கல்வியில் 'சுமாரான' தமிழ்நாடு!
(எழுத்தாளர் Suresh Pradheep பதிவு. முற்றிலும் இப்பதிவினை ஏற்கிறேன்)
பாசத் தலைவனுக்கு பாராட்டு விழாவில் இருந்து கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பது நல்ல முன்னேற்றம்தான். ஆனால் இந்த நிகழ்வில் சினிமா நடிகர்களும் சினிமா இயக்குநர்களும் ஏன் அழைக்கப்பட்டார்கள் என்று விமர்சனங்கள் எழுகின்றன. அப்புறம் இந்த நிகழ்வில் கல்வியாளர்களையா கூப்பிட முடியும்! நேர்மையான கல்வியாளர்கள் தமிழ்நாடின் உண்மை நிலையை பேசிவிடமாட்டார்களா! அதைக் கொண்டு வந்து பேஸ்புக்கில் பின்னணி இசை சேர்த்து எப்படி ஃபயர் விடமுடியும்! ASER 2024 சர்வே முடிவுகள் தமிழ்நாடு பலவகையிலும் கல்வியில் 'சுமாராக' இருப்பதையே காட்டுகின்றன. 2018ஆம் ஆண்டில் தேசிய சராசரிக்கு அருகில் இருந்த நாம் 2024ல் தேசிய சராசரிக்கு கீழே போயிருக்கிறோம். உதாரணமாக எட்டாம் வகுப்பு மாணவர்களில் வகுத்தல் கணக்கு போடத் தெரிந்தவர்கள் 2018ல் 50.2 சதவீதம். தேசிய சராசரி 43 சதவீதம். 2024 இது 40 சதவீதமாக குறைந்திருக்கிறது. தேசிய சராசரி 45 சதவீதம்!
உள்கட்டமைப்பு வசதிகளில் தமிழக அரசுப் பள்ளிகள் நன்றாகவே செயல்படுகின்றன. ஆனால் தமிழக மாணவர்களின் கற்றல் திறன் நம்மூர் ஆட்கள் ஏளனமாகப் பார்க்கும் பீகார், உத்திர பிரதேசத்துக்கு இணையாகவே இருக்கிறது. ASER 2024 அறிக்கையை மேலோட்டமாக பார்த்தாலே இது புரியும். கல்வியில் நாம் சுமாராகத்தான் இருக்கிறோம். சிறக்கவில்லை..
கல்வி சிறந்த தமிழ்நாட்டின் நிலையை கொஞ்சம் பார்ப்போம்..பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணன் எழுதியிருக்கும் பதிவு இது..
// தமிழ்நாட்டில் 1990 களுக்கு பிறகு எத்தனை புதிய அரசு பள்ளிகள் திறக்கப்பட்டன? அனேகமாக எதுவுமில்லை. ஆனால், எத்தனை அரசுப் பள்ளிகள் இடித்து அகற்றப்பட்டு உள்ளன என்பதற்கு தமிழக அரசே செப்டம்பர் 2022 மதுரை உயர்நீதிமன்றத்திற்கு தந்துள்ள தகவல்களின் படி, தமிழகத்தில் மொத்தம் 5,553 அரசு பள்ளிகள் இடித்து அகற்றப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது!
அவ்வளவு ஏன்? திமுக அரசு பதவியேற்ற முதல் கல்வி ஆண்டில், அதாவது,
2021-22 ஆம் கல்வி ஆண்டில் 40 அரசு பள்ளிகள் மூடப்பட்டன.
தற்போதைய நிகழாண்டு மட்டுமே 208 அரசு பள்ளிகள் மூடப்பட்டன.
தமிழகத்தில் மொத்தமுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 44,884 படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை 56,06,423.
ஆனால், வெறும் 12,970 தனியார் பள்ளிகளில், 63.42 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.
ஏன் அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்றால், அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலைமைகள் ஒருபுறம் என்றால், மறுபுறம் ஆசிரியர்கள் பற்றாகுறை மிக முக்கிய காரணமாகும்.
பள்ளிக் கல்வித் துறையில் மட்டுமே சுமார் ஒரு லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். இன்னும் ஓராசிரியர், ஈராசிரியர்களைக் கொண்டு இயங்கும் பள்ளிகள் நிறைந்துள்ள.. - இத்தகைய அவல நிலைகளை எல்லாம் உள்ள - மாநிலத்தை எப்படி கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பீர்கள்?
அப்படிச் சொல்வதும், நம்புவதும் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளவே உதவும். முதலில் நமது குறைகளை உணர முடிந்தால் தான், நாம் நம் தவறுகளைக் களைந்து முன்னேற முடியும்.
ஒரு பக்கம் அரசு பள்ளிகளில் தண்ணீர் வசதியில்லை, கழிப்பிட வசதியில்லை, மேற்கூரையில்லை.. என பெருமளவிலான அரசு பள்ளி மாணவர்கள் அவல நிலையில் உழல, அதில் வெகு சில மாணவர்களை மட்டும் சிறப்பு கவனம் தரப்படும் மாதிரி பள்ளிகள் வாயிலாகவும், நான் முதல்வன் திட்டம் வாயிலாகவும் வெற்றி பெற வைத்து, இதையே தமிழ்நாட்டின் கல்வி வெற்றிக்கான அளவுகோலாக்கிவிட முடியாது.
இந்த நிகழ்வு குறித்து கல்வியாளர் தோழர் ஜவகர்நேசனிடம் பேசிய போது, ''தமிழ்நாட்டு பள்ளிகளில் இந்த மண்ணும், மரபும் சார்ந்த கல்விக்கு இடமில்லை. தேசியக் கல்வியை வழி மொழிவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை என்று தமிழ் நாட்டுக்கான கல்வி கொள்கையை உருவாக்கி வந்த என்னை நிர்பந்தப்படுத்தியது, ஸ்டாலின் அரசு. இன்றைய தமிழக பள்ளிக் கல்வியில் ஹிட்லர், முசோலி காலத்தை நினைவுகூறும் வகையில் - மத்திய அரசின் சனாதனக் கல்விச் சிந்தனைகள் நுழைக்கப்பட்டு - வருகின்றன. பள்ளிக் கல்விக்கான பாடதிட்டங்கள் ஆசிரியர் தகுதிகள், தேர்வுகள் அனைத்தையும் மத்திய பாஜக அரசு தீர்மானிக்கிறது. ஆசிரியர்களை ஒப்பந்தக் கூலிகளாக வைத்து குறைந்த சம்பளத்தில் வாட்டி வதைக்கிறது தமிழக அரசு…யதார்த்தம் இப்படியிருக்க, இவங்க ஏதோ ஷோ காட்டிக் கொண்டிருக்கிறார்கள்’’ என்றார்.
உண்மை தான். பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றியும் நிரந்தரமாகாமல் ஒப்பந்த ஆசிரியராகவும், பகுதி நேர ஆசிரியராகவும் உழலும் பல்லாயிரம் ஆசிரியர்கள் ஸ்டாலின் ஆட்சியில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி சிறை சென்ற சம்பவங்கள் ஞாபகத்தில் வந்தன.
இந்த நிகழ்ச்சியில் கூலித்தொழிலாளி ஒருவரின் மகள் மிகப்பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து முதல் மாத ஊதியத்தை தந்தையிடம் கொடுத்து ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறாள்…! இதைப் பார்த்த எனக்கு தோன்றிய முதல் கேள்வி, அந்த முதல் மாத சம்பளத்தை தந்தையிடம் வீட்டில் வைத்து உடனே தந்திருக்க வேண்டிய மகள், அதை எத்தனை நாள் பாதுகாத்து இந்த நிகழ்ச்சிக்காக மேடையில் வந்து தர நிர்பந்திக்கப்பட்டார் என்பது தான்.
இப்படியெல்லாம் பல சென்ஷேனல் – உணர்ச்சிகரமான – காட்சிகள்..! //
இப்படி இருக்கின்றன நிலைமைகள். ஆனால், சினிமா நட்சத்திரங்களை வைத்து ஏராளமான செலவில் நடத்தப்படும் செய்யப்படும் விளமபர விழாக்களுக்கு குறைவில்லை.2006-11 நிலைபோலவே தான் உள்ளது. ஆனால் அன்று இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கொஞ்சம் சூடு சொரணை எல்லாமிருந்தது. கூட்டணியிலிருந்து விலகி வெளியே வந்தார்கள்.இன்று எதுவும் இல்லாமற் போய்விட்டது.
No comments:
Post a Comment