சில மாதங்களுக்கு முன்பு ஈரோட்டிற்கு அருகில் உள்ள அவல் பூந்துறை எனும் கிராமத்திற்கு சென்றிருந்தேன்.
அங்கு உள்ள ஒரு தலித் காலனியில் உள்ள கிணற்றினை புனரமைக்க முடிவு செய்து வேலைகளை திட்டமிட்டோம். அப்போது எனக்கு தெரியாது இதுவரை செய்த வேலைகள் எல்லாவற்றையும் விட கடும் நெருக்கடிகளையும் கற்றலையும் இந்த கிணறு தரப்போகிறது என்று.
கிணறு புனரமைப்புக்கான தொகையை திரட்டுவது ஒரு பக்கத்தில் சிரமம் இருந்த போதிலும், அதை விட மிகுந்த சிரமம் தந்தது அந்த ஊரை சுற்றியுள்ள மக்களின் அணுகுமுறை. வழக்கமான கூலித்தொகையை விட அதிகம் தருகிறோம் என்று போதிலும் அங்கு வந்து வேலை செய்வதற்கு மறுக்கிறார்கள்.
திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய பகுதிகளில் உள்ள சாதி பாகுபாட்டிற்கும் இங்கு உள்ள பாகுபாட்டிற்கும் உள்ள வித்தியாசம் இரவு பகல் போல.
எங்கெங்கோ இருந்து நண்பர்கள் சிறுக சிறுக தொகையை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த வேலையை அவ்வளவு எளிதாக துவங்க இயலவில்லை.
அந்த காலனியை சுற்றியுள்ள வெவ்வேறு மட்டங்களில் இருந்து வெவ்வேறு குரல்கள் அனைத்தும் எதிர்மறை குரல்கள்.
வேணு அண்ணன் சந்திரமோகன் அய்யா ஆகியோரின் கடுமையான முயற்சிக்கு பிறகு வேலைகளை துவங்கினோம். அந்த காலனியின் இளைஞர்கள் காலை வேலைக்கு சென்றுவிட்டு இரவுகளில் உடன் நின்று தொண்டாற்றினர்.
சொல்வதற்கு மிகவும் கசப்பாகவும் கஷ்டமாகவும் இருக்கிறது ஆனால் சொல்லித்தான் ஆக வேண்டும்.
கிணறு வேலை கால் பங்கு முடிந்த நிலையில் அந்த ஊரின் முக்கிய பிரமுகர் கிணற்றை பார்வையிட்டு விட்டு, என்னை குறித்த தகவல்களை தொழில் குல தெய்வம் என ஏதேதோ தகவல்களை கேட்டுக்கொண்டிருந்தார். பின்பு ஒரு 500ரூபாய் கையில் தந்த பின் அவர் பேசிய வார்த்தைகள் என்னை சுக்குநூறாய் உடைத்து போட்டது.
கண்ணு நீ செய்யற வேல ரொம்ப பெருசு. ஆனா இவனுங்க எல்லாம் அரசாங்க வேலை வாங்கிட்டு வசதியா தான் இருக்கானுங்க ஞாயித்துக்கிழம தவறாம மாடு அடிச்சி சாப்பிறாங்க. கண்ணு வேற எங்காவது கஷ்டப்படுற மக்களுக்கு போயி வேல செய்யு கண்ணு. இந்த கிணறை இவனுக ஒழுங்கா பயன்படுத்த மாட்டாங்க கண்ணு.
இப்படி அடுத்தடுத்து அவர் பேசிய வார்த்தைகளை பொது வெளியில் எழுத முடியாது. முன்னாள் முதலமைச்சரின் புகைப்படத்தை தனது சட்டை பையில் வைத்திருந்த அவர் ஒருவர் அல்ல. அந்த ஊரின் டீ கடை துவங்கி பலரது வார்த்தைகள் அதுதான்.
ஆனால் அந்த ஒட்டு மொத்த அவல் பூந்துறையின் கழிவுகளை சுமக்கும் தூய்மை செய்யும் மனிதர்கள் வாழும் குடியிருப்பு அது. அவர்கள் சொன்ன கவர்மென்ட் வேலை அது தான்.
அவர் பேசியது ஒரு நடுக்கத்தை கோபத்தை அழுகையை வரவழைத்தது.
தாங்க இயலாமல் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் அம்மாவை அழைத்து பேசியபோது, மஞ்சரி பக்கத்தில் உள்ள எல்லா அருந்ததியர் குடியிருப்புகளுக்கும் சென்று பார். குழந்தைகள் பள்ளி செல்லும் நேரத்தில் அங்கு நின்று கவனி. அங்குள்ள வயோதிகர்களிடம் எந்தவித தயக்கமும் இன்றி பேசு மஞ்சரி என்றார். ஏன் சொன்னார் என தெரியவில்லை.ஆனால் அதைப்பற்றி எல்லாம் யோசிக்காமல் அழைந்து திரிந்தேன். வெய்யிலின் கடுமை ஒருபக்கம் இருக்க ஒவ்வொரு நாளும் ஒருவித அதிர்ச்சியை சந்தித்துக் கொண்டே இருந்தேன்.
ஈரோடு எராளமான கல்வி நிறுவனங்களால் மிகப்பெரிய தொழிற்சாலைகளால் நிரம்பி வழிகிறது ஆனால் இங்கு நான் உணர்ந்த சாதி என்னும் தீண்டாமையை வேறு எங்கும் கண்டதில்லை.
என்னுடன் வந்த அண்ணனுக்கு பேப்பர் டம்பளரில் டீயும் எனக்கு கண்ணாடி டம்பளரில் டீயும் தந்தார்கள். அவர்களிடம் கேள்வி கேட்டபோது அந்த அண்ணனை ஒருமையில் திட்டுகிறார்கள். எதுவும் பேசமுடியாமல் அந்த அண்ணன் என்னையும் அமைதி ஆக்குகிறார்.
எழுவது வயதிற்கும் மேற்பட்ட பெரியவரை கூட அந்த ஊரின் சிறுவன் ஒருமையில் தான் பேசுகிறான். ஆனால் அந்த பெரியவர் எசமாங் என்று சாதியை குறிப்பிட்டு அத்தனை மரியாதையாய் பேசுகிறார். இப்படி அடுத்தடுத்து நிகழ்ந்த படியே இருந்தன.
இந்த ஊர்களில், சாதி என்பது நிறைய பல்கலைக்கழகங்களில் படித்து தேர்ந்திருக்கிறது. அத்தனை நவீனமயமாக இருக்கிறது.
இத்தனை ஆண்டுகளாய் இந்த மக்கள் இந்த அவலத்தில் சிக்கித்தவிக்கிறார்கள் என்பதை நினைக்கும்போதெல்லாம் மனம் பொங்கிய படியே இருந்தது. ஒரு வைராக்கியம் வந்தது. இந்த மக்களின் வாழ்வில் ஒரு சிறு நம்பிக்கையை உருவாக்கிய தீர வேண்டும். அவர்களுக்கு செய்த அத்தனை அநீதிகளுக்கும் பாவங்களுக்கும் பதிலாக இந்த வாழ்வு அமைய வேண்டும் என நினைத்துக்கொண்டேன்.
அதுவரை இல்லாத தீவிரத்தில் வேலையை செய்தோம். கிணறு பணி முழுமை அடைந்தது. பக்கத்தில் உள்ள எல்லோர்க்கும் ஒரு சத்தத்ததை எழுப்பி இந்த வேலை முடிந்துவிட்டது பார் இனி அடுத்தடுத்து இவர்களுக்குக் தான் வாழ்வும் வெற்றியும் என்பதை சொல்ல வேண்டும் என்பது போல் இருந்தது. வணக்கத்துக்குரிய மாதண்ணன் அவர்களின் குழந்தைகள் பறை இசைத்து துவக்கினர். கால் வலிக்க வலிக்க அக்குழந்தைகளின் நடனம் வரப்போகும் நன்மையை மனதிற்கு சொன்ன படியே இருந்தது.
ஊனமுற்ற குழந்தைகளின் வாழ்வை காக்க தன் வாழ்வை அளித்த லூர்து மேரி அம்மா , எல்லோர்க்கும் அம்மாவான கண்ணம்மா அவர்கள் கிணற்று நீரை மக்களுக்கு அர்ப்பணித்தார்.
வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த நண்பர்கள், கொடையாளர்கள் , ஊர் மக்கள் எல்லோரும் ஒரு விதத்தில் நிம்மதி அடைந்தோம்.
ஆனால் இரவு மீண்டும் மீண்டும் இந்த சாதி , நவீன தீண்டாமை அவர்கள் நடத்தப்படும் விதம் எல்லாம் தூங்கவிடவில்லை . ஒரு சுடரை ஏற்றிவிட்டு கேவி கேவி அழுதேன்.
உண்மையாகவே தாங்கமுடியவில்லை. எதேனும் செய்ய வேண்டும்.
ஒரு முடிவெடுத்துள்ளோம். முதல் கட்டமாக அவல் பூந்துறை அதை சுற்றியுள்ள பத்து கிராமங்களில் உள்ள கிணறுகளை புனரமைக்க உள்ளோம்.
கிணறு புனரமைப்பு சார்ந்த தொழில் நுட்பங்களையும் ஆவணப்படுத்தி அரசுக்கு ஒப்படைக்கவுள்ளோம். நண்பர்கள் இணைந்து ஒரு கிணற்றினை தத்தெடுத்துக் கொள்ளலாம். தங்களுக்கு தெரிந்த நிறுவனங்கள் மூலம் ஒரு கிணற்றினை தத்தெடுத்து உதவலாம்.
எப்படி இந்த காரியத்தை செய்து முடிக்கப்போகிறோம் என்று தெரியாது. ஆனால் செய்தே ஆக வேண்டும். இந்த காரியம் முழுமைப் பெற்றால் தமிழக அளவில் ஒரு பெரிய விழிப்பு வரும் என நம்புகிறோம்.
தீண்டாமை ஒழிப்பு தண்ணீரில் இருந்து துவங்கட்டும்.
தீண்டாமை ஒழிப்பு தண்ணீரில் இருந்து துவங்கட்டும்.
அந்த உழைக்கும் மக்கள் துணிகள் துவைப்பதற்கும் , சாயந்திரம் அமர்ந்து ஊர்க்கதைகள் பேசுவதற்கும், குழந்தைகள் நீச்சல் அடித்து விளையாடுவதற்கும், வருடத்திற்கு ஒரு முறை தனது குல சாமிக்கு தீர்த்தம் படைப்பதற்கும் அந்த கிணறுகள் பயன்படட்டும். நாம் அவர்களுக்கு செய்துக் கொண்டிருக்கும் பாவங்களுக்கு மன்னிப்பாக மாறட்டும்.
தொடர்ப்புக்கு 9600713701
Gpay 9600713701
Name. Madhumanjari
A/c no. 2981001500005744
Branch. DINDIGUL
IFSC. PUNB0298100
No comments:
Post a Comment