மது போதை கணவர்கள் இறப்பால் விதவைகள் எண்ணிக்கை அதிகரிப்பு @ தமிழகம்: ஆய்வறிக்கை
https://www.hindutamil.in/news/tamilnadu/1269238-increase-in-number-of-widowed-women-due-to-death-of-alcoholic-husbands-says-report.html
மதுரை; தமிழகத்தில் மது போதை காரணமாக கணவர்கள் இறப்பால் விதவைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கைம்பெண்கள் ஆதரவற்ற நலச்சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ‘லாஸ்’ LAAS மையம் நிர்வாகிகள் ராஜகுமாரி, ஆலாய்சஸ் இருதயம், பால் மைக்கேல்ராஜ், கைம்பெண்கள் ஆதரவற்ற நலச்சங்கம் தலைவர் அன்புச்செல்வி, துணைச் செயலாளர் சுதா, விதவைப் பெண்கள் வாழ்வுரிமை சங்கம் கஸ்தூரி, ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் வாழும் விதவைகளின் மொத்த எண்ணிக்கை 4.3 கோடி. இது நாட்டிலுள்ள மொத்தப் பெண்களது எண்ணிக்கையில் 7.3 சதவீதம் ஆகும்.
தமிழகத்தை பொறுத்தவரை, 2011-ம் ஆண்டு அடிப்படையில் வாழும் விதவைப் பெண்களின எண்ணிக்கை 38.56 லட்சமாக இருந்தது. இது தமிழகத்தில் வாழும் மொத்த பெண்களின் எண்ணிக்கையில் 10.7 சதவீதம். அப்படியானால், இப்புள்ளி விவரத்தின்படி தமிழகத்தில் வாழும் விதவைகளின் எண்ணிக்கை தேசிய அளவை விட 3.4 சதவீதம் அதிகம். தற்போது தமிழகத்தில் 40 லட்சம் விதவைகள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
தமிழத்தில் அரியலூர், சென்னை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், ராமநாதபுரம், கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், சிவகங்கை, தேனி, திருச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய 16 மாவட்டங்களிலிருந்து ஒரு மாவட்டத்திற்கு 30 அல்லது 31 கைம்பெண்கள் வீதம் 495 விதவைப் பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் தங்கள் கணவர்கள் இறப்பிற்கு மது போதை, கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள், விபத்து, தற்கொலை, கரோனா போன்ற 9 காரணங்களை கூறுகின்றனர்.
இதில், மதுபோதையில்தான் அதிகளவு கணவர்கள் இறந்துள்ளதாக அந்தப் பெண்களிடம் நடத்திய ஆய்வில் தெரிய வருகிறது. மிகப் பெரிய எண்ணிக்கையில் விதவைகள் நமது நாட்டில் வாழந்து வந்த போதிலும், அவர்களின் உள்ளார்ந்த துயர்களை நமது சமூகம் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. பாரம்பரியம், மதப் பழக்கம், கலாச்சாரம் ஆகியவற்றின் பெயரால் அவர்கள் மீது இழைக்கப்டுபடுகின்ற பாகுபாடு மற்றும் வன்கொடுமைகள் நியாயப்படுத்தப்படுகின்றன.
விதவைப் பெண்கள் மத்தியில் கடன் என்பது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கின்றது. ஏறக்குறைய 85 சதவீதம் விதவைப் பெண்கள் கடனாளிகளாக இருக்கின்றனர். அவர்களில் ஒரு சிலர் சுய உதவிக் குழுக்களிடமிருந்து குறைந்த வட்டி விகத்தத்தில் கடன் பெற்றிருக்கின்றனர். ஆனால் 50 சதவீதம் பேர் கந்து வட்டிக்காரர்கள் மற்றும் சிறு நிதி நிறுவனங்களிடமிருந்து மிக அதிக வட்டி விகிதத்தில் கடன் பெற்றிருக்கின்றனர்.
விதவைகள் தங்களுக்கான வாழ்வாதார உரிமைகளைத் தேடிப் பெறுவது பெரும் சவாலாகவே உள்ளது. கணக்கெடுப்பில் பங்கேற்ற விதவைகளில் 38.6 சதவீதம் பேர் மட்டுமே விதவைகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான ஆவணத்தை வைத்திருக்கின்றார்கள். விதவைகள் இத் திட்டத்தின கீழ் பயனடைவதைத் தடுக்கின்ற காரணிகள் லஞ்சம் மற்றும் விதவைகள் குறித்தான பாகுபாட்டுக் கண்ணோட்டம் என்று கூறுகின்றனர்.
கணவரின் இழப்பு விதவைகளின் வாழ்க்கையில் அழுத்தமான வாழ்வியல் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அன்றாட வாழ்வில் அவர்கள் சந்திக்க நேரிடும் சமூகப் புறக்கணிப்பு, தனிமை, மன உளைச்சல், கடன் சுமை, பாதுகாப்பின்மை ஆகியவை அவர்களைப் பெருளாதார மற்றும் உளவியல் சிக்கல்களுக்கு இட்டுச் செல்கின்றன.
இச்சூழலில், தமிழக அரசு விதவைப் பெண்களுக்ககென தனிவாரியம் அமைத்து அவர்களது மேம்பாட்டிற்கு வழிவகை செய்து வருவது பாராட்டுக்குரியது. அம் முயற்சியினை வரவேற்பதோடு கீழ்கண்ட பரிந்துரைகளை தமிழக அரசுக்கு இந்த ஆய்வு முன் வைக்கின்றது. விதவைகளது சமூக, அரசியல், பொருளாதார உரிமைகளையும் மற்றும் சமத்துவம், வாழ்வாதாரம், வழிபாடு தொடர்பான உரிமைகளையும் உத்திரவாதப்படுத்திட வேண்டும்.கணவனது இறப்பினைத் தொடர்ந்து நடத்தப்படும் சமூகக் கலாச்சாரச் சடங்குகள் நிறுத்தப்பட வேண்டும் மற்றும் தடை செய்யப்பட வேண்டும்” என்றனர்.
பேட்டியின்போது நாகப்பட்டினம் கலங்கரை அமைப்பு இயக்குநர் குழந்தை, வழக்கறிஞர் ராஜன், சந்தானம் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment