இலவச திட்டங்களுக்கு செலவழிக்கும்போது செவிலியர்களுக்கு ஊதியம் தர பணம் இல்லையா? சுப்ரீம் கோர்ட் கேள்வி
ஒப்பந்த செவிலியர்களை தமிழக அரசு சுரண்டுகிறது
By Vignesh Selvaraj Updated: Monday, September 15, 2025, 13:57 [IST]
டெல்லி: ஒப்பந்த செவிலியர்கள் ஊதியம் தொடர்பான வழக்கு விசாரணையில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. இலவசத் திட்டங்களுக்கு செலவு செய்ய பணம் இருக்கும்போது, கடுமையாக உழைக்கும் செவிலியர்களுக்கு ஏன் உரிய ஊதியம் வழங்க முடியவில்லை என தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற பல மருத்துவமனைகளில் நிரந்தர செவிலியர்கள் நியமிக்கப்படுவதில்லை. ஒப்பந்த முறையில் தான் செவிலியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அப்படி நியமிக்கப்படுபவர்களுக்கும் உரிய ஊதியத்தை தமிழ்நாடு அரசு வழங்காமல் அலைக்கழிக்கிறது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைகு வந்தது.
அப்போது, ஒப்பந்த செவிலியர்களை மிகக் குறைந்த ஊதியத்தில் வேலைக்கு அமர்த்தி, அவர்களை தமிழ்நாடு அரசு சுரண்டுகிறது என உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. மேலும், பொது சுகாதாரத்தின் தூண்களாகக் கருதப்படும் செவிலியர்களுக்கு உரிய ஊதியம் வழங்காதது ஏன் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், "இலவசத் திட்டங்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் பணம் செலவழிக்கும்போது, மக்களின் உயிர் காக்கும் பணியில் இருக்கும் செவிலியர்களுக்கு ஊதியம் வழங்க மட்டும் பணம் இல்லையா?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தரப்பு, செவிலியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான நிதி மத்திய அரசிடமிருந்து வரவில்லை என்று விளக்கம் அளித்தது. ஆனால், இதை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்து, மாநில அரசின் கடமைக்கு மத்திய அரசைக் காரணம் காட்டுவது ஏன்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஒப்பந்த செவிலியர்கள் சங்கத்தின் கோரிக்கைகளை மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. 4 வாரங்களுக்குள் இதுகுறித்து பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
Read more at: https://tamil.oneindia.com/news/chennai/supreme-court-questions-tn-govt-on-unpaid-nurses-salaries-amid-spending-on-free-schemes-735771.html
No comments:
Post a Comment