Friday, February 26, 2021

பொங்கல் திருநாள் சமயம் சாரா ஒரு திருநாளா?

 கேள்வி: தமிழர் பொங்கல் திருநாள் சமயம் சாரா ஒரு திருநாளா?

முனைவர் இரா. சிவகுமர் (USM Penang) அவர்களின் விளக்கம்.
அன்புடைய அனைவருக்கும் திருச்சிற்றம்பலம்.
எழுதும் ஊக்கம் : எனது மகனைப் போன்று, பல வருங்கால தமிழ் குழந்தைகளும், அவர்களை வழிநடத்தும் தமிழாசிரியர்களும் தவறான கொள்கையில் தமிழர் பண்பாட்டைப் புரிந்துகொள்வதிலிருந்து தவிர்க்கவே இக்குறும் ஆய்வு படைக்கப்படுகின்றது.
அண்மையில் மிகவும் பரப்பரப்பாகப் பேசப்பட்ட பொங்கல் திருநாள் கையேடு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. பொங்கல் திருநாள் சிறப்புகளைத் தமிழ் மாணவர்களுக்கு நன்முறையில் சேர்க்க வேண்டும் என்ற தமிழ் நெறி காப்பகத்தின் நல்லெண்ணம் , சீரிய முயற்சி நன்றுடையதாயினும், அவர்கள் மாணவர்களுக்கு எடுத்துச் செல்லும் தகவல்கள் இரண்டு காரணங்களால் தமிழ் மரபின் ஆணி வேரையே தகர்ப்பதாக அமைகின்றன.
*1) தமிழர் பொங்கல் திருநாள் சமயம் சாரா ஒரு திருநாள் என்ற முதல் கருத்து. ( இந்தக் கருதுகோள் முற்றிலும் சான்றுகளற்ற, ஒரு கொள்கையின் நம்பிக்கையில் எழுந்த ஒன்று) பொங்கல் திருநாள் கையேடு பக்கம் 10)*
( *2) தமிழ்ப் புத்தாண்டு சுறவம்( தை ) திங்களில் பிறக்கின்றது என்ற இரண்டாம் கருத்து. ( இந்தக் கருதுகோள் முற்றிலும் தமிழர் வானியல் அறிவியல் ஆய்வு சாராது எழுந்த, தமிழ் அறிவியல் மரபைப் பெரிதும் மீண்டும் அரசியலுக்கு உட்படுத்திய ஒரு கூற்று) ( பொங்கல் திருநாள் கையேடு பக்கம் 10)*
சார்பின்றி ஒரு நேரிய பார்வையில் ஆய்வு செய்வது யாவருக்கும் நன்மை பயக்கும் என்பதால்,
முதலில் தமிழர் பொங்கல் திருநாள் சமயம் சாரா ஒரு திருநாள் என்ற கருத்தை விரித்து ஆய்வு செய்வோம்.
நமது சிந்தனை வறுமையை ( thinking poverty ) வலியார், ஒப்பார், எளியார் இம்மூவருக்கும் தெளிவுபடுத்த ஆழ விரிக்காது எளிமையான ஒரு சிறு ஆய்வு விளக்கமாகத் தருவது சாலப்பொருந்தும்.
முதலில் தமிழர் பொங்கல் திருநாள் சமயம் சாரா திருநாள் என்போருக்குச் சில கேள்விகள் ? அதனோடு பதில்கள்.
*1. முதலில் சமயம் என்பதின் பொருள் என்ன ?*
‘மதம், சமயம் என்னும் இரு சொல்லும் ஒரு பொருளெனவாயினும், தம்முள் நுண்பொருள் வேறுபாடுடையன. ஒரு தெய்வத்தை அல்லது இறைவனை மதித்து வழிபடுவது மதம்; இறைவனை இம்மையிலேனும் மறுமையிலேனும் அடைவதற்குச் சமைவது சமயம்.’ இது மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர் தமிழர் மதம் என்ற நூலில் சமயத்திற்குத் தரும் வரையறையையே பொதுவாக ஏற்று மேலும் விரிப்போம்.
சமயக் கலை சொல்லிற்குப் பாவாணரின் வேர்ச்சொல் ஆராய்ச்சி:
i. அம் - அமர். அமர்தல் = பொருந்துதல், அன்பால் உள்ளம் ஒன்றுதல்.
ii. அம் - அமை. அமைதல் = பொருந்துதல், அடங்கியிருத்தல், கூடுதல், நெருங்குதல், நுகர்ச்சிக் கேற்றதாதல், தக்கதாக வாய்த்தல்
iii. அமை - அவை = கூட்டம்.
iv. அமை - அமையம் = பொருந்தும் நேரம், ஏற்ற வேளை, தக்க செவ்வி, வினை நிகழும் சிறுபோது.
v. அமை - சமை. சமைதல் = ஆக்கப்படும் அரிசி போலும் பூப்படையும் கன்னி போலும் நுகர்ச்சிக் கேற்றதாதல், பதனடைதல், இனிதாகச் செய்பொருள் வினை முடிதல், அணியமாதல்.
v. சமை - சமையம் = பதனடைந்த அல்லது நுகர்ச்சிக் கேற்ற நிலை, வினைக்குத் தக்க வேளை.
vi. சமையம் - சமயம் = ஆதன் (ஆன்மா) தான் இறைவனை அடைதற்கு அல்லது பேரின்பத்தை நுகர்வதற்குத் தன்னைத் தகுதிப் படுத்தும் முக்கரணவொழுக்கம்.
ஆகவே, சமயம் என்ற தமிழ் கலைச்சொல் இறைவனின் திருவருளில் சமைவது என்று தெளிவாகப் பொருள் கொள்ளலாம்.
ஆனால் பொங்கல் திருநாள் கையேட்டில் பொங்கல் திருநாள் சமய விழாவா? என்ற கேள்வி எழுப்பி பொங்கல் திருவிழா சமூகம் சார்ந்த பண்பாட்டு விழாவாகவே இருந்து வருகின்றது. அது சமயம் சார்ந்த விழாவன்று. பொங்கல் திருநாளைச் சமயத் திருவிழாவாகப் பார்ப்பது மிகத் தவறு (பொங்கல் திருநாள் கையேடு பக்கம் 10) என்று பொங்கல் திருநாள் கையேட்டை உருவாக்கியோர் (பொ.கை.உ) எழுதியுள்ளனர்.
இக்கருத்தில் இரண்டு பிழைபாடுகள் உள்ளன.
(பொ.கை.உ) : அது சமயம் சார்ந்த விழாவன்று என்ற முதல் கருத்து.
மறுப்பு:
1) முதலில் இவர்கள் சமயம் என்ற சொல்லுக்குச் சரியான வரையறையைச் செய்யாது, எதனை இவர்கள் சமயம் என்று கூறமுயல்கின்றார்கள் என்பது தெரியவில்லை.
2) பொங்கல் சமயம் சார்ந்த விழாவன்று என்று எந்தச் சாரத்தை அல்லது சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முடிவுரைத்துள்ளனர் என்பதுவும் தெரியவில்லை.
(பொ.கை.உ) : பொங்கல் திருநாளைச் சமயத் திருவிழாவாகப் பார்ப்பது மிகத் தவறு. இது முற்றிலும் பண்பாட்டுத் திருவிழா என்பதை யாராலும் மறுக்க இயலாது. தமிழரின் பண்பாட்டில் ஊறி நிற்கும் பொதுமை உணர்வையும் அறிவுப் பண்பாடுகளையும் வெளிபடுத்தும் விழாவாக அமைவதே பொங்கல் திருநாள் ( பொங்கல் திருநாள் கையேடு பக்கம் 10).
மறுப்பு : தமிழ் இன உணர்வை மேலோங்க செய்வதற்காக, பொங்கல் திருநாளைச் சமய திருவிழாவாகப் பார்ப்பது மிகத் தவறு என்று மீண்டும் தங்களின் சமய காழ்ப்புணர்வை இதில் பதிவு செய்துள்ளனர்.
தமிழர் பண்பாடு மனித நேய அற ( பொதுமை) உணர்வை எதிலும் எங்கும் என்றென்றும் போற்றும் ஒரு மரபுடையது என்பதைத் தமிழின் மாண்புணர்த்த எந்தத் தமிழரும் மறுக்க மாட்டார். இருப்பினும் இவர்கள், தமிழர் இனமா? தமிழர் சமயமா? என்ற இரண்டு கேள்விகளைத் தாங்களே உள்முகமாக உருவாக்கி, இனத்தை முதன்மை படுத்த, தமிழர் இனமே எங்களுக்குத் தேவை, தமிழர் ஏற்கும் சமயம் தேவையில்லை என்ற தங்களின் தனிப்பட்ட கொள்கையை இதில் புகுத்த முயன்றுள்ளதைத் தெளிவுடைய எந்தத் தமிழரும் ஏற்க மாட்டார்.
தமிழர் இனத்தின் பண்பாட்டை , அறிவியலாகவும், மெய்யறிவாகவும் , உயர் ஏரணமாகவும் ( Higher Order Logics) இன்றளவும், மாண்புற செய்திருப்பது தமிழ் அருளாளர்கள் உருவாக்கித் தந்த நமது சமயமே. இன உணர்வும், அவ்வுணர்வைச் செம்மையாக நெறிபடுத்தி இறைநெறி மெய்யறிவு மரபில் நிற்கச்செய்ய சமயமே அடிப்படை கருவூளமாகுவதை ஏற்காது இவர்கள் முரண்படுவது தெளிவு.
தமிழர் இன பண்பாடும் ( மரபும் ) , சமயமும் உடலும் உயிரும் போன்றது. தமிழ் இன பண்பாடு தமிழர் வாழ்வறிவியலையும், சமயம் மனிதப் பிறப்பின் முடிவையும் ( பிறவிப் பெருங் கடல் நீந்துவர் - குறள் 10) நிறுத்துவதாகும். சமயம் நமது பண்பாட்டிற்கு அரணாகும் (சுற்றுமதிலாகும்). அரண் ( மதில் ) தகர்க்கப்படுமானால், கவசம் இல்லாது பண்பாடு சீர்குலைந்து, பாழ்பட்டு வீழும். விரிவு பின்பு.
(பொ.கை.உ) : உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே …
என்று இறைநெறியை நன்றியுணர்வோடு வெளிபடுத்திக் காட்டும் அறத்தின் திருவிழா இவ்விழா ( இப்பொங்கல் விழா) . ( பொங்கல் திருநாள் கையேடு பக்கம் 10).
மறுப்பு: உயிர்களின் வாழும் உரிமையை எவ்விதத்திலும் கெடுக்காது, தானும் உயர்ந்து , ஒவ்வொரு உயிரின் மேன்மைக்கும் துணைச் செய்ய முயலும் தொண்டே இறைத்தொண்டு என்பதில் யாவரும் ஒத்தக் கருத்துடையோர் ஆவோம். ஆனால், சமயத்தைப் புறம் தள்ளி, இறைநெறியை நன்றியுணர்வோடு வெளிபடுத்துவது எவ்வாறு ஒக்கும். இங்கு அவர்களின் கருத்தோடு அவர்களே முரண்படுவதைக் காணலாம்
*2. தமிழர் என்பவர் சமயம் சாரா மரபினரா ?*
இல்லை. பண்டைகாலம் தொட்டுத் தமிழர்கள் இறைக்கொள்கையைத் தங்களின் வாழ்வியல் ஆதாரத்தளமாகக் கொண்ட மரபினர் என்பதைத் தொல்காப்பியம், சங்கத்தமிழ் இலக்கியம் (பத்துப்பாட்டு + எட்டுத்தொகை), பதினெண்கீழ்க்கணக்கு(திருக்குறள் உட்பட அனைத்து 18 நூல்கள்), அருளாளர்கள் வளர்த்த தெய்வத்தமிழ் இறைக்கொள்கையைத் தமிழர் வாழ்க்கையில் என்றென்றும் பதிக்க , வளர்க்க, நிலை நிறுத்தப் பெரிதும் முயன்று உள்ளதை எந்த நற்றமிழ்க் கற்றவரும் இல்லை என்று மறுக்க முன் வர மாட்டார். திருவள்ளுவர் திருக்குறளில் பண்பாடு கூறுகளைப் பின்வைத்து, இறைவனை முதன்மைபடுத்தி, சமயத்தின் தேவையை முதன்மை படுத்தியதை வள்ளுவம் கற்ற ஒவ்வொரு தமிழரும் அறிவார். ஆகவே இறைக்கொள்கை இல்லை என்பாருக்குத் திருக்குறள் தேவை இல்லை.
முதலில் நெறிபட திருக்குறளின் பத்துக் கடவுள் வாழ்த்து கற்றத் தமிழர்களுக்குத் திருவள்ளுவர் கூறும் ஒரே குறள்
'கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்'.
(கடவுள் வாழ்த்து குறள்:2)
தன் ஆணவச் செருக்கால் வாலறிவன் நற்றாள் தொழாது இறுமாப்பு பேசுபவர் பயனற்றக் கல்வியைப் பெற்றவர்கள் ஆவர் என்று பன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே நம்மைத் திருவள்ளுவர் எச்சரிக்கிறார். இறைக்கொள்கை மறுப்பாளர்கள் கற்றக் கல்வியின் தகைமை பயனற்றது என்று தெளிவாக உறுதிபடுத்தி அத்தோடு இறைக்கொள்கை தேவையின் நிலைப்பாட்டையும் தமிழர்களுக்கு எடுத்து விளம்புவார் திருவள்ளுவர். சமயம் ஒன்றே இறைவனைத் தொழவும், இறைவன் நற்றாள் போற்றும் முறையையும் கற்றுக்கொடுக்கும். மேலும் தமிழ் அருட்பெருந்தகைகள் வளர்த்த நமது சமயம் உயர் ஏரண ( Higher Order Logics) அறிவியல் மெய்யறிவு என்பதை மறந்துவிடக்கூடாது.
இதுபோல இறைக்கொள்கை தேவையின் பல்லாயிர எடுத்துக்காட்டுகளைத் தொல்காப்பியம் முதல் பல நற்றமிழ் அறிவு நூல்களிலிருந்து எடுத்துக் காட்டலாம்.
ஆகவே, பண்டு தொட்டு இறைமையில் சமையும் சமயத்தைச் சார்ந்தே தமிழர்கள், பண்பாடு, அறிவியல், மொழி அத்தனையும் தங்களின் அன்றாட வாழ்வியலில் போற்றி வளர்த்தனர் என்பதில் கடுகளவும் ஐயமில்லை.
*3. திருநாள் என்பது என்ன ?*
நிறையே அருளே உணர்வொடு திரு என - பொருள். மெய்ப்:25/3
என்று தொல்காப்பியம் திருவிற்குச் செல்வத்தைக் கடந்த தெய்வ நிலை உடைய ஒரு பொருளையும் தருவதைக் காணலாம்.
திரு என்பதற்குச் செல்வம் தவிர்த்துத் ‘தெய்வம் பொருந்தும்’ என்றும் பொருள்கொள்வது தமிழ் மரபு. ஆகவே ‘திருநாள்’ என்பது ஒரு நாளை தெய்வம் பொருந்தும் நன்னாளாக மாற்றும் திறனை ஒரு மனிதனுக்குத் தருவதாகும். தமிழர்களின் திருநாள் குறிப்பிட்ட நாள்மீன், சூரியன், மதி, கோள்கள் ஒன்று இணையும் அல்லது சேரும் நாள்களின் செலவு அல்லது இருப்பியலுக்கு ஏற்ப, சிறப்புகளுக்கு ஏற்ப தமிழர்கள் திருநாள்களை வானியல் அடைப்படையில் நுட்பமாகத் தேர்வு செய்தனர் என்பதற்குப் பல சங்கக் காலச் சான்றுகளே போதுமானது.
எடுத்துக்காட்டுகள்:
*கார்த்திகை திருநாள்:*
கார்த்திகை விண்மீனை “அறுமீன்” என்றும் அழைத்துள்ளனர். கார்த்திகைத் திங்களை “அறஞ்செய்; திங்கள்” (நற்றி-202) என்று நற்றிணை பகரும். வீடுகளும், தெருக்களும் ஒளிவிளக்குகளால் அழகுறுத்தப்பட்டிருத்தல் வேண்டும். அதற்குச் சான்றாக அகநானூற்றுப் பாடல் நமக்கு ஒரு சான்று பகர்கிறது.
”மழையால் நீங்கிய மாசு விசும்பின்
குறுமுயல் மறுநிறம் கிளர மதிநிறைந்து
அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர” (அகம்-141)
என்பதன் மூலம் அக்கால மக்கள் இவ்விழாவின்பொழுது தங்களது வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றினர்.
இப்படிச் சமயம் சார்ந்த திருநாள்கள் தமிழர்களின் நெடுநாள் வாழ்வியலில் இருந்திருப்பதற்கு மறுக்க இயலா பல சான்றுகள் நமக்கு இருக்கின்றன.
i) *தை நீராட்டு விழா:* ( தையில் நீராடிய படுவாளோ-கலி-13 ),
ii) *திருவோணம் விழா:* ( மாயோன் மேய ஓண நண்ணாட -மதுரைகாஞ்சி-591 ),
iii) *இளவேனில் விழா:* ( வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுதன்றோ-கலி-35),
iv) *நீர் விழா:* ( ஓண்பொறிப் புனைகழல் சேவடிப் புரள -அகம்-376 ),
v) *திருப்பறங்குன்றத் விழா:* (தண்பறங் குன்றத்து இயல்அணி நின்மருங்கு சாறுகொள் துறக்கத்த வளொடு மாறுகொள்வது போலும் மயிற்கொடி வதுவை -பரிபாடல்-19),
vi) *வேங்கட விழா:* ( விழவுடை விழுச்சீர் வேங்கடன்-அகம்-61 ),
vii) *உள்ளி விழா:* ( மணியரை யாத்து மறுகின் ஆடும் உள்ளி விழாவின் அன்ன-அகம்-368 ),
viii) *பங்குனி விழா:* ( பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்-அகம்-137 ),
ix) *பூந்தொடை விழா:* ( பூந்தொடை விழாவின் தலைநாள் அன்ன தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம் -அகம்-187 ),
x) *கோடியர் விழா:* ( கோடியர் விழவு கொள் விறலி பின்றை முழவன் போல்-அகம்-352 ) ,
xi) *இந்திர விழா:* ( இந்திர விழாவிற் பூவின் அன்ன-ஐங்குறு-62 )
xii) *வெறியாட்டு விழா:* ( சிறுதிணை மலரொடு விரைஇ மறியறுத்து வாரணக் கொடியோடு வயிற்பட நிறீஇ ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும்-திருமுருகாற்றுப்படை 218-220 )
அதுபோலவே பொங்கல் ஒத்த திருநாளை நெல்லோடு வேயப்பட்ட நெல்லந்தாள் கூரை வீடும், கருப்பஞ்சருகு வேய்ந்த கூரை வீடுகளும் தனித்தனியே விழாக் கொண்டாடப்பட்ட களம் போலப் பொலிவுடன் காட்சி தருவதாக சங்கப் புலவர் குறுங்கோழியூர் கிழார் பதிவு செய்வார் .
அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த
ஆய் கரும்பின் கொடிக் கூரை,
சாறு கொண்ட களம் போல,
வேறு வேறு பொலிவு தோன்றக் ( குறுங்கோழியூர் கிழார், புறம் 22)
ஆகவே இப்படி தமிழர் ஏற்று போற்றிய திருநாள்கள் என்பதே இறைவனின் திருவருளில் சமைவது என்ற பெரும் சமய நிகழ்ச்சிகளாகவே இருந்துள்ளன; இருந்தும் வருகின்றன என்பதற்குச் சங்கக் கால சான்றுகளே போதுமானது.
*4. தைப்பொங்கல் திருநாள் என்பது என்ன ?*
தைப்பொங்கல் நாம் உண்டு வாழும் வாழ்விற்கு அறம் செய்யும் உழவைப் போற்றும் திருநாள் ஆகும். உழவைப் போற்றும் உழவருக்கு மட்டும் அல்லாது வடகோள அனைத்து உயிர்களுக்கும் அறம் செய்யும் கிழானாக பூமியின் தென் அயணச் செலவை முடித்து வட அயணம் வருகை புரியும் ஞாயிறை ஏற்றுப் போற்றும் தையில் பிறக்கும் நன்னாளும் அதுவேயாகும்.
இங்கு உழவர்கள் தங்களின் உழவுக்கு ஆதாரமாக இருக்கும் வளம் தரும் நிலமகளை (மண்ணை) வளம் தரும் திருமகள் அம்மையின் வடிவாக, பெரும் நல்லாளாகக் கண்டு வழிபடுவது உழவர்களுக்கே உள்ள மரபு. இம்மரபின் அடி ஒற்றி திருவள்ளுவர்,
'இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்'. (குறள் - 1040)
என்பார். நிலம் என்பது, ஒரு மண்ணல்ல, எல்லா வளங்களையும் அள்ளித்தரும் பெரும் தாய் என்பதை வலியுறுத்தி உழவர் வணங்கும் மண்ணின் உணர்வை ஆழ உள்வாங்கி மண்ணை (நிலமகளை) நல்லாள் என்பார் திருவள்ளுவர். அவள் கருணையில் வாழும் நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று சோம்பித் திரிவதை அந்நல்லாள் கண்டு நகைப்பாள் என்று மிகப் பாங்குடன், உழவர் மன நலம் காண்பார் வள்ளுவர்.
மண்ணை அம்மையாகக் கண்ட உழவர், வட அயணம் வரும் ஞாயிறு இடர் தீர்க்கும் தெய்வ அருளாக, அப்பனாகக் கண்டு வணங்கும் மரபையும் கொண்டிருந்தனர்.
கலித்தொகையில் சங்கத் தமிழ் புலவர் பெருங்கடுங்கோ
ஞாயிற்றுப் புத்தேள் மகன் கலி' 108/13
என்பார் எளியோர் புரிய கூறுவோமானால் ஞாயிற்றுத் தெய்வ விண்ணுலகத்தின்(புத்தேள்) மகன் என்று மாந்தனை (தலைவனை) அழைப்பார். இங்கு இரண்டு உறுதிபாடுகளைக் காணலாம் . ஒன்று ஞாயிறுத் தெய்வம் இயங்கும் உள்பொருளாகவும் அல்லது இயவுளாகவும், உள்ளுறை உவமத்தில் ஞாயிறு, அப்பன் தகுதி பெறுவதையும் காணலாம்.
அத்தோடு அல்லாது, ஞாயிறு தோன்ற மனிதனின் இடர் இருள்போல மாய்ந்து போகும் என்பார்.
'ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது என் ஆய்_இழை உற்ற துயர்'- கலி 145/65
மேலும் சங்கப்புலவர் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், தமது பதிற்றுப்பத்தில் ( 58)
'புல் இருள் விடியப் புலம்பு சேண் அகலப்
பாய் இருள் நீங்கப் பல் கதிர் பரப்பி
ஞாயிறு குண முதல் தோன்றியா அங்கு'
என்பதன் வழி,மக்கள் உள்ளம் உவப்பக் ( மகிழ ) , கடும் இருள் சிறிது சிறிதாகக் மறைந்து விடிய, புலம்பச் செய்யும் தனிமை, கவலை அகல, அகன்று விரிந்த இருள் நீங்கப் பல கதிர்கள் பரப்பி ஞாயிறு தனது முதல் இயல் குணத்தை முழுமையாகப் பெற்றுத் தோன்றுமாம் என்பார்.
ஆகவே, முருக தெய்வப்புலவர் நக்கீரர் கூறுவது போல பலர் புகழ் ஞாயிறு ( திருமுருகாற்றுப்படை 2) இறைமை சமையும் இயங்கு உள் பொருளாக இயவுளாக உலகில் இருந்து தெய்வ ஆளுமை நிறைந்த இறைமையை மக்களுக்கு ஊட்டுவதை உழவர்கள் தங்களின் திருநாளாகக் காண்பது, கொண்டாடுவது , எந்தத் தமிழருக்கும் வியப்பில்லையே.
5. சான்றோர் மரபு வழி பேணும் தமிழர்கள், பொங்கலின் திருநாள் அன்று உலகில் உழவு சிறக்க, மண் வளம் பெருக, புன்செய்யும், நன்செய்யும் செழிக்க உழவர்களுக்காக இறைவனை வேண்டி இறைஞ்சுவது எவ்வளவு
அருமையான
மனித நேயம், தமிழர் பண்பாடு உயர்த்தும் முயற்சி, இறைக்கொள்கையின் மாட்சி. தமிழர் தங்களுக்குள் ஏற்கும் தெய்வ உணர்வைச் சிறுமை படுத்துவது போல் பொங்கல் திருநாளைச் சமய திருவிழாவாகப் பார்ப்பது மிகத் தவறு என்று கூறி, இறைமறுப்பினை மறைமுகமாகப் புகுத்தி, தமிழர் பொதுமை உணர்வு பேச முயல்பவர்கள் தங்களின் மரபைத் தாங்களே அழிப்பதோடு தங்களின் அடையாளங்களை இழப்பதற்குத் தயாராகி வருகின்றனர். சமயத்தை மூட்டைப்பூச்சியாக எண்ணி, வீட்டையே கொளுத்த முடிவெடுத்தக் கதையாகத் தெரிகிறது இவர்களின் அணுகுமுறை.
6. பொங்கல் திருநாளுக்கென்றே, ஆழமான சமய, பண்பாட்டுச் செய் முறைகளும் வழி முறைகளும் உள்ளன. வீட்டின் வெளியே கரும்பு கட்டி, நிலமகள் வணங்கி மண்ணில் குழியிட்டுப் புதுப் பானை வைத்து உமிகுத்தரிசி போட்டுப், பொங்கி பொங்கலோ பொங்கல் என்று சூரியனை வணங்கி முடிக்கும் வரை ஆழமான பொருள் பொதிந்த, ஒரு நெடிய பொங்கல் செய்முறை மரபு தமிழர்களுக்குக் குறிப்பாக தமிழ் உழவர்களுக்கு உண்டு.
7. ஆனால் முரண்பாட்டிற்கு ஒரு கேள்வி கேட்போமே .
உழவுக்கு உலக பொதுமை உண்டு மறுப்பதற்கில்லை.
*அப்படியானால் பொங்கல் திருநாளைப் பொதுமையாக்குவதில் என்ன தவறு? சமயம் சாரா பொங்கலை யார் வேண்டுமானாலும் கொண்டாடுவதில் தமிழர்களுக்கு என்ன சிக்கல்?*
என்று கேட்போருக்கு,;
உண்மை; உறுதியாகக் கொண்டாடலாம் என்பதே பதில்.
சமயம் நீக்கப்படுமேயானால் இம்மரபுகள் யாவும் எப்படி சீர்குலைந்து பாழ்பட்டுப் போகும் என்பதைப் பொங்கல் சமயம் சாரா கொள்கையினர் அறிவதற்காக சிறிது விரித்துக் காண்போம்.
தமிழர் மரபு பேணாது, சமயம் சாரா பொங்கலைத் ‘தெய்வத்- திரு நீக்கிய’ மனமகிழ் (உளக்களிப்பு) நாளாகக் கொண்டாட, எவருக்கும் உரிமை உண்டு.
தமிழர் சமயம் சாரா பொங்கலைக் கொண்டாட விரும்புவர்களுக்கு, என்னவேண்டுமானாலும் செய்ய முழு உரிமைகள் உண்டு.
i) இவர்கள் பொங்கலைக் கோதுமையில் சமைத்தாலும் சரி , பிரியாணியாகச் சமைத்தாலும் சரி, புலால் கலந்தாலும் சரி, பொங்கலை அடுப்பில் வைத்தாலும் சரி, உலையில்(furnace) வைத்தாலும் சரி, தணலியில் (oven) சமைத்தாலும் சரி, ஒரு புலாலை வெதுப்பியில்(gril /broiler) வெதுப்பி கொக்கரக்கோ என்று கூவினாலும் இதில் எதை அவர்கள் செய்தாலும் யாருக்கும் ஒரு கேள்வி கிடையாது.
ii) இவர்கள் அறம் செய் கிழான் ஞாயிறு பூமியின் தென் அயண செலவை முடித்து வட அயணம் வருவதை எல்லாம் மடமை என்று கூறி , தேவையற்ற ஒன்றாகத் தள்ளி, தான் தோன்றியாகத் தங்களுக்கு எந்தத் திங்கள் ( மார்கழியோ, பங்குனியோ) அல்லது மனமகிழ் கொண்டாட்ட நாளாக எந்த நாள் தோன்றுகிறதோ, தாராளமாகப் பொங்கல் மனமகிழ் நாள் என்ற பெயரில் கொண்டாடட்டும்.
iii) ஞாயிறை ஏற்றுப் போற்றும் தையில் பிறக்கும் நன்னாளுக்குக் காத்திருக்கும் தமிழர்களைப் பார்த்து, நிலமகளை வணங்காதே, சூரியனை வணங்காதே மதியாதே, தெய்வம் துதியாதே என்றெல்லாம் உழவர், உழவரோடு சேர்ந்து மண் வாசனை போற்றித் தமிழ்ச் சமய மரபு ஒழுகுபவர் உணர்வுகளுக்கு எந்த நோகுதலையும் செய்யாது, சமயம் சாரா தங்களின் மனமகிழ் பொங்கல் கொண்டாட்டத்தைச் செய்யட்டும்.
இவர்களை யாரும் எவரும் எதுவும் கேட்கப்போவதில்லை. யாருக்கும் எந்தப் பாதக உணர்வும் இல்லை. ஆனால் இதுவா தமிழர் பண்பாடு அல்லது மரபு காக்கும் முறை ? மனித உணர்வுகளை உசுப்பேற்றிவிட அல்லது தூண்டிவிட ஒரு வழி போதும், ஆனால் சீர்கெடும் அதனைக் கட்டுப்படுத்தி ஓர் ஒழுங்கிற்குக் கொண்டுவர பல்லாயிரம் வழிகளும், நீண்ட காலமும் தேவைபடுவதை, நாம் யாவரும் அறிந்திருக்கவில்லையா? இறைவுணர்வில் எழும் சமயம் ஒன்றுதான் அகவொழுங்கினை நெறிபடுத்தி செம்மை செய்து, புற ஒழுங்கினை முறைபடுத்த இயலும் என்பதை நாம் ஏன் ஆழ் உள்ளத்தில் ஏற்க மறுக்கிறோம்?
8. பண்டு காலம் தொட்டே பொங்கல் திருநாள், இறைமை சமையும் திருநாளாக இருக்க, உழவர் உணர்வை உணராத தமிழர்கள், உழவு மண் வாசனை அறியாத , வள்ளுவ இறைக்கொள்கை நெறி நின்று கல்லாத சமயம் , திருநாள் போன்ற சொற்களுக்கு நிறை பொருள் காணாதவர்கள் பொங்கல் திருநாள் சமயம் சாரா ஒரு கொண்டாட்டம் என்று தமிழர்களிடையே ஒரு புது குழப்பத்தை ஏற்படுத்துவது, நமது தமிழ்க் குழந்தைகளுக்கு இளமையிலேயே அவர்கள் தங்களுக்குள் ஏற்கும் தெய்வ உணர்வைச் சிதைப்பது, இறை மறுப்பு கொள்கையை மறை முகமாக நஞ்சாக ஊட்டுவது ஏற்க முடியாத பெரும் தவறான செயலாகும். ஆண்டாண்டு காலமாக நமது மூத்தோர் வகுத்த மாண்புடைய இறைக்கொள்கை அறியாதவர்கள், அகத்தில் தெய்வம் தேற்றும் பொங்கல் (தெய்வத் திரு சேர்ந்த) திருநாளை வெறுமனே, மனமகிழ் (உளக்களிப்பு) நாளாக மாற்றக் கோருவது அவலம்.
9. உழவுக்கும், உழவருக்கும் அறம் செய்யும் தமிழர் பொங்கல் திருநாளைத் தமிழ் அரசியல் பகடைப் பொருளாக்க வேண்டாமே. தங்களின் தனிப்பட்ட சமயம் சாரா கொள்கைகளை, வலிந்து, அறியா எளியோர்களிடம் புகுத்துவது, மிகத் தவறு .
இரண்டாவது :
தமிழ்ப் புத்தாண்டு சுறவம்( தை ) திங்களில் பிறக்கின்றது என்ற இரண்டாம் கருத்து. ( இந்தக் கருதுகோள் முற்றிலும் தமிழர் வானியல் அறிவியல் ஆய்வு சாராது எழுந்த, தமிழ் அறிவியல் மரபைப் பெரிதும் மீண்டும் அரசியலுக்கு உட்படுத்திய ஒரு கூற்று.) ( பொங்கல் திருநாள் கையேடு பக்கம் 10)
தமிழ்ப் புத்தாண்டு சுறவம்( தை ) திங்களில் பிறக்கின்றது என்ற இரண்டாம் கருத்திற்கு மேற்கோளாக ஐயா திரு இர.திருச்செல்வம் பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டம் என்ற நூலை மேற்கோளாக காட்டப்பட்டுள்ளது.
அதற்கு மறுப்பு :
1) முற்றிலும் சூரியக் கடவு பாதையை (வட செலவு , தென் செலவு ) மட்டுமே வைத்து வானியலை அளப்பதை சூரியமான அல்லது செளரமான ஆண்டு (Tropical Year) என்று அழைப்பார்கள். இது ஆங்கிலேய ஆண்டை (Tropical year) பின்பற்றும் ஒரு முறையாகும். ஆங்கிலேயர்கள் இக்கணிதத்தை நமக்கு கணித சூத்திரமாக ( Mathematical Formula) உடனடியாகத் தர இயலும். ஆனால் கேள்வி என்னவென்றால், சூரியமான அல்லது செளரமான ஆண்டு (Tropical Year) பிறப்பிற்கு மாற்றக் கோரும் அத்தனை தமிழ் உணர்வாளர்களுக்கும் முதல் கேள்வி, தமிழர்கள் எப்படி இக்கணிதத்தைச் செய்தார்கள் என்று ஒரு கணித சூத்திரமாக ( Mathematical Formula) வேண்டாம் , ஒரு தமிழர் வானியல் அறிவியல் சான்றோடாவது கொடுக்க முடியுமா ?
2) சமயம் சாரா கொள்கையாளர்களுக்கு ஒரு சிறு விளக்கம். தமிழர்கள் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்பே சூரியக் கடவு பாதையையும் (வட செலவு , தென் செலவு ), நிலவு கடவு பாதையும், கோள்களின் கடவு பாதைகளையும், பெயராத நாள்மீன் கூட்டங்களைப் பின்புலம் நிறுத்தி உருவாக்கிய கணிதமே, உடு ( நாள்மீன்கள் ) பெயரா கால ஆண்டு (Sidereal year ) சித்திரை ஊழி கால அறிவியல் ஆகும். NASA போன்ற உலக வானியல் ஆய்வு மையங்கள் ஏற்கும் சரியான துல்லிய கால அளவையியல், அறிவியல் சார்ந்த உடு ( நாள்மீன்கள் ) பெயரா கால ஆண்டு முறையே (Sidereal year ) ஆகும். இன்றளவில் நமக்கு இவையாவும் பஞ்சாங்கமாக கிடைக்கும். இதனை மீள் கணிதமாக உருவாக்கி ஒரு கணிதச் சூத்திரமாக ( Mathematical Formula), பன்னிரண்டு கட்டத்தில் உருவாக்குவது, இன்றைய கணித அறிஞர்களுக்கே இயலாத ஒன்றாகும்.
3) சித்திரைப் புத்தாண்டு தமிழர் புத்தாண்டு அல்ல அது தேவையும் அல்ல என்று அதனைத் தூக்கி எறியத் துடிக்கும் அத்தனைத் தமிழ் உணர்வாளர்களுக்கும் மீண்டும் ஒரு கேள்வி, சரி உங்கள் விருப்பப்படி அதனைத் தூக்கி எறிந்துவிடுவோம், பஞ்சாங்கத்தை போட்டு எரித்துவிடுவோம் . தமிழர்கள் பல்லாயிர ஆண்டுகளாக வளர்த்த உடு ( நாள்மீன்கள் ) பெயரா கால ஆண்டு (Sidereal year ) வானியல் அறிவியலை உள்வாங்கி, உங்களால் தைத் திங்களை ஆயப்புள்ளியாக ( Geometrical Coordinate origin ) நிறுத்தி ஒரு புதிய ஆய அச்சு வடிவியல் வானியல் கணிதத்தைப் ( Cosmo Geometrical Coordinate Mathematics ) பன்னிரண்டு கட்டத்தில் உருவாக்கித் தர முடியுமா ?
4) அப்படி உங்களால் அவ்வானியல் அறிவியல் கணிதத்தை உருவாக்க முடியுமானால் உருவாக்கிவிட்டு, தைத் திங்கள் எங்கள் புத்தாண்டு என்று ஆரவாரத்துடன் கூத்தாடி கொண்டாடுங்கள். புதிய வானியல் அறிவியல் கண்டுபிடிப்பென்று தங்களின் அறிவியலுக்குத் தலைவணங்கி, தமிழர்கள் நாம் எல்லோரும் கொண்டாடுவோம் , தங்களைப் பாராட்டி மலர்மாலைகள் அணிவிக்கின்றோம்.
5) தமிழர் பெரும் கால அறிவியலை ஆராயாது, வெறுமனே, தைத் திங்கள் புத்தாண்டைப்பற்றி எங்குமே எழுதாத, பேசாத தமிழ் அறிஞர்களை, வலிய இழுத்து, தங்களின் சமயம் சாரா கொள்கையில் புகுத்த முயல்வது தமிழுக்கு இழைக்கும் பெரும் தவறாகும். இதுவே தமிழை அரசியலாக்கும் இழி முறையாகும்.
6) சமயம் சாரா கொள்கையினர் நினைப்பது போல, தமிழர் புத்தாண்டு ஒரு கடையில் வாங்கிய நாற்காலியல்ல. தங்களின் விருப்பத்திற்கு, தேவைக்கு ஏற்ப மாற்றி வைத்துக்கொண்டு அமர்ந்துகொள்ள. தமிழர் புத்தாண்டு என்பது நமது முன்னோர்கள் பல்லாயிர தரவுகளைக் பல காலம் ஆய்வு செய்து, உருவாக்கிய பெரும் கால அறிவியல் ஆகும்.
7) மேலும் “தைத் திங்கள் புத்தாண்டு ஆழ் மறுப்பும் , தமிழர் கால அறிவியல் பெரும் விரிவும், தமிழர் கால அறிவியல், மெய்யறிவு ஆய்வு”, நூலாக தமிழ் உலகிற்கு விரைவில் வெளியிடப்படும்.
ஆகவே இது வரை முறையான, முழுமையான தமிழர் வானியல் அறிவியல் சான்றுகளோடு (Proper Complete Tamilar Astronomical Scientific Evidence) , முழுமையாக ஆய்வு செய்து உறுதி செய்யப்படாத, தமிழர் கால பெரும் அறிவியலைத், தங்களின் தமிழ் சமயம் சாரா அரசியலுக்கு உட்படுத்திய கருதுகோள் தைத் திங்கள் புத்தாண்டு பிறப்பு என்பதால்; இதனை முறையாக ஆய்வு செய்யாது, நமது தமிழ் குழந்தைகளுக்குப் பரப்புரை செய்வது, பல்லாயிர காலமாக நமது தமிழ் வானியல் வள்ளுவ ஆன்றோர்கள் ( Our Tamil Astro Scientist ) வகுத்த மாபெரும் கால அறிவியலைச் சிறுகச் சிறுகத் தகர்க்கும் முயற்சியாக ஆகிவிடும்.
மலேசிய மண்ணில் பள்ளி முதல், திருமணம், இறப்பு வரை , எல்லா பதிவேட்டிலும் ஒவ்வொரு முறையும் Agama: _ என்ற இடத்தில் Hindu என்று நிரப்பி தங்களின் சமய அடையாளத்தைக் காட்டும் அனைத்துத் தமிழர்களும், இறைக்கொள்கை உடையவர்கள் அல்லது இந்து சமயம் சார்ந்தவர்கள் என்பதில் ஐயமில்லை. இவர்கள் யாவரும், அவர்களின் குழந்தைகளும் பொங்கலைத் தெய்வ-திரு சேர்ந்த சமயத் திருநாளாக, நன்னாளாக ஏற்று இறைவனை வழிபாடு செய்வதைத் தவறு, (பொங்கல் திருநாளைச் சமய திருவிழாவாகப் பார்ப்பது மிகத் தவறு ) என்பது குழந்தைகளின் உணர்வில் இறை உணர்வைத் தகர்த்து, ஒரு வித சமய வெறுப்பை இளமையிலேயே விதைக்கும் முயற்சியாக தெரிகிறது. இவ்வெறுப்புணர்வே பல தமிழர்களை மத மாற்றப் பிடியில் சிக்குண்டு தங்களின் முழு அடையாளங்களை இழக்கச்செய்கின்றது.
சமயம் சாரா கொள்கை வேண்டுவோருக்கும், அதற்குத் துணைபோகும் இயக்கங்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். தமிழ் உணர்ச்சி என்ற பெயரில் கண்மூடித்தனமாக உங்களை உசுப்பேற்றி உணர்ச்சிக்கு ஆட்படுத்தும் கொள்கையில் இடரி விழாது, தமிழ் மெய்யறிவியலை வளர்த்து உண்மைக்குத் துணைபோக வேண்டுகிறோம்.
இதனைக் கவனமுடன், ஊன்றி படித்த அனைவருக்கும் நன்றி.
*மறித்து மறித்தும் மரியா வண்ணம் உரித்து நிற்பது உண்மை.*
நன்றி.
முனைவர், இரா. சிவகுமார்.
மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம்.

No comments:

Post a Comment

Egmore 1800 Crore Land - Kirk church is Indian Govt Defence Land

St. Andrew's Church claim on land rejected https://www.thehindu.com/news/national/St.-Andrews-Church-claim-on-land-rejected/article16147...