Sunday, May 21, 2023

ஆங்கிலேய கொத்தடிமை அயோத்தி தாசர்- வவூசியின் சுதேசிக் கப்பல் கம்பெனியை எதிர்த்தது

 “நாம் சுதேசமென்று எப்போது பிரிக்கின்றோமோ அப்போதே புறதேசமென்பது சொல்லாமலே ஏற்பட்டு விடுகின்றது. இத்தகைய ஏற்பாட்டில் ஒன்றை ஆரம்பிக்கும்போதே ஐரோப்பியர்களை ஓர் விரோதிகளைப் போல முன்னில் ஏற்படுத்திக்கொண்டு வியாபாரத்தை நடத்துவதினால் மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயென்பது போல் விரோதிகளாயெண்ணிக் கொண்டவர்கள் யாதொரு தீங்கு செய்யாவிடினும் அவ்வெண்ணமே தங்களைத் தீங்குகளில் ஆழ்த்திவிடுகின்றது.

நாமும் நம்முடைய தேசத்தோரும் எத்தால் வாழலாமென்றால் “ ஒத்தால் வாழலா” மென்பது பழமொழி. அவ்வகை மனமொத்து வாழும் வாழ்க்கை வியாபாரத்தை விடுத்து நம்முடைய தேசத்தைக் கல்வியிலுங் கைத்தொழிலிலும் விருத்திக்குக் கொண்டுவந்து சுகசீவனங்களை காட்டிவரும் ஐரோப்பியர்களை நாம் எதிரிகளாக எண்ணுவது இரவுமுழுவதும் சிவபுராணங் கேட்டு விடிந்தவுடன் சிவன் கோவில்களை இடிப்பதற்கொக்கும்.
ஐரோப்பியர்கள் வருவதற்குமுன்பு இவ்விடம் தோணிகளென்றும் படகுகளென்றும், பாய்க் கப்பல்களென்றும் நடத்தி வந்த திராவிடர்கள் இவ்வகை எதிரிகளை ஏற்படுத்திக் கொண்டா தங்கள் வியாபாரங்களை நடத்தியும் கப்பலையோட்டிக் கொண்டிருந்தார்கள். இல்லை, சகலதேசத்தாருடன் கலந்தும் சகோதிர ஐக்கியங் கொண்டும் அமேரிக்கா முதலிய பலதேசங் களுக்குஞ் சென்று தங்கள் வியாபார விருத்தி செய்திருக்கின்றார்கள்.
தற்காலம் ஒரு நீராவிக்கப்பல் ஏற்படுத்தி அதன்மூலமாக வியாபாரஞ்செய்ய ஏற்பட்டவர்கள் தங்களுக்குத் தாங்களே எதிரிகளுண்டென்னும் ஓர் கூச்சலை ஏற்படுத்திக்கொண்டு வியாபாரத்தை நடத்த முயல்வது வியாபாரத்தின் வழியாகக் காணவில்லை.
ஜப்பான், அமேரிக்க, ஐரோப்பா முதலிய தேசங்களில் எத்தனையோ வகை வியாபாரங்களை உண்டுசெய்து கோடிகோடி கணக்கான திரவியங்களை சேர்க்கின்றார்களே அவர்களில் யாரேனும் சுதேசஸ்டீமர், சுதேசமில், சுதேச ஷாப்பெனப் பெயர்வைத்துக் கொண்டிருக்கின்றார்களா.
காரணந் துரும்புங் கலத்தண்ணீரைத் தேக்குமென்னும் பழமொழியிருக்க பெருந்தூலம் ஓர் ஆற்றையே மடக்குமென்பது அறியாச் செயலோ. இவர்களுக்கு முன்பு இலட்சுமி ஸ்டீமெரென்றும் ஒவ்வோர் பெயர்களைக் கொடுத்து நடத்திவந்தார்களே அவைகளெல்லாம் சீரான நடை பெறவில்லையா. சுதேச ஸ்டீமரென்று ஏற்படுத்திக்கொண்டு அதற்கு எதிரியும் உண்டென்று கூறுவதினால் தான் இது நடைபெறுமோ விளங்கவில்லை.
ஓர் வீட்டிற்கு உடையவனை சொந்தக்காரனென்று சொல்லலாமா, அவ்வீட்டிற்கு வாடகை செலுத்திக் குடியிருப்பவனை சொந்தக்காரனென்று சொல்லலாமா, பிரிட்டிஷ் அரசருக்கு வரியிறை செலுத்து குடியிருப்பவர்களாகிய நாம் சுதேசி சுதேசியென வீண் கூச்சலிடுவதுடன் ஐரோப்பியர்களையே ஓர் எதிரிகளா யெண்ணிக் கொண்டு வியாபாரத்தை நடத்துவது விருத்திக்கே கேட்டை விளைவிக்கும்.
நமது இந்தியாவிற்குள் அனந்த வங்காளிகளும், பாரசீகரும் திராவிட செட்டிகளும் எத்தனையோ கம்பெனிகளை வைத்து நடத்தி வருகின்றார்களே அவர்களேனும் சுதேசி சுதேசி யென்று கூறிக்கொண்டு யாரேனும் எதிரிகளைச் சுட்டிக்காட்டிக்கொண்டு தங்கள் கம்பெனிகளை நடத்து கின்றார்களா.
இந்தியர் நடத்தி சுகம்பெறக் கோறிய கம்பெனிகளையேனும், சுகம்பெற்றுவருங் கம்பெனிகளையேனும் பிரிட்டிஷ் கவர்ன்மெண்டாரேனும், மற்ற ஐரோப்பியகர்களேனுந் தடுத்துக்கெடுத்திருக்கின்றார்களா, இல்லையே சகலவிருத்திக்கும் நமது கருணைதாங்கிய பிரிட்டிஷ் ராஜரீகமே ஆதாரமாகாவும் மற்றும் ஐரோப்பியர்களே துணைக் கருவிகளாயிருந்து கார்த்துவருவது பிரத்தியட்ச அநுபவமேயாகும்.
இவைகள் யாவற்றையும் நம்தேயத்தார் சீர்தூக்கி ஆலோசியாமல் வியாபாரந் துவக்கும் போதே விவகார வியாபாரந் தொடர்வதினால் சகல கையொப்ப நேயர்களும் சந்தேகத்திலாழ்ந்து சேராமல் விலகிவிடுகின்றார்கள்.
வியாபார விருத்தியை நாடுவோர் சுதேசியென்றும்,பரதேசியென்றும் பாரபட்சம் பாராது சுதேசி கம்பெனி, பரதேசி கம்பெனி யென்னும் பிரிவினை செய்யாமலும், அந்த வியாபாரங்களுக்குத்தக்கப் பெயர்களைக் கொடுத்து பெருங் கம்பெனிகளாயின் அதற்கு ஒவ்வோர் ஐரோப்பிய நிபுணர்களையே தலைவர்களாக வைத்து சமசர சிந்தையில் வியாபாரத்தை நடத்துவதனால் சகல சாதி யோருங் களங்கமின்றி சேர்ந்து அனந்த ஷேர்களுமெடுத்து கம்பெனியை விருத்திசெய்வார்கள். சேர்ந்தவர்களும் லாபம் பெறுவார்கள். தேசமும் சிறப்படையும் குடிகளும் சீர்பெறுவார்களென்பது சத்தியம்.”
-அயோத்திதாசர்.
அயோத்திதாசரின் அளப்பறிய வன்மம் செயல்பட்ட இடமாக இதை நாம் கவனத்தில் கொள்ளலாம். வ.உ.சியின் மேலான காத்திரமான பகையுணர்வில் பிரிட்டிஷ் ராஜரீகம் குறித்து அயோத்திதாசர் கொள்ளும் பெருமிதம் அவரது மனநிலையை புரிந்துகொள்ள வைக்கிறது.
பிரிட்டிஷார் ஆள்வதால் அவர்களுக்கு இந்தியா சொந்தவீடு. வரி கட்டுவதால் நமக்கு வாடகை வீடு. எத்தகைய பண்டித விளக்கம்!!!
அயோத்திதாசர் தான் மேற்கொள்ளும் கருணை மிகு சீவகாருண்ய பௌத்தத்தின் அடிப்படையிலாவது கொஞ்சம் கருணையை முன்வைத்து எழுதியிருக்கலாம். என்ன செய்வது இக்கால அயோத்திதாசரியர்களுக்கு, அயோத்திதாசர் என்பவர் 'கார்ல்மார்க்ஸை விட பல படித்தான புரட்சியைச் செய்தவர்' என்று சொல்வதில்தான் அளப்பறிய ஆனந்தம்.
புத்தரும் அவரது சங்கமும் வளர்ந்தது வணிகர்களாலும் ஆளும் வர்க்கத்தாலும்தான். அவர்களுக்கு புத்தர் செய்த சேவை அளப்பறியது. கடன்பட்டவனைச் சங்கத்தில் சேர்க்கக் கூடாது, அடிமையைச் சேர்க்கக் கூடாது, படை வீரனைச் சேர்க்கக் கூடாது என்ற புத்தனின் இம்மூன்றில் நிலைத்திருக்கிறது தம்மமும் சங்கமும்.
அத்தகைய பௌத்தத்தை வரலாற்றில் தான் கண்ட விஞ்ஞானமாக அயோத்திதாசர் வியாக்யானம் செய்கிறார்.
கடன்பட்டவனை சங்கத்தில் சேர்த்தால் கடன்கொடுத்தவன் புத்தருக்கு இலவச மடங்களைத் தரமாட்டான்.
அடிமையை சங்கத்தில் சேர்த்தால் எஜமானான் தானம் தரமாட்டான்.
படைவீரனை சங்கத்தில் சேர்த்தால் அரசன் புத்தரையே ஒழித்துவிடுவான்.
இம்மூன்றில் ஒன்றையேனும் புத்தர் எதிர்த்திருந்தால் வரலாற்றில் புத்தனின் இடம் முழுச்சூன்யம்.
புத்தம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
தானம் சரணம் கச்சாமி
அரசே சரணம் கச்சாமி
வணிகம் சரணம் கச்சாமி
சீவகாருண்யமும் கருணையும் கொண்ட ஒர்ஜினல் பிராமணரான புத்தரைக் காட்டிக்கொடுத்த அயோத்திதாசரின் ஒர்ஜினல் புத்தருக்கும், அம்பேத்கர் சொன்ன ஷத்திரிய புத்தருக்கும் ஸ்தோஸ்திரமய்யா ஸ்தோத்திரம்.
அயோத்திதாசரின் சிந்தனைகளைத் தொகுத்துக் கொடுத்தோருக்கு வரலாற்று நன்றி. இல்லையேல் இத்தகைய உண்மைகள் ஏதும் வெளிவந்திருக்காது.
சிந்தியுங்கள் தோழர்களே.
சிந்தித்துத் தெளியுங்கள்....
வரலாறென்பது
புத்தனின் மூடிய கண்கள் அல்ல..
- வசுமித்ர
குறிப்பு:
“மக்களின் அனைத்துச் சிக்கல்களுக்கும் ‘சர்வரோக நிவாரணி'யாக அரசியல் தீர்வே அவர்கள் மீது திணிக்கப்படுகிறது. தமிழர்களின் நலன் காக்கத் தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் பரிணாம வளர்ச்சிகளும், அவை சார்ந்த இயக்கங்களும்; தமிழ்த்தேச தன்னுரிமைக்கு முன்னுரிமை அளிக்கும் பல்வேறு இயக்கங்களும் - தமிழர்களின் பிறவி இழிவை ஒழிக்கும் செயல் திட்டத்தைத் தன்னகத்தே கொண்டிருக்கவில்லை. நாற்பது ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் திராவிடக் கட்சிகளால், தமிழர்களின் சூத்திரத் தன்மையையும், பஞ்சமத் தன்மையையும் ஒழிக்க முடியவில்லையே ஏன்? இன்றைக்கு இந்தியா முழுவதும் அரசியல் தளங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களே கோலோச்சுகின்றனர். இருப்பினும் இந்த அரசாங்கத்தைப் பயன்படுத்தி, தங்களின் பிறவி இழிவை அவர்களால் போக்க முடியாததற்கு என்ன காரணம்?
நாடாளுமன்ற ஜனநாயகத்தினாலோ, பாட்டாளிகளின் சர்வாதிகாரத்தினாலோ, ஆயுதப் புரட்சியினாலோ, வேறு எவ்வகைத் தத்துவங்களாலோகூட, சாதியை வேரறுக்க முடியாது. ஏனெனில், இது அடிப்படையில் சமூக - மத - பண்பாட்டுப் பிரச்சினை. எத்தகைய சமத்துவ, ஜனநாயக, சோசலிச குடியரசை நிர்மாணிக்க முனைந்தாலும், அதற்கு முன் நிபந்தனையாக சாதி ஒழிக்கப்பட வேண்டும். இதைத்தான் இந்நூல் ஆழமாகப் பேசுகிறது. பிறவி இழிவான சாதியை ஒழிப்பதற்கு, அம்பேத்கர் செம்மையான தீர்வை இந்நூலில் முன்வைத்திருக்கிறார்.” என்று ‘ஜாதியை அழித்தொழிக்கும் வழி’ புத்தகத்தின் முன்னுரையில் எழுதுகிறார் புனிதபாண்டியன்.
மார்க்சியம் கிலோ என்ன விலை எனக் கேட்கும் இத்தகைய நபர்கள்தான் அம்பேத்கர் சாதியை ஒழிக்க தீர்வைக் கண்டுபிடித்ததாக ஓலமிடுகிறார்.
புனிதபாண்டியனின் அம்பேத்கர் சாதியை எப்படி ஒழித்தார்? சாதி ஒழிப்பு அல்லது சாதியழிப்பு என்ற அம்பேத்கரது நூலை ‘ஜாதியை ஒழிக்கும் வழி’ என்று மொழிபெயர்த்து விற்றதன் மூலம் புனிதபாண்டியனின் அம்பேத்கர் சாதியை ஒழித்தவராக நம்முன் காட்சி தருகிறார். அதற்கு வியாக்யானமாக பௌத்தத்தில் சேர்ந்தால் சாதி ஒழிந்துவிடும் என்று அம்பேத்கர் சொன்னார் என முத்தாய்ப்பான முடிவையும் வைக்கிறார்.
‘திராவிட தமிழ்’, ‘நாற்பதாண்டு’ என்று புனிதபாண்டியன் கூட்டிக் கழித்துக் கணக்குச் சொல்கையில் அவரது அபத்தஞானம் வெளிப்படுவதைக் காணலாம்.
திராவிடம்- நாற்பதாண்டு கணக்கெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், அம்பேத்கரின் வாக்குப்படி இந்தியாவில் பௌத்தம் ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்தும், பொன்னொளி வீசியும், கோலோச்சியும் கொடி பறந்தும் கூட, பௌத்தம் அது சாதியை ஒழித்துக் கட்டவில்லை என்பதைத் தர்க்கப் பூர்வமாக, சர்வரோக நிவாரணியென புனித பாண்டியன் முன்வைக்கும் பௌத்தத்தை வைத்து விளக்கியிருக்க வேண்டும். அல்லது பௌத்தம் சாதியை ஒழிக்கும் என்று அம்பேத்கர் கூறியிருந்தால் அது எப்படி ஒழிக்கும் என்பதையாவது ஆதாரப்பூர்வமாக பேசியிருக்க வேண்டும். இடையீடாக, பெரியாராலும் ஏன் சாதியை ஒழிக்க முடியவில்லை, அந்த நாற்பதாண்டு கணக்குக்குள் அவரும் இருக்கிறாரா இல்லையா என விளக்கவும் வேண்டும். அதைவிடுத்து புனித பாண்டியன் இவ்வாறு பௌத்த சோதிடம் பார்ப்பது புத்தருக்கே இழுக்கைத் தரும் செயல்.
மார்க்சியம் குறித்தும், அம்பேத்கர் குறித்தும், வரலாறு குறித்தும் அடிப்படை அறிவின்றி அடையாள அரசியலை வைத்துப் பிழைப்பு நடத்தினால் நாம் என்னதான் சொல்வது?
- வசுமித்ர

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா