"சொந்த ஜாதியில் திருமணம் செய்யாதே" என்கிற தலைப்பில் ஈவெராமசாமி சொன்னது, "நண்பர் நஞ்சய்யா அவர்கள் நம் இயக்கத்தில் 20, 30-வருடங்களாக இருந்து தொண்டாற்றி வருகிறவர்கள் என்றாலும், அவர் இதுவரை தனது குடும்பத்தில் நடந்த எந்தக் காரியத்தையும் செய்வதில் இயக்கக் கொள்கைப்படி நடந்து கொள்வதில்லை. தனது ஜாதியைக் காப்பாற்றவும், பாதுகாக்கவும் கருதி, தனது ஜாதியைப் பார்த்தே பெண் கொடுப்பதும், எடுப்பதுமாகக் கொண்டிருக்கின்றாரே தவிர, வேறு ஜாதியில் இதுவரைத் திருமணம் செய்தது கிடையாது. - விடுதலை - 08.03.1969.
மேற்கண்ட செய்தியை வாசித்ததும் நாம் ஆச்சர்யப்படவில்லை. சாதி ஒழிப்பு போராளி ஈவெராமசாமியின் தொண்டன், அதிலும் இயக்க அடிமை அவ்வாறாக இல்லை என்றால் தான் ஆச்சர்யம். ஏன் நஞ்சய்யா என்கிற அந்த நபர் ஈவெராமசாமி கூறியதை ஒரு பொருட்டாக மதிக்காமல், "அவரு கிடக்கறாரு" என்கிற ரீதியில் ஈவெராமசாமி சொன்னதை பொருட்டாக மதிக்கவில்லை. ஒரு தலைவனுக்குரிய அழகு - இயக்கக் கொள்கையை பின்பற்றா விட்டால் நீக்குவதா அல்லது இப்படி கெஞ்சுவதா? ஏன் கெஞ்ச வேண்டும். காரணம் உள்ளதே. சொந்த ஜாதியில் திருமணம் செய்து வைக்காதே என நஞ்சய்யாவுக்கு அறிவுரை சொன்ன ஈவெராமசாமியின் யோக்கியதை எந்த விதத்தில் இருந்தது என பார்த்தால் நஞ்சய்யாவை சொல்லி குற்றமில்லை என தெரிய வரும்.ஈவெராமசாமி தன் குடும்பத்தினர் எவருக்காவது சாதி மாற்றி திருமணம் செய்து வைத்திருந்தாரா அந்நாட்களில் என கேள்வி எழுப்பினால் இல்லை என்பது தான் உண்மையான பதில். அதற்கு அவரது சகோதரர் மகன் ஈவிகே.சம்பத் திருமணமே மிக பெரிய உதாரணம். விவேகானந்தன், இனியன் சம்பத் மற்றும் கல்பனாதாசன் என மூவருமாக எழுதிய "ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும்" எனும் நூலை பார்த்தால் - தம் சாதிக்குள் மாத்திரம் என்பதோடு நில்லாமல், தன் குடும்பத்துக்குள்ளேயே திருமணம் முடிக்கிற சமூகநீதி வேலையை கச்சிதமாக செய்தார். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடித்தார். சொந்தத்தில் முடிக்கும்போது - சொத்தும் கைக்குள் இருக்கும், இயக்கமும் கைக்குள் இருக்கும் என்கிற நினைப்பில்.
இதையே அடுத்தவர் செய்தால் குற்றமாக பார்ப்பார். "ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும்" நூலிலிருந்து. பெரியார் வேறு ஒரு திட்டத்தை வைத்திருந்தார் அதில் அவர் உறுதியாகவும் இருந்தார். பெரியாரின் தங்கையின் மகள் (மாப்பிள்ளை நாயக்கரின் திருமகளார்) எஸ்.ஆர். காந்தி. அவரைத்தான் சம்பத்துக்கு மணம் முடிப்பது என்று பெரியார் திட்டமிட்டிருந்தார். இத்துடன் தமக்கும், கட்சிக்கும் சம்பத்தை வாரிசாக்கிவிடுவது என்றும் பெரியார் எண்ணி இருந்தார். இதற்காக அவர் சட்டப்படி பதிவு செய்துவிட, ஈ.வெ.கி. சம்பத் பெயரில் பத்திரங்கள்கூட வாங்கி வைத்துவிட்டார்.
சம்பத்தை தம் வாரிசாகத் தத்து எடுத்துக் கொள்வது. தமக்குப் பின் கட்சித் தலைமையை நிரந்தரமாக அவரிடம் அளித்துவிடுவது, தம் தங்கை மகள் எஸ்.ஆர். காந்தியை சம்பத்துக்கு மணம் முடித்து வைப்பது இந்த மூன்று திட்டங்களிலும் பெரியார் அழுத்தமாக இருந்தார்." ஆனால் ஒரு பிரச்சனை இருந்தது. வடஆற்காடு மாவட்டம் திருப்பத்தூரில் பிரபல வழக்கறிஞர் நீதிக்கட்சிப் பிரமுகர் சாமி நாயுடு. பெரியார், அண்ணா, சம்பத் முதலானோர் வடஆற்காடு மாவட்டத்தில் எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும், திருப்பத்தூர் சாமி நாயுடு இல்லத்தில் தங்கி, உணவருந்தி, ஓய்வெடுத்துச் செல்வது வழக்கம். சாமிநாயுடுவின் புதல்வி சுலோச்சனா சிறு வயதிலிருந்தே அவரது இல்லத்திற்கு வந்துபோகும் பெரியாரை நன்கறிவார்.
பெரியாரோடு வந்த அவருடைய அண்ணன் மகன் சம்பத், சுலோச்சனாவுக்கு அறிமுகமானார். அவர்களிருவரும் ஒருவரையொருவர் நேசித்தனர். திருமணம் செய்துகொள்ளவும் விரும்பினர். இந்த விருப்பத்தை பெரியாரிடம் எப்படித் தெரிவிப்பது என்று இருவருக்குமே அச்சமாக இருந்தது. பிறகு விஷயம் தெரிய வந்தது, தாம் காதலிக்கும் சுலோச்சனாவையே கரம் பிடிக்க சம்பத் உறுதியாக இருந்தார். இது கேட்டு பெரியார் சீறினார். கோபம் கொப்பளித்தது. "நான் சொல்லுகிறபடி காந்தியைத் (அத்தை மகளை) திருமணம் செய்து கொள்ளாவிட்டால் உனக்கு என் சொத்தில் கால் காசுகூட இல்லை. என்னை மறந்துவிடு'' என்று ஆவேசமாகப் பேசினார்.
சம்பத்தைப் பொறுத்தவரை பெரியாரின் சொத்துகளுக்கு ஆசைப்பட்டவராகவோ, கட்சிக்கு வாரிசுரிமை கொண்டாட வேண்டும் என்ற எண்ணமோ இல்லாதவர். ஆகவே பெரியாரின் மிரட்டல் பற்றி அவர் அதிகமாக அலட்டிக்கொள்ளவில்லை. "சுலோச்சனாவைத்தான் திருமணம் செய்து கொள்வேன்'' என்று முடிவாகச் சொல்லிவிட்டார். பெரியார் ஆத்திரவயப்பட்டவராக உறுமிக்கொண்டும் தடியால் தட்டிக்கொண்டும் இங்குமங்கும் நடந்தார். பெரியார் மாளிகையே பதற்றத்தில் இருந்தது. சம்பத்தின் தந்தையார் ஈ.வெ. கிருஷ்ணசாமி இயல்பாகவே பொறுமைசாலி. அவரும் சம்பத்திடம் கோபமாகப் பேசினார். குடும்பத்தார் சமாதானப்படுத்தினர். இந்தப் பிரச்னை முடிவற்று நீடித்துக் கொண்டிருந்தது.
இறுதியில் அண்ணாதுரை தலையிட்டு விவகாரம் சுபமாய் முடிந்தது. சொந்தத்தில், சொந்த சாதியில் தம் (சகோதர) மகனுக்கு திருமணம் முடிக்க துடித்த ஈவெராமசாமி தான் - நஞ்சய்யா என்கிற தம் தொண்டனின் சாதிப்பற்றை விமர்சிக்கிறார். தலைவன் யோக்கியனாக இருந்தால் தொண்டன் யோக்கியத்தனத்திலிருந்து தடம் மாற அஞ்சுவான். ஆனால் தலைவன் முரண்படுவதில் கோடு போட்டால் - தொண்டன் ரோடு போட்டுவிட மாட்டான். சாதியை பாதுகாப்பதாக ஈவெராமசாமியால் வர்ணிக்கப்பட்ட நஞ்சய்யாவை - வெட்க மானமின்றி தம் இயக்கத்திலேயே 20 ஆண்டு வைத்திருந்த ஈவெராமசாமியின் தலைமை பண்பை - அந்த பித்தலாட்டத்தை என்னவென்று சொல்வது.
நஞ்சய்யாவின் சாதிப்பற்றை கண்டித்த ஈவெராமசாமி - தன் சாதியை சேர்ந்த கீழ் வெண்மணி படுகொலையாளி கோபாலகிருஷ்ணன் நாயுடுவின் சாதி வெறியை கண்டிக்க தவறினாரே. தமிழ் தேசியவாதி தோழர் மணியரசன் கூறினார் ஒரு பேட்டியில், "கோபாலகிருஷ்ணன் நாயுடுவுடன் ஈவெராமசாமி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் விடுதலையில் வந்ததாகவும், அவை தன்னிடம் இருப்பதாகவும் கூறினார் என்பதோடு மேலும் கீழ்வெண்மணி படுகொலையாளி கோபாலகிருஷ்ணன் நாயுடு ஜாமீனில் கீவளூர் வந்தபோது - வேறு யாரையுமே சந்திக்க விரும்பாமல் கீவளூர் வந்திருந்த ஈவெராமசாமியை ஏன் சந்திக்க முயற்சித்தார். மணவாடு என்பதை தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும். இத்தகைய தலைவனின் தொண்டன் சாதிய ஆதரவாளனாக இல்லையென்றால் தானே ஆச்சர்யம்.
என் சகோதரியின் திருமணம் சுயமரியாதை திருமணம். என் சகோதரியின் மாமனார் தி.க.காரர். சாதி பார்த்து, ஜாதகம் பார்த்து தான் திருமணம் முடிந்தது. கடவுள் நம்பிக்கையற்றவர் - மற்றப்படி எல்லா நம்பிக்கையும் கொண்டிருந்தவர். தலைவன் என சொல்லப்படுகிறவன் - ஒரு விஷயத்தை சொன்னால் - பிறர் பின்பற்றுகிறார்களோ, இல்லையோ - தான் ஒழுங்காக பின்பற்ற வேண்டும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அந்த கருத்து ஒரு போதும் ஈவெராமசாமியிடம் இருந்ததில்லை. "சொந்த ஜாதியில் திருமணம் செய்யாதே" என்கிற தலைப்பில் வந்த அந்த கட்டுரையிலேயே ஈவெராமசாமி சொன்ன மற்றொரு அருள்வாக்கு.
"என்னைப் பொறுத்தவரை இத்திருமணமே மனிதனுக்குத் தேவையற்றது என்ற கொள்கையுடையவனாவேன். எதற்காக மனிதன் தானே வலுவில் போய்த் தொல்லையில் சிக்கிக் கொண்டு தொல்லைப்பட வேண்டும்? சுதந்திரமாக, இன்பமாக கவலையற்ற வாழ வேண்டிய மனித ஜீவன், குடும்பம் - இல்லறம் என்கின்ற மடமையில் சிக்கிப் பெண் தனது சுதந்திரத்தை இழப்பதோடு ஆணும் தனது வாழ்நாள் பூராவும் குடும்பம், பிள்ளைக் குட்டி என்று அதற்குப் பாடுபடுவதையே தன் வாழ் நாளெல்லாம் கொண்டிருக்க வேண்டியதாகிறது. இதனால் சமுதாயத்திற்கு இவர்களால் எந்தப் பயனுமே கிடைக்காமல் போய் விடுகின்றது. - விடுதலை - 08.03.1969.
"ரெண்டு கல்யாணத்தை முடிச்சிட்டு வெட்கமே இல்லாமல் இதை சொல்லுகிறிர்களே" என யாரும் ஈவெராமசாமியை பார்த்து கேட்கவில்லை. கேட்டிருந்தால் தானே திரும்ப திரும்ப அதை பற்றி பேச அச்சப்பட்டிருப்பார். ஈவெராமசாமி எங்காவது "என்னைப் பொறுத்தவரை இத்திருமணமே மனிதனுக்குத் தேவையற்றது என்ற கொள்கையுடையவனாவேன் என சொல்லுகிற நானே - அதிலிருந்து முட்டாள்தனமாக முரண்பட்டு இரண்டு திருமணம் ஏன் முடித்தேன்" என எங்கேனும் ஒரு நியாயமான காரணம் சொல்லி இருப்பாரா? கிடையாது.
"சொந்த சாதியில் திருமணம் செய்யாதே" என சொல்லி கொண்டு தம் (சகோதரர்) மகனுக்கு சொந்த சாதியில் தான் முடித்தார். "என்னைப் பொறுத்தவரை இத்திருமணமே மனிதனுக்குத் தேவையற்றது என்ற கொள்கையுடையவனாவேன்" என சொல்லி கொண்டே - ஒன்றல்ல இரண்டு திருமணம் முடித்தார். எதிலுமே சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாத ஒரு வாழ்க்கை வாழ்ந்துவிட்டு - பெரியார் என பெயர் வைத்து கொள்வதால் மட்டும் பெரியாராகிவிட முடியுமா? காலவோட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுவது நிச்சயம். குலத் தொழில் என்பது முற்றிலும் அழியும்போது - சாதி இயற்கையாகவே அழிபடும். இப்போதே அதிகளவில் கலப்பு மணமுள்ளது. சொந்த சாதியில் பெண் கிடைக்கவில்லை, மாப்பிள்ளை கிடைக்கவில்லை என பிற சாதியில் பெண் தேடுவது துவங்கிவிட்டது. சூழ்நிலை தான் ஒன்றை பற்றிக் கொள்ளவும், பற்றற்றுவிடவும் காரணமாகிறது
அதேபோல் மீதமிஞ்சிய பொருளாதார வளம் - திருமணம் என்பது தேவையா என்கிற கேள்வியை எழுப்பி - திருமணத்தை முற்றாக நிராகரிக்கிற கூட்டத்தையும் உருவாகிக் கொண்டிருக்கிறது. இது இயல்பான மாற்றம். இது சில பத்தாண்டுகள் கழித்து மாறி திரும்ப திருமண முறைக்கே வரலாம். ஆனால் இந்த மாற்றத்திற்கும், "ஈவெராமசாமி தான் காரணம் என அடுத்தவன் பெற்ற பிள்ளைக்கு - வெட்கமேயின்றி தங்கள் பெயரை போடத் துடிப்பார்கள்.
No comments:
Post a Comment