கர்நாடகாவிற்கு தினமும் 1 லட்சம் டன் கடத்தல் கனிம வளத்தை தடுக்காத 11 சிறப்பு குழுக்கள்
ஓசூர்:ஓசூர் வழியாக கர்நாடகாவிற்கு, தினமும் 1 லட்சம் டன் கனிம வளங்கள் கடத்தப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து, ஓசூர் சப் -- கலெக்டர் பிரியங்கா, 11 சிறப்பு குழுவை அமைத்தார். ஆனால் இதுவரை, ஒரு குழு கூட கடத்தல் லாரிகளை பறிமுதல் செய்யவில்லை.
https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-krishnagiri/11-special-teams-not-stopping-smuggling-of-1-lakh-tonnes-of-minerals-to-karnataka-every-day-/3847192
மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ், “கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள 150க்கும் மேற்பட்ட குவாரிகளில் இருந்து தினமும், 4,000 லாரிகளில், 1 லட்சம் டன் கனிம வளங்கள், அண்டை மாநிலமான கர்நாடகாவிற்கு எடுத்து செல்லப் படுகின்றன. நவீன காலத்தில் கம்ப்யூட்டர் அனுமதி சீட்டு இல்லாமல், கையால் எழுதி வழங்குகின்றனர்.
“அதை பலமுறை மாற்றி, கர்நாடகாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன. கர்நாடகாவிற்கு கனிம வளங்கள் செல்வதாக, எந்த லாரிக்கும் அனுமதி சீட்டு வழங்கப்படுவதில்லை. உரிமம் இல்லாமல் கிரஷர்கள் செயல்படுகின்றன. மாவட்ட கலெக்டர், தாசில்தார் என்ன செய்கின்றனர் என தெரியவில்லை,” என்றார்.
லாரி உரிமையாளர்கள், பொதுமக்கள் குற்றச்சாட்டை தொடர்ந்து, கனிம வளங்களை கொண்டு செல்லும் லாரிகளை பறிமுதல் செய்ய, தாசில்தார்கள், போலீசார் அடங்கிய 11 சிறப்பு குழுக்களை, ஓசூர் சப் - கலெக்டர் பிரியங்கா கடந்த மாதம் 30ல் அமைத்தார்.
ஆனால் அக்குழுவினர், நேற்று முன்தினம் வரை எந்த லாரியையும் பறிமுதல் செய்யவில்லை. வழக்கமான பணிகளிலுள்ள ரெகுலர் தாசில்தார், தனி தாசில்தார்களே சிறப்பு குழுக்களில் இடம் பெற்றுள்ளனர்.
இதனால், அவர்கள் லாரிகளை பறிமுதல் செய்ய முக்கியத்துவம் கொடுக்காமல், தங்களது அன்றாட பணிகளை கவனிக்கின்றனர்.
இதனால், கர்நாடகாவிற்கு கனிம வளம் கடத்தப்படுவது தொடர்கிறது. அதுவும், ஓசூர் வழியாக அதிகளவில் நடந்தும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்றும், பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
ஓசூர் சப் - கலெக்டர் பிரியங்காவிடம் விளக்கம் கேட்க அவரை தொடர்பு கொண்டபோது, மீட்டிங்கில் இருப்பதாக கூறி குறுஞ்செய்தி அனுப்பினார்.
No comments:
Post a Comment