Friday, October 17, 2025

"ஓ.ஆர்.எஸ்" (ORS) நஞ்சு பானங்கள் - நிரந்தர தடை

மக்கள் மருத்துவர் சிவரஞ்சனியின் மக்களுக்கான போராட்டம் வென்றது!



வசூல் ராஜா / ராணிகள் நிறைந்த மருத்துவ மாஃபியா சூழ் உலகில் ₹5 டாக்டர் ஜெயச்சந்திரன்கள், புகழேந்திகள், சிவரஞ்சனிகள் இருப்பதால்தான் நம்மை போன்றோர் இன்னும் உயிர் வாழ முடிகிறது.

ஓராண்டல்ல... ஈராண்டல்ல... சுமார் 15 (2010-2025) ஆண்டுகாலமாக நம் வீட்டுப் பிள்ளைகளுக்காக சலிக்காமல் சட்டப் போராட்டத்தை முன்னெடுத்த ஹைதராபாத்தைச் சேர்ந்த குழந்தை நல மருத்துவர் டாக்டர் சிவரஞ்சனி சந்தோஷ், இந்திய ஒன்றியத்தின் பொது சுகாதாரத்துறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளார். 

குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை நோய் வாய்ப்பட்டால், சோர்வாக இருந்தால் பலராலும் குடிக்க பரிந்துரைக்கப்பட்ட "ஓ.ஆர்.எஸ்" (ORS) என்று தவறாக கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து மருந்து நிறுவனம் விளம்பரப்படுத்தி நஞ்சு பானங்களை விற்றது. இந்தப் பானங்களில் உலக சுகாதார நிறுவனம் (WHO) பரிந்துரைத்த அளவைவிடப் பத்து மடங்கு அதிக சர்க்கரை இருந்தது. இதனால், வயிற்றுப்போக்கு மற்றும் உடல்நலச் சிக்கல்கள் லட்சக்கணக்கான குழந்தைகளிடம் மோசமடைந்து வந்தன.

இதை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் பல மருத்துவர்கள் தங்களது Medicine Prescriptionsகளில் பரிந்துரைத்து வந்ததோடு, தங்களது கிளினிக்கிலும், Chemist Shopsகளிலும் வாங்கி விற்று வந்தனர். இன்றும் பலர் விற்று வருகின்றனர். 

ஆனால், மரு. சிவரஞ்சனி பலருக்கும் மாற்றாக, வருமானத்தை பற்றி கவலைப்படாமல் அவற்றை எதிர்த்து தனியாக களம் கண்டார். 

அநீதியைக் கண்டு கோபம் கொள்வது எல்லோராலும் முடியும். அந்த கோபத்தை தக்க வைத்து, மறந்திடாமல் போராடுவதுதான் இயந்திர கதியான வாழ்வைக் கொண்ட நம்மில் பலருக்கு முடியாத காரியம். அதை மரு.சிவரஞ்சனி செய்தார்.

15 ஆண்டுகாலம் பரப்புரை செய்தார். போராடினார். எத்தனையோ பேரங்கள், எத்தனையோ மிரட்டல்கள். அவற்றை மீறி போராடினார்.

மேலும், 2020இல் இது தொடர்பாக தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கும் தொடர்ந்தார். WHO பரிந்துரைத்த எலக்ட்ரோலைட் மற்றும் குளுக்கோஸ் தரநிலைகளை பூர்த்தி செய்யாதவற்றை ORS (oral rehydration solutions) என்று தவறாக விளம்பரப்படுத்தி விற்கக்கூடாது என அவர் வலியுறுத்தினார்.

முதலில் 2022இல் 'ORS' என்ற சொல்லைப் பயன்படுத்த சில கட்டுப்பாடுகளை FSSAI வெளியிட்டது. இருப்பினும், சில மாதங்களில் அந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. இதையடுத்து மீண்டும் தனது சட்ட போராட்டத்தைத் தொடர்ந்தார் சிவரஞ்சனி சந்தோஷ். இப்போது சுமார் 3 ஆண்டுகள் கழித்து இதற்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

அவருடைய விடாமுயற்சியின் காரணமாக, இந்திய உணவுப் பாதுகாப்பு & தர நிர்ணய ஆணையம் (FSSAI) தற்போது ஒரு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 

இது தொடர்பான விரிவான உத்தரவு அக். 14இல் பிறப்பிக்கப்பட்டது. அதில் ORS தொடர்பாக உணவு நிறுவனங்களுக்கு  வழங்கப்பட்ட அனைத்து அனுமதிகளும் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக  கடந்த ஜூலை 14, 2022 & பிப் 2, 2024இல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் ரத்து செய்யப்பட்டது என்றும் 'ORS' என்ற பெயரை பயன்படுத்த அனுமதியும், ரத்து செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, WHOஆல் அங்கீகரிக்கப்பட்ட ஃபார்முலாவைப் கண்டிப்பாகப் பின்பற்றினாலொழிய, எந்தவொரு லேபிளிலும்  ORS என்பதையே இனி பயன்படுத்தக் கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பு, உயிர்க்காக்கும் மருத்துவத்தை தங்களது லாபத்திற்காக பயன்படுத்திய தவறான நபர்களால் அடையாளப்படுத்தப்பட்ட பானத்திடமிருந்து குழந்தைகளையும் நோயாளிகளையும் பாதுகாத்து இருக்கிறது. 

இந்த வெற்றியை, உடன் பணிபுரியும் மருத்துவர்கள், மருத்துவ மாஃபியாக்களுக்கு எதிராக போராடும் ஆர்வலர்கள், பெற்றோர்கள் மற்றும் பொறுப்புணர்வை வலியுறுத்திய குடிமக்களின் கூட்டு ஆதரவுக்கு அவர் சமர்ப்பிப்பதாக கண்ணீர் மல்க கைக்கூப்பி தெரிவித்துள்ளார். 

மக்கள் நல்வாழ்வுக்காக பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதும், நல்ல மருத்துவம் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வதும்கூட ஜனநாயக நாட்டில் ஆளுவோரின் கடமையே. அதை உறுதி செய்ய கோருவது குடிமக்களின் உரிமை.  

Oxygen cylinders விற்கும் தனியார் நிறுவனத்திடம் காசு பார்க்க உரிய தொகையை அளிக்காமல் கால தாமதம் செய்து 30 குழந்தைகளின் உயிரைப் பறித்த நாட்டில், ஏழைகளின் வறுமையை பயன்படுத்தி விஷத்தை சிரப் என்ற பெயரில் உற்பத்தி செய்து விற்கும் நாட்டில், கிட்னி திருட்டை முறைகேடு என்று வார்த்தை ஜாலங்களால் மறைக்க முயலுவோர் ஆளும் நாட்டில், சர்வதேச அளவில் அனைத்து கட்ட சோதனை ஆய்வு & அறிவியல் விசாரணைகளையும் முழுமையாக கடந்திடாதவற்றை ஊசி என்ற பெயரில் போட கட்டாயப்படுத்தும் ஆட்சியாளர்களின் நாட்டில் இந்த உத்தரவும் நிச்சயம் மதிக்கப்படாது.

https://x.com/SivaSembian/status/1979282595885256794

No comments:

Post a Comment

தமிழகத்தில் 1540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.14,808 கோடி செலவிடப்படாமல் அரசிடம் திரும்ப ஒப்படைப்பு

1540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.14,808 கோடி செலவிடப்படாமல் அரசிடம் திரும்ப ஒப்படைப்பு சென்னை: தமிழக அரசு, 2023 - 24ல் அறிவித்த, 1540 திட...