https://www.arignaranna.net/valkaivaralaru24_fr.htm
1941-ஆம் ஆண்டில், இராஜா.அண்ணாமலைச் செட்டியாரின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழா, மிகப் பெருஞ்செலவில், மிக ஆடம்பரமான முறையில் செட்டி நாட்டிலும், அண்ணாமலை நகரிலும் கொண்டாடப்பட்டது. இரண்டு இடங்களிலும் இயல், இசை, நாடகம், நடனம் போன்ற பல்வேறு அரங்கங்களும், தான தருமங்களும் நடைபெற்றன.
தான தருமங்கள் எல்லாம் பெரும்பாலும் பார்ப்பனர்க்கே வழங்கப்பட்டன. அறுபதாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் அறிகுறியாக பார்ப்பனர்களுக்கு அறுபது வீடுகள், அறுபது அடுக்கு, வீட்டு சாமான்கள், அறுபது அம்மி ஆட்டுக்கற்கள், அறுபது பசுமாடுகள் போன்ற இன்னபிறவற்றை இராசா சர் தானமாக வழங்கினார்.
அப்பொழுது C.N.அண்ணாதுரை அவர்கள் சென்னையில் விடுதலை இதழின் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்கள். பார்ப்பனர்க்குத் தானம் கொடுத்தல் என்னும் குருட்டு நம்பிக்கையான மூடப்பழக்க வழக்கத்தைக் கண்டிக்க வேண்டும் என்பதோடு, பார்ப்பனரல்லாதான் இயக்கத்தைச் சார்ந்த இராஜா. சர் சமூகத் துறையில் பார்ப்பனர்க்கு அடிமைபோகும் தன்மையையும் வன்மையாகக் கண்டிக்கவேண்டும் என்ற எண்ணம் அண்ணாதுரை அவர்கள் உள்ளத்தைக் குடைந்து கொண்டிருந்தது.
அண்ணாமலைச் செட்டியாரின் போக்கைக் கண்டித்து விடுதலையில் தலையங்கம் ஒன்று எழுதுவது என் அண்ணாதுரை எண்ணி, ஈவெராவிடம் சொன்னாராம். ஈவெராமசாமியார் அவர்களுக்கு அப்பொழுது அண்ணாமலைச் செட்டியாரிடத்தில் மிக்க சினம் பொங்கி எழுந்திருந்தது. இராஜா. சர் அறுபாதாம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி யார் யாருக்கோ ஏராளமான நிதி வழங்கியதோடு, தேசீயப் பத்திரிகைகளுக்கு மிகக நிதி வழங்கியிருந்தார். விடுதலைக்கு ஏதொரு உதவியும் புரியவில்லை.
இது ஈவெராவிக்கு மிக்க சினத்தை மூட்டியது. எனவே அண்ணாவின் எண்ணத்தைப் பெரியாரும் ஆதரித்தார். யார் யாருக்கோ கொள்ளை கொள்ளையாகப் பணம் கொடுக்கிறான். பார்ப்பனர்களுக்கு நன்கொடை தந்திருக்கிறான். பார்ப்பனர்களுக்கு இலட்சம் இலட்சமாக அள்ளித் தருகிறான் அவனை ஓயாமல் திட்டிக்கொண்டிருக்கிற தேசீயப் பத்திரிகைகளுக்கு நன்கொடை தந்திருக்கிறான். நாம் ஒரு பத்திரிகை வைத்து நடத்துகிறோம். தேவையானபொழுதெல்லாம் அவனுக்கு ஆதரவு தருகிறோம். அப்படி இருந்தாலும், நமது பத்திரிகையைக் கவனிக்காமல் இருக்கிறான் என்றால் என்ன நியாயம்? அவனது அடிமைத்தனத்தைக் கண்டித்து எழுதுங்கள்! என்னும் கருத்துப்பட ஈவெரா அவர்கள் அண்ணாதுரையிடம் கூறினார்கள்.
அண்ணாதுரை அண்ணாமலைச் செட்டியாரின் போக்கைக் காரசாரமாகக் கண்டித்துத் தலையங்கம் ஒன்று தீட்டினார்கள். தலையங்கம் தீட்டி அச்சேற்றுவதற்குள், எதிர்பாராதவிதமாக இராசா சர் அண்ணாமலைச் செட்டியாரிடமிருந்து விடுதலைக்கு என்று ரூ.1000 நன்கொடை செக் வந்து சேர்ந்தது. செக்கை எடுத்துக்கொண்டு ஈவெரா அவர்கள் அண்ணாதுரையிடம் வந்து பைத்தியக்காரன் இப்பொழுது ரூ.1000-க்குச் செக் அனுப்பியிருக்கிறான்.
கண்டித்துச் தலையங்கம் தீட்டிவிட்டீர்களா? என்று கேட்டார். முன்பே எழுதிக் கொடுத்துவிட்டேன். அச்செறும் நிலையில் இருக்கிறது என்று அண்ணாதுரை கூறினார்கள். அவனைச் சாதாரணமாகப் பாராட்டி ஒரு தலையங்கம் எழுதுங்கள் என்று ஈவெராமசாமியார் அண்ணாதுரையிடம் கூறினார்கள். அண்ணாதுரை அவரது போக்கைக் கண்டித்து நான் எழுதிவிட்டேன். பாராட்டி எழுத என் மனம் இடந்தரவில்லை. வேண்டுமானால் நீங்கள் எழுதுங்கள்; நான் எழுதமாட்டேன் என்று உறுதியாக விடையிறுத்துவிட்டார்கள். ஈவெரா அவர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் அண்ணாதுரை பாராட்டி எழுத மறுத்து விட, அண்ணாதுரையி ன் தலையங்கத்தை நிறுத்திவிட்டுப் ஈவெராமசாமியாரே ஒன்று எழுதி வெளியிட்டார்கள்.
(மன்றம்: 15.06.1956)
No comments:
Post a Comment