Thursday, May 18, 2023

குமரிக்கண்டமா? அது எங்கே இருக்கிறது? -தேமொழி

 

குமரிக்கண்டமா? அது எங்கே இருக்கிறது?தேமொழி Feb 29, 2020

தமிழில் நமக்குக் கிடைக்கும் முதல் நூலான தொல்காப்பியத்தின் காலத்தில் தமிழகத்தின் எல்லைகளாக வடக்கே வேங்கடமும் தெற்கே குமரியும் கிழக்கிலும் மேற்கிலும் கடல்கள் எல்லைகளாக இருந்தன எனத் தெரிகிறது. இதனைத் தொல்காப்பியத்திற்குப் பாயிரம் தந்த பனம்பாரனார், “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்” எனக் குறிப்பிட்டு தமிழ்கூறும் நல்லுலகம் வடக்கில் வேங்கடமலைக்கும், தெற்கில் குமரிமுனைக்கும் இடையில் பரந்துகிடந்ததை (தொல்காப்பியம், சிறப்புப்பாயிரம்:1-3) விளக்குவார்.

   “தென்குமரி வடபெருங்கல்

   குணகுட கடலா எல்லை”

என்ற குறுங்கோழியூர் கிழார் (புறநானூறு:17:1-2); மாங்குடி மருதனார் (மதுரைக்காஞ்சி:70-71) சங்கப்பாடல்களிலும்,

  “நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்

   தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு”

என இவ்வாறே இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் வேனிற் காதையிலும் (வேனிற்காதை:1-2) குறிப்பிடுவதால் பண்டையத் தமிழகத்தின் எல்லையை நாம் அறிகிறோம்.

தென்குமரி:

இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட தமிழகத்தின் தென் எல்லையான குமரிமுனையைக் கடல் கொண்டது என்பதை,

  “வடிவேல் எறிந்த வான்பகை பொறாது

   பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து

   குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” (சிலப்பதிகாரம், காடுகாண் காதை:19-22)

என்று இளங்கோவடிகள் குறிப்பிடுவார்.

   “மலிதிரை ஊர்ந்துதன் மண்கடல் வௌவலின்

   மெலிவின்று மேற்சென்று மேவார் நாடு இடம்படப்

   புலியொடு வில் நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை

   வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்” (கலித்தொகை, முல்லைக்கலி:104-1-4)

என்று சோழன் நல்லுருத்திரனார் குறிப்பிடுவார்.

கடல் கொண்ட குமரிமுனை என்பது வெறும் கற்பனையல்ல. ஆனால் கடல்கொண்ட அந்த குமரிக்கோடு எது? அது எங்கிருக்கிறது? என்பதில்தான் பிற்கால நூலாசிரியர்கள் விவரிப்பில் குமரிக்கண்டம், குமரிநாடு எனப் பல கற்பனைகள் விரிந்துவிட்டன.

சென்ற இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் துவங்கிய இந்த கற்பனைக்கதைகள் இந்த நூற்றாண்டு நூல்கள் வரையிலும் கூட தொடர்ந்து வளர்ந்தே வருகின்றன. வரலாற்று ஆய்வாளர் நடன காசிநாதன் 2006ம் ஆண்டில் வெளியிட்ட “தமிழகச் சிற்பிகள் வரலாறு” என்ற நூலிலும் “குமரிக்கண்ட காலத்தில் சிற்பிகள்” என்ற ஒரு அத்தியாயம் இடம் பெற்றுள்ளது. கடல்கோளால் ஆட்கொள்ளப்பட்ட குமரிக்கண்டத்தில் பிறந்த மயன் என்னும் ஆதி சிற்பியே தொழிற் கருவிகள், மட்கலங்கள், ஓவியங்கள், கட்டிடங்கள் ஆகியவைபற்றிய ஆரம்ப நிலை தொழில்நுட்ப கூறுகளைத் தமிழ் மக்களுக்கு அறிமுகப் படுத்தினார் என்றும், அந்த தொழில் நுட்பங்களை நூல்களாக எழுதி குமரிக்கண்டத்தில் செயல்பட்ட முதல் சங்கத்தில் அரங்கேற்றினார் என்றும் இந்த நூலின் முதற் பகுதி விளக்குகின்றது.

தமிழின் பழமையை உணர்த்த “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி” என்று புறப்பொருள் வெண்பா மாலை என்ற புற இலக்கண நூல் கூறுவதற்கும், தமிழிலக்கிய வரலாற்றிலேயே முதன் முதலில் மூன்று சங்கங்களின் தோற்றத்தை குறிப்பிடும் எட்டாம் நூற்றாண்டு இறையனார் அகப்பொருள் களவியலுரை கூற்றுகளுக்கும், பஃறுளியாறும் பன்மலையடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள என்ற சிலம்பின் வரிகளுக்குப் பொருள் தரும் நோக்கில் பஃறுளியாற்றிற்கும் குமரியாற்றிற்கும் இடையே இருந்த நாற்பத்தொன்பது நாடுகளைக் கடல் விழுங்கி விட்டது என்று இளம்பூரணர் எழுதிய உரையைக் காட்டி அடியார்க்கு நல்லார் தரும் விளக்கம் ஆகியவற்றுக்கும் சற்றும் சளைக்காமல், அவற்றின் அடிதொட்டே மேன்மேலும் வளர்ந்து வரும் இக்காலத் தமிழிலக்கியக் குறிப்புகள் இவை என்பதில் சிறிதும் ஐயமில்லை.

குமரிக்கண்டம் – ஒரு புவியியல் பார்வை:

குமரி முனைக்குத் தெற்கே எவ்வளவு தூரம் நீண்டிருந்தது குமரிக்கண்டம்?



சென்னை கிறித்துவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய தமிழ் அறிஞர் பரிதிமாற்கலைஞர் தனது “தமிழ் மொழியின் வரலாறு” (1903), எனும் நூலில் குமரிநாடு இன்றைய குமரி முனைக்குத் தெற்கே சுமார் ஏழாயிரம் மைல் தொலைவில் உள்ள “கெர்கியூலன் தீவு”(Kerguelen Islands) வரை இருந்திருக்கலாம் என்று கருதினார். நூலின் ஐந்தாம் அத்தியாயத்தில், உரையாசிரியர் அடியார்க்குநல்லார் கூறும் 49 நாடுகளையும் பட்டியலிட்டு, அந்த நாடுகள் அடங்கிய பகுதியை “குமரி நாடு” என்று அழைத்தார். மேலும், “நீளத்தில் இக்காலத்திலுள்ள ‘குமரிமுனை’ யிலிருந்து கெர்கியூலன் தீவின் தெற்கு வரையிலும், அகலத்தில் மேற்கில் ‘மடகாசிகர்தீவு’ முதற், கிழக்கில் ‘சுமாத்திரா’, ‘ஜாவா’ முதலியவற்றை யுள்ளடக்கிய ‘சந்தாத் தீவுகள்’ அளவும் விரிந்து கிடந்த குமரிநாடு” எனக் குறிப்பிடும் பரிதிமாற்கலைஞர், ‘குமரிநாடு’ எனப்படும் இந்தநாடு, கடலால் கொள்ளப்பட்டது எனவும் கூறுகிறார்.

அவர் கருத்தை ஒட்டியே பூர்ணலிங்கம்பிள்ளை (தமிழ் இலக்கியம்-1904), அரசன் சண்முகனார் (1905), சோமசுந்தர பாரதியார் (தமிழகம்-1912), ஆப்ரகாம் பண்டிதர் (1917), இராகவ அய்யங்கார், ஸ்ரீநிவாசப்பிள்ளை (1927), ந.சி. கந்தையா பிள்ளை (தமிழகம்-1934), மறைமலை அடிகள் (1948), தேவநேயப் பாவாணர் (1956) ஆகியோர் அவரவர் கோணத்தில் இந்த தூரம் சில ஆயிரத்தில் தொடங்கிப் பல ஆயிரம் மைல்கள் வரை இருக்கலாம் என எண்ணுகிறார்கள். இங்குதான் ஆதிமனிதர் தோன்றியதாகவும் சிலர் குறிப்பிடுகிறார்கள். ஆப்பிரிக்காவில் மனித இனம் தோன்றிப் பரவியது என்ற கோட்பாட்டுக்கு மாறாக மறைந்து போன குமரிக்கண்டத்தில் தோன்றிய மனித இனம் வடக்கு நோக்கிப் பரவியது என்றும் கருதியவர் உண்டு. தமிழறிஞர்களில் உ.வே.சாமிநாத அய்யர் மட்டும் இரு கூற்றம் அளவிற்கு சில கிராமங்கள் மூழ்கி இருக்கலாம் எனக் கருதியவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

குமரிக்கண்டம் என்ற ஒரு கருதுகோள் எப்பொழுது உருவாக்கப்பட்டது:

சிலப்பதிகாரம் கூறும் தமிழக எல்லை, கடல்கோள் குறித்த பாடல் வரிகளுக்கு கி.பி. 12-ஆம் நூற்றாண்டினர் என்று கருதப்படும் உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் அளித்த விளக்கமும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் சிறிது காலம் பெரிதும் பேசப்பட்ட “லெமூரியா” கருதுகோளும்தான் இந்த குமரிக்கண்ட கருதுகோளுக்கு அடித்தளம் இட்டன என்பது புவியியலாளரும், தமிழிலியலக்கிய ஆர்வலருமான சிங்கநெஞ்சம் சம்பந்தம் அவர்கள் குமரிக்கண்டம் என்ற கருதுகோளின் தோற்றம் குறித்து அளிக்கும் விளக்கம். மேலும் அவர், “குமரிக்கண்டம், குமரிநாடு, குமரிப் பரப்பு, குமரி நிலம், குமரி மலை, குமரித்தொடர், குமரி ஆறு போன்ற தொடர்களில் ஒன்று கூட தமிழின் தொன்மையான இலக்கியங்கள் என்று கருதப்படும் தொல்காப்பியத்திலோ அன்றி சங்கப் பாடல்களிலோ காணப் படவில்லை என்பதுதான் உண்மை” என்று உறுதியாகவும் தனது கருத்தை முன்வைப்பார்.

எனவே, சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களில் இடம்பெறும் குமரிப் பகுதியில் கடல்கோள் குறித்தும் நிலம் பாதிப்பிற்குள்ளானது குறித்த குறிப்புகளுக்கு, 12 – 13 நூற்றாண்டுகளில் உரையாசிரியர்கள் கொடுத்த குறிப்புகளையும், 19 ஆம் நூற்றாண்டில் உருவான அறிவியல் கோட்பாட்டையும் இணைத்து குமரிக்கண்டம் உருவாக்கப்பட்டுள்ளது. லெமூரியா என்ற ஒரு கருதுகோள் அறிவியல் உலகில் முன்வைக்கப்பட்ட பின்னரே, அந்த லெமூரியாதான் இலக்கியம் சொல்லும் கடல் கொண்ட குமரி என்று முடிவுகட்டப்பட்டு, அது குமரி நாடு, குமரிக்கண்டம் என்றெல்லாம் தமிழ் இலக்கியவாதிகளால் விரித்துரைக்கப்பட்டது என்பதால் குமரிக்கண்டம் என்ற ஒரு கருதுகோளின் வரலாறு ஒரு நூற்றாண்டு பழமை கொண்டது மட்டுமே.

லெமூரியா என்ற கருதுகோள் தோன்றியது எவ்வாறு?

ஒன்றின் தேவையால் அதுகுறித்து துவங்கும் தேடல் மற்றும் ஆய்வு, மற்றொரு கண்டுபிடிப்புக்கு வழிவகுத்துவிடும் என்பதற்கு வரலாற்றில் பல சான்றுகளைக் கொடுக்கலாம். அவற்றில் நீராவி மூலம் இயங்கும் இயந்திரமும் ஒன்று. தொழிற்புரட்சி காலங்களில் அறிவியல் வளர்ச்சியும், கண்டுபிடிப்புகளின் தோற்றமும் வேகம் பிடித்தது. நீராவி இயந்திரம் உருவாக்கப்பட்டு அதனைப் பயன்படுத்தி தொழிற்சாலை இயந்திரங்கள், போக்குவரத்திற்கான தொடர்வண்டி, நீராவிக்கப்பல் போன்றவை உருவாகின. அத்துடன் அவற்றை இயக்க எரிபொருளான நிலக்கரியின் தேவையும் ஏற்படவே மண்ணின்மீது மக்களுக்கு அக்கறை ஏற்பட்டது. நிலக்கரிக்காக மண்ணை வெட்டி நிலக்கரி தேடப்பட்டது, சுரங்கங்கள் தோண்டப்பட்டது. உலகம் முழுவதும் புவியியலாளர்கள் இதில் ஈடுபட்டனர்.

இந்தியாவிலும் 1850களில் இரயில் வண்டி கிழக்கிந்தியக் கம்பெனியர் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்பொழுது இந்தியாவில் 1851 ஆம் ஆண்டு “ஜியலாஜிக்கல் சர்வே ஆப் இந்தியா” (Geological Survey of India/GSI) என்ற ஒரு ஆய்வு அமைப்பும் இந்தியப்பகுதியில் நிலக்கரி படிவங்களைக் கண்டறியும் நோக்கில் துவக்கப்பட்டது. புதியதாக துவக்கப்பட்ட ஜி.எஸ்.ஐ. நிறுவனத்தின் ஆய்வுப் பணியில் ஈடுபட்டவர்களில் புவியியலாளர்கள் “ஜோசப் ஜி. மெட்லிகாட்” (Joseph G. Medlicott) மற்றும் அவரது தம்பியுமான “ஹென்றி பெனடிக்ட் மெட்லிகாட்” (Henry Benedict Medlicott) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இந்தியாவின் “கோண்ட்” என்ற பழங்குடியினர் தனித்தனியே பல குழுக்களாகவும், மிகப் பரவலாகவும் வசிக்கும் (வங்கத்தின் மேற்குப் பகுதி, ஜார்கண்ட், சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மாவட்டம், ஓடிஷாவின் டால்சிர் பகுதி, விதர்பாவின் கிழக்குப் பகுதி மற்றும் தெலுங்கானாவின் வடக்கு) பகுதிகளில் நிலக்கரிப்படிவங்களைக் கொண்ட படிவப்பாறைகள் இருந்தமை கண்டறியப்பட்டது. இந்தியாவின் மத்தியப்பகுதியான இந்த வனப்பகுதி “கோண்ட்வானா” என அடையாளம் காணப்பட்டது. இந்த கோண்ட்வானா பகுதி பாறைகளில் நிலக்கரிப்படிவங்கள் இருப்பதைக் கண்டறிந்து 1860 இல் ஆண்டில் அறிவித்தவர் ஜோசப் ஜி. மெட்லிகாட். அவரை அடுத்து ஹென்றி பெனடிக்ட் மெட்லிகாட் 1872 ஆம் ஆண்டில் இப்பாறைகளுக்கு “கோண்ட்வானா பாறைகள்” எனவும் பெயரிட்டார். (இரயில் வண்டிக்கான இரயில் தடம் அமைக்கப்பட்ட பொழுது சிந்துசமவெளிப் பகுதியிலிருந்த பண்டைய நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டு அதுவும் வெளிச்சத்திற்கு வந்த மற்றொரு கண்டுபிடிப்பு என்பதையும் நாம் அறிவோம்). இன்றிலிருந்து சுமார் ஒரு முப்பது கோடி ஆண்டுகளுக்கும் – பதினான்கு கோடி ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட காலத்திற்கும் முன்னர் “கோண்ட்வானா பாறைகள்” உருவானது என்று அறிவியலாளர்களால் கணிக்கப்பட்டு அது உருவான காலம் “கோண்ட்வானா காலம்” என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி பலகோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் கோண்ட்வானா இருந்தது என்ற அறிவியல் கருத்து.

புவியியலாளர்கள் இவ்வாறு படிவப்பாறைகளை அவற்றில் உள்ள நிலக்கரிப் படிவங்களுக்காகத் தோண்டுகையில் பல தொல்லுயிர் எச்சங்களையும் கண்டறிந்தனர். இந்தியாவில் கிடைத்தத் தொல்லுயிர் எச்சங்களும், மடகாஸ்கர் தீவில் கிடைத்த தொல்லுயிர் எச்சங்களும் ஒன்றையொன்று பெரிதும் ஒத்திருந்தன. மடகாஸ்கரில் அதிகமாகக் காணப்படும் ஒருவகையான மரநாய் வகை விலங்கு லெமூர் (Lemur).  இந்த விலங்கின் தொல்லுயிர் எச்சங்கள், மடகாஸ்கர், தென் ஆப்ரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் புவியியல் ஆய்வாளர்களால் கண்டு பிடிக்கப்பட்டது. இன்றும் பாலூட்டி இனமான லெமூர் இந்தியாவிலும், ஆபிரிக்காவிலும், அதிக அளவில் மடகாஸ்கரிலும் வாழ்கின்றன.

அக்காலத்தில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், உலகம் முழுவதுமே இவ்வாறாக தொல்லுயிர் எச்சங்கள் படிவப்பாறைகளின் படிவங்களில் கண்டறியப்பட்டன. தென்னமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற நிலப்பரப்புகள் பெரிய கடல்களால் பிரிக்கப்பட்டு ஒன்றுக்கொன்று தொடர்பற்ற நிலையில் இருக்கையில் உயிரினங்களின் படிவங்கள் மட்டும் இந்த நிலப்பகுதிகளில் ஒத்திருப்பதற்கான காரணம் தேடப்பட்டது. இதே காலகட்டத்தில் “சார்லஸ் டார்வின்” தனது “இனங்களின் தோற்றம்” (Origin of Species -1859) குறித்த கோட்பாட்டையும் வெளியிட்டார். அறிவியல் உலகில் டார்வினின் தாக்கம் அதிகம் இருந்தது. அவரது கோட்பாட்டின் அடிப்படையில் சிந்திக்கத் துவங்கிய அறிவியலாளர்கள், இந்தியாவிற்கும் மடகாஸ்கருக்கும் இடையில் நான்காயிரம் கிலோமீட்டர்கள் மேல் இடைவெளி இருக்கிறதே, எனவே இந்த விலங்குகள் பரவ “நிலப்பாலம்” போல ஏதேனும் இருந்திருக்கக்கூடும் என்ற முடிவுக்கு வந்தனர்.

ஆங்கிலேயரான “பிலிப் லட்லி ஸ்க்லேட்டர்” (Philip Lutley Sclater – 1864; “The Mammals of Madagascar”) என்ற உயிரியல் ஆய்வாளர் தொடர்பற்ற நிலப்பகுதிகளில் உயிரினங்களின் பரவலுக்குக் காரணம் அப்பகுதிகள் யாவும் முதலில் நிலப்பாலங்கள் மூலம் இணைக்கப்பட்டிருந்திருக்க வேண்டும். பிற்காலத்தில் கடல்நீர் மட்டம் உயர்ந்ததால் அவை மூழ்கி கண்டங்கள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன என்ற புவியியல் கோட்பாட்டை முன்வைத்தார். இந்நாட்களில் நாம் காணும் குமரிக்கண்டமாகக் காட்டப்படும் வரைபடங்களில் மடகாஸ்கர், குமரி முனை, ஆஸ்திரேலியா பகுதிகளை இணைக்கும், கடலில் மூழ்கியதாகக் கூறப்படும் முக்கோண நிலப்பரப்பு என்ற கருத்தின் உரிமையாளர் இந்த பிலிப் லட்லி ஸ்க்லேட்டர். லெமூரியா என்ற கருத்தைத் தோற்றுவித்தவர் இவரே. இவரது இந்த ஆய்வுக்கட்டுரை “குவாட்டர்லி ஜர்னல் ஆஃப் சயின்ஸ்” (Quarterly Journal of Science) என்ற அறிவியல் இதழிலும் வெளியானது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மடகாஸ்கரில் வாழ்ந்த லெமூர் விலங்குகள் ஆப்ரிக்கா இந்தியப்பகுதிகளுக்கு இந்த முக்கோண பெருநிலப்பரப்பின் மூலம் பரவின என்பது இவர் முடிவு.

பிலிப் லட்லி ஸ்க்லேட்டர் கருத்தை ஒட்டி பெரும்பாலான அக்கால அறிவியலாளர்கள் நிலப்பாலம் கருத்தையே ஏற்றுக் கொண்டனர். உயிரினங்களின் பரவலுக்கான ஆய்வுகளில் நிலப்பாலம் கருத்தையே முன்வைத்தனர். இவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் ஜெர்மனியைச் சேர்ந்த “எர்னெஸ்ட் ஹெயின்ரிச் ஹேக்கல்” (Ernst Heinrich Philipp August Haeckel) எனும் புவியியலாளர். இவர் ஒருபடி மேலே சென்று, 1870 ஆம் ஆண்டில் அவர் எழுதிய கட்டுரையில் இந்தியாவிற்குத் தெற்கில் கடலில் மூழ்கிப்போன லெமூரியா நிலப்பரப்பில்தான் மனித இனம் தோன்றியது, உயிரினங்களைத் தோற்றுவித்த தொட்டில் அப்பகுதி என்று கூறினார்.

“The probable primeval home or ‘Paradise’ is here assumed to be Lemuria, a tropical continent at present lying below the level of the Indian Ocean, the former existence of which in the tertiary period seems very probable from numerous facts in animal and vegetable geography” என்பது அவர் கூற்று. அக்கால அறிவியலாளர்களில் லெமூர் மரநாய்களிலிருந்தே மனித இனம் தோன்றியது என்று கருதியோர் சிலரும் இருந்தனர் என்பது இக்காலத்தில் நமக்கு வியப்பளிக்கும்.

ஆகவே, கோண்ட்வானா பாறைகள் தொடர்பற்ற ஆசியா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா (Asia, Africa, South America, Australia) போன்ற நிலப்பகுதிகளில் இருக்கும் காரணத்தை லெமூரியா கோட்பாடு விளக்கவில்லை. மாறாக ஒத்த உயிரினங்கள் உலகின் தொடர்பற்ற பல்வேறு நிலப்பகுதியிலும் பரவியிருக்க இன்று கடலடியில் மூழ்கிப்போயிருக்கக்கூடிய ஒரு நிலப்பாலம் தான் காரணம் என்றது. இவையாவும் நீராவி எந்திரங்களுக்கு நிலக்கரி எடுக்கப் பூமியைத் தோண்டியதால் உருவான அறிவியல் கருத்து வளர்ச்சிகள். கண்டங்கள் நிலையானவை என்று நிலவியிருந்த கருத்துதான் அக்காலத்தில் நிலப்பாலம் என்ற கோட்பாடு உருவாகக் காரணம். அறிவியல் வளர்ச்சி துளிர்விடத் துவங்கிய ஆரம்பக்காலம் அது. பின்னர் கண்டப்பெயர்ச்சி, கடல் தரை பரவுதல், கண்டத்தட்டுகள் நகர்தல் ஆகிய அறிவியல் குறித்து 20 ஆம் நூற்றாண்டில் புரிந்து கொள்ளப்படும் வரை லெமூரியா கோட்பாடு அறிவியல் உலகில் ஆதிக்கம் செலுத்தியது.

ஆனால், இந்த இடைப்பட்ட காலத்தில் இந்த அறிவியல் கருத்துகள் சுட்டியவற்றை கவனித்த சென்ற நூற்றாண்டின் தமிழறிஞர்கள் வியப்பின் எல்லைக்கேச் சென்றார்கள் என உறுதியாகச் சொல்லலாம். பிலிப் லட்லி ஸ்க்லேட்டர் (1864) சொன்ன கடலில் மூழ்கிய லெமூரியாவும், அவரைத் தொடர்ந்து எர்னெஸ்ட் ஹெயின்ரிச் ஹேக்கல் (1870) மனித இனத்தின் தோற்றமே இந்தியாவின் தென்கடல் பகுதிதான் என்றதும் அவர்கள் தமிழிலக்கியத்தில் படித்த ‘பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள’ என்ற செய்தியும்; ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி’ என்ற செய்தியும் அடுக்கடுக்காக நினைவு வரவே தமிழிலக்கியம் கூறியவற்றிற்குத் தக்க அறிவியல் சான்றுகள் கிடைத்துவிட்டதாகவே சென்ற நூற்றாண்டு தமிழறிஞர்கள் மகிழ்ந்தார்கள் என்பது தெரிகிறது. இதனால் புரிவது, தமிழிலக்கியவாதிகள் பண்டைய இலக்கியம் குறிப்பிட்ட கடல்கொண்ட தென்தமிழக நிலதிற்குப் புவியியல் மற்றும் அறிவியல் அடிப்படையில் சான்றுகள் கிடைத்துவிட்டது என்றே உண்மையில் நம்பியிருக்கிறார்கள். அவர்களை அதற்காக நாம் குறை காண வழியில்லை.

கோண்ட்வானா என்ற கருதுகோள் தோன்றியது எவ்வாறு?

“லெமூரியா” கோட்பாட்டிற்குப் பிறகு, 1912 இல் கூறப்பட்ட “கண்டப் பெயர்ச்சி” (continental drift) மற்றும்,  1960களில் நிறுவப்பட்ட “கடல் தரை பரவுதல்” (Seafloor spreading, movement of earth’s tectonic plates) ஆகிய புவியியல் கோட்பாடுகள், சுமார் ஒரு பில்லியன் (அளவை: 1 பில்லியன் = 1000 மில்லியன் = 100 கோடி = 10000 இலட்சம்) அதாவது, 100 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் அனைத்து நிலப்பரப்புகளும் முற்காலத்தில் ஒரே கண்டமாக இருந்திருக்க வேண்டும், பின்னர் கண்டத் தட்டுகள் பிரிந்து நகர்ந்து இன்றைய நிலையை எட்டியுள்ளன என்று இன்று அறிவியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் புவியியல் கருத்துக்களை வலியுறுத்தின. இக்கோட்பாடுகள் கோண்ட்வானா பாறைகள் தொடர்பற்ற நிலப்பகுதிகளில் இருக்கும் நிலைக்குச் சரியான விளக்கத்தை தந்தன.

இந்தியாவில் கோண்டு மக்கள் வாழ்ந்த பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைப் படிவங்களுக்கு கோண்ட்வானா பாறைகள் எனப் பெயர் கொடுக்கப்பட்டு, பிறகு அதேவகைப் பாறைகள் உலகில் எங்கெங்கு இருந்தாலும், அவையும் அறிவியல் உலகம் கடைப்பிடிக்கும் பெயர் சூட்டும் வழமையின் அடிப்படையில் கோண்ட்வானா பாறைகள் என்றே பெயரும் சூட்டப்பட்டது. அதன் தொடர்ச்சியாக; பிரிவதற்கு முன்பு கோண்ட்வானா பாறைகள் தொடர்ச்சியாக அமைந்திருந்த புவியின் தென்கண்டப்பகுதிகள் யாவும் ஒன்றாக இருந்த பெருநில கண்டப்பகுதி “கோண்ட்வானாலேண்ட் ” (Gondwanaland) என்று பெயரிடப்பட்டது. ஆஸ்திரியாவைச் சேர்ந்த எட்வர்ட் சூயெஸ் (Eduard Suess) என்ற அறிவியலாளர் 1861 ஆண்டில் பிரியாத நிலையிலிருந்த பழமையான தென்கண்டத்திற்கு இந்தப் பெயரைச் சூட்டினார்.

தென்பகுதி-பெருங்கண்ட பகுதியான “கோண்ட்வானாலேண்ட்”, அதே போன்று வடபகுதியிலிருந்த மற்றொரு வடபகுதி-பெருங்கண்ட பகுதியான “லவ்ரேஷியா”(Laurasia) பகுதியுடன் சுமார் 30 கோடி ஆண்டுகளுக்கு முன் இணைந்திருந்த நில அமைப்பு “பேன்ஜியா” (Pangaea) என்னும் பேரகண்டம் (Supercontinent) எனக் குறிப்பிடப்பட்டது. பேன்ஜியா என்ற பேரகண்ட கோட்பாட்டை 1912 ஆம் ஆண்டில் முன்வைத்தவர் “ஆல்ஃபிரட் வெஜனர்” (Alfred Wegener).  பின்னர் சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஒருங்கிணைந்திருந்த இந்த பேன்ஜியா பிரியத் துவங்கி துண்டு துண்டாக வெவ்வேறு திசைகளில் நகர்ந்து இன்றைய கண்டங்கள் கொண்ட புவி அமைப்பைப் பெற்றது என்பது புவி அறிவியலாளர்கள் ஏற்றுக் கொண்ட ஒரு கருத்து. “புவிதட்டுகளின் கட்டமைப்பு” (earth’s tectonic plates) நகரும் நிலைப்பாடு தொடர்ந்து நிகழும் கண்டப் பெயர்ச்சிக்கும், தொல்லுயிர் பரவல், புவியமைப்பு போன்ற பலவகை கேள்விகளுக்குச் சரியான விடையளிக்கும் கோட்பாடாக அமைந்தது.

பொய்யாய் பழங்கதையாய் கனவாய் போன குமரிக்கண்டம்:

அண்மைக் காலத்தில் ‘குமரிக்கண்டம்’ எனும் சொல்லைத் தொடர்ந்து அடைப்புக் குறிக்குள் ‘கோண்ட்வானா’ என்றும் குறிக்கப்படுகிறது. குமரிக்கண்டம் – லெமூரியா – கோண்ட்வானா ஆகிய இம்மூன்றும் ஒன்றுதான் என்பது தவறான புரிதல். “கோண்ட்வானா லேண்ட்” என்பதும் “குமரிக்கண்டம்” என்பதும் இரண்டும் ஒன்றல்ல. “லெமூரியா” என்ற கோட்பாட்டுக்கு அறிவியல் அடிப்படை இல்லை என்று அது கைவிடப்பட்ட பின்னர் கோண்ட்வானா என்ற கோட்பாட்டைக் குமரிக்கண்டம் என்பதுடன் இணைக்கும் முயற்சி தமிழ் ஆர்வலர்களிடம் உருவாகியுள்ளது. குமரிக்கண்டம் – லெமூரியா – கோண்ட்வானா ஆகிய இம்மூன்றில் கோண்ட்வானா என்பது மட்டுமே அறிவியல்படி சரி. குமரிக்கண்டம், லெமூரியா ஆகிய மற்ற இரண்டுக்கும் அறிவியல் சான்று கிடையாது. குமரிக்கண்டம் என்று ஒன்று இருந்ததென்றும், அந்த குமரிக்கண்டம் கடல்கோளால் அழிந்தது என்று இன்றும் நம்புபவர்கள், லெமூரியா என்ற கோட்பாடு முன்வைக்கப்பட்ட பொழுது தமிழிலக்கிய குறிப்புகளுக்கு அறிவியல் சான்றுகள் உள்ளதாக நம்பியவர்கள், பிறகு அறிவியல் உலகம் லெமூரியா கோட்பாட்டை ஏற்காமல் கைகழுவி நகர்ந்த பொழுது தாங்கள் நம்பிய குமரிக்கண்டத்தை கைவிட மனமின்றி கோண்ட்வானாக் கோட்பாட்டுடன் கொண்டு போய் இணைத்துவிட்டார்கள். அவ்வாறு இணைப்பதால் அறிவியல் அடிப்படையில் சான்று கிடைக்காது என்பதுதான் உண்மை.

ஏன் சான்று கிடைக்காது?  அதனையும் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். குமரிப் பகுதி, கடல்கோளால் அழிந்திருக்கலாம், ஆழிப்பேரலையின் சீற்றத்தை இந்த நூற்றாண்டிலேயே நாம் பார்த்துள்ளோம். பூம்புகாரும் அவ்வாறு கடல்கோளால் கொள்ளப்பட்டதையும் மணிமேகலை கூறுகிறது. இவையெல்லாம் மனிதர்கள் தாங்கள் பார்த்ததை வாய்மொழியாகத் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்ட செய்தியை அறிந்தோ, அல்லது எழுத்து தோன்றிய பின்னர் பதிந்தோ வைத்தவை. ஆனால் கோண்ட்வானா லேண்ட் உருவான காலம் என்று கணிக்கப்படும் காலமோ பற்பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர். மனித இனம் மண்ணில் தோன்றியதோ வெறும் அரைகோடி ஆண்டுகளுக்கு முன்னர்தான், அல்லது 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்தான். பிறகுதான் நாகரிகம் அடைந்து கருத்துக்களைப் பதிவு செய்யும் வரலாற்றுக் காலம் எல்லாம் வெகு பிற்பாடே உருவாகிறது. ஆகவே மண்ணில் தோன்றியே இருக்காத ஒரு மனித இனம் பலகோடி ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த புவியியல் மாற்றங்களை பார்த்திருக்கவே வழியில்லை என்பதுதான் உண்மை. இதே விளக்கம், எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியப் பெருங்கடலில், மொரிசியஸ் மற்றும் மடகாஸ்கர் தீவுக்கூட்டங்களுக்கு அருகில் மூழ்கிப்போன ஒரு குறுங்கண்டமாக 2013 இல் கண்டுபிடிக்கப்பட்ட மொரீசியா (Mauritia) என்பதற்கும் பொருந்தும். இதுவும் மனித இன தோன்றுவதற்கும் பல கோடி ஆண்டுகளுக்கும் முன்னர் இருந்த புவியமைப்பு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த நிலத்தைக் கடல் கொண்டதைப் பார்க்க மனிதர்களே பிறந்திருக்கவில்லை.

குமரிக்கண்டமா? அது எங்கே இருக்கிறது?

புவியின் 60% பரப்பளவு கடலால் சூழப்பட்டுள்ளது. கடலின் கீழ் உள்ள தரைப்பகுதியின் அமைப்பு, அதன் ஆழம் ஆகிய புவியியல் தரவுகள் இன்று இணைய வெளியிலேயே எளிதாக் கிடைக்குமாறு பல புகழ் பெற்ற ஆய்வு நிறுவனங்களும் வெளியிட்டுள்ளன. இப்புவியியல் தரவுகள் என்ன சொல்கின்றன? கண்டத் திட்டு (Continental shelf) என்னும் பகுதி கண்டங்களின் விளிம்பாக நிலத்தையொட்டி கொஞ்சம் கொஞ்சமாக அளவில் சரிந்து ஆழம் அதிகரித்துக் கொண்டே செல்லும் பகுதி. பொதுவாகக் கடல் மட்டத்திலிருந்து ஆழம் குறைந்த பகுதி இது என்பதால் இங்குதான் மீன்பிடிப்பு, கனிம சேகரிப்பு மற்றும் எண்ணைக் கிணறுகள் இருக்கும். இந்த கண்டத் திட்டு இருக்கும் எல்லை முடிந்தவுடன் கடலின் ஆழம் வெகுவிரைவில் அதிகமாகி விடும், அதன் பிறகு ஆழ்கடல் பகுதியாக இருக்கும். ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் பகுதி தவிர உலகின் அனைத்துக் கண்டங்களின் கண்ட திட்டுப் பகுதி சராசரியாக சுமார் 140 மீட்டர் (460 அடி) ஆழம் வரை இருக்கும்.

பெருங்கடலின் நடுவில் இருக்கும் மலைமுகடுகள், கடல் மட்டத்திலிருந்து சுமார் 7,000 முதல் 10,000 அடிகளுக்குக் கீழ் உள்ளன. கடலின் நீர் வற்றிக்கொண்டே போக நேர்ந்தால் கடல் நீருக்கு அடியில் மூழ்கியுள்ள நிலப்பகுதிகள் எவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படத் தொடங்கும் என்பதை புவியியல் தரவுகளின் அடிப்படையில் ஒரு காணொளியாக நாசா ஆய்வு மையம் உருவாக்கிக் காட்டியுள்ளது (https://www.youtube.com/watch?v=-xRh7xCCQPI).

 

நாசா நிறுவனம் தரவுகளைத் தொகுத்து உருவாக்கிய காணொளியில் படிப்படியாக நீர் குறைவதைச் சற்றே நிறுத்தி 140 மீட்டர் ஆழத்தில் உள்ள நில அமைப்பைத் தெளிவாகக் காணலாம். அதில் குமரிமுனைக்கு தெற்கே உள்ள கண்ட திட்டுப் பகுதி மட்டுமே இருக்கும். புவியியல் நில அமைப்புத் தரவுகள் காட்டுவது அவை மட்டுமே.

கைவிடப்பட்ட லெமூரியா கண்ட கோட்பாட்டினை ஒட்டி இக்காலத்தில் குமரிகண்ட ஆர்வலர்கள் வரைந்து வைத்திருக்கும் மடகாஸ்கர் – குமரிமுனை – ஆஸ்திரேலியாவை இணைக்கும் முக்கோண நிலப்பகுதியோ, அல்லது அவற்றில் காட்டப்படும் மலைமுகடுகளோ எதுவுமே இருக்காது. ஆனால், நாம் ஏன் 140 மீட்டர் ஆழம் அளவை மட்டும் கணக்கில் கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழலாம். அதற்குக் காரணம் கடைசி பனியுகம் முடிந்த பிறகு அந்த அளவுதான் கடல் நீர்மட்டம் உயர்ந்தது என்று அறிவியல் மூலம் நமக்குத் தெரிகிறது.

சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முன்னர், கடைசியாகப் புவி எதிர்கொண்ட பனியுகத்திற்குப் (last ice age / last glacial period) பிறகு பனிப்பாறைகள் உருகி சிறிது சிறிதாகக் கடல்நீர் மட்டம் உயரத் துவங்கி கண்டங்களின் ஆழம் குறைவான கண்டத்திட்டுப் பகுதிகள் நீரினால் மூழ்கடிக்கப்பட்டன. நீர் மட்டம் அவ்வாறாக 120 இல் இருந்து 130 மீட்டர்கள் வரை கடந்த 12000 ஆண்டுகளில் உயர்ந்துள்ளது என்பது புவியியல் ஆய்வாளர்கள் ஆய்வின் அடிப்படையில் அறிவியல் அறிவிக்கும் தகவல். இது புவியியல் கால அடிப்படையில் ‘ஹோலோசீன் கடல்மட்ட உயர்வு’ எனப்படும்.  சராசரியாக ஒரு நூற்றாண்டுக்கு ஒரு மீட்டர் உயரம் என நீர் மட்டம் கொஞ்சம் கொஞ்சமாக உயரத் துவங்கியிருக்கிறது. அதாவது ஆண்டொன்றுக்கு சுமார் ஒரு சென்டிமீட்டர் அளவு நீர்மட்டம் உயர்ந்தது எனக் கொள்ளலாம். ஒரு முப்பது ஆண்டுக்காலத்தை நல்ல நினைவாற்றலுடன் வாழக்கூடிய மனிதர் ஒருவர் தனது வாழ்நாளில் அந்த 30 ஆண்டுக் காலத்தில் கடல் நீர் மட்டம் ஒரு அடி உயர்ந்திருப்பதைக் காணக்கூடும். ஆனால் உண்மையில் சொல்லப்போனால் சிறிது சிறிதாகக் கடல்மட்டம் உயர்ந்ததை யாருமே உணர்ந்திருக்கவும் வழியில்லை, அதைக் கதை கதையாகச் சொல்லி அடுத்தடுத்த தலைமுறைக்கும் கடத்தியிருக்கவும் வாய்ப்பில்லை. காரணம், இது பதறித் துடித்து உயிர் தப்பி ஓட வழி தேட வைக்கும் நீர்மட்ட உயர்வல்ல. ஆனால் ஆழிப் பேரலை ஏற்படுத்தும் அழிவு அவ்வாறு அல்ல. சுனாமியால் ஏற்படுவது ஒரு திடீர் அழிவு, தப்பி ஓட வழியின்றி தங்கள் உறவுகள் அழிந்து போன ஒரு நிகழ்வு ஆறா வடுவாக மக்கள் மனதில் நினைவுகளாக நின்று விடும். அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு வாய்மொழிக் கதையாக அந்த ஆழிப்பேரலை ஏற்படுத்திய அழிவு குறித்த செய்தி சென்று சேரும் வாய்ப்புண்டு. இலக்கியங்கள் சொல்லும் கடல்கோள்கள் ஆழிப்பேரலை சீற்றத்தால் ஏற்பட்ட அழிவுகளை மட்டுமே. 


தமிழகத்தில் ஓடும் வைகை, தாமிரபரணி நதிகள் நீண்ட காலத்திற்கு முன்பு இலங்கையின் காலி நகரம் வரை பாய்ந்திருப்பதாகச் செயற்கைக்கோள்

படங்கள் தந்த தரவுகளை வைத்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ரிமோட் சென்சிங் துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் சோமசுந்தரம் ராமசாமி மற்றும் ஜே. சரவணவேல் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு அண்மையில் (2019 ஜூன் 25ஆம் தேதி) வெளியானது. இந்த ஆய்வின் முடிவின்படி, குமரிக்குத் தெற்கே சுமார் 2 -3 லட்சம் சதுர கி.மீ. பரப்புள்ள நிலப்பரப்பு இருந்திருக்கலாம். ஆனால், மடகாஸ்கரிலிருந்து ஆஸ்திரேலியா வரை இந்த நிலப்பரப்பு இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்று ஆய்வாளர்கள் விளக்கினர். மேலும் குமரிக்கண்டம் என்ற கருத்தாக்கம் குறித்து நிலவியல் அடிப்படையில் விரிவான நூல் ஒன்றை ´குமரி நிலநீட்சி´ என்ற பெயரில் எழுதிய நிலவியல் ஆய்வாளர் சு.கி. ஜெயகரன், பிரம்மாண்டமான குமரிக்கண்டம் ஏதும் கன்னியாகுமரிக்கு தெற்கிலிருந்ததில்லை என்று வைத்த முடிவையே தற்போது வெளிவந்திருக்கும் ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்துவதாகவும் கூறினார்.

பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் பஃறுளி ஆறும்: 


“பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” என்று இளங்கோ கூறியபொழுது தென்கடலையொட்டி இருந்த, ஆழிப்பேரலையால் அழிந்த “குமரிக்கோடு” என்ற பெயருள்ள ஒரு பகுதியையோ அல்லது பலமலை அடுக்குகளைக் கொண்டிருந்த குமரிமுனை கடற்கரையையோ குறிப்பிடுகிறார் என்றே நாம் பொருள் கொள்ள வேண்டும். கரை என்பதைக் குறிக்கும் கோடு என்பதன் அடிப்படையில் இங்குக் குமரிக்கோடு குறிப்பிடப்படுகிறது. இன்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு என்ற வட்டம் ஒன்று உள்ளது. அதுமட்டுமின்றி கடற்கரையோரமாக 20க்கும் மேற்பட்ட இடங்கள் “கோடு” என்ற பெயரில் முடியும் இடங்களாகவே உள்ளன (1. அண்டுகோடு, 2. அயக்கோடு, 3. இடைக்கோடு, 4. ஏற்றகோடு , 5. கட்டிமாங்கோடு, 6. குருந்தன்கோடு, 7. கொல்லங்கோடு, 8. சுருளகோடு , 9. திக்கணம்கோடு , 10. திருவிதாங்கோடு, 11. தேவிகோடு, 12. நெட்டாங்கோடு, 13. பாகோடு , 14. மங்க்கோடு, 15. மத்திகோடு, 16. மருதங்கோடு, 17. மாங்கோடு , 18. முழுக்கோடு , 19. விளவங்கோடு, 20. வெள்ளம்கோடு, 21. வெள்ளாங்கோடு  - https://ta.wikipedia.org/s/14th). குமரி பகுதியில் கோடு என்பது கரை என்ற பொருளில் வழங்கப்பட்டிருப்பது இதிலிருந்து தெள்ளென விளங்குகிறது. “குளிப்பருந் துயர்க் ‘கடல் கோடு’ கண்டவன் களிப் பெனும் கரையிலாக் கடலுள் ஆழ்ந்தனன்” (கம்ப ராமாயணம் – பாலகாண்டம்: 42) என்று கம்பரும் கடலின் கரையை கோடு எனக்குறிப்பிடுவதை இங்கு ஒப்பு நோக்கலாம். ஆனால், பாவாணர் உள்ளிட்ட பல தமிழறிஞர்களும் ‘குமரிக்கோடு’ என்பதை ‘இமயம் போன்று ஒரு பெரிய மலை’ எனவே பொருள் கொண்டிருக்கின்றனர்.

மேலும்; பஃறுளி ஆறு என்பது இன்று பறளியாறு என்று மருவி அழைக்கப்படுகிறது. இது கன்யாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு வட்டத்தில் பாய்கிறது. பறளியாறு மகேந்திரகிரியில் துவங்குகிறது, இதன் மேல் பெருஞ்சாணி அணை கட்டப்பட்டுள்ளது. இதனுடன் கோடையாறு என்பதும் இணைந்து மேற்கு நோக்கிப் பாயும் தாமிரபரணி அல்லது குழித்துறை ஆறாக மாறுகிறது. இது தென்மேற்காகப் பாய்ந்து கொல்லங்கோடுக்கு சற்று தெற்கே தெங்கப்பட்டினம் பகுதியில் கடலில் கலக்கிறது.

கற்றோரில் பலரே இன்றும் கூட லெமூரியா என்பதை உண்மை என்றும், குமரிக்குத் தெற்கே ‘குமரிக்கண்டம்’ என்று ஒரு பெரும் நிலப்பரப்பு இருந்ததாகவும் அங்கு நாகரிகத்தில் மேன்மை நிலையை எட்டியிருந்த மூத்த தமிழ்குடியினர் தோன்றி வாழ்ந்ததாகவும் நம்பி வருகின்றனர். குமரிக்கண்டம் என்பதும் மேற்கத்திய உலகம் கொண்டிருக்கும், கடலில் மூழ்கிய, நாகரிகத்தில் ஒரு உயர்ந்த நிலையை அடைந்திருந்த தொன்மையான “அட்லாண்டிஸ்” என்ற நம்பிக்கைக்கு இணையான ஒரு புனைவாகும்.

தொல்லியல் மற்றும் அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் நாம் அறிந்திராத நம் முன்னோர் வரலாற்றை நாம் கட்டமைக்க வேண்டும். எழுதப்படும் வரலாறு நாம் நம்பவிரும்பும் உணர்வு சார்ந்த கற்பனைகளின் மீது எழுப்பப்படாமல் அறிவு சார்ந்த தரவுகளின் அடிப்படையில் எழுதப்படவேண்டும். ஆகவே தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் கடல்கோள்கள், நிலம் கடலால் கொள்ளப்பட்டது என்பது திடீரென தாக்கப்பட்ட ஆழிப்பேரலையால் ஏற்பட்டிருக்கக்கூடிய ஓர் அழிவே. இன்றுவரை இந்தோனேசியா பகுதியில் நிலநடுக்கமும், அதைத்தொடர்ந்து இந்தியப் பெருங்கடல் பகுதி நாடுகளில் ஆழிப்பேரலை அச்சமும் ஒரு தொடர்கதை. இத்தகைய அழிவை இலக்கியம் குறிக்கும் பூம்புகார் அழிவுடன் இணைத்துக் காணலாம். ஆனால், பனியுகம் முடிந்து கடல்மட்டம் உயர்ந்த பகுதி கடல் விளிம்பினை அடுத்துள்ள கண்ட திட்டுப் பகுதி என்றே உறுதியாகச் சொல்லலாம்.

புவியியல் தரவுகள் அடிப்படையில் குமரி முனைக்குத் தெற்கே குமரிக்கண்டம் என்று எந்த ஒரு நிலப்பகுதியும் இல்லை..இலை..இல்லவே இல்லை.

References and Suggestions for Further Reading:

[1] NASA-Draining the Oceans-Scientific Visualization LINKS;

i. Draining the Oceans, Visualizations by Horace Mitchell Released on June 1, 2008; https://svs.gsfc.nasa.gov/3487

ii. Draining the Oceans, NASA Scientific Visualization Studio, Dec 11, 2016; https://www.youtube.com/watch?v=-xRh7xCCQPI

iii. Draining the Oceans, Index of Frames Files for ID 3487frames/1024×512/Dates; https://svs.gsfc.nasa.gov/vis/a000000/a003400/a003487/frames/1024×512/Dates/

iv. Water level – 140 meters below sea level; https://svs.gsfc.nasa.gov/vis/a000000/a003400/a003487/frames/1024×512/Dates/Dates_00015.png

[2] Half-baked truths make Kumari Kandam a subject of puzzle

https://www.newindianexpress.com/cities/chennai/2016/jun/19/Half-baked-truths-make-Kumari-Kandam-a-subject-of-puzzle-941879.html

[3] NASA slowly drains the oceans in an incredible animation, revealing hidden underwater mountain ranges and ancient land bridges, Morgan McFall-Johnsen, Business Insider, February 2, 2020.

https://www.businessinsider.my/nasa-animation-drains-oceans-reveals-land-bridges-mountains-2020-1?

[4] Submerged River Systems Hint at India-Sri Lanka water Links, SM. Ramasamy, J. Saravanavel, K S Jayaraman. July 2019.

https://www.researchgate.net/publication/334587519_Submerged_River_Systems_Hint_at_India-Sri_Lanka_water_Links

[5] Lemuria: The Fabled Lost Continent That Turned Out To Be Real — Almost, William DeLong, April 15, 2018.

https://allthatsinteresting.com/lemuria-continent

[6] The Lemuria myth, S. Christopher Jayakaran, April 22, 2011, Frontline. https://frontline.thehindu.com/the-nation/article30175192.ece

[7] Madras District Gazetteers: Kanniyakumari District, Madras (India : State), B. S. Baliga (Rao Bahadur) Superintendent, pp. 6-7, Government Press, 1957 – Tamil Nadu (India). https://books.google.com/books/about/Madras_District_Gazetteers_Kanniyakumari.html?id=oWNDAAAAYAAJ

[8] லெமூரியா-ஆய்வுக் கட்டுரை, சிங்கநெஞ்சம் சம்பந்தம், தமிழ் மரபு விக்கி, http://www.heritagewiki.org/index.php

[9] குமரிக் கண்ட குழப்பங்கள், சிங்கநெஞ்சம் சம்பந்தம், மின்தமிழ்மேடை – 19, (பக்கம் 105-115), தமிழ் மரபு அறக்கட்டளை-பன்னாட்டு அமைப்பு வெளியீடு, அக்டோபர் 2019.

[10] இலங்கையின் தென்பகுதிவரை பாய்ந்த வைகை, தாமிரபரணி நதிகள் – ஆய்வு சொல்வது என்ன?, முரளிதரன் காசிவிஸ்வநாதன், பிபிசி தமிழ், 28 ஜூலை 2019. https://www.bbc.com/tamil/india-49140571

http://siragu.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%85%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%87/


No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா