ஈ.வெ.ராமசாமி - மணியம்மாள் கல்யாணம் செய்வதை திராவிடர் கழக மற்ற தலைவர்களுக்கு ஏற்பு இல்லை. திருமண ஏற்பாட்டை கைவிடக்கோரும் தீர்மானம் திராவிடர் கழக நிர்வாகிகளால் 1949 ஜூலை 10-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. ஆனால், 1949 ஜூலை 9-ஆம் தேதியே ஈ.வெ.ராமசாமி – மணியம்மாள் கல்யாணம் சென்னையில் ஈ.வெ.ரா-வின் நண்பர் நாயகம் வீட்டில் பதிவாளர் வரவழைக்கப்பட்டு, ரகசியமாக நடந்தேறி விட்டது.
இந்த செய்தி, திருச்சியில் திராவிடர் கழகத்தின் மத்திய நிர்வாகக்குழுவில் தீர்மானம் நிறைவேறியபின் தந்தி மூலம் வந்து சேர்ந்தது. அதிர்ச்சியும் ஆயாசமும் அடைந்த நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு அண்ணாதுரை ஆறுதல் கூறி, இனி நடக்க வேண்டியதைப் பார்ப்போம் என ஊக்குவித்தார். ஈ.வெ.ரா-வின் முடிவை ஏற்காதவர்கள் எத்தனை பேர் என்று கண்டறியும் முயற்சியை மேற்கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார். தலைவர்(ஈ.வெ.ரா) தமது முடிவை மாற்றிக் கொள்ளாதவரை திராவிடர் கழகப் பணிகளிலிருந்து விலகி நிற்பது என்று முன்னரே தீர்மானிக்கப் பட்டிருந்ததால் கட்சிப்பணிகள் யாவும் நின்றுபோய் கட்சியே ஸ்தம்பித்து விட்டது.
ஈ.வெ.ரா இதனால் சினமடைந்து தமது விடுதலை நாளிதழில் அனுதினமும் அண்ணாதுரையும் அவரை ஆதரிப்பவர்களையும் பலவாறு தூற்றத் தொடங்கினார். அவர்கள் மீது பலவாறான பழிகளை சுமத்தவும் தொடங்கினார்.
1949 ஜூலை 13-ஆம் தேதி விடுதலை நாளிதழில் ஈ.வெ.ராமசாமி எனக் கையொப்பமிட்டு திருமண எண்ணத் தோற்றத்துக்குக் காரணமும் அவசர முடிவும் என்ற தலைப்பில் திடுக்கிட வைக்கும் அறிக்கையொன்று வெளியாகியது. அதில், தம்மைக் கொல்வதற்கு யாரோ சதி செய்து வருவதாக ஈ.வெ.ரா குறிப்பிட்டிருந்தார். சதி செய்வது அண்ணாதுரை தான் என படிப்பவர்கள் புரிவதுபோல அடையாளங்கள் இருந்தன. அதேபோல் ஈவெகி.சம்பத் கொலை செய்ய முயற்சி செய்பவர்களுக்கு துணையாக இருக்கிறார் என்பது போலத் தகவல்கள் காணப்பட்டன.
ஈ.வெ.ரா மீது அவதூறு வழக்குத் தொடுத்தார் அண்ணாதுரை. அவருக்காக வழக்கறிஞர் ஜகநாதனும் ஈ.வெ.ரா சார்பில் வழக்கறிஞர் கைலாசமும் நீதிமன்றத்தில் வழக்காடினார்கள். நீதிமன்றத்துக்கு ஈ.வெ.ரா., அண்ணாதுரை இருவரும் வந்திருந்தனர்.
ஈ.வெ.ரா-வின் வக்கீல் ஆரமபத்திலேயே தன் கட்சிக்காரர் அண்ணாதுரையை மனதில் கொண்டு அக்கட்டுரையை எழுதவில்லை என்றார். எனவே அண்ணாதுரை வழக்கைத் தொடர விரும்பவில்லை. அண்ணாதுரையிடம் கலந்து பேசிய வக்கீல் ஜகநாதன், கட்டுரையில் குறிப்பிட்டது எனது கட்சிக்காரரைப் பற்றி அல்ல என்று பிரதிவாதி வாக்குமூலம் அளிக்கும் பட்சத்தில் வழக்கைத் தொடர விருப்பமில்லை எனப் பம்மினார். எனவே வழக்கு தள்ளுபடி ஆனது.
ஈ.வெ.ரா & மணியம்மாள் இருவர் மீதுமே ஈவெகி.சம்பத் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். வயதை உத்தேதித்து, ஈ.வெ.ரா-வுக்கு நீதிமன்றத்துக்கு வராமல் இருக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் மணியம்மாள் வந்தாக வேண்டும். வழக்கு விசாரணைக்கு வந்த போது ஈ.வெ.ரா – மணியம்மாள், இருவருமே வருத்தம் தெரிவித்தனர். எனவே அந்த வழக்கு சம்பத் ஒப்புதலுடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
பிற்காலத்தில் ஈ.வெ.ரா-வின் பழிச்செற்களை மறுப்பதற்காகவே “மாலைமணி” என்ற பத்திரிக்கை அண்ணாதுரை தொடங்கியது வரலாறு.
Inputs from Book – “தி.மு.க உருவானது ஏன்?” – ஆசிரியர் – மலர்மன்னன்
No comments:
Post a Comment