Thursday, October 3, 2024

நீலகிரி: `கட்சிக்கு 2%, திமுக மா.செ-க்கு 3%’ - புயலை கிளப்பும் நெல்லியாளம் நகராட்சி கமிஷன் விவகாரம்

நீலகிரி: `கட்சிக்கு 2%, திமுக மா.செ-க்கு 3%’ - புயலை கிளப்பும் நெல்லியாளம் நகராட்சி கமிஷன் விவகாரம் சதீஸ் ராமசாமி 

நகராட்சியில் ஒதுக்கக்கூடிய மொத்த டெண்டர் பணிகளையும் உறுப்பினர் சேகர் மட்டுமே பினாமி பெயரில் எடுக்க வேண்டும் என்கிறார்.

Published:Updated:
நெல்லியாளம் நகராட்சி
நெல்லியாளம் நகராட்சி
https://www.vikatan.com/government-and-politics/nelliyaalam-municipality-controversy-and-commission-issue

நீலகிரி மாவட்டத்தின் கடைக்கோடியான‌ கேரள எல்லையில் அமைந்திருக்கிறது `நெல்லியாளம்’ நகராட்சி. பழங்குடி பெண்களுக்காக தலைவர் பதவியை இட ஒதுக்கீடு அடிப்படையில் ஒதுக்கப்பட்ட தமிழகத்தின் ஒரே நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. தி.மு.க‌ வைச் சேர்ந்த பழங்குடியின பெண் சிவகாமி என்பவர் இந்த நகராட்சியின் தலைவராக பதவி வகித்து வருகிறார். கடைக்கோடியில் இருக்கும் நகராட்சி என்றாலும், டெண்டர் ஒதுக்கீடு முதல் கான்ட்ராக்ட்ரகள் தலையீடு வரை தொடர்ந்து பல சர்ச்சைகளை கிளப்பி வரும் நகராட்சியாக இருக்கிறது.

நெல்லியாளம் நகராட்சி
நெல்லியாளம் நகராட்சி

நகராட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் மக்கள் நலப்பணிகளை ராயன் என்ற ஒப்பந்ததாரர் மேற்கொண்டு வருவதாகவும் அவருக்கு இனி ஒப்பந்தங்களை வழங்க கூடாது எனவும் சில மாதங்களுக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால், சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரரால் தனது உயிருக்கே அச்சுறுத்தல் இருப்பதாக தலைவர் சிவகாமி கூறி வந்தார்.

இந்நிலையில், தொடர் ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருவதாக கூறி தலைவர் சிவகாமி மற்றும் துணை தலைவர் நாகராஜ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சக தி‌.மு.க கவுன்சிலர்களே நிறைவேற்றியிருக்கிறார்கள். இந்த விவகாரம் தற்போது புயலைக் கிளப்பியிருக்கிறது.

ஆலன்
ஆலன்

தலைவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தீவிரம் காட்டிய நகர்மன்ற உறுப்பினர் ஆலன் (தி.மு.க ) , " தலைவர், துணைத் தலைவர், தலைவரின் உதவியாளர் ஆகியோர் அதிகாரிகள் மற்றும் நகர மன்றம் உறுப்பினர்களை மிரட்டி வருகின்றனர். மேலும், மக்களுக்கான வளர்ச்சி பணிகளுக்கும் தொடர்ந்து முட்டுக்கட்டை போடுகிறார்கள் . ஒப்பந்ததாரர்கள் மற்றும் மற்ற உறுப்பினர்களிடையே மோதல் போக்கை உருவாக்கி அதன் மூலம் இவர்கள் லாபம் அடைந்து வந்தார்கள். இவர்கள் மீது ஏகப்பட்ட முறைகேடு புகார்கள் ஆதாரங்களுடன் வெளிவந்திருக்கிறது. இதனால், ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியைச்‌ சேர்ந்த உறுப்பினர்கள் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி இருவர் மீதும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம் " என்றார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னணி குறித்து தெரிவித்த துணை தலைவர் நாகராஜ், "ஆரம்பம் முதலே பழங்குடியினத்தை சேர்ந்த நகர்மன்ற தலைவர் சிவகாமியை சக நகர மன்ற உறுப்பினர்கள் மரியாதை குறைவாக நடத்தி வருகிறார்கள். நகர்மன்ற‌ உறுப்பினரும் தி.மு.க- வின் நெல்லியாளம் நகர செயலாளருமான சேகர் என்பவர் டெண்டர் விடும் தொகையில் இருந்து கட்சிக்கு 2% கமிஷன் மற்றும் மாவட்டச் செயலாளருக்கு என 3% கமிஷனை பகிரங்கமாக வாங்கி வருகிறார். ஒப்பந்ததாரர் ஒருவரிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு தலைவர் மற்றும் எனக்கு எதிராக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை மன்ற உறுப்பினர்கள் முன் வைத்து இந்த தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்" என்றார்.

சிவகாமி
சிவகாமி

இது குறித்து பேசிய தலைவர் சிவகாமி, "நகராட்சியில் ஒதுக்கக்கூடிய மொத்த டெண்டர் பணிகளையும் உறுப்பினர் சேகர் மட்டுமே பினாமி பெயரில் எடுக்க வேண்டும் என்கிறார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்து கையெழுத்து போட முடியாது என்ன சொன்னதால்தான் இது போன்ற குற்றச்சாட்டை எழுப்புகிறார். தி.மு.க நகர செயலாளர் சேகரின் அனைத்து ஊழல்களுக்கும் தன்னிடம் ஆதாரம் உள்ளது" என்றார்.

நகராட்சி தலைவராக இருப்பவர், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தவர், நகராட்சி தலைவர் குற்றம்சாட்டும் தரப்பு என அனைவருமே திமுக-வை சேர்ந்தவர்கள்.! 

No comments:

Post a Comment

பாளையங்கோட்டை வடக்கு உச்சி மாரியம்மன் கோவில் தசரா தேர் - உயரத்தைக் குறைக்கணுமாம்

  நெல்லை, பாளையங்கோட்டை வடக்கு உச்சி மாரியம்மன் கோவில் தசரா விழாவில், தேர் திருவீதியுலா நடப்பது வழக்கம். 'தேரின் உயரத்தைக் குறைக்க வேண்ட...