Saturday, January 1, 2022

பொது ஆண்டு2022 - காலெண்டர் கதை

 கிமு கிபி எப்போது வந்தது? எப்போது போனது?

அதற்கு முன்பு இருந்த ரோமு ரோபி என்றால் என்ன? காலண்டரின் கதையைத் தெரிந்து கொள்வோம்!
-----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------
1) மத பீடங்களின் ஆதிக்கத்தில் இருந்த காலண்டர் (காலக் கணக்கு) தற்போது முற்றிலுமாக அறிவியலின் பிடிக்குள் வந்து விட்டது.
2) உலக அளவில் இன்று நாம் பயன்படுத்தும் காலண்டர் உண்மையில் ஜூலியஸ் சீசர் திருத்தி வடிவமைத்த காலண்டரே. அ) 12 மாதங்கள் ஆ) 365 நாட்கள் இ) 4 ஆண்டுக்கு ஒரு முறை லீப் ஆண்டு, அதாவது பிப்ரவரியில் 29 நாட்கள் ஆகிய அனைத்து அம்சங்களுமே கிமு 46ல் சீசரால் அறிமுகம் செய்யப்பட்டு, அடுத்த ஆண்டு முதல், அதாவது, கிமு 45 முதல் செயல்பாட்டுக்கு வந்து விட்டன.
3) ஜூலியன் காலண்டர் செயல்பாட்டுக்கு வந்தபோது, இயேசு கிறிஸ்து பிறந்திருக்கவே இல்லை என்பது கருதத் தக்கது.
4) அப்படியானால், ஜூலியன் காலண்டரில் ஆண்டுகளைக் கணக்கிட எந்தக் குறிப்பைப் பயன்படுத்தினர் (what was the REFERENCE point then?)
5) அப்போது பயன்படுத்திய reference point ரோம் நகரம் உருவான தேதி ஆகும். அதாவது ரோ.மு, ரோ.பி என்ற கணக்கிடும் முறை இருந்தது. எனினும் இம்முறை பரவலாக மக்களால் பின்பற்றப் படவில்லை. ரோமானிய வரலாற்று ஆசிரியர்கள் மட்டுமே இதைப் பின்பற்றினர்.
ரோமு = ரோமாபுரி நகரம் நிறுவுவதற்கு முன்னால்,
ரோபி = ரோமாபுரி நகரம் நிறுவிய பின்னால்.
6) ரோமு ரோபி என்பன பின்னாளில் கிமு கிபி என்று மாறின. முதலில் கிறிஸ்துவத்தை ஏற்றுக் கொள்ளாமல், இயேசுவைச் சிலுவையில் அறைந்த ரோமாபுரி பின்னர் கான்ஸ்டன்டைன் காலத்தில், கிபி 4ஆம் நூற்றாண்டில், கிறிஸ்துவத்தை ஏற்கத் தொடங்கியது.
7) கிபி 525ல் டயோனிசியஸ் எக்சிகஸ் (Dionysius Exiguus) என்னும் ரோமானியத் துறவி (இவர் ஒரு கணித நிபுணரும்கூட) முதன் முதலில் கிமு, கிபி என்ற கணக்கிடும் முறையை அறிமுகம் செய்தார். என்றாலும் கிபி 800ல்தான் இப்பழக்கம் பரவலானது.
8... கிபி 1582ல் போப்பாண்டவர் பதின்மூன்றாம் கிரெகோரி ஜூலியன் காலண்டரில் லீப் ஆண்டு குறித்த ஒரு திருத்தத்தைச் செய்தார். ஒவ்வொரு 400 ஆண்டுக் காலத்திலும் மூன்று லீப் ஆண்டுகளின் பெப்ரவரியின் லீப் நாட்களைக் குறைத்தார்.
9) இந்த ஒரே ஒரு திருத்தத்தை மட்டுமே அவர் செய்தார். அவருக்கு முன்பே, ஜூலியஸ் சீசரால் பெருமளவு திருத்தங்கள் செய்யப்பட்டு இன்றைய காலண்டரின் வடிவம் அன்றே கொண்டுவரப் பட்டு விட்டது. என்றாலும் கடைசியாகத் திருத்தம் செய்தவர் என்ற அடிப்படையில் இக்காலண்டர் கிரெகோரி காலண்டர் என்று அழைக்கப் பட்டு வந்தது.
10) கிரெகொரிக்குப் பின்னரும் இக்காலண்டரில் தொடர்ந்து தேவையான பல திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. 1980களில் கிறிஸ்துவ சகாப்தம் என்ற பெயர் மாற்றப்பட்டு பொது சகாப்தம் என்ற பெயர் சூட்டப்பட்டது.
11) தற்போது காலண்டரில் திருத்தம் செய்யும் அதிகாரம் அறிவியல் அறிஞர்களுக்கு மட்டுமே உள்ளது.1972 முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் விநாடித் திருத்தங்கள் பற்றி முந்தைய பத்திகளில் பார்த்தோம் (adding leap seconds). அறிவியலின் அதிகாரத்தின்கீழ் காலண்டர் வந்ததும் காலண்டரின் துல்லியம் உறுதி செய்யப்பட்டது.
12) ஏசு கிறிஸ்துவின் பெயரில் அமைந்த (கிமு,கிபி) காலண்டருக்கு இஸ்லாமிய சமூகம் பெரிதும் ஆட்சேபம் தெரிவித்து ஏற்க மறுத்தது. தற்போது கிமு, கிபி என்ற சொற்கள் நீக்கப்பட்டதானது
இஸ்லாமிய சமூகத்துக்கு நிறைவைத் தந்துள்ளது. அறிவியலுக்கு மதமில்லை. எனவே மதச்சார்பற்ற காலண்டராக, உலகின் அனைத்து மதங்களின் மக்களும் விரும்பி ஏற்கும் காலண்டராக இது ஆகி விட்டது.
13) ஆக, இன்றைய உலகின் காலண்டர் உலகப் பொதுமையை உறுதி செய்கிறது. மதச்சார்பற்ற துல்லியமான நவீனமான அறிவியல் காலண்டரை மானுடம் அடைந்து விட்டது. இது மானுடத்தின் வெற்றி. இது அறிவியலின் வெற்றி.
14) இது கிறிஸ்து சகாப்தம் அல்ல; பொது சகாப்தம்!
இது கிரெகோரி காலண்டர் அல்ல; அறிவியல் காலண்டர். கிமு கிபி போன்ற பதங்கள் மரித்து விட்டன. பொ ச மு, பொ ச ஆகிய பதங்களைப்
பரவலாக்குக்குவோம்!
பொ ச = பொது சகாப்தம்
பொ ச மு = பொது சகாப்தத்திற்கு முன்.
---------------------------------------------------------
பின்குறிப்பு:
காலண்டர் குறித்து யார் எவரும் இதுவரை சொல்லாத, பெரும் முக்கியத்துவம் வாய்ந்த உண்மைகளை இக்கட்டுரையிலும் இப்பொருளில் அமைந்த பிற கட்டுரைகளிலும் எழுதி உள்ளேன். நன்கு படித்து மனதில் பதிக்கவும்.
***************************************

No comments:

Post a Comment