Tuesday, September 30, 2025

சபரிமலை தங்க நகைகள் காணாமல் போன மர்மம்! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சபரிமலை தங்க நகைகள் காணாமல் போன மர்மம்! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு, தேவசம் போர்டுக்கு சிக்கல்! 

https://tamil.abplive.com/news/india/sabarimala-temple-missing-gold-jewellery-issue-high-court-orders-action-trouble-for-devaswom-board-tnn-235262
By : நாகராஜ் | Updated at : 30 Sep 2025

சபரிமலையில் நடைபெறும் பெரும்பாலான பணிகளும் நன்கொடையாளர்கள் வழங்கும் பணத்தில்தான் நடத்தப்பட்டு வருகின்றன.

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின்  5  நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். இங்கு வரும் பக்தர்கள் ஆயிரக்கணக்கானக்கானோர் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள்.

கேரளாவில் உள்ள கோயில்களில் அதிகம் உண்டியல் காணிக்கை கிடைக்கப்பெரும் கோயில்களில் சபரிமலை முக்கிய இடத்தில் உள்ளது. கடந்த சில மாதங்களாக சபரிமலை கோயிலில் நன்கொடையாக கிடைத்த பொருட்கள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் சபரிமலைக்கு நன்கொடையாக கிடைத்த தங்கம் உள்பட விலை மதிப்புள்ள பொருட்கள் குறித்த முறையான ஆவணங்கள் இல்லாதது ஏன் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இது தொடர்பாக ஆய்வு நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் தங்கம், வெள்ளி உள்பட விலை உயர்ந்த பொருட்களை காணிக்கையாக வழங்கி வருகின்றனர். சபரிமலையில் நடைபெறும் பெரும்பாலான பணிகளும் நன்கொடையாளர்கள் வழங்கும் பணத்தில் தான் நடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த 30 வருடங்களுக்கு முன் சபரிமலை ஸ்ரீகோயில் முழுவதும் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டன. பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் இதை நன்கொடையாக வழங்கினார். கோயில் முன் உள்ள 2 துவாரபாலகர் சிலையில் பதிக்கப்பட்ட தங்கத் தகடுகளை பெங்களூருவைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவர் நன்கொடையாக வழங்கினார். இந்நிலையில் சமீபத்தில் இந்த துவாரபாலகர் சிலையில் இருந்த தங்கத் தகடுகள் பழுதானதாக கூறி கேரள உயர்நீதிமன்றத்தின் அனுமதியின்றி அவை சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன.

தேவசம் போர்டின் இந்த நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையே தான் நன்கொடையாக வழங்கிய 4 பவுன் எடையுள்ள துவாரபாலகர் சிலையின் பீடம் மாயமானதாக உன்னிகிருஷ்ணன் போத்தி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் புகார் கூறிய உன்னிகிருஷ்ணன் போத்தியின் உறவினர் வீட்டிலிருந்து அந்த தங்கபீடம் கண்டு பிடிக்கப்பட்டது. இதில் மர்மம் இருப்பதாக தேவசம் போர்டு கூறியது. இந்நிலையில் இதுகுறித்து நேற்று கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதை பரிசீலித்த பின் நீதிபதிகள் ராஜா விஜயராகவன், ஜெயகுமார் ஆகியோர் கூறியதாவது, சபரிமலையில் பக்தர்கள் வழங்கிய தங்கம் உள்பட விலைமதிப்புள்ள பொருட்கள் குறித்த கணக்குகளை தேவசம் போர்டு முறையாக பராமரிக்கவில்லை. தேவசம் போர்டுக்கு பல இடங்களில் பாதுகாப்பு அறைகள் உள்ளன. இந்த அறைகளில் உள்ள நகை மற்றும் பொருட்கள் குறித்து உடனடியாக கணக்கெடுத்து தணிக்கை செய்ய வேண்டும். இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Published at : 30 Sep 2025 

No comments:

Post a Comment

சபரிமலை தங்க நகைகள் காணாமல் போன மர்மம்! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சபரிமலை தங்க நகைகள் காணாமல் போன மர்மம்! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு, தேவசம் போர்டுக்கு சிக்கல்!  https://tamil.abplive.com/news/india/saba...