Saturday, February 6, 2021

கிறிஸ்துவர் பிணம் கல்லறையில் புதைக்க நிலம் 1.5 லட்சம் விற்கும் சர்ச்சு கொள்ளைகள்

ஆறடி மண்ணும் இனி சொந்தம் இல்லை:கோவை கிறிஸ்தவர்கள் கொந்தளிப்பு

 Added : ஜன 17, 2021 https://www.dinamalar.com/news_detail.asp?id=2691211

 ஆடி அடங்கிய உடம்புக்கு ஆறு அடி மண்ணே சொந்தம்' என்று, முன்னோர் கூறுவர். ஆனால், அதுவும், பணம் படைத்தவர்களுக்கே என்பது இன்றைய நிலை. பணம் இல்லையென்றால், பிணத்துக்கு சமம் என்பது நிதர்சனமான உண்மை. பிணம் நல்லடக்கம் செய்யப்படவேண்டும் என்றால், பணம் பறிப்போரிடம் மண்டியிடவேண்டும் என்பது இன்று எழுதப்படாத சட்டமாகி விட்டது.

ஆம், 'கல்லறை விஷயத்தில், கோவையில் தேவாலயங்களின் சபைகள் ஒன்று கூடி பணம் கொள்ளையடிக்கின்றன' என்பது, அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பின் (ஏ.சி.எப்.,) ஆணித்தரமான குற்றச்சாட்டு.கோவை, மீனா எஸ்டேட் அருகே, பெரியார் நகரில், இந்திய வம்சாவளி கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் பொதுவான கல்லறை தோட்டம் 3.7 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.
 

இந்த இடத்தை, மாநகராட்சி ஒதுக்கியுள்ளது. 'செயின்ட் மேரிஸ் ஆர்த்தடாக்ஸ் சர்ச்' அரசு நிலத்தை சொந்தமாக உரிமை கொண்டாடி, பணம் படைத்தவர்களுக்கு உயிருள்ளபோதே அதிக விலைக்கு விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.செயின்ட் மேரிஸ் ஆர்த்தடாக்ஸ் சர்ச்' என்பது தாய் தேவாலயம். இது, ஹோலி டிரினிட்டி போரேன் சர்ச், செயின்ட் தாமஸ் சர்ச், செயின்ட் ஜார்ஜ் மலபார் சுதந்திர சிரியன் சர்ச் மற்றும் செயின்ட் ஜேக்கபைட் சர்ச் ஆகிய நான்கு தேவாலயங்களை உள்ளடக்கியது.

மற்ற தேவாலயங்களை சேர்ந்தவர்களுக்கு, கல்லறையில் உரிமைகள் மறுக்கப்படுவதாக ஏ.சி.எப்., குற்றம் சாட்டியுள்ளது.கல்லறை வியாபாரம்அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பு தலைவர் பிஷப் சகாயராஜ் கூறியதாவது:கல்லறைக்கான அணுகல் மற்றும் நுழைவு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் சொந்தமானது.

ஆனால், செயின்ட் மேரிஸ் ஆர்த்தடாக்ஸ் சர்ச் நிர்வாகம், நிலத்தை சொந்தமாக உரிமை கொண்டாடி வருகிறது. இதர தேவாலயங்களை சேர்ந்த கிறிஸ்தவர்கள் நுழையாத அளவு சுவரைக் கட்டவும் முயன்றுள்ளது. இதனால், புதிதாக பிணத்தைப் புதைக்கவும் முடியாது. ஏற்கனவே, புதைக்கப்பட்டிருக்கும் முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தவும் முடியாது.

எங்கள் கூட்டமைப்பின் கீழ் வரும், 500 தேவாலயங்களைச் சேர்ந்த தமிழ் கிறிஸ்தவர்கள் உள்ளனர். இவர்கள் இறக்கும்போது அடக்கம் செய்ய போதுமான இடம் இல்லை. செயின்ட் மேரிஸ் ஆர்த்தடாக்ஸ் சர்ச் விதித்துள்ள கெடுபிடி காரணமாக, ஒரு உடல் மேல், நான்கு உடலை புதைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.செயின்ட் மேரி சர்ச் நிர்வாகம், 6க்கு 3 அடி இடத்தை 25 ஆயிரம் முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை, அதிக விலைக்கு விற்று வருகிறது. இவர்கள் கல்லறைகளை வைத்து, ஒரு பெரிய வியாபாரத்தையே நடத்தி வருகின்றனர்.

அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பின் கீழ் வரும் தேவாலயங்களைச் சேர்ந்தவர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். கல்லறைகளை வாங்குவதற்கு, பெரும் தொகையை செலவிட முடியாது.இது தொடர்பாக, கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், காவல் துறைக்கு புகார் அளித்தும், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே, நீதிமன்றத்தை நாடியுள்ளோம். இந்த வழக்கில், எதிர் மனுதாரராக கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் சேர்க்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

அதிகாரிகள் துணை?

ஏ.சி.எப்., வக்கீல் சுரேஷ் கூறுகையில், ''செயின்ட் மேரி ஆர்த்தடாக்ஸ் தேவாலயம், அதிகாரிகளின் துணையுடன், டவுன் சர்வே காணி பதிவேட்டில் தங்கள் பெயரை இணைத்துக் கொண்டுள்ளது. மாநகராட்சியின் பெயர் இருந்த இடத்தில், இப்போது செயின்ட் மேரி தேவாலயத்தின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. திருச்சபைக்கு மோசடி மூலம் பட்டா மாற்றி மாநகராட்சி சொத்துக்கள் கிடைத்துள்ளன. அடக்கம் செய்வதற்கான உரிமையை மறுப்பது சட்டவிரோதமானது,'' என்றார்.

ஆதாரமற்ற குற்றச்சாட்டு

செயின்ட் மேரிஸ் ஆர்த்தடாக்ஸ் சர்ச், விகார் சாஜு உன்னுானி கூறியதாவது:கடந்த, 1934ம் ஆண்டிலேயே, இந்த 3.7 ஏக்கர் நிலம் செயின்ட் மேரிஸ் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. 1984ம் ஆண்டில் செயின்ட் ஜேக்கபைட் தேவாலயம் பிரிந்து சென்று, தங்களுக்கு அந்த இடுகாட்டில் தனி இடம் வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. அப்போதைய கலெக்டர் மற்றும் கமிஷனர் மத்தியஸ்தத்தைத் தொடர்ந்து, நீதிமன்றம் ஐந்து தேவாலயங்களுக்கு இடையில் இந்நிலத்தை பிரித்துக் கொடுத்தது.

இதில், 11 ஆயிரத்து 416 சதுர அடியை, மற்ற தேவாலயத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் பயன் படுத்தலாம் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பட்டா வாங்கிய நிலையில், 2017க்குப்பின் இந்த நிலம் மாநகராட்சிக்கு சொந்தமானது அல்ல.துடியலுாரில் கிறிஸ்தவர்களுக்கு அடக்கம் செய்வதற்காக, 15 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கியுள்ளது. எனினும், ஏ.சி.எப்., பிரச்னைகளை உருவாக்கி வருகிறது.

இடப் பற்றாக்குறை குறித்து கவலைப்பட எந்த காரணமும் இல்லை. கல்லறையை சுத்தம் செய்வதற்கும், பராமரிப்பதற்கும் மட்டுமே பணம் வசூலிக்கப்படுகிறது. ஏ.சி.எப்., கூறும் அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

நிலம் மீட்டெடுப்போம்!

கோவை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில், ''இந்த வழக்கில், மாநகராட்சி ஒரு எதிர்மனுதாரர் என்பதால், ஆவணங்கள் ஆராயப்படும். அந்த நிலம் மாநகராட்சிக்கு சொந்தமானது என்றால், அதற்காக நாங்கள் போராடி, தனியாரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுப்போம். எந்தவொரு தனியாருக்கும், அரசு நிலத்தை மாநகராட்சி எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காது,'' என்றார்.

அமைச்சர் உறுதிமொழி

ஏ.சி.எப்., அலுவலக பொறுப்பாளர் ஸ்டான்லி பீட்டர் கூறுகையில், ''மதுக்கரையில் அடக்கம்செய்ய, நான்கு ஏக்கர் நிலத்தை ஒதுக்குவதாக, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி உறுதியளித்துள்ளார். பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல், அனைத்து கிறிஸ்தவர்களையும் மரியாதையுடன் அடக்கம் செய்ய இந்த இடத்தைப் பயன்படுத்த வேண்டும். இந்த நிலத்தை அரசு கட்டுப்பாட்டில் மட்டுமே வைத்திருக்க வேண்டும்,'' என்றார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...