Sunday, April 16, 2023

புர்கா- சினிமா முஸ்லிம் பெண் அடிமை கூறுவதை எதிரக்கும் வஹாபியம்




https://m.youtube.com/watch?v=7Xwaeer8erk


 புர்கா
தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இஸ்லாமிய மத சடங்குகளையும், மூட நம்பிக்கைகளையும், அடிப்படை வாதத்தையும் விமர்சித்து எந்த படமும் வெளியானதில்லை. ஆனால், முஸ்லிம்களை தவறாக சித்தரித்து அனேகம் படங்கள் வெளிவந்துள்ளன. இவை இரண்டுக்கும் நடுவில் மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளன. ஒரு சமூகத்தை தொடர்ந்து தவறாக சித்தரிப்பதன் மூலம் அந்த சமூகத்தில் எவ்வித மாற்றமும் நிகழப் போவதில்லை. ஆனால், மதத்தில் புதையுண்டு கிடக்கும் மூடநம்பிக்கைகளையும் பிற்போக்குத்தனங்களையும் அடிப்படை வாதத்தையும் நேர்மையான முறையில் தர்க்க ரீதியாக விமர்சித்தால் அது ஒரு மிகப்பெரிய சமூக மாற்றத்திற்கு காரணமாகும். அந்த வகையில் இஸ்லாமிய அடிப்படை வாதத்தையும் மூடநம்பிக்கைகளையும் பெண் அடிமைத்தனத்தையும் விமர்சித்து வெளிவந்திருக்கும் முதல் தமிழ் படம் என்று புர்காவை சொல்லலாம்.
'இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்' என்று தான் படத்தின் முதல் வசனம் ஆரம்பமாகும். உண்மையில் இஸ்லாம் எப்பேர்ப்பட்ட இனிய மார்க்கம் என்பதை படம் முழுக்க உணர வைத்து இறுதியில் ஒரு குர்ஆன் வசனத்தோடு படத்தை முடித்திருப்பார் இயக்குனர்.
பிறந்த உடனேயே காதில் ஆயத்தில் குரசி(ஓர் குர்ஆன் வசனம்) ஓதப்பட்டு இஸ்லாமிய சட்டதிட்டங்களின்படி வளர்க்கப்பட்ட அல்லது வார்க்கப்பட்ட அநேகம் பெண்களின் நஜ்மாவும் ஒருத்தி. இந்த சமூகத்தில் இரண்டு வகையான நஜ்மாக்கள் உள்ளார்கள். முதல் வகை சிறுவயதிலேயே அளிக்கப்பட்ட உளவியல் தாக்கத்தால் கை விலங்குகளை கூட ஆபரணமாக கருதி ஆனந்தத்தோடு வாழ்பவர்கள்.
இரண்டாவது வகை சிறுவயது உளவியல் தாக்குதல்கள் நிகழ்ந்தாலும் சிறிதேனும் சிந்திப்பவர்கள். பல பல கட்டங்களில் அந்த சுய சிந்தனையே அவர்களுக்கு மிகப்பெரிய மன உளைச்சலாக அமைவதுண்டு. பல விஷயங்களை உணர்ந்தாலும், பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதிகளும் பாரபட்சங்களும் தெரிந்தாலும் அவர்களால் அந்த அமைப்பில் இருந்து வெளியேறவே முடியாது. அடைபட்ட கூண்டுக்கிளியாய் அந்த அமைப்பிற்குள்ளேயே வாழ்நாள் முழுவதும் மன உளைச்சலோடு வாழ்ந்து கழிப்பார்கள்.
இந்த இரண்டாம் வகை தான் புர்காவில் வரும் நஜ்மா. இஸ்லாம் பெண்களுக்கு இழைக்கும் அநேகம் கொடுமைகளில் ஒன்று 'இத்தா' எனும் பிற்போக்கு சம்பிரதாயம். 'உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் அம்மனைவியர் நான்கு மாதம் பத்து நாள் பொறுத்திருக்க வேண்டும்'(குர்ஆன்2:234) புர்காவில் இதைத்தான் விவாதித்திருக்கிறார்கள். வன்மற்ற திறந்த உரையாடல் மூலமாக 'இத்தா' எனும் பிற்போக்கு சம்பிரதாயத்தை துகிலுரித்து காட்டுகிறது இப்படம்.
திருமணம் ஆகி ஒரே வாரத்தில் இருவருக்கும் இடையில் உடலுறவு கூட ஏற்படாத நிலையில் கணவர் இறந்துவிட கணவன் வீட்டிலேயே நான்கு மாதம் பத்து நாள் எவ்வித உலக தொடர்பும் இன்றி மூலையில் முடங்கி கிடக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறாள் நஜ்மா. ஒன்றரை மாதமாக தனிமையின் கொடுமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது தற்செயலாக ஓர் இளைஞனுடன் ஒருநாள் அவள் பழக நேரிடுகிறது. அவனுக்கும் அவளுக்கும் இடையில் நிகழும் உரையாடலே முழு திரைப்படம்.
நிறைய கேள்விகளும் பதில்களுமாக நகர்கிறது அவர்களுடைய உறவு. அந்த உரையாடல்கள் மூலமாக சில சமயம் நஜ்மாவின் மனதில் உள்ள பாரம் குறைகிறது, சில சமயம் அது கூடுகிறது, சில சமயம் தன் இயலாமையை உணர்ந்து திம்முகிறாள், சில சமயம் அனைத்தையும் உடைத்து பறந்து செல்லவும் நினைக்கிறாள். இறுதியில் இஸ்லாம் என்ற சிறைக்குள்ளையே அவள் வாழ்வதாக திரைப்படம் முடிகிறது.
அவளுடைய தனிமையில் கடந்து வந்த அந்த இளைஞன் யார் என்பது ஒரு முக்கியமான கேள்வியாக எனக்கு படுகிறது. என் பார்வையில் அது நஜ்மாவினுடைய கற்பனையாகவே இருக்கக்கூடும். தனக்குள் ஓடிய எண்ண ஓட்டங்களின் வெளிப்பாடாகவே அந்த இளைஞன் இருக்கிறான். தனக்குத்தானே அவள் கேட்டுக் கொண்ட கேள்விகள் அவன் மூலமாக கேட்கப்படுவதாகவே தோன்றுகிறது. அவளுடைய மன போராட்டங்களே அந்த ஒரு நாள் அந்த வீட்டில் நடக்கும் சம்பவங்களாக இருக்கிறது.
மிக சொற்பமாகவே இப்படத்தில் வரும் இஸ்லாமிய ஆண் கதாபாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நஜ்மாவின் வாப்பா கதாபாத்திரம் மதரஸா கல்வி மட்டுமே கற்று உலக கல்வி கற்காதவர். மத நம்பிக்கையில் தீவிரமாக இருக்கும் அதே நேரத்தில் மதத்தாலும் சமூகத்தாலும் தான் எவ்வளவு வஞ்சிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து, தன் மகளும் அதுபோல் வஞ்சிக்கப் படக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர்.
நஜ்மாவின் இறந்து போன கணவராக வருபவரும் முற்போக்கு சிந்தனை கொண்ட பல இஸ்லாமிய கணவன்களை பிரதிபலிக்கிறது. முதல் இரவன்று உடலுறவுக்கு கட்டாயப்படுத்தாத, அவளுடைய உடை சுதந்திரத்தை மதிக்கின்ற கணவன் அவன். ஆனாலும், சமூக சூழல் அவர்களை அவர்களாக வாழ விடுவதில்லை என்பதே நிதர்சனம். அப்படி வாழ்ந்தால் இஸ்லாமிய சமூகம் அவர்களை தனிமைப் படுத்தி விடும். இந்த சூழலை எதிர்கொள்ளும் அந்த கதாபாத்திர வடிவமைப்பும் மிக சிறப்பாக அமைந்திருந்தது.
இப்படம் 'இத்தா' குறித்து பேசுகிறது. அதனால் இப்படத்திற்கு 'இத்தா' என்று பெயர் வைத்திருக்கலாம். ஆனால், புர்கா என்று பெயர் வைத்ததற்கு ஒரு முக்கியமான காரணம் இருப்பதாகவே நான் எண்ணுகிறேன். புர்கா என்றால் அது வெறும் ஒரு ஆடையின் பெயர் அல்ல. புர்கா என்றால் அது பெண்ணடிமைத்தனத்தின் அடையாளம். இஸ்லாம் என்ற பெண்ணாடிமைத்தனத்தை பேசும் ஒரு படத்திற்கு இதை விட பொருத்தமான பெயர் இருக்க முடியாது.
புர்கா தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படைப்பு. ஆனால், இத்திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் ஆகியும் கூட இப்படம் குறித்த எவ்வித விவாதங்களும் பொதுவெளியில் பெருமளவிற்கு நடக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது. இது போன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவிற்கும் இஸ்லாமிய சமூகத்திற்கும் தேவையான ஒன்று.
எவருமே எடுக்கத் துணியாத, பயந்து நடுங்கக் கூடிய ஒரு விஷயத்தை மிக தைரியத்தோடு மிக நேர்மையாக படமாக்கிய இயக்குனர் சர்ஜுன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். உங்கள் பணி மேலும் தொடர
வாழ்த்துக்கள்
...

 

 

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா