Friday, April 28, 2023

லெமூரியா - குமரிக்கண்டம் - ஊகங்கள் உண்மையா - பேராசிரியர்மு.ராம்குமார், புவியியல் பேராசிரியர் சேலம் பெரியார் பல்கலைக் கழகம்

லெமூரியா - குமரிக்கண்டம் - 1

https://www.periyaruniversity.ac.in/wp-content/uploads/2015/04/m.ramkumar.pdf


குமரி, லெமூரியா கண்டங்களின் உண்மைத்தன்மை குறித்து ஒரு புவியியலாளரின் கண்ணோட்டத்தில் எழுத நினைப்பதாக பதிவிட்டிருந்தேன். அதனைத் தொடர்ந்து பல உள்டப்பி உள்ளீடுகள். அவற்றுக்கான பதிலீடு:
எச்சரிக்கை எண்.1
எத்தனையோ லட்சம் படைப்புகளில் புண்யபூமி பாரதத்தின், தென்கோடி தமிழகத்தில், கோயில்பட்டி அருகிலுள்ள சோழபுரம் ஜமீன் சோலை - யின் பேரனாகப் பிறந்து புவியியலாளராக வளர்ந்து, புவியியல் ஆய்வாளர்களினிடையே பெயர் சொன்னால், Oh, I know him என பதில் வருமளவுக்கு சற்றே தலைதூக்க முயற்சிப்பவன் என்ற அடிப்படையில் தான் எனது கருத்தியல்கள் இருக்கும்.
அதாவது, நான் கடவுளின் படைப்பில் மனிதன், தமிழகத்தில் பிறந்து வாழும் இந்தியன், தொழில் முறையில் ஆராய்ச்சியாளர்.
எச்சரிக்கை எண் - 2
பல கோடி உறுப்பினர்கள் கொண்ட, ஆராய்ச்சியாளர்களுக்கென உள்ள Research Gate.net வலைத்தளத்தில் எனது ஸ்கோர் 41.52; அதாவது, பல கோடி உறுப்பினர்களில் எனது அறிவுத்திறன் 97.5% உறுப்பினர்களை விட அதிகம். எனது கருத்தியல்களை மறுக்க, எதிர்வாதம் செய்ய வேண்டுவோர், விழைவோர் இதற்கு சமமானவரோ, அதிகமானவரோ வரலாம்; மீம்ஸ், யு ட்யூப் வீடியோ, அவர் சொன்னார், இவர் நினைத்தார்; கூடுவாஞ்சேரி பதிப்பகத்தில் சுப்பையா எழுதியது என்று வெட்டி வம்புக்கு வர வேண்டாம்.
எச்சரிக்கை எண் - 3.
Observation-measurement-documentation-verification-interpretation-correlation-corroboration-model/concept என்பது தான் இதுகாறும் எனது ஆய்வு வழிகாட்டி /நடைமுறையாயிருக்கிறது. நேராகவோ, மறைமுகமாகவோ எதையும் காணாமல் / உணராமல் ஒத்துக் கொள்வதில்லை. உதாரணமாக மணவாள மாமுனிகளின் திருவரசு குறித்த எமது கண்டுபிடிப்பை எடுத்துக் காட்டுகிறேன். திருவரசு இருந்ததாக கோயிலொழுகு கூறியிருப்பதை ஸ்ரீரங்கநாதனைத் தவிர வேறெதையும் வணங்காத பக்தனாக என்னால் ஏற்றுக்கொள்ள முடிகிற அதே வேளையில், புவியியல் ஆராய்ச்சியாளராக, தொலையுணர் செயற்கைக்கோள் படங்கள், கல்வெட்டு ஆதாரங்கள், GPR தரவுகள், வாஸ்து சாஸ்திரம், புவிஅமைப்பியல், நிலப்பயன்பாட்டியல், படிவுறுதலியல் தரவுகள் மூலம் திருவரசு இருக்குமிடம் மிகத் துல்லியமாக கண்டுபிடிக்கப்பட்டு, அந்த முடிவுகள் தொல்லியலின் பன்னாட்டு சஞ்சிகையில் வெளியிடப்பட்டு (முழுக்கட்டுரை சுட்டியில் கொடுக்கப்பட்டுள்ளது), இது சரிதான், முக்கியமான கண்டுபிடிப்பு தான் என அமெரிக்கன் தொல்லியல் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இதழில் ஒத்துக் கொள்ளப்பட செய்தமை எனது ஆய்வாளர் புத்தி. When it comes to science, I follow my mind, not my belief and lifestyle.
ஆகவே, பின்னூட்டம், எதிர்வாதம் செய்யுமுன் இவற்றை மனதில் கொள்ளவும்.

லெமூரியா - குமரிக்கண்டம் - 2

நிறையபேர் இதுகுறித்து நிறைய எழுதியிருக்கிறார்கள்.



எனவே, முன்னுரையில் நான் சொன்னதுபோல ஒரு புவியியலாளரின் கண்ணோட்டத்தில் மட்டுமே எனது பதிவுகள் இருக்கும். முதலில் லெமூரியா - குமரிக்கண்டம் குறித்த கருத்தியல்களின் தோற்றம், அவற்றின் மீதான அறிவியலாளர் - தமிழறிஞர்களின் கண்ணோட்டம், இவையனைத்திற்கான, புவியியல் ஆதார தேவைகளை வரிசைப்படுத்துகிறேன். வரிசைப்படுத்துகையில், எந்தெந்த அனுமானங்களுக்கு புவியியல் ஆதாரங்கள் தேவை என குறிப்பிடுகிறேன். கடைசியாக, புவியியல் ரீதியான ஆதாரங்களின் இருப்பு - இல்லாதமை போன்றவற்றை பதிவு செய்து தர்க்கரீதியான சாதக-பாதகங்களை எழுதி, அதனடிப்படையில் முடிவுகளை எழுதுகிறேன்.
--------------
முதலில், மேற்கத்திய அறிஞர்கள் சொல்லும் லெமூரியாவும், தமிழக எழுத்தாளர்கள் கருதும் குமரிக்கண்டமும் (படம் -1) ஒன்றா என்று பார்க்கணும்.
லெமூரியா என்ற கருதுகோள் 1864 ம் வருடம் பிலிப் ஸ்க்லேடர் என்ற விலங்கியலாளர்- வக்கீல் Quaternary Journal of Science என்ற சஞ்சிகையில் மடகாஸ்கரில் பாலூட்டிகள் என்ற ஒரு கட்டுரை எழுதியதிலிருந்து ஆரம்பிக்கிறது. லெமூர் என்ற உயிரினங்களின் (பார்க்க படம் 2) வகைகள் மிக அதிகமாக மடகாஸ்கர் தீவில் இருப்பதையும், ஆப்பிரிக்கா, இந்தியாவில் குறைவாக இருப்பதையும் ஒப்பு நோக்கி, இவை மூன்றும் ஒரு நிலப் பாலம் மூலமாக "முற்காலத்தில்" இணைந்திருக்க வேண்டும் எனவும், பிற்காலத்தில் அந்த பாலம்/நிலப்பரப்பு "மறைந்திருக்க" வேண்டும் எனவும், இந்த நிலப்பரப்புதான் " லெமூரியா" எனவும் ஒரு கருதுகோளை முன்வைத்தார்.
இந்நிலப்பரப்பு தெற்கு ஆப்ரிக்கா, தென்னிந்தியா, மேற்கு ஆஸ்த்ரேலியா ஆகியவற்றை இணைப்பதாகவும், முக்கோண வடிவில் இருந்ததாகவும், இது "கடலில் மூழ்கியதாகவும்" கருதினார்.
--------------------
பின்குறிப்பு : "...." குறியிட்ட விஷயங்களுக்கு புவியியல் ஆதாரங்கள் தேவை. அவற்றை பின்னர் தர்க்க ரீதியான வாத-பிரதிவாதங்களின் போது மேற்கோள் காட்டி விளக்குவேன்.

லெமூரியா - குமரிக்கண்டம் - 3






படம் - 1ல் உள்ளவர்தான் பிலிப் ஸ்க்லேடர்.
ஜெர்மானிய உயிரியலாளர் எர்னஸ்ட் ஹெக்கல் என்பவர் (படம் - 2), லெமூரியாவிலிருந்துதான் மனிதர்கள் ஆசியாவிலிருந்து உலகெங்கும் பரவி விரவினர் என்று ஒரு கருதுகோளை முன்னெடுத்து 1860 களில் ஆய்வுக்கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். எவ்வாறு அப்படி பரவினர் என்று ஒரு தோராய படம் - 3ல் காண்பிக்கப்பட்டுள்ளது.
மனித தோற்றம் சுமார் 11 - 13 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையதாகக் கருதப்படுகிறது. மற்றைய உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி அவற்றின் தோற்றத்தில் (morphology) ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மாறுதல்களின் அடிப்படையிலானதாக இருந்தாலும், மனிதனின் பரிணாம வளர்ச்சி தோற்றவியல், புதிது புதிதாக கற்றுக் கொண்ட வாழ்க்கை முறை (LifestyIe), கருவிகள் செய்தல், போன்ற பலவற்றின் அடிப்படையிலும் கணக்கீடு செய்யப்பட்டு, வகைப்படுத்தப்படுகிறது.
பெரும்பாலான மானுடவியல், பரிணாம வளர்ச்சி ஆய்வியலாளர்களின் கருத்துப்படி, ஆப்ரிக்காவிலிருந்தே மனித இனம் தோன்றி உலகமெங்கும் பரவியது எனவும், இவற்றில் பல இனங்கள் Cross-hybridization, reverse-migration, isolation, recolonization மூலமாக கலப்பினங்கள் உருவானதாகவும் தற்கால கருதுகோள்கள் விளக்குகின்றன.
நிற்க.
பிலிப் ஸ்க்லேடர் மடகாஸ்கர் பாலூட்டிகளை பற்றி கட்டுரை எழுதினார் அல்லவா, அதோடு லெமூரியா என்ற கருதுகோளையும் முன்னெடுத்தாரல்லவா, அச்சமயத்தில் ஒரு ரஷ்ய அறிஞர் லெமூர்களிலிருந்து மனிதன் தோன்றியிருக்க வேண்டும் என்றும் ஒரு கருதுகோளை முன்னெடுத்தார்.
இந்த ரஷிய அறிஞர் The Secret Doctrine என்ற புத்தகத்தை 1888 ல் எழுதினர். அதில் மிகப்பழமையான ஏழு மனித இனங்கள் இருந்ததாகவும், லெமுரியா இனம் அதில் ஒன்று என்றும் எழுதியிருந்தார்.
இவையனைத்தையும் ஒன்றிணைத்தோ, தழுவியோ, அடிப்படையாகக்கொண்டோ, மனிதனின் கற்பனை குதிரை தட்டிவிடப்பட்டு, லெமுரியா கண்டமும், லெமூரிய உயிரினங்களும், மனிதனின் ஆதி மூதாதையர்கள் என்ற கருதுகோள்கள் பல்கிபரவின.
-----------------------
பிற்குறிப்பு: இப்பதிவில் சொன்னவாறு, மனித இனம் தோன்றி, உலகெங்கும் பரவிய காலகட்டம், லெமூர்களிலிருந்து மனிதன் தோன்றினானா?, மடகாஸ்கருக்கும், ஆப்ரிக்காவிற்கும், இந்தியா, குறிப்பாக தமிழகத்திற்கும் உள்ள பழங்கால உயிரி பரவல் (Paleobiogeography), இவை நடந்த காலகட்டம் ஆகியனவற்றுக்கு புவியியல் ஆதாரங்கள் தேவைப்படும் இடங்களில் விளக்குவேன்.
............... தொடரும்

லெமூரியா - குமரிக்கண்டம் - 4

முந்தைய பதிவுகளில் சொல்லியிருந்தபடி, பிலிப் ஸ்க்லேடர், எர்ன்ஸ்ட் ஹெக்கல் மற்றும் ரஷிய அறிஞரின் கருதுகோள்கள் அனைத்தும், பிரபல புவியியல் நிபுணரான, வாக்னர், தனது கண்டங்களின் நகர்வு குறித்த கருதுகோளை முன்னெடுத்து, அது உலகெங்கும் உள்ள புவியியல் அறிஞர்களால் ஒத்துக்கொள்ளப்பட்டு, பாடபுத்தகங்களிலும், ஆய்வுக்கட்டுரைகளிலும், இடம்பெறும் முன்னர் நிகழ்ந்தவை. கண்டங்களின் நகர்வு கருதுகோள், உலகெங்கிலும் பலநூற்றுக்கணக்கான புவியியல் மற்றும், புவியியல் சார் தனிப்பட்ட ஆய்வுமுடிவுகளால் திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில் சரியானதுதான் என்று ஒத்துக்கொள்ளப்பட்டு, இன்றுவரை பின்பற்றப்பட்டுவருகிறது.
கண்டநகர்வு கருதுகோள் நிலைபெற்றபின்னர், இந்த லெமூரிய கண்டம் என்பது, கொஞ்சம் கொஞ்சமாக அறிவியலார் பார்வையிலிருந்து மறைந்து, கற்பனை நாவல்கள், புதினங்கள், இலக்கிய எழுத்தாளர்களின் மனதில் குடிகொண்டு, அவ்வப்போது தலைகாட்டிக்கொண்டு இருக்கிறது.
இந்த காலகட்டம், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின்கீழ் இந்திய இருந்த காலகட்டம் என்பதாலும், மற்றெல்லா காலனிநாடுகளைப்போல அல்லாமல், இந்திய சூழ்நிலை, பண்பாடு, இயற்கைவளம், மொழிவகைகள், ஆகியன பரந்துபட்டு, பல்வேறுவிதமாக இருந்ததாலும், பிரிட்டிஷ் ஆட்சியினர், தமது நாட்டிலிருந்து, பல்வேறு அறிஞர்களை இந்தியாவுக்கு வரவைத்து, இங்கேயே தங்கி, இயற்கை வளங்கள்,புவியியல், இலக்கியம், மொழி ஆகியனவற்றை தமது புரிதலுக்கேற்றாற்போல் ஆராயவோ, மொழிபெயர்க்கவோ, இங்குள்ள அறிஞர், இலக்கியவாதிகள் ஆகியோருக்கு பாடம் எடுக்கவோ ஆரம்பித்தனர். இதில் ஒரு நல்லதும்- கெட்டதும் என்னவென்றால், இங்குள்ள பூர்வகுடியினரில் எவரெவர் பிரிட்டிஷ் காலனியரின் அறிஞர்களின் வாதங்களை ஒத்துக்கொள்பவர்களாகவும், அதற்கான ஆதாரங்களை திரட்டிக்கொடுப்போராகவும், அல்லது, அதனை பரப்புவோராக இருந்தார்களோ, அவர்களுக்கெல்லாம், நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவு கிடைத்தது.
- - - - - - - - - - -
பின்குறிப்பு: வாக்னர் முன்னெடுத்த கண்ட நகர்வு குறித்த விளக்கங்கள் வலைத்தளங்களிலும், பல்வேறு புத்தகங்களிலும் எளிதாக காணக் கிடைப்பதால், அதைப் பற்றி கவன ஈர்ப்பு மட்டுமே செய்துள்ளேன்.
All reactions:
4

லெமுரியா-குமரி கண்டம் - 5

லெமுரியா என்றொரு கண்டம் இருந்தது, அது ஆதிமனிதர்களுக்கு / நமது மூதாதையர்களுக்கு தாயகமாக இருந்தது, அங்கிருந்தே (அதாவது, மடகாஸ்கரிலிருந்தே), உலகெங்கும் மனித இனம் பரிணாமவளர்ச்சியுற்று, பல்கி பெருகி, பரவியது என்பதுபோன்ற கருதுகோள்களும், அந்த லெமூரியாக்கண்டம் ஆப்ரிக்க-மடகாஸ்கர், தென்னிந்தியா, ஆஸ்திரேலியா ஆகியவற்றை இணைக்கும் ஒரு நிலப்பகுதியாக இருந்திருக்கலாம் என்ற கருதுகோளும், 1890 -1900 களில் தமிழறிஞர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியாக இருந்தது.
பாகவத புராணத்தில் சொல்லப்பட்டு இருப்பதாக கச்சியப்ப சிவாச்சாரியரால் தமிழில் மொழிபெயர்த்து எழுதப்பட்ட நூலில் பிராமணர்கள் வாழ்ந்ததாக கருதப்படும், பாகவதத்தில் "குமாரிக கண்டா" என்று சொல்லப்பட்ட இடமாகவும் ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. 1903 -ல் சீனிவாச சாஸ்திரி எழுதிய மொழியின் வரலாறு என்ற நூலில் குமரி கண்டம் என்ற பதம் உபயோகப்படுத்தப்பட்டிருந்தாலும், இரண்டு, முன்று, தசாப்தங்களுக்கு பின்னரே, லெமுரியா தான் குமரிக்கண்டம் என்ற பழக்கம் வந்தது.
அதற்குப்பின்னர், குமரிகள் ஆண்டதால், குமரி கண்டம் என்று பெயர் வந்தது என்றும், அந்த பெண்கள், தமது கணவரை தாமே தேர்ந்தெடுத்துக்கொள்ள உரிமைபெற்றவர் என்றும், சொத்துக்களை தாமே, தமது பெயரிலேயே நிர்வகித்து வந்தனர் என்றும், கன்னியாகுமாரி ஆண்டதால், குமரி கண்டம் என்று பெயர் வந்தது என்றும் பலவிதமான கருத்துகள், மொழி, கவனிக்கவும், மொழி அறிஞர்களால் முன்மொழியப்பட்டு, பின்பற்றப்பட்டு, இந்த கருதுகோள் தமிழத்தில் நிலைபெற்றது.
இவைஅனைத்துக்கும், இலக்கிய ஆதாரங்கள் மேற்கோள் காட்டப்பட்டன. பழங்காலத்தில் நிகழ்ந்ததாக இலக்கியத்தில் சொல்லப்பட்ட ஊழிவெள்ளம், கடல்கோள், போன்றவை மூலம் குமரி கண்டம் கடலுக்குள் அமிழ்ந்து மறைந்ததாக சொல்லப்பட்டு, ஏராளமான கதைகள், புதினங்கள், கவிதைகள், ஆய்வுக்கட்டுரைகள், எழுதப்பட்டு உள்ளன. இவைஅனைத்துக்கும், ஒரு ஒற்றுமை உண்டு. இவை அனைத்தும் /பெரும்பாலானவை மொழி அறிஞர்களால் எழுதப்பட்டவை. இத நம்பலேனா சோறு கிடையாதுன்னு சொல்லாமலேயே, எல்லாரும் நம்பிட்டாங்க.
நாமதான், உள்ளூருலயே ஒரு நாச்சியப்பன் கடை கப்பு வாங்கி, பன்னாட்டு நிறுவன பெயரை போட்டு, ஒரு மேடையில கொடுக்கல்-வாங்கல் பண்ணி, சில வருடங்கள் கழித்து அதப்பத்தி ஒரு புத்தகம் எழுதுற அளவுக்கு விஞ்ஞானிகள் ஆச்சே. அப்புறம் என்ன, குமரி கண்ட வியாபாரம் நல்ல போச்சு, போகுது, போகும்.
இந்த பதத்தை உபயோகப்படுத்துபவர்கள் எல்லாம் சொல்வது என்னவென்றால், அந்த புத்தகத்துல, இவரு, அவரு உபயோகப்படுத்தியிருக்காரு, அதன் அடிப்படையில நான் உபயோகப்படுத்துறேன். அவ்வ்ளோதான், அதுக்குமேல என்கிட்டே கேக்காத. This is called circular referencing, a practice, scientific world never accepts.
கொஞ்சம் ஆழமாக விசாரித்தால், ஆமா, லெமுரியா கண்டம்ன்னு இருந்துதாமாமே, அது கடலில் மூழ்கி விட்டதாமே, அது தமிழகம், ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியாவை இணைத்த நிலப்பரப்பாமாமே என்று சொல்வார்களே அன்றி, அதற்குமேல் ஏதும் விபரம் வராது. அந்த சீட்டுக்கட்டின் மேல், அதுதான் மறைந்த குமரி கண்டம் என்று ஒரு அடுக்குமாடி வீடு கட்டுவார்கள். அதுமட்டுமல்லாது, வெள்ளைக்காரன் கண்டுபிடிச்சி சொன்னது தப்பா என்றும் கேட்பார்கள். வாக்னர் சொன்ன, பல்லாயிரக்கணக்கான தரவுகளின் மூலம் ருசுவான கண்டநகர்வு கருதுகோள் மூலம் இந்த லெமூரியா கருதுகோள் காலாவதியாகி பல தசாப்தங்கள் ஆனது, தெரியாது, அப்படியே தெரிந்தாலும், விளங்காது, அப்படியே விளங்கினாலும், அதை ஒத்துக்கொண்டால் குமரி கண்ட வியாபாரம் போணியாகாது என்பதால், ஊமையன் கனவுகண்டதுபோல மூடிட்டிருப்பாங்க.
..................தொடரும்

லெமூரியா - குமரிக்கண்டம் - 6






லெமூரியாதான் குமரிக்கண்டம், லெமுரியா கடலில் அமிழ்ந்ததுபோல, குமரிக்கண்டமும் கடலில் அமிழ்ந்துபோயிடுச்சு என்று சொல்பவர்கள், அதோடு நிற்காமல், வார்த்தைகளாக இருந்த லெமுரியா கண்ட எல்லைகளாக சொல்லப்பட்டவற்றை, தற்கால கண்ட எல்லைகளோடு சேர்த்து, இதுதான் கடலில் அமிழ்ந்த குமரிக்கண்டம் என்று ஒரு வரைபடத்தை உருவாக்கினார்கள்.
(உதாரணத்துக்கு, வெகு சில படங்களை இந்த பதிவில் சேர்த்துள்ளேன். பார்க்கவும்). அதுமட்டுமல்லாது, இலக்கிய, புராணங்களில் சொல்லப்பட்ட நதி, மலைகளை இந்த படத்தில் பாகம் குறித்தார்கள். ஆனால், இவற்றில் பல முரண்பாடுகள் உள்ளன.
உதாரணத்துக்கு, இமயமலைப்பகுதி. இங்கு மெயின் பௌண்டரி த்ரஸ்ட் என்று சொல்லப்படக்கூடிய ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நீளம் உள்ள ஒரு பெரிய பிளவுக்கு வடக்கேயும், சிலர், தெற்கேயும், குமரிக்கண்டத்தின் எல்லைகளாக குறித்தார்கள். அதுமட்டுமல்லாது, சில படங்களில் மடகாஸ்கர் வரையேயும், வேறு சில படங்களில் மடகாஸ்கரையும் மேற்கே தாண்டி, ஆப்பிரிக்காவையும் உள்ளடக்கி குறித்தார்கள்.
அதற்குப்பின்னர், கிழக்கே, பர்மா வரை குமரி கண்டம் இருந்ததாகவும், தெற்கில், இலக்கியம், புராணத்தில் இருந்ததாக சொல்லப்படும் ஒரு தெற்கு-வடக்காக நீண்ட ஒரு நிலப்பகுதியையும், அதில், கிழ-மேலாக ஓடும் நதிகளையும் வரைந்தார்கள். காசா, பணமா, அதுகிடக்குது கழுத.
இவற்றை எந்த புவியியலார் பார்த்தாலும், ஒன்னு ஓடி போயிடுவார், அல்லது, வரஞ்சவன பாத்தா, கொலையாளியாயிடுவார். இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே ஒரு கட்டுரை எழுதலாம். இதெல்லாம், முரண்பாடுகள், புவியியல் ரீதியாக ஒத்துக்கொள்ளமுடியாதவை என்று சொல்வதோடு தற்போதைக்கு நிறுத்திக்கொண்டு, மேலே, மற்ற விஷயங்களை தொடர்கிறேன். இவற்றை பின்னர் விவாதத்துக்கு எடுத்துக்கொள்கிறேன்.
ஆனாலும், இந்த கருதுகோள்களை எல்லாம், சரியல்ல என்று ஒதுக்கித்தள்ளிவிடமுடியாது என்ற வாதத்தை எடுத்துக்கொள்வோம். இந்த கருதுகோளைகளின் அடிப்படை கட்டமைப்பு என்னென்ன என்பதை பார்ப்போம்; அவற்றின் உண்மைத்தன்மையை புவியியல் ஆதாரங்கள் கொண்டு நோக்குவோம். அப்போதுதான், எது சரி, எது தவறு, எது எவ்வளவு சரி, எது எவ்வளவு தவறு, மொத்தத்தில் எந்த கருத்து எங்கு மேலோங்குகிறது, எது சறுக்கியது, மேலோங்குவதற்கும், சறுக்கியதற்கும் காரணங்கள் என்னென்ன, அதனை எப்படி சீர்தூக்கி பார்த்து, எதை கொள்வது, எதை விலக்குவது என்று முடிவெடுக்கமுடியும்.
தற்போது, முதலில், குமரிக்கண்டம் என்பதற்கான அடிப்படை கட்டமைப்புகளை வரிசைப்படுத்துவோம்.
1 . கடலில் அமிழ்ந்ததாக பிற கண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும்போது, குமரி கண்டம் ஏன் அமிழ்ந்திருக்கக்கூடாது?
2 . இலக்கியம், புராணக்கதைகள் பொய்யா? நிறைய இடங்களில், மிகப்பல விஷயங்கள் தொல்லியல், புவியியல் ஆய்வுகளில் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டிருக்கிறதே?
3 . சரிய்யா, கண்டம் இல்ல, நில பாலம் இருந்திருக்கலாமே? உதாரணத்திற்கு, அறிவியல் தரவுகள், சற்றேறக்குறைய 14500 வருடங்களுக்கு முன்னர் வரை, தற்போதிருப்பதை விட, சுமார் 100 மீட்டர் வரை கடல் மட்டம் தாழ்ந்திருந்தது என்று சொல்கிறதே; அப்படிப்பார்த்தால், ஆப்பிரிக்காவிலிருந்து, கடலோரமாகவோ, தென்னிந்தியாவிலிருந்து, ஆஸ்திரேலியா வரையோ, நிலப்பகுதிகள் மக்கள் நடமாட்டத்திற்கு ஏற்றாற்போல் நிலப்பாலங்கள் மூலம் இணைக்கப்பட்டு இருந்திருக்கலாமே? அவை எல்லாம் கடல் மட்டம் உயர்ந்ததனால் மூழ்கடிக்கப்பட்டிருக்கலாமே?
............................தெளிவோம், தொடர்ந்து.

லெமூரியா - குமரிக்கண்டம் - 7

மொதல்ல, லெமுரியா, இருந்திருக்கா, இருந்திருந்தா, கடலில் அமிழ்ந்திருப்பதற்கான புவியியல் ஆதாரங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்று பார்ப்போம்.





















படம்-எண் 1 , 2 , 3 , 4 ல் காண்பித்துள்ளவாறு, இந்திய கடலோரப்பகுதிகள், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா பகுதிகளின் கடல் ஆழங்கள், மேடுகள், தீவுக்கூட்டங்கள், ஆகியன காணக்கிடைக்கின்றன. இவற்றில், இந்தியாவின் கிழக்கே-தெற்கே ஒரு தென்வடலாக ஒரு மேட்டுதீவு கூட்டமும், மேற்கே-தென்மேற்கே தென்வடலாக ஒரு தீவுக்கூட்டமுமே மேட்டுப்பகுதிகளாகவும், மற்றெல்லாப்பகுதிகளும், சிலநூறு மீட்டர்களிலிருந்து, சில ஆயிரம் மீட்டர்கள்வரையிலான கடலாழப்பகுதிகளாக உள்ளன.
இந்த மேட்டுதீவுக்கூட்டங்கள், பூமியின் அடியாழபகுதிகளில் இருந்து எரிமலைக்குழம்பு, கடலுக்குள்ளே, புதியதரை உண்டானபோது பாறை பிளவுகள் மூலம் வெளிவந்து உருவானவை. இவை, இந்தியா கண்டம், அண்டார்டிக்காவிலிருந்து பிரிந்து வடக்குநோக்கிய பயணத்தின்போது உருவானவை. இவற்றின் வயது, சுமார் 18 கோடியிலிருந்து, ஐந்தரைகோடி ஆண்டுகள் வரை.
லெமுரியா கண்டம் இருந்தது, குமரிக்கண்டம் இருந்தது, அது கடலாழத்துள் அமிழ்ந்தது என்ற கருத்தியலாளர்கள் எல்லாம், ஆப்பிரிக்க, ஆஸ்திரேலிய, இந்திய கண்டங்களின் தற்காலத்திய, சிலஆயிரம் வருடங்களுக்கு முந்தைய அமைப்பையும், பல்கோடிஆண்டுகளாக அல்லது, சில லட்சம் வருடங்களுக்கு முன்பிருந்தே இப்போது எங்கிருக்கின்றனவோ, அங்கேயே இருந்திருக்கின்றன என்ற படுமுட்டாள்தனமான கருத்தை கொண்டிருப்பதாகவும், அந்த படுமுட்டாள்தனமான கருத்தினடிப்படையிலேயே பலகோடி ஆண்டுகளாக நிகழ்ந்த லெமூர்களின் பரிணாமவளர்ச்சியை, சிலஆயிரம் ஆண்டுகளுக்குள்ளாக மிகமிகமுட்டாள்தனமாக, அடிப்படை அறிவுகூட இல்லாமல் சுருக்கியும், அதைவிட மிகமிகமிக முட்டாள்தனமாக, லெமூர்களிலிருந்து மனிதன் தோன்றியது, அங்கிருந்து இந்தியா வந்தது, பின் இங்கிருந்து மனிதன் உலகெங்கும் பரவியது என்று காற்றில் கனவுக்கோட்டை கட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் கருதவேண்டியிருக்கிறது.
சுமார், 40 கோடி ஆண்டுகளுக்கு முன் செல்வோம். படம் எண் 5 ல் காண்பித்துள்ளபடி, கண்டங்கள் எல்லாம், தற்போதைய இருப்பிடத்தை விட்டு, வேறு எங்கோ இருந்தன. அதன்பின்னர், அப்போது இருந்த நிலைமையை விட்டு, தற்காலம் வரை, எவ்வாறு தமது இடத்தை விட்டு நகர்ந்தன, என்பது, சற்று கால இடைவெளிகளில் காண்பிக்கப்பட்டுள்ளது.
ஏன் அவ்வாறு நகர்ந்தன என்பது ஒரு சிக்கலான புவியியல் நிகழ்வு. நமது புரிதலுக்காக, பூமியின் அடியாழத்தில் உள்ள எரிமலை குழம்பு கடல் ஆழத்தில் கண்டபிளவுகளினூடே வெளிவந்து, புதிய தரையை உண்டாக்குகிறது, இந்த நிகழ்வின்போது, கண்டங்கள் தமது இடத்தைவிட்டு நகர்கின்றன. இந்த நகர்வு, பலகோடி ஆண்டுகளாக தொடர்ந்து நிகழ்கிறது என்பதோடு நிறுத்திக்கொள்வோம்.
இந்த புதிய தரை உலகெங்கும்உள்ள இடங்கள், அங்கிருந்து புதிய தரை கடந்த இருபதுகோடி ஆண்டுகளாக உருவானதால், கண்டங்கள் நகர்ந்த திசை, கண்டங்களின் இருப்பிடம் மற்றும் புற அமைப்பு மாறுபட்டது, எங்கிருந்து, எப்படி நகர்ந்து, எங்கே சென்று, தற்கால இருப்பிடத்திற்கு வந்துள்ளன என்பது படம் எண்கள் 6 - 19 வரை காட்டப்பட்டுள்ளன.
-------------------------------
............. தொடரும்

லெமூரியா - குமரிக்கண்டம் - 8



அடுத்ததாக, எமது ஆய்வுக்குழுவின் சமீபத்திய கண்டுபிடிப்புகளான இரண்டு ஆய்வுக்கட்டுரைகளை, அவற்றின் முக்கிய கருத்துகளையும் பற்றி சொல்லிவிட்டு, அந்த கருத்துகளின் தாக்கம் லெமுரியா-குமரி கண்ட கருதுகோள்கள் மீது எந்தவிதமானது என்று விளக்குகிறேன்.
இந்தியா ஏன் இந்த ஷேப்ல இருக்கு ?
வடக்கு வாழ்கிறது - தெற்கு தேய்கிறது இது அரசியல் ஸ்டேட்மென்ட் அல்ல - புவியியல் உண்மை - ஏன், எப்படி?
ஏன் கேரளா பகுதியில மழை காடுகளும் அங்கிருந்து கிழக்கே சில நூறு மீட்டர் தூரத்தில தமிழக, கர்நாடக பகுதிகள் காஞ்சு போய் இருக்கு ?
இந்திய பீடபூமி பகுதியில் மேற்கு கடற்கரையிலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் தோன்றும் ஆறுகள் பல நூறு கிலோமீட்டர் பயணம் செய்து கிழக்கு கடற்கரையில் கடலில் கலப்பது ஏன்?
இந்தியாவில் ஆற்று சமவெளி வடிநிலங்களின் அளவு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி செல்லும் போது அதிகமாக இருப்பது ஏன் ? உதாரணத்திற்கு தென்முனையில் விவேகானந்தா பாறையும் அங்கிருந்து வடக்கே கிழக்கு கடற்கரையோரமாய் வந்தால் சிறிய அளவிலான டெல்டா என்று சொல்லபடகூடிய ஆற்று வடிநிலபகுதிலுமே உள்ளன. தமிழகம், ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் என்று தொடர்ந்து வடக்கே சென்றால் வடிநில பகுதியில் அளவு கூடுவதும் அதில் உள்ள படிவுகளின் அளவு அதிகமாக உள்ளதும் ஏன் என்று இதுவரை தெளிவான பதில் இல்லை.
இந்தியாவில் ஓடும் அனைத்து ஆறுகளின் கேட்ச்மென்ட் பகுதி வடிநிலங்களின் அளவை விட பல மடங்கு இருப்பது ஏன் ? அதன் விளைவு என்னவாக இருக்கும் ?
இந்தியாவில் நிலநடுக்கங்கள் ஏற்படும் இடங்கள் எவை ? பல ஆயிரம், லட்சம், கோடி வருடங்களாக அவை கிட்டத்தட்ட ஒரே இடத்தில இருப்பது ஏன் ?
குஜராத்தில் பூகம்பம் வருவதற்கும் பெரம்பலூர், போடிநாயக்கனூர், கடலூர் பகுதிகளில் பூகம்பம் வருவதற்கும் என்ன சம்பந்தம் ?
வேதாரண்யத்தில் இருந்து தலைமன்னாருக்கு புதிதாக பாலம் கட்டாமல் பேருந்தில் செல்ல முடியுமா ?
இவை அனைத்துக்கும் பதில் சொல்ல முயன்றிருக்கிறேன் ஒரு தியரி மூலம். அது புவி அறிவியல் பன்னாட்டு சஞ்சிகைகளில் மிக உயர்ந்த சஞ்சிகை கோண்ட்வானா ரிசர்ச் -ல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. அதன் சுட்டி, முதல் கமெண்டில்.
அடுத்த கட்டுரை, இந்தியாவின் கடந்த பதினாறு-பதினேழு கோடி ஆண்டுகளான பயணம் குறித்தது. இந்த கட்டுரைக்கு, 2017 ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட ஆய்வுகளில் சிறந்தகட்டுரை என்ற பரிசு கிடைத்துள்ளது. முழுக்கட்டுரையின் சுட்டி, இரண்டாம் கமெண்டில்.
இந்த கட்டுரையின் சாரம் என்னவென்றால்,
இந்தியா பலகோடி வருடங்களுக்கு முன் தற்போதைய அண்டார்டிகா கண்டத்துடன் சேர்ந்து இருந்தது. சற்றேறக்குறைய 16-18 கோடி ஆண்டுகளுக்கு முன் அண்டார்டிகாவில் இருந்து பிரிந்தது. அதற்கு பின் சற்று சுழன்றது. அப்புறம் அங்கிருந்து வடக்கு நோக்கி நகர ஆரம்பித்தது. இந்த நகர்வின் வேகம் வருடத்துக்கு 5 செ. மி. என்று கணக்கிடபட்டுள்ளது.
டினோசர்களின் அழிவு காலமான சற்றேறக்குறைய ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன் தக்காண பீடபூமி உருவாக காரணமான எரிமலை குழம்பு மத்திய இந்திய பகுதியில் வெளிபட்டபின் திடீரென வருடத்திற்கு 20 சென்டிமீட்டர் வேகத்தில் இந்தியா நகர ஆரம்பித்து ஆசிய கண்டத்தில் போய் முட்டிகொண்டிருக்கிறது. அண்டார்டிகா கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்து பிரிந்த பின் ஏறத்தாழ 9000 கி மீ பயணம் செய்துள்ளது. (இந்த பயணப்பாதையையும், காலத்தையும் இப்பதிவின் கீழுள்ள படத்தில் பார்க்கலாம்).
இப்பயணத்தில் ஆறரைகோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்த வேகத்தை விட திடீரெனெ நான்கு மடங்கு வேகமாக நகர ஆரம்பித்தது எப்படி, ஏன், என்ன என்ன காரணிகள் அத்தகைய உந்து சக்தியை அளித்தன என்பது கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளாக இதுவரை புவியியல் ஆய்வாளர்களுக்கு ஒரு புரியாத புதிராக இருந்து வந்தது.
அது எப்படி நிகழ்ந்திருக்க கூடும் என்று நான் பிரெஞ்சு,ஆஸ்திரேலிய ஆய்வியலர்களுடன் இணைந்து ஒரு கருத்துரு உருவாக்கினேன்; அது சரி தான் என்று பன்னாட்டு சஞ்சிகையில் ஏற்று பதிப்பிக்க பட்டுள்ளது.
அதாவது, இந்தியா இருந்ததாக சொல்லப்பட்ட இடத்தில் இல்ல, இல்லவே இல்ல. இன்னும் நகர்ந்துக்கிட்டு இருக்கு. இப்ப வாங்க, இந்தியாவின் தற்போதைய இருப்பிடத்தை ஆதாரமாக கொண்டு குமரிக்கண்டத்துக்கு முட்டு கொடுப்பவர்களே.

லெமூரியா - குமரிக்கண்டம் - 9

முற்பதிவில் விவரிக்கப்பட்ட எமது ஆய்வுக்குழுவின் இரண்டு கட்டுரைகளில் இருந்து தெரியவருவது என்னவென்றால், நாமெல்லாம், முக்கியமா, இந்த குமரிக்கண்ட போராளிகள் நினைப்பதுபோல இந்திய கண்டம் என்பது, நிலப்பகுதியாக வெளித்தெரியும் பகுதி மட்டும் அல்ல, இந்திய கண்டத்தின் எல்லைகள் மிகப்பரந்து, தெற்கிலும், கிழக்கிலும், மேற்கிலும், இமயமலையின் அடியில், திபெத் பீடபூமியின் அடியில், சுமார் 900 - 1600 கிலோமீட்டர் வரை இருக்கிறது. பதிவு எண் 7 ல் காண்பிக்கப்பட்ட 1 -4 , 6 ம் எண் படங்களை பார்த்து, இந்த எல்லைகளை மனதில் கொள்ளவும்.
சுமார், 18 -20 கோடி ஆண்டுகளுக்குமுன் இந்தியா, அண்டார்டிகா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், சிசிலிஸ் தீவு ஆகியன ஒன்றாகத்தான் இருந்தன. இந்தியா மடகாஸ்கர், சிசிலிஸ் தீவு ஆகியன ஒரு பெரிய துண்டாக மற்றகண்டங்களில் இருந்து பிரிந்து, தற்போதைய ஆஸ்திரேலிய கண்டம் போல, ஒரு தீவு கண்டமாக இருந்தது. வடக்கு நோக்கி நகர ஆரம்பித்தது, சுமார், 8 .8 கோடி ஆண்டுகளுக்குமுன்னர்தான், இந்தியாவின் மேற்குப்பகுதியிலிருந்து மடகாஸ்கர் தனித்துண்டாக பிரிந்தது, அதற்கு சுமார் இரண்டு கோடி ஆண்டுகளுக்குப்பின்னர்தான் தக்காணபீடபூமி உருவானது, அந்த சமயத்தில்தான் சிசிலிஸ் தீவு துண்டும் பிரிந்தது.
அஞ்சரைக்கோடி வருடங்களுக்குமுன்பு வரை உலகின் மிகப்பெரிய மலைத்தொடரான இமயமலைத்தொடரே இல்லையே; அங்க எல்லாம் கடல் தான் இருந்தது. ஐரோப்பிய-ஆசிய கண்டத்துடன், இந்தியக்கண்டம் கடந்த ஐந்து கோடி ஆண்டுகளாகத்தானே நிலவழிதொடர்புடன் உள்ளது. இதெல்லாம், தெரியாமலோ, அல்லது தெரிஞ்சும் மறைச்சிட்டோ, கண்டங்களின் தற்போதைய இருப்பிடத்தை ஆதாரமா வச்சிக்கிட்டு, ஆனால், ஒரேதுண்டாக உள்ள இந்தியாவின், தெற்குப்பகுதியிலிருந்து, ஆஸ்திரேலியா-ஆப்ரிக்கா வரை ஒரு கற்பனை கண்டம் இந்தியாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லாமல், கடலுக்குள் மறைந்துவிட்டது என்றால், ..... ஏதாவது கேவலமா சொல்லிடப்போறேன்.
இந்தியாவிலிருந்து பிரிந்த பின்னர், மடகாஸ்கர் தனி தீவு துண்டானது, அங்கு நிகழ்ந்த பரிணாமவளர்ச்சி, மாறுதல்கள், தனித்துவமுடையனவாகின; ஆனால், அவற்றின் மூதாதையர்கள், இந்தியாவிலும் இருந்தன, அதற்கும் மூதாதையர்கள் இந்தியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியவற்றில் இருந்தன.
அதாவது, 20 கோடி ஆண்டுகளுக்குமுன்னர், ஒரேநிலப்பகுதியாயிருந்தபோது, அங்கிருந்த உயிரினங்கள், ஒரு பொதுவான மூதாதையரை கொண்டிருந்திருக்கவேண்டும், இந்த கண்டங்கள் தனித்தனியாக பிரிந்தவுடன், தத்தமது சூழ்நிலைக்கேற்றாற்போல் விதவிதமான உயிரினங்களாக பரிணாமவளர்ச்சி, பரவல், ஆகியன நடந்திருக்கவேண்டும், மடகாஸ்கர் சுமார் எட்டேமுக்கால் கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்து தனியாக பிரிந்துபோனதால், அங்கு வாழ்ந்த நிலவாழ் உயிரினங்கள் தனித்துவமான, பிற எல்லா கண்டங்களிலிருந்தும் வித்தியாசமான நிலவாழ் உயிரினங்களை கொண்டிருக்கவேண்டும், அவற்றிலிருந்து பரிணாமவளர்ச்சியுற்ற உயிரினங்களும், வித்தியாசமானதாயிருந்திருக்கவேண்டும்.
இது எல்லாத்தையும் ஒதுக்கிட்டு, பலகோடி ஆண்டுகளாக தனிப்பட்ட சூழ்நிலையில் உருவான உயிரினங்கள், சிலஆயிரம்-சில லட்சம் வருடங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு மெட்ரோரயில் பிடிச்சு வந்துச்சி, இங்கிருந்து, எட்டுவழி சாலைவழியா, உலகெங்கும் பல்கிப்பெருகுச்சு, பாத்தியா, மடகாஸ்கரில் புழங்கும் மொழியில் சம்ஸ்கிருத வார்த்தைகள் இருக்கு, தமிழ் வார்த்தைகள் இருக்கு, அங்கேயும் வாய்வழியாதான் சாப்புடுறாங்கன்னு முட்டு கொடுக்குறவங்களுக்கு, …….., சாரி, டீசண்டா பொதுவெளியில் பதில் சொல்லமுடியாது.
நீங்க, ரொம்ப வசதியா மறக்க/மறைக்க நினைக்கும் பூசணிக்காய் ஒருவருடம், இரெண்டு வருடம் அல்ல, பலலட்சம்-பலகோடி வருடங்கள்; பூமியின் வரலாற்றில் நடுவுல கொஞ்சம் பக்கங்கள் அல்ல, பல புத்தகங்களை ஒரேடியா தாண்ட பாக்குறீங்க, அதுவும் தவறான திசையில்!
குமரிக்கண்ட போராளிசுக்கு ஒரே ஒரு கேள்வி: மனிதன் மொழியை தகவல் தொடர்புக்கு பயன்படுத்த ஆரம்பித்தது எப்போ? தமிழ் மொழி தோன்றியது எப்போ? சில ஆயிரம் வருடங்கள்? இந்த கதையை எப்படி, சில லட்சம்-சில கோடி ஆண்டுகளுக்கு முன்னர் சம்பந்தமே இல்லாம கடத்த பாக்குறீங்க?
ஒரேவரியில சொல்றதுன்னா, இதென்ன, சுத்த கமல்தனமா இருக்கே!
இப்படி செய்யிறவங்களுக்கு ஒரு உதாரணம்: என்னைய அடுத்தவாரம் கத்தியில் குத்தி, போனவருடம் நான் செத்துட்டேன்னு யாரேனும் சொன்னா, எவ்வளவு பைத்தியக்காரத்தனமோ, அவ்வளவு, பைத்தியக்காரத்தனம், லெமூரிலிருந்து மனிதன் தோன்றினான், மடகாஸ்கரிலிருந்து இந்தியாவுக்கு வந்தான், அவன் தமிழன், இங்கிருந்துதான், உலகெங்கும் மனித இனம் பல்கிப்பெருகி பரவியது என்பதும்.
-------------------------
............ தொடரும்

லெமூரியா - குமரிக்கண்டம் - 10

கடந்த பெரும்பனிக்காலத்தில் (Pleistocene), அதாவது, சுமார், இருபது லட்சத்திலிருந்து, பத்துலட்சம் வருடம் முன்பு வரை, கடல்மட்டம் இப்போதிருப்பதிலிருந்து மிகவும் தாழ்ந்திருந்தது. உலகெங்கும், இவை கடலுக்கடியில் கண்டத்திட்டுகளாகவும், படிவுப்பாறை நிறைந்த பகுதிகளாகவும், கடலடி ஆற்று பள்ளத்தாக்குகளாகவும் புவிபௌதிகவியல் முறையாலும், நேரடி சான்றுகளாகவும் தற்போதைய கடற்கரையிலிருந்து சில கிலோமீட்டரிலிருந்து, அறுபது, எழுபது, கிலோமீட்டர் தூரம் வரை காணக்கிடைக்கின்றன.
இந்தியாவிலும், இந்தியக்கடற்கரையையொட்டிய பகுதிகளிலும் இவை உள்ளன. தாழ் கடல் மட்டம், கடற்கரையொட்டிய நிலப்பகுதி, அதன்மூலம் மனிதப்பரவல் என்பது குமரிக்கண்ட கருதுகோளில் கொண்டுவந்து சேர்க்கவேண்டுமானால், எப்படி பலலட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய நிலவழியை, சிலஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுடன் பொருத்துவது?
விளங்க சொல்லவேண்டுமானால், என்னை அடுத்த வாரம் கத்தியால் குத்தி, போனவருடம் கொன்றுவிட்டார்கள் என்றால், எந்த நீதிமன்றத்தில் இந்த வழக்கை ஏற்றுக்கொள்வார்கள்?
இந்தியாவை சுற்றியுள்ள கடல் பகுதிகளில், படிவுப்பாறைகளின் கனம் (thickness) படத்தில் காட்டப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக, இரண்டு கிலோமீட்டர் கனமும், கங்கை முகத்துவாரப்பகுதிகளில் பதினெட்டு கிலோமீட்டர் கனமும் கடந்த சில கோடிஆண்டுகளில் படிவுற்றுள்ளது.
இந்தப்பகுதிகளை, அங்குல, அங்குலமாக கடந்த ஐம்பது, அறுபது ஆண்டுகளாக ஆராய்ந்துவிட்டார்கள். இலக்கிய, புராண கதைகளில் சொல்வதுபோல பலகிலோமீட்டர் நீளம் உள்ள மலைத்தொடரோ, பழங்கால ஆறுகளோ, ஆற்றுப்பள்ளத்தாக்கோ, வடிநிலமோ, இதுவரை ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதற்குமேலும் யாரும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை, கன்னியாகுமரிக்கு தெற்கே பலகிலோமீட்டர் நீளம் உள்ள ஆற்று பள்ளத்தாக்கு, பல்லாயிரம் மீட்டர் உயர மலைத்தொடர், இவையனைத்தும் கடலுக்குள் அமிழ்ந்து, மண்மூடியுள்ளது, என்றால், அவங்களை எல்லாம், அங்கே கொண்டுபோய் கடலுக்குள் தள்ளிவிட்டு, தேடி மேலே கொண்டுவர சொல்லலாம்.
.......... தொடரும்

லெமூரியா - குமரிக்கண்டம் -11

1950 களில் இருந்து, இந்தியா மட்டுமல்ல, உலகெங்கும், முன்னேறிய தொழில்நுட்பமான seismic imaging என்ற அதிர்வலைகளை பூமிக்கடியில் அனுப்பி, பூமிக்கடியில், கடலில் படிந்திருக்கும் படிவுப்பாறைகளினூடே, அவற்றினடியில், பூமியின் மையப்பகுதிவரை ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்.













முதலில் ஒரு பரிமாண கருவி, தொழிற்நுட்பமாக இருந்த இந்த வகை ஆய்வு, தற்போது நான்காம் பரிமாணத்தை தாண்டிவிட்டது. உதாரணத்துக்கு, சில படங்களை காணவும். இதன் அடிப்படையில் வங்கக்கடல், இந்தியபெருங்கடல், மேற்குக்கடலோரப்பகுதி, அரபிக்கடல் எல்லாவற்றையும் ஆராய்ந்துவிட்டார்கள்.
இந்த seismic imaging எந்த அளவுக்கு துல்லியம் என்று காண்பிக்கவேண்டுமென்றால், கிருஷ்ணா ஆற்றின் முகத்துவாரத்துக்கு நேரே, கடலுக்கடியில், இரண்டு கிலோமீட்டர் கடல் ஆழத்திற்கு அடியில், படிந்திருக்கும் படிவுப்பாறையில் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் கனமுள்ள பதிவுகளின் அடியில் உள்ள இயற்கைவாயுவை கண்டறிந்திருக்கிறார்கள்.
இத்தகைய தொழிற்நுட்பத்தை கொண்டு ஆராய்ந்தும் கூட, பலநூறு கிலோமீட்டர் நீள, அகலமுள்ள ஒரு கண்டம், பலநூறு கிலோமீட்டர், பலகிலோமீட்டர் உயரமுள்ள மலைத்தொடருடன், பலநூறு கிலோமீட்டர் நீள அகலமுள்ள பல நதிப்பள்ளத்தாக்குகளை கண்டுபிடிக்கமுடியவில்லை என்றால், அப்படி ஒரு கண்டம் கமலின் கற்பனையில் கூட இல்லை என்றுதானே அர்த்தம்?
இந்தியாவை சுற்றி மட்டுமல்லாது,கடலுக்கடியிலோ, கடலடி மண்ணுக்கடியிலோ, படிவுகளுக்கு உள்ளேயோ, எங்கயும் குமரிக்கண்டம் இல்லையாம்; புரியுதா, கடல்லயே இல்லயாம்.
Absence of evidence is an evidence of absence!!

லெமுரியா-குமரிக்கண்டம் - 12

எல்லாம் சரி, கடல்லயே குமரிக்கண்டம் இல்லேன்னா, எங்கேதான் போச்சு, அல்லது, எங்கேதான் இருக்குன்னு கேட்டா, அதை இதுவரை உருவகப்படுத்திய முறையும், அதன் அடிப்படையில் தேடிய முறையிலும் தான் தவறு இருக்கிறது என்றே சொல்வேன்.
உதாரணத்துக்கு, காவிரிபூம்புகார் என்ற கடல்கோளால் அழிக்கப்பட்ட, இலக்கியத்தில் பலமுறை உருவகப்படுத்தப்பட்ட, மறைந்த தமிழர் நகரத்தை எடுத்துக்கொள்வோம்.
காவிரிப்புகும் இடத்தில், அதாவது முகத்துவாரத்தில் புகார் என்ற ஒரு நகரம் இருந்தது, அங்கே, யவனர் முதல், உலகின் அனைத்து மக்களும் வந்து இறங்கி, தமிழர்களுடன் வியாபார நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தனர் என்று படித்திருக்கிறோம். இதன் அடிப்படையில் தற்கால காவிரியின் முகத்துவாரத்துக்கு அருகிலும், கடலுக்குள்ளும் தேடியபோது, ஒன்றுமே கிடைக்கவில்லை.
அப்படியென்றால், இலக்கியத்தில் சொல்லியது பொய்யாகிறதே? பல தசாப்தங்களாக தேடியும் ஒன்றும் கிடைக்கவில்லையே, என்ன காரணமாக இருக்கும் என்று பேராசிரியர் ராஜன் என்பவருக்கு ஒரு ஆழ்ந்த யோசனை. திடீரென்று, நதிகள் தமது போக்கை மாற்றிக்கொள்பவையாயிற்றே, அப்படியென்றால், காவிரியின் பழங்கால சுவடுகளை, கடலில் கலந்த இடங்களை தேடுவோம் என்று ஒரு பொறி தட்டியது. செயற்கைகோள் படங்களின் மூலமும், களப்பணியில் மூலமும், தற்கால காவிரி முகத்துவாரத்துக்கு வடக்கே, சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் பழந்தடத்தை கண்டுபிடித்தார். அதனை துணைகொண்டு, அதற்கு கிழக்கே, கடலுக்கடியில் புகார் நகர சுவடுகளை, ஆதாரங்களை கண்டுபிடித்தார்.
பழங்கால பருவகால மாறுதல்கள், வெள்ளப் படிவுகளை அடிப்படையாகக் கொண்டே, சுமார் 700 ஆண்டுகளாக மணலுள் புதைந்திருந்த மணவாள மாமுனிகள் திருவரசு ஸ்ரீரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
அடுத்ததாக, குஷாலா ராஜேந்திரன் என்ற பேராசிரியர், இலக்கியத்தில் சொல்லப்பட்டதுபோல, சில ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் ஒரு ஆழிப்பேரலை தமிழக கடற்கரையோர நகரங்களை மண்ணால் மூடியதை கண்டுபிடித்தார்.
இப்ப, ரெண்டும், ரெண்டும் நாலுன்னு, தெளிவாகுதா? அதாவது, இலக்கியத்தில் சொல்லப்பட்டதை, ஒரு ஆதாரமா கொள்ளமுடியாது, அதற்குப்பதிலாக, அதை ஒரு க்ளூவாக கொண்டு, அறிவியற்பூர்வமா, தேடவேண்டிய இடத்தில, தேடவேண்டிய முறையில தேடணும்.
இலக்கியங்களில், புராணங்களில், கர்ணபரம்பரை கதைகளில், சிறிதாய் நிகழ்ந்த நிகழ்வை, கவிதை நயத்துக்காக பெருக சொல்வது மரபு. உதாரணத்துக்கு, நிலவைபோல் முகம், என்றால், எப்படி எடுத்துக்கொள்வது? பூமிக்கு வெளியே உள்ளவர் என்றா, நிலாவைப்போல் தேய்ந்து வளர்ப்பவர் என்றா, நிலாவைப்போல் ஒளி வீசும் முகம் என்றா, அல்லது, வட்டமுகம் என்றா? இது, படிப்பவர் மனநிலையை பொறுத்தது. அதேபோல், உயரமான மலைத்தொடர், என்றால், எது உயரம்? திபெத்தில் இருப்பவனுக்கு மேற்குதொடர்ச்சிமலை ஒரு குன்றுதானே? மலைக்கோட்டை, திருச்சிக்காரனுக்கு பெருசு, பொன்மலைக்காரனுக்கு மலைக்கோட்டை பெரிய மலைத்தொடராச்சே?
அதாவது, இலக்கிய, புராண, கர்ணபரம்பரை கதைகளை ஆதாரமா எடுத்துக்கொண்டு எதையாவது தேடுவது என்றால், அதை எழுதியவரின் சூழல், மனநிலை, சார்புநிலை ஆகியவற்றை கொண்டே புரிஞ்சுக்க முயல வேண்டும்; நமது தற்கால புரிதலின் அடிப்படையில் அல்ல, அல்ல, அல்லவே அல்ல.
அதாவது, நகரமே அழிந்தது என்று இப்போது சொன்னால், நமக்கு சென்னை, மும்பை போன்றவை நகரங்கள்; ஆனால், சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், முட்டம் என்ற கடலோர ஊரும், அதிலுள்ள மக்கள்தொகையும் தான் கடலோர நகரம்!
அடுத்ததாக, வெள்ளம், ஆழிப்பேரலை போன்றவற்றைப்பற்றிய பழந்தமிழரின் பார்வையில் தான் நமது புரிதல் இருக்கவேண்டும். அதற்கும் அடுத்ததாக, ஒருநகரம் அழிந்தபின் அங்கிருந்த மக்கள் உள்நாட்டைநோக்கி நகர்ந்து தமது குடியிருப்பை அமைத்துக்கொண்டார்கள் என்றால், (தொன்மதுரை, மூதூர், கபாடபுரம் போன்றவற்றை உதாரணமாக சொல்லலாம்), கடலிலிருந்தோ, நதிக்கரையிலிருந்தோ, எத்திசையில், எவ்வளவு தூரம் நகர்ந்தார்கள் எல்லாமே கற்பனையிலோ, அல்லது, அப்போதிருந்த தூர அளவைக்கும் தற்போதைய தூர அளவைக்கும் உள்ள வேறுபாடு தெரியவேண்டும்; இவற்றோடு, இந்நிகழ்வுகளை புவியியல் மாற்றங்கள், பருவநிலை மாற்றங்கள், புவி இடர்பாடுகள் நிகழ்ந்த காலநிலைகளை, அறிவியற் கண்ணோட்டத்தோடு, முன்னேறிய தொழிற்நுட்பங்களுடன் ஆராயவேண்டும்.
வெறும் உணர்ச்சிகளும், தமிழன்டாவ், தமிழன்டோவ், என்ற கூப்பாடுகளும் அறிவியற்பூர்வமாக தொன்தமிழர் நாகரீக நிகழ்விடங்களை கண்டுபிடிக்க உதவாது.
அப்ப என்னதான் செய்யலாம்?
விபரமாக அடுத்த, குமரிக்கண்டம் குறித்த கடைசி பதிவில் எழுதுகிறேன்.
கடைசிப்பதிவிற்கு பின்னூட்டமாக, இந்த தொடரை முதலில் இருந்து படித்தவர்கள், தமது சந்தேகங்களை எழுதலாம், புவியியல் அடிப்படையில் எனக்குத்தெரிந்தவரை பதிலளிக்க முயற்சிக்கிறேன்.


லெமூரியா - குமரிக்கண்டம் - 13

தொல்லியல் ஆய்வுகள் பண்டைய நாகரீகத்தைப்பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள உதவுவதோடு, மனிதகுல தோற்றம், நகர்வு, பரவல், நாகரிக பரிணாமவளர்ச்சி, ஆகியவற்றை சரியானபடி புரிந்துகொள்ளவும், சரித்திரகால நிகழ்வுகளாக செவிவழி செய்திகளை ஆதாரத்துடன் நிரூபிக்க உதவுகின்றன. உலகெங்கும் இதுவரை தொல்லியல் ஆய்வுகள் மண்ணுக்கடியில் புதைந்துகிடக்கும் பொருட்கள், கட்டிடங்கள், மனிதன் உபயோகப்படுத்திய கருவிகள் ஆகியவற்றை அகழாய்வு மூலம் வெளிக்கொணர்ந்து அவற்றை பலவித பரிசோதனைகளுக்கு உட்படுத்தி கிடைக்கும் தரவுகளின் அடிப்படையிலேயே இதுவரை இருந்திருக்கிறது. ஆனால் எங்கு தோண்டுவது? இந்த கேள்விக்கு இதுவரை சரியான விடை கிடைத்ததில்லை. இதுவரை தோண்டப்பட்ட இடங்களில் எல்லாம் தேவையான ஆதாரங்கள் கிடைத்ததில்லை; தோண்டப்பட்ட இடங்களும், இங்கு கட்டாயமாக ஆதாரங்கள் கிடைக்கும் என்று "நம்பப்படும்" இடங்களாகவே இருந்துள்ளன. அதேபோல் தரைமட்டத்தில் பொதுமக்களால் ஏதேனும் ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டோ, அல்லது வேறேதேனும் அதிர்ஷ்டவசமாகவோ தான் அகழாய்வுக்குழிகள் தோண்டப்பட்டு வந்திருக்கின்றன. இதனால் தொல்லியல் அகழாய்வு என்பது இதுவரை தொல்லியல் அறிஞர்களின் ஆதாரங்களின் அடிப்படையில்லாமல், அதிர்ஷ்டம், நம்பிக்கையின் அடிப்படையிலேயே இருந்து வந்திருக்கின்றது.
இதுவரை தொல்லியல் ஆய்வு என்பது, விளையாட போன சிறுவர்கள் கண்டுபிடித்தது, வீடு கட்ட அஸ்திவார பள்ளம் தோண்டும்போது கண்டுபிடித்தது, விவசாயத்திற்கு உழவு ஓட்டும்போது கண்டுபிடித்தது என்று (துர்)அதிர்ஷ்டவசமாக கண்டுபிடித்தவை தானேயொழிய முறையான தொல்லியல் ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளவை அல்ல. அப்படியே ஏதேனும் அகழாய்வில் அகப்பட்டால், மூட்டை கட்டி செல்லரிக்க விடுவார்களேயன்றி, கிடைத்த பொருட்களை முறையான ஆய்வு செய்து பன்னாட்டு அறிவியல் சஞ்சரிகைகளில் பதிப்பிக்க மாட்டார்கள். இதைச் செய்யாம அப்பறம் எப்படி தமிழன் பெருமையை உலகறியச் செய்வது?
அதேபோல், தொல்லியல் ஆய்வு என்பது சமீபகாலத்திலிருந்து, சற்றேறக்குறைய சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவான நில/மண் பகுதிகளிலேயே நடத்தப்பட்டு வந்திருக்கிறது. தொல்லியல் ஆய்வுப்போலவே, நிலவியல் ஆய்வுகள் என்பன பலகோடி ஆண்டுகளிலிருந்து, சில லட்சம் அல்லது, பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன்புவரை தோன்றிய பாறை/மண் பகுதிகளிலேயே நடத்தப்பட்டு வருகிறது. இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட காகக்கட்டத்தில்தான், மனிதனின் நாகரீக வளர்ச்சி, பரவல், ஆகியன நிகழ்ந்துள்ளன. இந்த காலகட்டத்தை, குறிப்பாக, இந்தகாலகட்டத்தில் நிகழ்ந்த பருவகால மாற்றங்கள், நிலவியல் மாற்றங்கள், மனிதன் உள்ளிட்ட உயிரிகளின் பரிணாம வளர்ச்சி போன்றவற்றை குறித்த ஆய்வுகளுக்கு தக்க அறிவியலார்களோ, அறிவியல் பிரிவோ இல்லை, இதுவரை அப்படிப்பட்ட ஆய்வுகளும், பெருமளவில் நிகழ்த்தப்படவில்லை.
ஸ்ரீபெரும்புதூர் அருகே சுமார் மூன்றுலட்சத்து எண்பத்தைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்கால மனிதன் வாழ்ந்தது, வேட்டைக்கருவிகள் போன்ற மனித நடமாட்டங்களுக்கான ஆதாரங்கள், கிடைத்தது சமீபத்தில் தெரியவந்து, அறிவியல் உலகின் உயர்ந்த சஞ்சிகையில் பதிப்பானது. அதேபோல், ஆங்கிலேயர் காலத்திலிருந்தே ஆதிச்சநல்லூர், கொற்கை, புகார் போன்ற இடம் அல்லாது, மிகச்சமீபமாக கீழடியிலும் மிகமேம்பட்ட நாகரிக மனித வாழ்விடங்களாக இவை இருந்தமைக்கு சான்றுகள் கிடைத்துள்ளன.
இதேபோல், அலகாபாத் அருகே சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், மனிதநாகரீகம் மேம்பட்டதாக இந்தியாவில் இருந்ததாகவும், சிந்துசமவெளி நாகரிகம் என்பதற்கு பதிலாக, சரஸ்வதி நாகரிகம் என்றே அழைக்கவேண்டும் என்ற கருதுகோளை தூக்கிப்பிடிப்பதாகவே அமைகிறது.
மிகச்சமீபத்தில் DNA அடிப்படையிலான ஆய்வுத்தரவுகள் இந்தியாவிலிருந்தே பண்டைய மனிதர்கள் மேற்குநோக்கி நகர்ந்ததாக ஒரு கருதுகோளை முன்னெடுக்கின்றன. இதுகாறும் ஒப்புக்கொள்ளப்பட்டதாக கருதப்பட்டுவந்த மேற்கிலிருந்து இந்தியாவுக்குள் வேதகாலத்துக்கு முன் மனிதர்கள் வந்ததாக சொல்லப்படும் கருதுகோளை மறுதலிக்கிறது.
சுமார் 385000 ஆண்டுகளுக்கு முன் மனித வாழிடமாக ஸ்ரீபெரும்புதூர் இருந்திருப்பதற்கான மறுக்கவியலா ஆதாரங்கள் கிடைத்திருப்பதை இதனுடன் ஒப்புநோக்கினால், பருவகால மாறுதல்களும் (climate change), வாழிடமாறுதல் (habitat change), பழங்கால பேரிடர் நிகழ்வுகளுமே (ancient catastrophic events -சுனாமி, ஊழிப்பெருவெள்ளம், பூகம்பம், நிலச்சரிவு, போன்றவை) மனிதவாழிடத்தை பூமிக்கடியில் புதையுண்டுபோக செய்திருக்கலாம், அதனோடு, மண்ணரிப்பு, நதிகளின் திசைமாறுதல் போன்றவையும், பண்டைய மனித வாழிட ஆதாரங்களை மறைத்திருக்கலாம் என்றும் கருத தூண்டுகின்றன.
அப்படியானால், மிகத்தொன்மையான வாழிடமாக இந்தியாவில் ஏன் பிறநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுபோல பண்டைய வாழிடங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை? ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டனவும் முறையாக, பன்னாட்டுத்தரத்தில் ஆவணப்படுத்தப்படவில்லை?
தற்போதுவரை நடத்தப்பெற்ற சிற்சில அகழாய்வுகள் புகார் நகரம் கடலுக்குள் பொதிந்திருப்பதையும், இலக்கியத்தில் குறிப்பிட்டபடி ஊழி வெள்ளம், போன்றவற்றால் பண்டைய புகார் துறைமுகம், கொற்கைத்துறைமுகம், அழிந்ததாகவும் தெரியவந்துள்ள உண்மைகள் புவியியல் ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளன. அதுமட்டுமல்லாது, லோத்தல் என்ற குஜராத்தில் உள்ள பண்டையநகரம் கடல்கொண்டதால் அங்கிருந்தமக்கள் மேட்டுப்பகுதிக்கு நகர்ந்து நகரத்தை கட்டமைத்துக்கொண்டதும், அந்த புதியநகரத்தைச்சுற்றி கடல்வெள்ளம் கொள்ளாதவாறு உயரமான மதில்சுவர் அமைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. அப்படியிருந்தும், அந்தப்பகுதி புதையுண்டுபோனது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள தலைக்காடு என்றபகுதியில் சிலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த பூகம்பத்தினால் ஒரு கிராமமே பூமியில் புதையுண்டு அங்கிருந்த கோவில் கோபுரம் போன்றவை மட்டுமே வெளித்தெரிகின்றன அதேபோல், காவிரியில் 8000 முதல் 4500 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த பெருவெள்ளங்களும், அதனால் வெள்ளபடிவுகளுக்குள் மூழ்கிப்போன தொல்நிலப்பரப்புகளும் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. காவிரியில் ஸ்ரீரங்கம் தீவில் யாத்ரி நிவாஸ் அருகே பலநூறு ஆண்டுகளுக்குமுன் இருந்த வராகப்பெருமாள் சன்னதி, மணவாளமாமுனிகள் திருவரசு ஆகியனவும் இருவருடங்களுக்குமுன் கண்டுபிடிக்கப்பட்டது. இவை வெள்ளபடிவுகளுக்கு கீழே புதையுண்டிருப்பது தெரிய வந்துள்ளது. (காண்க, Archaeological Prospection என்ற அறிவியற் சஞ்சிகையில் பதிப்பிக்கப்பட்ட எமது ஆய்வுக்கட்டுரை. சுட்டியில் கொடுக்கப்பட்டுள்ளது).
பண்டைய குறிப்புகளிலும் இந்த வராகசன்னதிக்கருகே சதுர்வேதிமங்கலம் என்ற கிராமமே இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது. அதேகுறிப்புகளில் காணப்படும் மணவாளமுனிகளின் திருவரசு இருப்பது உண்மையென கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அந்த கிராமமே பூமிக்கடியில் இருப்பது உறுதியாகிறது. இதை எப்படி அறுதிப்படுத்துவது? அகழாய்வு மூலம் மட்டுமே; அதன்மூலம் கிடைக்கும் பொருட்களை ஆவணப்படுத்துவது மூலம் மட்டுமே; அவற்றின் வயது, மூலாதாரம் ஆகியவற்றை துல்லியமாக நிர்ணயிப்பதன் மூலம் மட்டுமே.
இதுமட்டுமல்ல, இதுபோன்ற எத்தனையோ இடங்கள், பாடற்குறிப்புகளிலும், கல்வெட்டுகளிலும் காணக்கிடைக்கின்றன. இத்தகைய இடங்கள் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுதும் உள்ளன. இவற்றை எப்படி கண்டு, ஆய்ந்து, இந்திய, தமிழக நாகரிக தொன்மையை உலகுக்கு பறைசாற்றுவது?
பண்டையகாலத்தில் நிகழ்ந்த பேரிடர்கள் (சில இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன) கதைகள் அல்ல, நிஜம். என்ன, இவற்றை, எங்கே, எப்படி தேடுவது, கண்டுபிடித்தவுடன், முறையாக எப்படி பரிசோதிப்பது, பரிசோதிக்கத்தேவையான கருவிகள், துறை விற்பன்னர்கள் கொண்ட குழு/பரிசோதனைக்கூடம் என்பன தான் பிரச்சனை.
அதாவது, அகழாய்வு மேற்கொண்டாலும், அதன்மூலம் கிடைத்த பண்டையகால பொருட்களின் தன்மையை, வயதை, அப்பொருட்கள் வேறெங்கிருந்தும் கொண்டுவரப்பட்டு (வேற்றுநாட்டு நாணயங்கள் போன்றவை) புழக்கத்தில் இருந்திருந்து, புதையுண்டிருந்தால், அவற்றின் மூலாதார பகுதியை கண்டுபிடிக்க தேவையான நவீன பரிசோதனைக்கருவிகள் கொண்ட, பன்னாட்டுத்தரத்திலான துறை/பரிசோதனைக்கூடம் தமிழகத்திலோ, இந்தியாவிலோ இல்லை. இருக்கும் பரிசோதனைக்கூடங்கள்/கருவிகள் பிறத்துறை சார்ந்தவை, புவிசார்தொல்லியலுக்காகவே பணிசெய்பவை அல்ல.
கீழடியில் கிடைத்த பொருட்களை ஆவணப்படுத்துவதற்காக பிறமாநிலங்களுக்கு கொண்டுசெல்லவேண்டியிருந்ததை நினைவுகொள்ளவும்; அதனால் எதனை சமூக, அரசியல் போராட்டங்கள், கருத்துமோதல்கள் ஏற்பட்டன என்பதையும் சேர்த்தே நினைவுகொள்ளவும்.
அதாவது, தொல்லியல் ஆய்வுகள், "தொல்லியல் அறிஞர்களால்" தனியாக நடத்தப்பட்டால், லாட்டரி மாதிரிதான். அதுவும், குருட்டுப்பூனை, இருட்டு அறைக்குள் விட்டத்தில் பாய்வதுபோல்தான். எங்கயோ, எப்பயோ, வெற்றிகிடைக்கலாம்; எல்லா சமயங்களிலும் அல்ல. அதேபோல், புவியியல் ஆய்வாளர்களுக்கு சிலலட்சம் ஆண்டுகள் பழைய படிவுகள், மண் ஆய்வுகள் என்பது, எப்போதோ செய்வது, அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே. இந்த இருவகை ஆய்வுகளும், இணைந்து, பழங்கால பருவநிலை மாற்றங்கள் நிகழ்ந்த காலநிலை, கால அளவு, புவிபேரிடர் நிகழ்ந்த இடங்கள், அதனால் புவிஅமைப்பில், படிவுப்பாறைகளில் நிகழ்ந்த மாற்றங்கள், கடலோர, நதிசமவெளி புவிஅமைப்பியல் மாற்றங்கள், இயல்புக்கு மாறான பாறை, புவிஅமைப்பியல் நிகழ்வுகள் நடைபெற்ற, நடைபெற்றிருக்கக்கூடிய கால, இட, தகவமைப்புகள் ஆகியவற்றை துல்லியமாக ஆராய்ந்தால், தேவையான க்ளூக்கள் கிடைக்கலாம்; அதனை அடிப்படையாக கொண்டு மேலதிக தரவுகளை திரட்டி, இலக்கிய, புராண, கர்ணபரம்பரை கதைகளை அறிவியற்பூர்வமாக முன்னேறிய தொழிற்நுட்பங்களை கொண்டு ஆராய்ந்து, முடிவுகளை அறிவிக்கலாம்.
இச்சூழ்நிலையில் இரு அவசர, அத்யாவசியத் தேவைகள் உள்ளன:
1. இந்தியாவும், முக்கியமாக தமிழகமும் பண்டைய கற்காலத்திலிருந்தே மனிதவாழிடமாக இருந்துவந்தவை. இதனை இலக்கிய, கல்வெட்டு, செப்புப்பட்டய ஆதாரங்களோடு சொன்னால்மட்டும் போதாது. நவீன அறிவியற்கருவிகளின் சோதனை தரவுகளுடன், பன்னாட்டு தரத்தில் சோதிக்க, அகழாய்வு மேற்கொள்ள, அகழாய்வின்போது கிடைக்கும் பொருட்களை ஆவணப்படுத்த, தனித்துறை, பரிசோதனைக்கூடம், பரிசோதனைக்கருவிகள், இதனில் தேர்ந்த அறிவியற்குழு தேவை.
2. இந்தக்குழு/துறை/பரிசோதனைக்கூடம், முதலில் தமிழகத்தில் உள்ள தொல் வாழிடங்களை, பரிசோதித்து, ஆவணப்படுத்தி, வயது போன்றவற்றை பன்னாட்டு தரத்தில் அறுதிசெய்து மனிதநாகரீகத்தின் தொட்டில் இந்தியக்கண்டமா, அல்லது இந்திய வந்தேறி கண்டமா, இயற்கைப்பேரழிவுகள் எவ்வாறு பண்டைய நாகரிகங்களை பாதித்தது, மனித இடப்பெயர்ச்சி எங்கிருந்து, எத்திசையில், எவ்வப்போது, எதனால் நிகழ்ந்தது என்பதை அறிவியற்பூர்வமாக ஆதாரத்துடன் பதிவு செய்யவேண்டும்.
இது எதையும் செய்யாமல், தமிழன்டாவ், கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி என்று தமிழ்நாட்டுக்குள்ளேயே கோஷம் போட்டுகொண்டு மீம்ஸ் அறிவியல் பண்ணிக்கொண்டும் இருக்கலாம்.
என்ன செய்யப்போகிறோம் நாம்?
லெமுரியா-குமரிக்கண்டம் குறித்த எனது தொடர் பதிவு இத்துடன் முற்றிற்று.
இந்த தொடரை முதலில் இருந்து படித்தவர்கள், ஏதேனும் சந்தேகம், மாற்று கருத்து இருப்பின் உணர்வு அடிப்படையிலல்லாது, அறிவியற்பூர்வமான பின்னூட்டங்களை எழுதலாம். புவியியல் அடிப்படையில் எனக்கு தெரிந்தவரை பதிலளிக்க முயல்கிறேன்.

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...