Friday, March 31, 2023

திருக்குறளில் இடைச்செருகல்கள் - வ உ சி கட்டுரைக்கு தெளிவான மறுப்பு 100 ஆண்டு முன்பே

 




திருக்குறளில் இடைச்செருகல்கள் .. கடவுள் வாழ்த்து அதிகாரம் திருவள்ளுவர்_எழுதியது_இல்லை .. வ உ சி


அறப்பால் உரை - வ.உ.சி முன்னுரை

திருக்குறட் சுவடிகளில் பாயிரத்தின் முதல் மூன்று அதிகாரங்களாகக் காணப்படும், ‘கடவுள் வாழ்த்து’, ‘வான்சிறப்பு’, ‘நீத்தார் பெருமை’ என்னும் மூன்று அதிகாரப்பாக்களும் திருவள்ளுவரால் இயற்றப் பட்டவை யல்ல வென்றும், அவை திருவள்ளுவர் காலத்திற்குப் பிற்காலமும் முந்திய உரையாசிரியர்கள் காலத்திற்கு முற்காலமுமாகிய இடைக்காலத்துப் புலவர் ஒருவரால் பாடிச் சேர்க்கப்பட்டவை யயன்றும் யான் கருதுகிறேன். 

அவ்வாறு யான் கருதுவதற் குரிய காரணங்களிற் சில : 
1) இம் மூன்று அதிகாரங்களிலும் காணப்படும் பாக்கள் நூலின் பாக்களைப் போலச் சொற் செறிவும் பொருட் செறிவும் உடையன அல்ல. 
2) இப் பாக்களிற் பலவற்றின் பொருள்கள் பல தடைகளுக்கு இடம் கொடுக்கின்றன.
 3) ‘மெய்யுணர்தல்’, ‘துறவு’ என்னும் அதிகாரங்கள் நூலின்கண் இருக்கின்றமையால், கடவுள் வாழ்த்து, நீத்தார் பெருமை என்னும் அதிகாரங்களைப் பாயிரத்தில் கூற வேண்டுவதில்லை. 
4) மெய் யுணர்தலில் கடவுளுக்குக் கூறியுள்ள இலக்கணங்களையும், கடவுள் வாழ்த்தில் கடவுளுக்குக் கூறியுள்ள இலக்கணங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இரண்டு அதிகாரங்களையும் இயற்றியவர் ஒருவரல்ல ரென்பது நன்றாக விளங்கும். அவ்வாறே, துறவின் பாக்களையும், நீத்தார் பெருமையின் பாக்களையும் ஒப்பிட்டு பார்த்தால், அவ்விரண்டு அதிகாரங்களையும் இயற்றியவர் ஒருவரல்ல ரென்பது நன்றாக விளங்கும். ‘மழையைச் சிறப்பிற் றணிப்பாரு மில்லை, வறப்பிற் றருவாருமில்’லாகையால் வான்சிறப் பைக் கூறுதலால் பயன் ஒன்றும் இல்லை.


மூன்று பால்களையும், 133 அதிகாரங்களையும் உடையது திருக்குறள் என்பது அனைவரும் அறிந்ததுதான்.
இந்த மூன்று பால்களின் முதல் பாலான அறத்துப்பால் அந்தக் காலத்தில் எத்தனை இயல்களாகப் பகுக்கப்பட்டிருந்தது என்பதை எறிச்சலூர் மலாடனார் என்னும் புலவர் கீழ்வருமாறு கூறியிருக்கிறார்:
"பாயிரம் நான்குஇல் லறம்இருபான்
பன்மூன்றே தூய துறவறம் ஒன்று ஊழாக- ஆய அறத்துப்பால் நால்வகையா
ஆய்ந்துரைத்தார் நூலின் திறத்துப்பால் வள்ளுவனார் தேர்ந்து"
(பா.எ.25)
'பாயிரம் நான்கு அதிகாரமும், இல்லறவியல் இருபது அதிகாரமும், துறவறவியல் பதிமூன்று அதிகாரமும், ஊழ்இயல் ஓர் அதிகாரமுமாக வள்ளுவர் நன்றாக ஆய்ந்து நான்கு வகையாக வகுத்துரைத்தார்' என்பது அதன் பொருளாகும்.
'பாயிரம்' என்னும் இயலில் கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்னும் நான்கு அதிகாரங்கள் உள்ளன.
இந்த நான்கு அதிகாரத்தில் முதல் மூன்றையும் வள்ளுவர் இயற்றவில்லை என்பது, கம்பராமாயணத்தை கம்பர் இயற்றவில்லை என்பதைப் போன்றதாகும்.
28.திருக்குறளில் இடைச்செருகலா?
பகுதி-2
----------------------------------------------------------------. போத்தியார் என்னும் புலவர் பொருட்பாலை ஏழு பகுதிகளாகப் பகுக்கிறார்.
"அரசியல் ஐயைந்து அமைச்சியல்
ஈரைந்து உருவல் அரண்இரண்டு
ஒன்றுஒண்கூழ் இருவியல்
திண்படை நட்புப் பதினேழ்குடி
பதின்மூன்று எண்பொருள் ஏழாம் இவை" (பா.எ.26)
'அரசியல் இருபத்து ஐந்து அதிகாரமும், அமைச்சியல் பத்து அதிகாரமும், அரணியல் இரண்டு அதிகாரமும், பொருளியல் ஓர் அதிகாரமும், படையியல் இரண்டு அதிகாரமும், நட்பியல் பதினேழு அதிகாரமும், குடியியல் பதிமூன்று அதிகாரமுமாக ஏழு பகுதிகளை உடையதாகும்' என்று அவர் கூறுகிறார்.
திருக்குறள் உரையாசிரியர்களில் மூத்தவரும் முன்னோடியுமான பரிமேலழகர் அந்த ஏழு பகுதிகளையும் அரசியல், அங்கவியல், ஒழிபு இயல் என்னும் மூன்று இயல்களாக்கினார்.
இயல் பகுப்பிலே சில வித்தியாசங்கள் இருந்தாலும் பொருட்பாலில் உள்ள எழுபது அதிகாரங்களில் எந்த மாற்றத்தையும் யாரும் ஏற்படுத்தவில்லை.
காமத்துப்பால் எவ்வாறு பகுக்கப்பட்டிருக்கிறது என்பதை மோசிகீரனார் கீழ்வருமாறு கூறுகிறார்.
"ஆண்பால் ஏழ்ஆ றிரண்டு
பெண்பால் அடுத்தன்பு
பூண்பால் இருபால்ஓர் ஆறாக -
மாண்பாய காமத்தின் பக்கம்ஒரு மூன்றாகக்
கட்டுரைத்தார் நாமத்தின் வள்ளுவனார் நன்கு"
(பா.எ. 27) 'ஆண்மகன் கூறுவதாக ஏழு அதிகாரமும், பெண் மகள் கூறுவதாக பன்னிரண்டு அதிகாரமும், இருபால் கூற்றாக ஆறு அதிகாரமும் கொண்டதாகக் காமத்துப்பாலைத் திருவள்ளுவர் மூன்றாக வகுத்துரைத்தார்' என்று அப்புலவர் கூறுகிறார்.
பின்னாளில் திருக்குறளுக்கு உரைசெய்த புலவர்கள் காமத்துப்பாலை களவியல், கற்பியல் என இரண்டாகப் பிரித்தனர்.
 
28.திருக்குறளில் இடைச்செருகலா?
பகுதி- 3
-----------------------------------------------------------------. பொருட்பாலிலும், காமத்துப்பாலிலும் இயல்களின் பெயர்களில் மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் அறத்துப்பாலில் ஒரு மாற்றமும் இல்லை.
நான்கு அதிகாரங்களை உடைய பாயிரத்தில்தான் கடவுள் வாழ்த்தும், வான்சிறப்பும், நீத்தார் பெருமையும் வருகின்றன. இவற்றைத்தான் வள்ளுவர் இயற்றவில்லை என்று சிலர் புளுகுகிறார்கள்.
மேலே குறிப்பிட்ட மூன்று ஆதாரப் பாடல்களில் வருகிற குறள்களின் எண்ணிக்கையைக் கூட்டிப் பாருங்கள்...
அறத்துப்பாலில் பாயிரம் நான்கு. இல்லறவியல் இருபது. துறவறவியல் பதிமூன்று. ஊழ்இயல் ஒன்று. மொத்தம் முப்பத்துஎட்டு அதிகாரங்கள்.
பொருட்பாலின் எழுபது அதிகாரங்களை ஏற்கனவே பார்த்துவிட்டோம்.
காமத்துப்பாலில் ஆண்பால் கூற்று ஏழு. பெண்பால் கூற்று பன்னிரண்டு. இருபால் கூற்று ஆறு. மொத்தம் இருபத்து ஐந்து அதிகாரங்கள். மொத்தம் 25 அதிகாரங்கள்.
38 + 70 + 25 = 133.
கணக்கு அவ்வளவு தெளிவாக இருக்கிறது. இந்த ஒன்றாம் வகுப்புக் கூட்டல் கணக்குகூடத் தெரியாமல் சிலர் தப்பும் தவறுமாகப் பிழை செய்கிறார்கள்.
மூன்று பால்களின் பகுப்புகளை மூன்று புலவர்கள் பாடியதைப் பார்த்தோம். இனி மொத்த குறளின் கூட்டுத் தொகையைப் பல்வேறு புலவர்கள் பாடியுள்ளதைப் பார்க்கலாம்.
"ஆயிரத்து முன்னூற்று முப்பது
அருங்குறளும் பாயிரத்தினோடு பகிர்ந்த தற்பின்-
போயொருத்தர் வாய்கேட்க நூலுளவோ
மன்னுதமிழ்ப் புலவ ராய்க்கேட்க வீற்றிருக்க லாம்"
(பா.எ.16)
என்பவை இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் என்னும் புலவரின் வரிகளாகும்.
'பாயிரத்தில் உள்ள பாக்களையும் சேர்த்து 1330 குறள்களை உடையது திருக்குறள்' என்பது அவரது வாக்குமூலம் ஆகும்.
28.திருக்குறளில் இடைச்செருகலா?
பகுதி- 4
------------------------------------------------------------- "ஐயாறும் நூறும் அதிகாரம் மூன்றுமாம்" (பா.எ.28) என்று கூறுகிறார் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்னும் புலவர்.
ஐயாறு முப்பது. அதனுடன் ஒரு நூறும், மூன்றும் சேர்த்தால் வருவது 133. திருக்குறள் 133 அதிகாரங்களை உடையது என்று விளக்க வேண்டிய அவசியம் இல்லை.
"அறம்முப்பத் தெட்டு பொருள்எழுபது
இன்பத் திறம்இருபத் தைந்தால் தெளிய-
முறைமையால்.....
(பா.எ.37) என்று பாடுகிறார் மதுரைப் பெருமருதனார்.
'அறத்துப்பால் முப்பத்து எட்டு அதிகாரங்களையும், பொருட்பால் எழுபது அதிகாரங்களையும், காமத்துப்பால் இருபத்து ஐந்து அதிகாரங்களையும் உடையது' என்று அவ்வரிகளுக்குப் பொருள் கூறாமலே விளங்கும்.
"அறம்நான்கு அறிபொருள்
ஏழொன்று காமத்
திறம்மூன்று எனப்பகுதி செய்து"
( பா.எ.22 )
என்று உரைக்கிறார் தொடித்தலை விழுத்தண்டினார்.
'அறம் நான்கு இயல்களையும், பொருள் ஏழு இயல்களையும், காமம் மூன்றுஇயல்களையும் உடையது' என்று அவர் கூறுகிறார்.

 பகுதி-5

-----------------------------------------------------------------. 'வள்ளுவர் சொன்ன வகை'யை சிறுமேதாவியார் என்னும் புலவர் சிறப்பாகப் பாடியிருக்கும் விதத்தைப் பார்க்கலாம்.
"வீடொன்று பாயிரம் நான்கு
விளங்கறம் நாடிய முப்பத்துமூன்று ஒன்றூழ்-
கூடுபொருள் எள்ளில் எழுபது இருபதிற்றைந்
தின்பம் வள்ளுவர் சொன்ன வகை'(பா.எ.20)
'பாயிரம் நான்கு. அறம் முப்பத்து மூன்று. ஊழ் ஒன்று (மொத்தம் 38). பொருட்பால் எழுபது. காமத்துப்பால் இருபத்து ஐந்து என்னும் வகையில் வள்ளுவர் பாடியிருக்கிறார்' என்பது அதன் பொருளாகும்.
இதனால் சகலமானவர்களும் அறிந்து கொள்வது என்னவென்றால் 133 அறிந்து கொள்வது என்னவென்றால் 133 அதிகாரங்களையும், அதிகாரத்திற்குப் பத்து வீதம் 1330 குறள்களையும் உடையது திருக்குறள் என்பதுதான்.
இதிலே சிலவற்றை அவரவருக்குத் தோன்றுவதைப்போல நீக்கி விட்டால் குறளின் கட்டமைப்பு குலைந்து போகும்.
குறளின் தனிச்சிறப்பு என்பது சொற்செறிவும், பொருட்செறிவும், கட்டமைப்பும், நடையமைப்பும் முதலிலிருந்து கடைசிவரை ஒன்றுபோல் இருப்பதாகும்.
அப்படிப்பட்ட திருக்குறளை வள்ளுவர் இயற்றவில்லை என்று கூறுவது சுத்தப் பிதற்றல். அபத்தம். அறியாமை. ஒருவகை வியாதி.
கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய மூன்று அதிகாரங்களையும் தவிர்த்து திருக்குறள் 130 அதிகாரங்களை உடையது என்றோ, 1300 குறள்களை மட்டும் கொண்டது என்றோ எங்கேயும், எவரும் கூறவில்லை. கவிஞர் வைரமுத்து கூறுவதைப் போல "ஆவணக்கிடங்கில் அதற்கு ஆதாரம் இல்லை."
 
28.திருக்குறளில் இடைச்செருகலா?
பகுதி-6
----------------------------------------------------------------. ‌ முதல் மூன்று அதிகாரங்களை மட்டும் தூற்றிவிட்டால் ஆயிற்றா? தெய்விகத்தை வேறு எங்கும் அவர் பாடவில்லையா?
அவற்றையும் திருவள்ளுவர் இயற்றவில்லை, எல்லாம் இடைச்செருகல் என்றால் என்னவாகும்?
இந்த ஆய்வில் நான் எடுத்துக் கொண்டிருக்கும் அத்தனைக் குறட்பாக்களும் திருவள்ளுவர் இயற்றவில்லை என்றாகும். அதன் பிறகு கொஞ்சம் மட்டுமே எஞ்சும்.
இது குறளுக்கு விரோதமானது மட்டும் இல்லை. தமிழுக்குச் செய்யும் துரோகமும் ஆகும்.
இவர்கள் ஆன்மிகத்தை அலட்சியப்படுத்தவில்லை. திருவள்ளுவரை அவமானப்படுத்துகிறார்கள்.
ஆன்மிகத்தைப் புறக்கணித்தால் அதற்கு ஒன்றும் நஷ்டம் இல்லை. நஷ்டமெல்லாம் நமக்குத்தான்.
உலக வாழ்க்கையில் உத்தமர் ஒருவரை கீழ்மகன் ஒருவன் குற்றம் சாட்டினால் ஆராய்ந்து பார்க்காமல் சில அப்பாவி உள்ளங்கள் நம்பி விடுகின்றன. அப்படித்தான் திருக்குறளுக்கும் நேர்ந்திருக்கிறது.
சில திருட்டு மனமுடையோர் திருக்குறளைப் படிக்காமல்- சரியாகப் புரிந்து கொள்ளாமல் குறளுக்கு விரோதமானதைக் கூறி வருகிறார்கள்.
இது அடிப்படை இல்லாதது. உள்நோக்கம் உடையது. கடும் கண்டனத்திற்குரியது.
எவை எவை இடைச்செருகல்கள் என்பதைத் தீர்மானிக்கும் தகுதியோ, உரிமையோ யாருக்கும் கிடையாது.
அவர்களெல்லாம் ஆசைப்படுவதைப் போல திருக்குறளைத் திருத்த முடியாது.
அதை திருத்துவதற்கு ஆசைப்படுபவர்கள்தான் திருந்த வேண்டும். திருந்தவில்லையானால் திருத்தப்பட வேண்டும்.



 விளக்கம்
“யான் கருதுகிறேன்” என்று வ. உ. சி அவர்கள் கூறியதால் இது அவர்தம் சொந்த கருத்தென்று பெறப்படுகின்றது. அவருக்கு முன்பு பிற திருக்குறள் உரையாசிரியர் அவ்வாறு கூறவில்லையென்றும் பெறப்படும்..
“அவை திருவள்ளுவர் காலத்திற்குப் பிற்காலமும் முந்திய உரையாசிரியர்கள் காலத்திற்கு முற்காலமுமாகிய இடைக்காலத்துப் புலவர் ஒருவரால் பாடிச் சேர்க்கப்பட்டவை” என்று வ.உ.சி அவர்கள் கூறுவதால் திருக்குறளுக்குச் சிறப்பு உரை வரைந்த பத்து குறளாசிரியர் காலத்திற்கு முன்பே ‘கடவுள் வாழ்த்து’, ‘வான்சிறப்பு’, ‘நீத்தார் பெருமை’ ஆகிய மூன்று அதிகாரங்களும் திருக்குறளில் இடைச்செருகலாக சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று அவர் கருதுகிறார்.
அறம் பொருள் இன்பம் ஆகியவற்றைத் திருவள்ளுவர் ஏன் கூற வேண்டும்? அதற்கு ஒரு பயன் இருக்க வேண்டுமல்லவா? அவர்தம் காலத்திர்க்கு முன்பே இச்சமய கோட்பாடு வடக்கே வாழ்ந்த வேத நெறியாளரிடமிருந்தது. ஆனால் அது வர்ணாசிரம பாகுபாட்டின் அடிப்படையில் அமைந்திருந்தது. தெற்கே வாழ்ந்த திருவள்ளுவர் அந்த வர்ணாசிரம பாகுபாட்டைத் தவிர்த்து தென் மக்களின் பண்பாட்டிற்கு ஏற்றவாறு முப்பாலைக் கூறினார். அவற்றைக் கடைப்பிடிப்பதின் பயனை வடக்கே வாழ்ந்தவர் ‘மோட்சம்’ என்று கூறினார். திருவள்ளுவரோ “இறைவனடி சேர்தல்” என்று கடவுள் வாழ்த்தில் கூறினார்.
இனி “கடவுள் வாழ்த்து” அதிகாரமே திருவள்ளுவர் இயற்றியதல்ல என்று வ.உ.சி. அவர்கள் கருதினால், திருவள்ளுவர் முப்பொருளின் பயனைக் கூறாது போனாரா?. அப்படி கூறாது போயிருந்தால் திருக்குறளை ஏன் கற்க வேண்டும் பின்பற்ற வேண்டுமென்ற எண்ணம் மக்களிடையே எழாது போகும். அது திருக்குறளுக்கும் திருவள்ளுவரின் ஞானத்திற்கும் இழுக்கன்றோ? திருக்குறளுக்கு இத்தகைய குறை ஏற்பட கூடாதென்பதற்கு முதுமுனைவர் சி. அருனை வடிவேல் அவர்கள் ‘திருக்குறளில் காணும் சமய-தத்துவப் பொருள்கள்’ என்னும் கட்டுரையில் ‘கடவுள் வாழ்த்து அதிகாரத்தைப் பற்றி கூறும் விளக்கமாவது:
“1. மரபு வழிச் செய்திகள்.
கடவுள் வாழ்த்து
       சமயத் துறையில் ‘யாதொரு செயலையும் தொடங்கும் பொழுது கடவுளை வணங்கியே தொடங்குதல் வேண்டும்’ என்பது மரபு. சிவஞான போதக் கடவுள் வாழ்த்து உரையுள் சிவஞானயோகிகள், ‘ஆன்றோர் ஆசாரம் பாதுகாத்தற் பொருட்டு இவ்வாசிரியரும் முதற்கண் கடவுள் வாழ்த்துக் கூறினார்’’ என்பதுபட உரைத்த உரையாலும் இது விளங்குகின்றது. தருக்க சாங்கிரக உரையுள்ளும் இக்கருத்து ஒருவாறு குறிப்பிடப்பட்டது. திருக்குறளின் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்தாகக் காணப்படுதல் இம்மரபினையே வலியுறுத்துவதாகக் கூற இடம் உண்டு.
       ‘கடவுள் வாழ்த்துக் கூறுமிடத்து அதனை, வாழ்த்து, வணக்கம், பொருளியல்பு உரைத்தல் என்னும் மூன்று வகையில் கூறலாம் என்பது இலக்கணம்’ அம்மூன்றனுள் கடவுள் வாழ்த்து பொருளியல்பு உரைத்ததாக அமைந்துள்ளது” என்று சிறப்பானதொரு விளக்கத்தை அளித்துள்ளார் அம்முதுமுனைவர்.
       கடந்த நூற்றாண்டில் திராவிடக் கருத்தியலில் ஊறியவர் திருக்குறளை சமய நூலாகக் காட்டக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு உரை எழுத ஆரம்பித்த காரணத்தினாலேயே வ.உ.சி அவர்களின் கருத்தை முன்னிலைப்படுத்தி கடவுள் வாழ்த்து இடைச்செருகல் என்று அவ்வகையோர் கூற முற்படுவர். ஆனால் திருக்குறளுக்கு உரை வரைந்த பத்து குறளாசிரியரில் எவரேனும் வ.உ.சி. அவர்களின் கருத்துக்கு ஒத்தவாறு   அவர்தம் கருத்துகளைப் பதிந்ததில்லை. ஆகையால் முதல் அதிகாரம் இடைச்செருகல்  என்பதை விட அது முப்பாலின் பயனைக் கூறியுள்ளதால் வீடுபேற்றை முதலில் கூறி அதனை அடைவதற்குரிய சாதனத்தை பின்னர் திருவள்ளுவர் அமைத்தார் எணின் அது அவர்தம் ஞான தெளிவிற்குப் பொருந்தாதோ?
அடுத்து ‘வான் சிறப்பு’ என்னும் அதிகாரத்தை இடைச்செருகல் என்று கூறுகின்றார் வ.உ.சி. அவர்கள் அதற்கு அவர் கூறும் காரணமாவது:
     ‘‘மழையைச் சிறப்பிற் றணிப்பாரு மில்லை, வறப்பிற் றருவாருமில்’லாகையால் வான்சிறப் பைக் கூறுதலால் பயன் ஒன்றும் இல்லை.’ என்பதாகும்.
 இக்கூற்றுக்கு மறுப்பளித்து முதுமுனைவர் சி. அருனை வடிவேல் அவர்கள் தரும் விளக்கமாவது:
“வான் சிறப்பு – அதிகாரத்தின் கருத்து
    இனி கடவுள் வாழ்த்தை அடுத்துத் திருக்குறளில் காணப்படுவது ‘வான் சிறப்பு’ என்னும் அதிகாரம். அது மழையினது சிறப்பைக் கூறுவது. ‘இயற்கை நிகழ்ச்சிகளில் மழை ஒன்று. அதனைக் கூறுவதால் என்ன பயன்? ஆகவே, அதனைத் திருவள்ளுவர் கூறியிருக்க மாட்டார்’ என்பது சிலரது ஊகம். இல்வாழ்க்கையில் தலைவனும் தலைவியும் கூடி வாழும் பொழுது அவர்கள் மக்களைப் பெறுதல் இயற்கையன்றோ? ஆகவே அதனைக் கூறுதலாலும் பயன் இல்லை. அதனால் ‘மக்கட் பேறு’ அல்லது ‘புதல்வரைப் பெறுதல்’ என்னும் அதிகாரத்தைத் திருவள்ளுவர் எழுதியிருக்க மாட்டார் என முடிவு செய்யலாம். இப்படியே பார்த்தால் திருக்குறளில் ஒவ்வோர் அதிகாரத்திற்கும் ஒவ்வொரு காரணம் கூறி அதனை நீக்கி விட முடியும். ஆயினும் அது செய்யதக்கதோ? என்று கேள்வி கேள்வி கேட்டு வ.உ.சி அவர்களின் காரணம் பொருந்தாமையைக் கூறுகின்றார்.
    அம்முதுமுனைவரின் கருத்தானது வ.உ.சி. அவர்களின் கருத்தைப் புறக்கணிப்பதாகவே உள்ளது. ஆகையால், வ.உ.சி. அவர்கள் முன் வைக்கும் ‘இடைச்செருகல்’ கருத்து வலுவுடையதாக இல்லையெனக் கூறலாம்.
அடுத்து, ‘நீர்த்தார் பெருமை’ இடைச்செருகலாக இருக்கக்கூடும் என்னும் கருத்தை முன் வைக்கும்போது வ.உ.சி. அவர்கள் கூறும் காரணமாவது:
“அவ்வாறே, துறவின் பாக்களையும், நீத்தார் பெருமையின் பாக்களையும் ஒப்பிட்டு பார்த்தால், அவ்விரண்டு அதிகாரங்களையும் இயற்றியவர் ஒருவரல்ல ரென்பது நன்றாக விளங்கும்.” என்பதாகும்.
‘துறவு’ அதிகாரத்தில் கூறப்படுவது துறவுக்குரிய இலக்கணமாகும். அவற்றைப் பின்பற்றுவோரின் பெருமையைக் கூறுவது ‘நீத்தார் பெருமை’ அதிகாரமாகும். இவ்விரண்டு அதிகாரமும் ஒன்றோடு மற்றொன்று இயைந்து செயல்படுவனவாகும். இதனை முதுமுனைவர் சி. அருனை வடிவேல் கீழ்காணுமாறு விளக்குகின்றார்:
 “நீத்தார் பெருமை
திருக்குறளில் ‘நீத்தார் பெருமை’ என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் துறவிகளின் பெருமையைப் பல்வகையில் விளக்கியுள்ளார். அற நெறியில் ‘நீத்தார்’ அல்லது ‘துறவிகள்’ எனப்படுபவரையே சமய நெறியில் ‘அடியார்கள்’ எனக் கூறப்படுகின்றனர்.
இறைவரோ தொண்டர் உள்ளத்(து) ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமையைச் சொல்லவும் பெரிதே.
 என்ற ஔவையார் சொற்படி, சமயத் துறையில் இறைவன் அடியார்கள் இறைவனாகவே – ஏன்? இறைவனினும் மேம்பட்டவராகக்கூட மதிக்கப்படுகின்றனர்; சொல்லப் படுகின்றனர். அதனையே திருக்குறள் தனது நிலைக்கு ஏற்ப விளக்கியுள்ளது. அதனிடையில்,
       நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
       மறைமொழி காட்டிவிடும் (குறள் – 28)
என்னும் குறளில் நீத்தாரை ‘நிறைமொழி மாந்தர்’ எனக் கூறியிருத்தலையும் ‘மறைமொழி’ எனப்படும் மந்திரங்களின் ஆற்றலைக் குறித்துள்ளதனையும் சிறப்பாக நாம் ஊன்றி  உணர்தல் வேண்டும்” என்று விளக்கமளிக்கின்றார் அம்முதுமுனைவர்.


No comments:

Post a Comment