பண மதிப்பிழப்பு காலத்தில் காஞ்சிபுரத்தில் பத்மாதேவி சுகர்ஸ் லிமிட்டெட் சர்க்கரை ஆலையை ரூ.450 கோடிக்கு வி.கே.சசிகலா வாங்கியிருந்ததாக சிபிஐ பதிவு செய்துள்ள எப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரத்தில் உள்ள பத்மாதேவி சுகர்ஸ் லிமிட்டெட் என்ற சர்க்கரை ஆலை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.120 கோடி ரூபாயும், மற்ற வங்கிகள், நிதி நிறுவனங்களில் கோடிக்கணக்கான ரூபாயை கடனாகப் பெற்றுள்ளது. இந்த கடன்களுக்கு அடமானமாக வைக்கப்பட்டிருந்த ஆலை இயந்திரங்களை, கடன் கொடுத்த வங்கிகளுக்கு தெரியாமல் விற்று, தனியார் சர்க்கரை ஆலை மோசடியில் ஈடுபட்டுள்ளதாக நிதி நிறுவனம் ஒன்று சிபிஐயில் புகார் அளித்தது.
உயர் நீதிமன்றம் உத்தரவின்பேரில் பத்மாதேவி சுகர்ஸ் லிமிட்டெட் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து, இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை திரட்டும் வகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை, திருச்சி, தென்காசிஉள்ளிட்ட 6 இடங்களில் சோதனைநடத்தியது. இந்நிலையில், சிபிஐ-யின் முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
அதில், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலா பணமதிப்பிழப்பு காலத்தில் ரூ.450 கோடி பழைய ரூ.500, ரூ.1000 ரொக்கம் கொடுத்து அந்த சர்க்கரை ஆலையை வாங்கியிருப்பதாகவும், அது பினாமி பெயரில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளது. பத்மாவதி சுகர்ஸ் நிறுவனத்தின் நிதி மேலாண்மையில் இருந்த ஹிதேஷ் ஷிவ்கன் படேல்,சர்க்கரை ஆலையை விற்பனை செய்வதற்காக ரூ.450 கோடிபெற்றதாகவும், அதற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும் சிபிஐ எப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையிலும், அந்த சர்க்கரை ஆலையை சசிகலா பினாமி பெயரிலேயே வைத்திருந்தது தெரியவந்துள்ளதாக 2020-ம் ஆண்டு வருமான வரித்துறை எப்ஐஆரை மேற்கொள் காட்டி சிபிஐ குறிப்பிட்டுள்ளது. இதனால், வருமானவரித் துறை அந்த ஆலையை பினாமி சொத்து என்று அறிவித்து, சசிகலாவை அதன் உண்மையான உரிமையாளராகக் குறிப்பிட்டதாகவும் இதனிடையே, இந்தியன் ஓவர்சிஸ் வங்கியும், பத்மாவதி சுகர்ஸ் நிறுவனத்தின் கடன் கணக்குகளை மோசடி என்று அறிவித்ததாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.
இதையடுத்து, ஹிதேஷ் ஷிவ்கன் படேல், தினேஷ் படேல், தம்பூராஜ் ராஜேந்திரன், பாண்டிய ராஜ், நிதி அதிகாரி வெங்கட பெருமாள் முரளி ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ குறிப்பிட்டுள்ளது.
சசிகலா, சுதாகரன், இளவரசியின் ரூ.2,000 கோடி சொத்து முடக்கம் ADDED : அக் 08, 2020
சென்னை:சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் பெயர்களில் உள்ள, 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான, சிறுதாவூர் மற்றும் கோடநாடு எஸ்டேட் சொத்துகளை, பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ், வருமான வரித் துறை முடக்கி உள்ளது.
மறைந்த ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. அவரது அக்கா மகன் சுதாகரன். இவரை, ஜெயலலிதா, தன் வளர்ப்பு மகனாக ஏற்றார்; பின், அந்த உறவை துண்டித்தார். சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி. ஜெ., மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், இம்மூவரும் குற்றம் சாட்டப்பட்டு இருந்தனர்.
பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடந்த விசாரணைக்குப் பின், ஜெ., உட்பட, இந்த நால்வரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். ஜெ., மறைந்ததை தொடர்ந்து, சசிகலா, சுதாகரன், இளவரசி மூவரும், சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட, 187 இடங்களில், 2017ல், வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சசிகலா குடும்பத்தினர், 60க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை துவக்கி, 1,500 கோடி ரூபாய் வரை, வரி ஏய்ப்பு செய்தது கண்டு பிடிக்கப் பட்டது.மேலும், சில ஆயிரம்கோடி ரூபாய்க்கு, சொத்துகளில் முதலீடு செய்தது தொடர்பான ஆவணங்களும் கண்டு பிடிக்கப்பட்டன.
தொடர்ந்து, 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை, 2019 நவம்பரில், வருமான வரித் துறை முடக்கியது. இதே போல, இந்தாண்டு ஆகஸ்டில், 'அரிசந்தனா எஸ்டேட்' நிறுவனத்தின் பெயரில் இருந்த, 300 கோடி ரூபாய் மதிப்பிலான, 65 சொத்துகள் முடக்கப்பட்டன.தற்போது, 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை, வருமான வரித்துறையினர் முடக்கி உள்ளனர்.
இது குறித்து, வருமான வரித் துறை அதிகாரிகள் கூறியதாவது: சசிகலா மற்றும் அவருக்கு தொடர்பு உடையவர்களின் வீடுகளில், 2017ல் வருமான வரி சோதனை நடந்தது. அப்போது, ஏராளமான ஆவணங்கள் சிக்கின. அந்த ஆவணங்களின் அடிப்படையில், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, சொத்துகள் முடக்கப்பட்டு வருகின்றன.
தற்போது, சிறுதாவூர் நிலம், 150 ஏக்கர் மற்றும் கோடநாடு எஸ்டேட், 955 ஏக்கர் என, மொத்தம் 1,100 ஏக்கர் நிலங்கள், பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் கையகப் படுத்தப் பட்டுள்ளன.இதில், கோடநாடு எஸ்டேட்டின் மதிப்பு, 1,500 கோடி ரூபாய்; சிறுதாவூர் நிலத்தின் மதிப்பு, 500 கோடி ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த சொத்துகளை கையகப்படுத்தியதற்கான நோட்டீஸ், எஸ்டேட் மற்றும் பங்களா வாயில்களில் ஒட்டப்பட்டுள்ளன. இது தொடர்பாக, சிறையில் உள்ள மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment