரியன் சந்திரன் நக்ஷத்ரங்கள் மின்னல் அக்னி இவை எவையும் இறைவனில் பிரகாசிக்கின்றவையல்ல. இவை யாவற்றையும் பிரகாசிக்கச் செய்கின்றவன் அவன் ஒருவனே.

வாகீசப் பெருந்தகை,
"சென்றுருளும் கதிரிரண்டும் விசும்பில் வைத்தார்" - 6-14-9 எனவும்,
"விளரொளியை விடுசுடர்கள் இரண்டும் ஒன்றும்
விண்ணோடுமண் ஆகாசம் ஆயினானை" - 6-67-7 எனவும்,
"வாண்மதியாய் நாண்மீனும் ஆயினான் காண்" - 6-65-8 எனவும்,
"சூழ்கதிர்த் திங்களை விரிவிப்பார்
வெயில் பட்டவிளங்கொளி எரிவிப்பார்" - 5-16-3 எனவும்              அருளிச் செய்துள்ளனர்.

சிவபிரானே பர்க்கன்:
"சித்த சுத்திக்கு ஏதுவான நாற்பது சம்ஸ்காரங்களால் ஸம்ஸ்கரிக்கப்பட்ட பிராமணர்களுக்கு விதிக்கப்பட்ட வைதிக கர்மங்களில் மிகவும் முக்கியமான கர்மம், காலையிலும் மாலையிலும் செய்யப்படும் சந்தியாவந்தனம். அவ்வந்தனம் வேதங்களிலே விதிக்கப்பட்டுள்ளது.

...நான்கு வேதங்களே சிரேஷ்டமானவை. ...வேதங்களோ காயத்திரி மகாமந்திரத்திற்குள் அடக்கம். அக்காயத்திரி மந்திரமோ பிரணவத்துக்குள் அடக்கம். அதனால் பிரணவத்தின் பொருளும் காயத்திரி மந்திரத்தின் பொருளும் ஒன்றேயாம்.

...காயத்திரிக்கு... சந்தஸ் - 24 அக்ஷரமுள்ள காயத்திரி சந்தஸ்; ரிஷி-விசுவாமித்திரர். இவர் ராஜாவாகவிருந்து பிறகு பிரம்மரிஷி ஆனவரல்லர். சிருஷ்டி காலத்தில் தோன்றிய சப்த ரிஷிகளில் ஒருவர். அதிதேவதை - சூரியனிடத்திலுள்ள ஞானஸ்வரூபராகிய ஹிரண்மய பரமாத்ம புருஷர். இவரது ஞான தேஜஸே சித்ரூபிணியாகிய பராசக்தி...

காயத்திரி மந்திரத்திலுள்ள உண்மையை அறிவிப்பது சப்த வியாஹிருதிகளாம். அவை பூ முதல் ஸத்யம் ஈறானவையாம்.

தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹிI
தியோ யோந: ப்ரசோதயாத்II


எவன் நம்முடைய புத்திகளை நன்றாக நடத்துவானோ அந்த ஸவிதா என்னும் சூரியனுக்கு அந்தர்யாமியாகிய பர்க்கன் என்னும் நாமம் வகித்த ஹிரண்மய புருஷராகிய மகாதேவனுடைய மேன்மையான (ஞானதேஜஸை) தியானிப்போம்.
- தைத்ரீயாருண சாகை நாராயணம்

இதில் கூறப்பட்ட பரமபுருஷர் சகுணப்பிரமமாகிய ஹிரண்மய சிவபெருமான். அவருடைய பராசக்தியே ஞானதேஜஸ் என்று சொல்லப்படுவர். அவர் சூரியனுக்குப் பிரகாசத்தைக் கொடுத்துக் கொண்டு அவனுக்கு அந்தராத்மாவாக விளங்குகின்றனர். சிவபெருமானுடைய அஷ்டமூர்த்தங்களுள் சூரியனும் ஒன்றாகலின் சூரியனுள் சிவன் இருக்கின்றனன் என்பது பொருத்தமே... இதனால் உபாசிக்கப்படும் பொருள் சூரியனல்ல. அவனுக்கு ஆத்மாவாயுள்ள பரப்பிரமசிவபிரானாரே. இத்தகைய உபாசனைக்கே அந்தராதித்திய வித்தையென்று பெயர்.

...காயத்ரி மகாமந்திரத்தின் அரும்பொருளை விளக்க எழுந்த சாமவேத மைத்ராயண்யுபநிஷத் அம்மந்திரத்தின் மூன்று பாதங்களை விவரிக்கின்றது.

அதில்

அதபர்க இதியோஹவா கஸ்மிந்நாதித்யே நிஹிதஸ்
தாரகேக்ஷிணி சைஷ பர்காக்யோ பாபிர்கதி ரஸ்யஹீதி
பர்கோ பர்ஜயதீதி வைஷ பர்கா இதி ருத்ரோ பிரஹ்மவாதிந:I 


பொருள்: இனி பர்க்கனென்பான், எவன் இந்த ஆதித்தியனிடத்தும் கண்ணின் கருவிழியிடத்தும் உள்ளவன். பர்க்கன் என்ற பெயர் உடையவன், `பா' என்ற பிரகாசத்தால் இவனுக்குக் கதியிருத்தலின் பர்க்கன். வெதுப்புவதால் (சம்ஹரிப்பதால்) பர்க்கன் இவன். உருத்திரன் என்று பிரமவாதிகள் சொல்லுகிறார்கள்.

இம்மந்திரத்தால் அந்தராதித்த வித்தை, அட்சிவித்தை ஆகிய இரண்டும் சிவபரமேயென நிரூபிக்கப்பட்டது.” 51 

மேலும், பர்க்க சப்தத்தை சிவபிரானோடு சாத்தி, யஜுர்வேத கர்ப்போபநிஷத்தானது,

யதியோந்யாநம் ப்ரமுச்யேயம் ப்ரபத்யே பரமேச்வரம்I
பர்க்கம் பசுபதிம்ருத்ரம் மஹாதேவம் ஜகத்குரும்II

”யோனியை விட்டு வெளியே வருவேனாயின் பரமேசுவரரும், பர்க்கரும், பசுபதியும், உருத்திரரும், ஜகத்குருவுமான மஹாதேவரைச் சரணமடைவேன்”
என்று கூறியது.

வடமொழி நிகண்டுகளும் "பர்க்கஸ் த்ரயம்பக" எனவும், "ஹர:ஸ்மரஹரோ பர்க்க" எனவும் தெளிவுபடுத்துகின்றன.

ஆக, சூரியனுக்குள்ளிருந்து ஒளி தருபவர் சிவபிரானே என்பதை வடமொழி வேதம் தெளிவுற எடுத்தியம்பிற்று.

வாகீசமூர்த்திகள் அருளிச் செய்த தமிழ் வேதமும் இக்கருத்தை,

"அங்கதிரோனவனை அண்ணலாக் கருத வேண்டா
வெங்கதிரோன் வழியே போவதற்கு அமைந்து கொள்மின்
அங்கதிரோனவனை உடன்வைத்த ஆதிமூர்த்தி
செங்கதிரோன் வணங்கும் திருச்சோற்றுத் துறையனாரே" -4-41-8 என்றும்

"அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்
அருக்கன் ஆவான் அரன்உரு அல்லனோ
இருக்கு நான்மறை ஈசனையே தொழும்
கருத்தினை நினையார் கல்மனவரே" -5-100-8 என்றும்   தெளிவுபட அருளிச் செய்தது.

ஓங்காரத்து உட்பொருள்:
1. ஓமிதி ப்ரஹ்ம ஸதாசிவோம் - தைத்ரீயோபநிஷத்
ஓம் என்பது ப்ரஹ்மம். சதாசிவன் பிரணவம்.
2. அகாரம் ப்ரஹ்மாணம் நாபௌ உகாரம் விஷ்ணும் ஹ்ருதயே I
மகாரம் ருத்ரம் ப்ரூமத்யே ஓங்காரம் ஸர்வேச்வரம் த்வாதசாந்தே II 

- ந்ருசிம்மதாபந்யோபநிஷத்

அகாரமென்னும் ஸ்தூலனாகிய பிரமனை நாபியிலும், உகாரமென்னும் சூக்ஷ்மனாகிய விஷ்ணுவை இருதயத்திலும், மகாரமென்னும் சூக்ஷ்மதரனாகிய உருத்திரனைப் புருவநடுவிலும் ஓங்காரமென்னும் சூக்ஷ்மதரனாகிய (துரீய) சர்வேசுவரனைத் துவாதசாந்தத்திலும் தியானிக்க வேண்டும்.
3. க்ருத்ஸ்நமோங்காரக திஞ்ச ஸர்வத்யாந யோகஜ்ஞாநாநாம்
யத்பலம் - ஓங்காரோ வேதபர ஈசோவா I    
- அதர்வசிகோபநிஷத்

ஓங்காரத்தின் சொரூபமெல்லாவற்றையும், சர்வ விதமான தியானங்கள், யோகங்கள், ஞானங்கள் ஆகிய இவற்றின் பலன்களையும் பிரணவ சொரூபனான ஈசனே அறிவன்.

4. ஏகஸங்க்யா விஹீநோஸ்மி த்விஸங்க்யா வாநஹம்நச
அகோரோகார ரூபோஸ்மி மகாரோஸ்மி ஸநாதந:
ஹ்ருத்யக்ரந்தி ஹீநோஸ்மி ஹ்ருதயாம்புஜமத்யக:                  
- மைத்ரேயோபநிஷத்

நான் ஒன்று என்ற எண்ணும் அற்றவன். இரண்டு என்னும் எண்ணும் அற்றவன். அகார உகார ரூபமாயிருக்கிறேன். மகார ரூபமாயிருக்கிறேன். இருதய கிரந்தி அற்றவனாய் இருதய நடுவில் இருக்கிறேன். (இவ்வாக்கியம் சிவபெருமான் மைத்ரேயருக்கு அருளிச் செய்தது).

5. ஸ ஓங்காரோய ஓங்கார: ஸ ப்ரணவோய: ப்ரணவ:
ஸஸர்வவ்யாபீ யஸ்ஸர்வவ்யாபீ ஸோநந்தோ யோநந்த:
தத்தாரம் யத்தாரம் தத்ஸுக்ஷ்மம் யத்ஸுக்ஷ்மம்
தத்சுக்லம் யச்சுக்லம் தத்வைத்யுதம் யத் வைத்யுதம்
தத்பரம் ப்ரஹ்மேதி
யஏகஸ்ஸ ஏகோருத்ர: ஸ ஈசானஸ்ஸபகவாந்
ஸ மஹேச்வரஸ்ஸ மஹாதேவ:II                                          
- அதர்வசிரோபநிஷத்

எவன் ஓங்காரன் அவன் ஓங்காரன்; எவன் பிரணவன் அவன் பிரணவன்; எவன் ஸர்வ வியாபீ அவன் ஸர்வ வியாபீ; எவன் அனந்தன் அவன் அனந்தன்; எது தாரம் அது தாரம்; எது சூக்ஷ்மம் அது சூக்ஷ்மம்; எது சுக்லம் அது சுக்லம்; எது வைத்யுதம் அது வைத்யுதம்; அது பரப்பிரமம் என்று, எவன் ஏகன் அவன் ஏகனான உருத்திரன். அவன் ஈசானன் - அவன் பகவான், அவன் மகேசுரன். அவன் மகாதேவன்.

6. ஓம் கம் ப்ரஹ்ம - யஜுர் (40-17)
ஓம் பரப்பிரம்மத்தின் பெயராகும். அது தான் பிரம்மம்.

7. ஓம் இத்யேதக்ஷரம் இதம் ஸர்வம் தஸ்யோப வ்யாக்யானம்.- மாண்டூக்ய உபநிஷத்
ஓம் என்பது எதன் பெயரோ அது அழிவற்றது. ஒருபொழுதும் அழியாதது. சராசர ஜகத்தில், அசைவதும் அசைவற்றதுமாகிய உலகில் அது எங்கும் நிறைந்திருக்கிறது.

"ஓங்காரத்து ஒருவனாகும்" -4-25-9 எனவும்
"ஓங்காரன் காண்" - 6-24-2 எனவும்
"ஓங்காரத் துட்பொருளாய் நின்றான் கண்டாய்" - 6 - 39 - 10 எனவும்
"ஓங்காரத்து ஒருவன் காண்" - 6 - 48 - 41; 6 - 65 - 1 எனவும்
"ஒங்காரத்து உட்பொருளை" - 6 - 63 - 3 - எனவும்
"ஓங்கார மெய்ப்பொருளை" - 6 - 86 - 3 எனவும்
"ஓங்காரத் துட்பொருள்தான் ஆயினானை" - 6 - 67 - 7 எனவும்
"பேரெழுத்து ஒன்று உடையானை" - 6 - 91 - 6 எனவும்

எனப் பலவாற்றானும் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச் செய்தனர்.

இல்லான் உள்ளான்:
தேவர்கள் சுவர்க்க (சிவலோகத்தை) லோகத்தையடைந்து உருத்திரரை நோக்கி நீவிர் யார்? என்று வினாவினார்கள். (அதற்கு) நான் மாத்திரம் இருந்தேன், இருக்கின்றேன், இருப்பேன். எனக்கு வேறாக எதுவும் இல்லை; அந்தரத்தையும் அந்தராந்தரத்தையும் பிரவேசித்தார், திக்குகளையும் திக்கினிடைகளையும் பிரவேசித்தார்; அவர் நான், நான் நித்தியனும் அநித்தியனுமாகி இருக்கின்றேன் (என்று தொடங்கி) நான் பிரமா, நான் பிரமம், நான் கிழக்கும் மேற்கும் ஆயினேன், நான் தெற்காயினேன், வடக்காயினேன், நான் மேலும் ஆயினேன், கீழுள்ளேன், நான் பெருந்திசை நான்கும் சிறுதிசை நான்குமாகிறேன்; நான் ஆண், நான் பெண், நான் காயத்ரி, நான் சாவித்திரி, நான் திருஷ்டுப் ஜகதியும் அநுஷ்டுப்பும் ஆகின்றேன். சந்தஸ் நான், கார்கபத்யம் தக்ஷிணாக்னி ஆகவநீயம் நான், சத்யம் நான், பசு நான், கௌரி நான், ஜ்யேஷ்டன் நான், சிரேஷ்டன் நான், வரிஷ்டன் நான், நீர் நான், தேயு நான், குஹ்யம் நான், கோப்யம் நான், வனம் நான், புஷ்கரம் நான், பவித்ரம் நான், ஆதிமத்தியம் நான், புறம் நான், முன் நான், ஜ்யோதி நான், என்னை எல்லாமாக அறிபவன் எல்லாம் அறிகின்றான் என்றார்; உருத்திரர் எனப்படும் பகவானுக்கு, பிரமா எனப்படும் அவருக்கு நான் நமஸ்காரஞ் செய்கின்றேன்.

- அதர்வசிரோபநிஷத்

"மாலாகி நான்முகனாய் மாபூதமாய் மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வுமாகிப்
பாலாகி எண்டிசைக்கும் எல்லையாகிப் பரப்பாகிப் பரலோகந் தானேயாகிப்
பூலோக புவலோக சுவலோகமாய்ப் பூதங்களாய்ப் புராணன்தானேயாகி
ஏலாதனவெல்லாம் ஏல்விப்பானாய் எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்றவாறே."
- 6 - 94 - 7

மண்ணாகி விண்ணாகி மலையுமாகி...
பெண்ணாகிப் பெண்ணுக்கோர் ஆணுமாகி...
அங்கமாய் ஆதியாய் வேதமாகி அருமறையோடு
ஐம்பூதம் தானேயாகி,
எங்குமாய் ஏறூர்ந்த செல்வனாகி... - 6 - 94 - 2

என நின்ற திருத்தாண்டகம் முழுமையும் சிவபிரானின் தடஸ்த லக்ஷணம் எனப்படும் ஒன்றாய் நிற்றலை அருளிச் செய்கின்றார் செந்தமிழ்ச் சதுரராகிய அப்பரடிகள்.

2. ஸ ஹோவாசைத்வை ததக்ஷரம் கார்க்கி ப்ராஹ்மணா
அபிவதந்த்யஸ்தூலமநண்வ ஹ்ரஸ்வதீர்க்கமலோஹிதமஸ்நேஹமச்சாய
மகமோ வாய்வநாகா‹ மங்கமரஸமகந்தமசக்ஷுஷ் கம‹்ரோத்ர
மவாகமநோதேஜஸ் கப்ராணமமுகமாத்ரமநந்தர பாஹ்யம் ந
தத‹்நாதி கிஞ்ச நநதத‹்நாதி க‹்சநI


- பிருகதாரண்ய உபநிஷத் (5.88)

யாக்ஞவல்க்யர் சொல்லும் பதிலாவது: கார்க்கியே! (ஆகாசமாகிய பராசக்திக்கு ஆதாரமாயுள்ள) இதனை அக்ஷரம் என்று பிரமவித்துக்கள் கூறுகின்றார்கள்; இது ஸ்தூலமாகாததும், அணுவாகாததும், குறுக்கமாகாததும், நீட்டமாகாததும், சிவப்பாகாததும், சிநேகமாகாததும், நிழலாகாததும், இருளாகாததும், வாயுவாகாததும், ஆகாசமாகாததும், சங்கமாகாததும், இரசமாகாததும், கந்தமாகாததும், கண்ணாகாததும், காதாகாததும், வாக்காகாததும், மனசாகாததும், தேயுவாகாததும், பிராணன் ஆகாததும், முகமாகாததும், அளவாகாததும், உள்ளாகாததும், வெளியாகாததுமாய் அந்த அக்ஷரம் ஒன்றையும் அயில்வதில்லை, ஒருவனும் அதனை அயில்வதில்லை.

3. அ‹ப்தமஸ்பர் ‹மரூபவ்யந்த தாரஸம் நித்யமகந்த
வச்சயதநாத்யநந்தம் மஹத: பரம் த்ருவம் நிசாய்யம்
ம்ருத்யுமுகாத் ப்ரமுச்யதே!                                                          
-கடோபநிஷத்(3.15)

எந்தப் பிரமமானது சப்தமாகாததாய், ஸ்பரிசமாகாததாய், ரூபமாகாததாய், இரசமாகாததாய், கந்தமாகாததாய், ஆதியந்தமிலாததாய், அழியாததாய், அசையாததாய், நித்தியமாய், மகத்துக்கு வேறாய் உள்ளதோ அதனைச் சாக்ஷாத்கரித்து மரணவாயினின்றும் வீடுறுகின்றான்.

உடன்பாட்டுக் குணங்களால் இறைவனைப் புகழ்ந்த வேதம் எதிர்மறைக் குணங்களாலும் புகழ்கிறது. 
வாகீசர் அருளிச் செய்த தமிழ் வேதமும் அங்ஙனமே,
"விரிகதிர் ஞாயிறல்லர் மதியல்லர் வேத விதியல்லர் விண்ணும் நிலனும்
திரிதரு வாயுவல்லர் செறுதீயுமல்லர் தெளிநீரு மல்லர் தெரியில்
அரிதரு கண்ணியாளை ஒருபாகமாக அருள்காரணத்தில் வருவார்" - 4-8-2 எனவும்

"ஆணலார் பெண்ணும் அல்லார்" -4-27-8 எனவும்

"மண்ணல்லை விண்ணல்லை வலயமல்லை மலையல்லை கடலல்லை வாயுவல்லை
எண்ணல்லை எழுத்தல்லை எரியுமல்லை இரவல்லை பகலல்லை யாவுமல்லை
பெண்ணல்லை ஆணல்லை பேடுமல்லை பிறிதல்லை ஆனாயும் பெரியாய் நீயே
உண்ணல்லை நல்லார்க்குத் தீயையல்லை உணர்வரிய ஒற்றியூருடைய கோவே." -6-45-9 எனவும்

எதிர்மறைக் குணங்களால் போற்றி சிவபிரான் யாவற்றையுங் கடந்தவர் என்பதை உணர்த்துகின்றது.

எண்குணத்தான்:
தன்வயத்தனாதல் - ஸ்வதந்திரத்வம்
தூய உடம்பினன் ஆதல் - விசுத்த தேகம்
இயற்கை உணர்வினன் ஆதல் - நிராமயான்மா
முற்றும் உணர்தல் - சர்வக்ஞத்வம்
இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்குதல் - அநாதி போதம்
பேரருள் உடைமை - அலுப்த சக்தி
முடிவிலாற்றல் உடைமை - அநந்த சக்தி
வரம்பில் இன்பம் உடைமை - திருப்தி 


இந்த எண் குணங்களையும் உடையவன் சிவபிரான்.


இத்தகைய குணங்களை உடையவனை `குணாதீதன் - நிர்க்குணன்' என்றால் பொருந்துமா? என்றால், பொருந்தும்.

எப்படியெனின்,
இறைவன் மாயையைக் கடந்து நிற்றல், சத்வாதி முக்குணங்களை கடந்த தன்மையைக் குறிக்கும். எனவே உயிர்க்குணங்களாகிய - மாயையின் வயப்பட்ட - முக்குணங்களைக் கடந்தவன் என்பதையே `குணாதீதன் - நிர்க்குணன்' என்பன குறிக்கும்.

1. ஏஷ ஆத்மாபஹதபாப்மா விஜரோ விம்ருத்யுர் விே‹ாகோ
விஜிகிப்ஸோபிபாஸஸ் ஸத்யகாமஸ் ஸத்ய ஸங்கல்ப: I   
- சாந்தோக்யோபநிஷத் (8.1.5)
இந்தப் பரமான்மாவானவர் பாவமிலராய், ஜரையிலராய், மரணமிலராய், சோகமிலராய், பசியிலராய், தாகமிலராய், சத்தியகாமராய், சத்தியசங்கற்பராய் உள்ளார்.
2. `எவர் சர்வக்ஞராய் எவற்றையும் அறிபவராய் இருக்கின்றாரோ, எவர்க்குத் தபஸ் ஞானமயமாயுள்ளதோ' என வரும் முண்ட கோபநிஷத் 1-1-9; 2-2-7; மைத்ரேயோபநிஷத் 7.1 வாக்கியங்களால் இறைவன் சர்வக்ஞத்வம் உடைமையும்,
3. `ஆனந்தம் பிரமம்' (தைத்ரீயம் 3.6); `அந்நியமாய் அந்தரமாயுள்ள ஆன்மா ஆனந்தமயம்'(தைத்ரீயம் 2.5.1) என்பதால் நித்ய திருப்தத்துவம் உடைமையும்,
4. `வித்தை அவித்தை (பசு, பாசம்) எனும் இரண்டையும் ஆளுபவர் மற்றொருவர்(ஸ்வேதாஸ் - 5.1); `பிறவாதவராகிய ஞனும் அஞ்ஞனுமாம் இருவரும் முறையே ஈசனும் அநீசனுமாம்' (ஸ்வே 1.9) என்பதால் ஸ்வதந்திரத்வம் உடைமையும்
5. `அவரது பராசக்தியானது ஸ்வபாவிகமாய் ஞானசக்தி, கிரியா சக்தி, இச்சாசக்தி எனப் பலவாறாகக் கேட்கப்படுகின்றது (ஸ்வே. 6.8) என்பதனால் அலுப்தசக்தி எனும் குணம் உடைமையும்,
6. `உருத்திரர் ஒருவருளர்; (அவர்) இரண்டாவதொன்றைக் கொள்வாரல்லர்; இந்த உலகம் அனைத்தையும் படைப்பனவும் காப்பனவுமாகிய சத்திகளினாலே ஆளுகின்றனர். (ஸ்வே.3.2) என்பதனால் அநந்தசக்தி உடைமையும் பெறப்படுகின்றன.52 

இதனை,
"எட்டுக் கொலாமவர் ஈறில் பெருங்குணம்' - 4 - 18 - 8 எனவும்
"கலைஞானிகள் காதல் எண்குணவன் காண்' - 5 - 63 - 4 எனவும்
"எட்டுவான் குணத்து ஈசன் எம்மான்" - 5 - 89 - 8 எனவும்
"பரமர் போலும் எண்குணத்தார்" - 6 - 16 - 4 எனவும்    அப்பரடிகள் கூறுவர்.

அட்டமூர்த்தி:
பஞ்சபூதங்களும், சூரிய சந்திரரும், ஆன்மாவும் இறைவனுக்கு அஷ்டமூர்த்தங்களாம்.

இதனை,
`பவர், சர்வர், ஈசானர், பசுபதி, உருத்திரர், உக்ரர், பீமர், மகாதேவர் என்னும் அஷ்டமூர்த்தியாயிருக்கும் தேவர்க்கு ஸ்வாஹா' என யஜுர்வேத மந்த்ர ப்ரச்னம் கூறுகின்றது.

"அட்டமா உருவினானே" - 4-57-3 எனவும்
"அட்டமா மூர்த்தியாய ஆதியை" - 4-78-10 எனவும்
"அட்டமூர்த்தி அண்ணாமலை கைதொழ" - 5-5-6 எனவும்
"அட்டமூர்த்தியதாகிய அப்பரோ" - 5-10-3 எனவும்
"எட்டுமூர்த்தியர்" - 5-21-2 எனவும்
"அட்டமூர்த்தி அனாதி" - 5-54-10 எனவும்
"இருநான்கான மூர்த்தியே" - 6-98-6 எனவும்

அடிகள் அட்டமூர்த்தியைப் போற்றுகின்றார்.

பசுபதி:
1. `ய ஈசேஸ்ய த்விபத: சதுஷ்பத:I -ரிக் (10.121.3)
எவர் இருகாலும் நாற்காலுமுடைய பசுக்களை ஆளுகின்றாரோ.
2. அஹமேவ பசூநாமதிபதி:I  - யஜுர் 6.2.3.2
நானே பசுக்களுக்கு அதிபதி.
3. ஏஷாமீசே பசுபதி: பசூநாஞ் சதுஷ்பதா முதசத்விபதாம்I - யஜுர் 3.1.4.3
நாற்காலும் இருகாலுமுடைய பசுக்களைப் பசுபதியானவர் ஆளுகின்றார்.
4. உமாபதயே பசுபதயே நமோ நம:I  - தைத்ரீய ஆரண்யகம் (10.22.40)
உமாபதியார்க்கு பசுபதியார்க்கு நமஸ்காரம்.

பசுபதிப் பெயரின் தனித்தன்மையை உணர்த்துவான் வேண்டி, அப்பரடிகள், ஒவ்வோர் பாடலின் ஈற்றிலும் `எம்மை ஆளும் பசுபதியே' என முடியும் பதிகம் ஒன்றினை அருளியுள்ளனர். அதன் பெயரே `பசுபதித் திருவிருத்தம்' என்பது. 

"பத்தர் மனத்துளேயும் பசுபதி பாசுபதன்" - 6-12-6 எனவும்
"பவித்திரனைப் பசுபதியைப் பவளக் குன்றை" - 6-46-5 எனவும்

இன்னும் பல்வேறு பதிகங்களிலும் போற்றியுள்ளார்.

குறிப்புகள்:
43. சைவ சமயத் தோற்றமும் வளர்ச்சியும் - பக். 34.
44. மேலது - பக். 40.
45. அப்பர் தேவாரத் திறன் - அப்பர் மெய்ப்பொருள் நெறி - பக். 40.
45.அ. மேலது - அப்பர்தேவாரத்தில் கண்ட இலக்கணச் சிறப்பியல்புகள் - பக். 9.
46. மாணிக்கவாசகர் காலமும் வரலாறும் - பக்.554, 555.
47. மேலது - பக். 555.
48. மேலது - பக்.555.
49. மேலது - பக்.555.
50. தேவாரம் வேதசாரம் - பக். 12.
51. ப்ரணவ வித்யா பரிமளம் - பக். 135,136,138,139,140,141.
52. சிவநேசன் - 7 ஆம் ஆண்டுத் தொகுதி - பக். 31

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...