கோவையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது கல்லூரிப் பெண் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்த பாதிரியார், அந்த இளம்பெண்ணை கொலை செய்த சம்பவம்! தன் மகள் கொலை செய்யப்பட்டதை இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் போராடி நிரூபித்துள்ளார் அவரது தாய் சாந்தி ரோஸ்லின்.
கோவை, கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் சகாயராஜ் - சாந்தி ரோஸ்லின் தம்பதியர். இவர்களது ஒரே மகள் ஃபாத்திமா சோஃபி. கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் கேரள மாநிலம், வாளையாரையடுத்த சந்திராபுரம் புனித தனிஸ்லாஸ் ஆலய வளாகத்தில் உள்ள சர்ச் பாதிரியார் ஆரோக்கியராஜ் அறையில் மர்மமான முறையில் ஃபாத்திமா சோஃபி இறந்து கிடந்தார்.
ஃபாத்திமா சோஃபி தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றதாகவும், காப்பாற்றி கொண்டு வரும் வழியில் இறந்துவிட்டதாகவும் பாதிரியார் ஆரோக்கியராஜ், சந்திராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, தற்கொலை என வழக்குப்பதிவு செய்து வழக்கை முடித்தது கேரளா காவல் துறை. இப்போது பழைய வழக்கை மறுவிசாரணை செய்து பாதிரியார் ஆரோக்கியராஜையும், அவருக்கு உதவியவர்களையும் கைதுசெய்யச் சொல்லி கேரளா காவல் துறையிடம் முறையிட்டுள்ளார் சாந்தி ரோஸ்லின். இதுதொடர்பாக சாந்தி ரோஸ்லினிடம் பேசினோம்.
‘‘ஃபாதர் ஆரோக்கியராஜுக்கு சோஃபி சிறுகுழந்தையாக இருக்கும்போதிருந்தே தெரியும். அப்போ அவர் கோயம்புத்தூர்ல உதவி பங்குத் தந்தையா இருந்தாரு. அப்புறம் சந்திராபுரம் சர்ச்க்குப் போயிட்டாரு. சோஃபி 10-வது படிக்கறப்போ அடிக்கடி தலைவலி வர ஆரம்பிச்சது. அதனால சிகிச்சைக்காகக் கேரளாவுக்குப் போனோம். அப்போது ஃபாதர் ஆரோக்கியராஜை சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சது. அவரோட பழக்கம் அதிகமாச்சு. மாசத்துல ஒருநாள் சின்ன குழந்தைகளுக்கு மறைக்கல்வி வகுப்பு எடுப்பதற்காக என் பொண்ணை வாளையாருக்குக் கூட்டிட்டுப் போவாரு. அதனால அவர் மேல நாங்க எந்த சந்தேகமும் படல. 2013-ம் வருஷம் ஜூலை மாசம் 22-ம் தேதி என் மாமியாருக்கு உடம்பு சரியில்லாததால நானும், என் கணவரும் ஹாஸ்பிட்டல்லேயே தங்கிட்டோம். அப்போது சோஃபியை ஃபாதர் ஆரோக்கியராஜ் சந்திராபுரம் சர்ச்க்குக் கூட்டிட்டுப் போயிருக்கார்.
அங்கேதான் என் பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்டதா சொல்லி உடலை ஒப்படைச்சாங்க. இதற்கிடையில ஃபாதர் ஆரோக்கியராஜை சஸ்பென்ட் பண்ணாங்க. இந்த நிலையில், என் பொண்ணு எழுதின ஒரு கடிதம் கிடைச்சது. அதுல ‘நான் செத்துட்டா அதுக்குக் காரணம், ஃபாதர் ஆரோக்கியராஜ்தான்’னு எழுதி இருந்தா. அதனால ஆரோக்கியராஜ்கிட்ட போன்ல பேசி அனைத்தையும் ரெக்கார்டு பண்ணினேன். அதை ஒரு டி.வி நிகழ்ச்சியில கொண்டுபோய் கொடுத்தேன். அங்கேயும் உண்மைய ஒத்துக்கிட்டாரு. இப்போ அந்த வீடியோ, ஆடியோவை கேரளா போலீஸ்கிட்ட கொடுத்து, மறு விசாரணை செஞ்சு, ஃபாதர் ஆரோக்கியராஜையும், அவருக்கு உடந்தையா இருந்தவங்களையும் கைது செய்ய வலியுறுத்தியிருக்கோம்” என்றார் ஆவேசமாக.
ஆரோக்கியராஜ் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் வீடியோ காட்சிகளை நாமும் பார்த்தோம். அதில், ‘‘நான் திட்டமிட்டு கொலை செய்யல அக்கா (சாந்தி ரோஸ்லின்). அவளுக்கும் எனக்கும் லிங்க் இருந்துச்சு. அன்னைக்கு என் ரூம்ல இருந்தப்போ திடீர்னு சத்தம் போட ஆரம்பிச்சுட்டா. என் ரூம்ல பொண்ணு இருந்தது தெரிஞ்சா எனக்கு ரொம்ப பிரச்னை ஆயிடும். அதனால அவ சத்தம் போடாம இருக்க துப்பாட்டாவை பிடிச்சு இழுத்தேன். அதுல கழுத்து நெறிஞ்சி மயங்கிட்டா. ஹாஸ்பிட்டல் கொண்டு போறதுக்குள்ள வழியிலேயே இறந்துட்டா. அவ ரொம்ப நல்ல பொண்ணு. அவளை ப்ளான் பண்ணி எல்லாம் கொலை பண்ணலை. இது ஒரு ஆக்சிடென்ட். பிரஸ்காரங்களுக்கு தெரிஞ்சா இதை பெரிசாக்கி பார்ப்பாங்க. அதனாலதான் இதை நான் ஒத்துக்கிட்டு, சரண்டர் ஆகலை. முடிஞ்சவரைக்கும் என்னை இதுல இருந்து காப்பாத்துங்க அக்கா. நான் பண்ணது தப்புதான். தெரியாம பண்ணிட்டேன்’’ என சாந்தி ரோஸ்லினிடம் பேசுகிறார் ஃபாதர் ஆரோக்கியராஜ்.
இதுதொடர்பாக ஆரோக்கியராஜை தொடர்புகொண்டோம். ஆனால் அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இந்த வீடியோ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானதால் அவர் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே ஃபாதர் மீது புகார் கூறி சாந்தி ரோஸ்லின் பேட்டி கொடுத்ததால் ஆத்திரமடைந்த சிலர், சாந்தி ரோஸ்லின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாகப் பாதுகாப்பு கேட்டு கோவை போலீஸை நாடி இருக்கிறார் சாந்தி ரோஸ்லின்.
http://tamil.oneindia.com/news/tamilnadu/christians-protest-against-broadcast-tv-channel-229571.html
‘சொன்னதெல்லாம் பொய்’... சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு எதிராக கிறிஸ்தவர்கள் போராட்டம்
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கிறிஸ்தவ பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் குறித்து தவறான தகவல்கள் கூறப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் கிறிஸ்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை. கடந்த 15 மற்றும் 16ம் தேதி ஒளிபரப்பப் பட்ட இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் ஒருவர் கோவையைச் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியார் தாமஸ் அக்வானஸ் மற்றும் கன்னியாஸ்திரிகள் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இது தொடர்பாக உரிய விசாரணைகள் இன்றி இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பியதாக, கடந்த சனிக்கிழமையன்று 900 கிறிஸ்தவர்கள் ஒன்று சேர்ந்து சென்னை செயிண்ட். மைக்கேல் சர்ச்சில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கோவை விகார் ஜெனரல் ரெவரண்ட் ஜான் ஜோசப் ஸ்டெயின்ஸ் கூறுகையில், ‘தவறான செய்தியை உரிய விசாரணையின்றி ஒளிபரப்பு செய்ததற்காக கண்டனம் தெரிவித்து இப்போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கூறப்பட்ட தகவல்கள் தவறானவை' `என்றார். மேலும் டிவி நிறுவனம் மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யவுள்ளதாகவும், நாடு முழுவதும் சானலுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
No comments:
Post a Comment