Saturday, March 25, 2023

சமண சமயம் போற்றும் ஜாதி

சீவக சிந்தாமணியைப் புரட்டிக் கொண்டிருக்கும் போது ஒரு பாடல் தென்பட்டது. உடனே இன்னொரு பாடலும் நினவிற்கு வந்து, அதையும் தேடிப் பிடித்தேன்.
பதுமையார் இலம்பகம்
அந்தணன் நாறும் ஆன் பால் அவியினை அலர்ந்த காலை
நந்தியா வட்டம் நாறு நகை முடி அரசன் ஆயின்
தந்தியாம் உரைப்பின் தாழைத் தடமலர் வணிகன் நாறும்
பந்தியாப் பழுப்பு நாறின் சூத்திரன் பாலது என்றான் (294)
பாம்பின் கடிவாயில் பசும்பால் மணம் இருந்தால் கடித்த பாம்பு அந்தணப்பாம்பு. நந்தியாவட்டை மலர் மணம் இருந்தால் அரசசாதிப் பாம்பு. தாழம்பூ மணம் இருந்தால் வைசியப் பாம்பு. பழுப்பு (கஸ்தூரி) மணம் இருந்தால் சூத்திரப் பாம்பு!
இந்தப் பாடலையும் படியுங்கள்:
காந்தர்வதத்தையார் இலம்பகம்
நீர் நின்று இளகிற்று இது வேண்டா நீரின் வந்தது இதுபோக
வார் நின்று இளகும் முலையினாய் வாள் புண் உற்றது இது நடக்க
ஓரும் உரும் ஏறு இது உண்டது ஒழிக ஒண் பொன் உகு கொடியே
சீர்சால் கணிகை சிறுவன் போல் சிறப்பு இன்று அம்ம இது என்றான் (718)
வீணையைத் தேர்ந்தெடுக்கும் போது சீவகன் குற்றமுள்ளவை என்று ஒதுக்குகிறான்.
இந்த மரம் நீரிலேயே இருந்தது. இது தண்ணீரில் வந்த மரம். இது வாளால் அடிபட்டது . இது இடியுண்டது என்று சொல்லி விட்டு இது சிறப்பான கணிகையின் (விலைமகளிரின்) மகனைப் போல சிறப்பற்றது என்கிறான். அதாவது அது நல்லது போலத் தோன்றினாலும் தூய்மையான பிறப்பை உடையதல்ல என்கிறான்!
சாதிகள் இந்தியாவில் எங்கு சென்றாலும் இருக்கும். அது இந்து மதத்திற்கு மட்டும் பொதுவல்ல. சமணர்களைப் பொறுத்தவரை பாம்புக்கும் மரத்திற்கும் கூடச் சாதிகள் இருக்கின்றன!



 

No comments:

Post a Comment

SC orders probe into Caste certificates issuance in Tamil Nadu

  ‘Prima facie a huge racket’: SC orders probe into caste certificates issuance in Tamil Nadu A bench comprising Justice JB Pardiwala and Ju...