பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறப்பட்ட தி.மு.க., பிரமுகரான உளுந்தை ஊராட்சி தலைவர் ரமேஷ், நேற்று முன் தினம் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, நள்ளிரவில் திடீரென கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளகடம்பத்துார் ஒன்றியத்தில், அதிக வருவாய் கொண்டதாக உளுந்தை ஊராட்சி உள்ளது. பூந்தமல்லி - மப்பேடு - அரக்கோணம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த ஊராட்சியில், தொழிற்சாலைகள், கன்டெய்னர் குடோன்கள் அதிகளவில் உள்ளன. மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் பண்ணை தோட்டமும் இந்த ஊராட்சியில் உள்ளது. முதல்வர் பண்ணை தோட்டத்தை பராமரிக்கும் பணியை மேற்கொண்ட ரமேஷ், 2021ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
அதன் பின் தனது வளர்ச்சியை மேம்படுத்திய அவர், கட்சியில் மாவட்ட செயலர் அளவிற்கு செல்வாக்கை அதிகரித்துக் கொண்டார். கலெக்டர் முதல், ஒன்றிய அதிகாரிகள், மாவட்ட செயலர் வரை, முதல்வர் பண்ணையை பராமரிக்கும் தன் செல்வாக்கை பயன்படுத்தி, பல காரியங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
உளுந்தை மற்றும் கலவை பகுதிகளில் உள்ள குளங்களில் செம்மண் எடுத்து, லட்சக்கணக்கில் விற்பனை செய்து வந்துள்ளார். மேலும் கம்பெனிகளில் கழிவு பொருட்கள் வாங்குவது, கம்பெனிகளை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது என, பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் நாசர் மகனுடன் கூட்டு தொழில் செய்வதாக கூறி, அவரை ஏமாற்றியதாகவும், ஒன்றிய செயலர் முதல் மாவட்ட செயலர் வரை கட்சி பிரமுகர்களை மிரட்டியதாகவும் ரமேஷ் மீது ஏராளமான புகார்களை கட்சியினரே, தலைமைக்கு அனுப்பிஉள்ளனர்.
இதையடுத்து, முதல்வரின் குடும்பத்தினர், ஒராண்டாக இவரை ஓரம் கட்டியதாக கூறப்படுகிறது. இதுவரை, ஒவ்வொரு பொங்கல் தினத்தன்றும், முதல்வரின் பண்ணை வீட்டில் செல்வாக்காக வலம் வந்த ரமேஷ், இந்த ஆண்டு அனுமதிக்கப் படவில்லை. ரமேஷ் மீது காவல் துறைக்கு பல்வேறு புகார்கள் வந்தும், மேலிட செல்வாக்கு இருப்பதாக கூறியே, நடவடிக்கையில் இருந்து தப்பித்து வந்துள்ளார்.
சென்னை அண்ணாநகரை சேர்ந்த பழனிவேல், கிராண்ட் ஹவுசிங் என்ற பிரைவேட் நிறுவனத்திற்கு 5.38 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்தார். இதில், தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக ரமேஷ் செயல்பட்டு, பழனிவேலை மிரட்டியதாக, எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம், உளுந்தை ஊராட்சியில் முதுகூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது 'கிளையரைஸ்' இன்ஜினியரிங் மற்றும் 'அகியூடாஸ்' இன்ஜினியரிங் தொழிற்சாலை. இந்த இரண்டு தொழிற்சாலைகளும் எவ்வித அனுமதியின்றியும், எவ்வித வரியினம் கட்டாமலும் ஐந்தாண்டுகளுக்கு மேலாக இயங்கி வருவதாக, உளுந்தை ஊராட்சி தலைவர் என்ற முறையில் எம்.கே.ரமேஷ் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளார்.
இதையடுத்து, கடந்த ஜனவரி 25ல் தொழிற்சாலையின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி சின்ன முனியாண்டி, ஊராட்சி அலுவலகத்திற்கு வந்து ரமேஷிடம் பேச்சு நடத்தினார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த தகராறை தொடர்ந்து, ஊராட்சி தலைவர் ரமேஷ் மற்றும் சின்ன முனியாண்டி இருவரும் தனித்தனியாக அளித்த புகார்படி, மப்பேடு போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் திருவள்ளூர் ஏ.எஸ்.பி., விவேகானந்தாசுக்லா மற்றும் தனிப்படை போலீசார் உளுந்தையில் வீட்டிலிருந்த ரமேஷை விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது, அவர் மீது நிலுவையில் இருந்த பல்வேறு மிரட்டல்கள் மற்றும் பணம் பறிப்பு குறித்தும் விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. நள்ளிரவு 12:00 மணியளவில் கைது செய்யப்பட்ட ரமேஷ், திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு பின், திருவள்ளூர் ஜே.எம். 2 நடுவர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்கும்படி நீதிபதி பவித்ரா உத்தரவிட்டதையடுத்து, ரமேஷை சென்னை புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.
No comments:
Post a Comment