Monday, September 9, 2024

பதிமூனாவது மையவாடி - சோ.தர்மன் நாவல் தமிழ் சமூகத்தில் அன்னிய மதமாற்ற மோசடிகளை எடுத்துக் காட்டுகிறது

  சாகித்ய அகாடமி விருது சோ.தர்மன் - கிறிஸ்தவக் கல்வி நிலையங்கள், மடங்கள் போன்றவற்றை மிகக் கடுமையாக விமர்சிக்கும் விதமாக ‘பதிமூனாவது மையவாடி’ நாவலை எழுதுகிறார். ஜெயமோகன் முன்னுரை எழுதுகிறார். ‘அடையாளம்’ பதிப்பகம் வெளியிடுகிறது.






நாவலின் கதைசொல்லி ஒரு பாத்திரமாக வருவதில்லை; அவர் நாவல் உலகத்துக்கு வெளியே இருக்கிறார். எல்லாக் கதாபாத்திரங்களின் மனவோட்டங்களையும் கனவுகளையும் அந்தரங்கங்களையும் தெரிந்துகொள்ளும் வல்லமை அவருக்கு இருக்கிறது. அவருக்கென தனித்த சித்தாந்தமும் இருக்கிறது என்பது கொஞ்சம்கொஞ்சமாக நமக்குப் புலப்படுகிறது. பிரதானமாக அவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கருத்தமுத்துவின் பதின்பருவத்தைப் பின்தொடர்கிறார். நாவலின் கதாபாத்திரங்கள், குறிப்பாக இந்துக்களின் குணாம்சத்தைக் கதைசொல்லி விவரிக்கும் விதம் கவனிக்கத் தக்கது. உதாரணமாக, பள்ளிக்கூடத்தில் சேர்க்க சிபாரிசுக்காக குமாரசாமி ரெட்டியாரிடம் செல்லும்போது அவர் கருத்தமுத்துவுக்கு நல்வார்த்தை சொல்லி சிபாரிசு வாங்கித்தர சம்மதிக்கிறார். ஓணான் கழுத்தில் கண்ணியை மாட்டிவிட்டுக் குரூரமாக விளையாடும் சிறுவர்களிடமிருந்து ஓணானைக் காப்பாற்றி, கண்ணியை அவிழ்த்து அதற்கு மறுவாழ்வு கொடுக்கிறார் பாண்டியத் தேவர். இவர்கள்போலவே கிட்டய்யர், ஆசாரி, கிருஷ்ணக் கோனார், பில்லிசூனியம் வைப்பவர் என ஒவ்வொருவருமே அன்பின் திருவுருவமாக அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். இதற்கும் இவர்களெல்லாம் ஓரிரு பக்கங்களுக்கு மட்டுமே வந்துபோகும் பாத்திரங்கள். கருத்தமுத்து அவனது பெரும்பாலான நேரத்தைக் கழிக்கும் – சுடுகாட்டில் பணியாற்றும் அரியானும் ஒரு புனிதாத்துமாவாகத்தான் சித்தரிக்கப்பட்டிருக்கிறது; மடங்களில் நடப்பதாகச் சொல்லப்பட்டும் குற்றங்களை எதிர்த்துத் துணிச்சலோடு மல்லுக்கட்டுபவராகவும் இந்த அரியான் இருக்கிறார். 

இதற்கு மாறாக, இப்படியான அந்தஸ்துகள் எதையும் கிறிஸ்தவப் பாத்திரங்களுக்குத் தர மறுக்கிறார் கதைசொல்லி; பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் உள்ளிட்ட கிறிஸ்தவப் பின்புலம் கொண்டவர்களில் எல்லோருமே எதிர்மறை குணம் கொண்டவர்கள் என்பதான பிம்பத்தை வழங்கவே கதைசொல்லி முற்படுகிறார். காமத்தைத் தவிர்க்க முடியாதவர்களாக, அதிகாரத் துஷ்பிரயோகம் செய்பவர்களாக, திருடுபவர்களாக, பொய்சொல்பவர்களாக, உள்ளொன்றும் புறமொன்றும் வைத்துப் பேசுபவர்களாக, ஏன் கொலைகாரர்களாகவும்கூட வர்ணிக்கிறார். நேர்மறை குணம் கொண்டவர்கள் என்பதாகச் சொல்லப்படும் ஓரிருவரையும்கூட கிறிஸ்தவத்தை விமர்சிப்பதற்காகப் பயன்படுத்தும் உத்தியைக் கைக்கொள்கிறார். பைபிள் வசனங்களுக்கு மோசமான இரட்டை அர்த்தங்களைக் கற்பிப்பது, கிறிஸ்தவ நடைமுறைகளை அரைகுறையாக விவாதிப்பது என சகலமும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாவதால் எதிர்மறையான சித்திரம் மட்டுமே கிடைக்கிறது.

சரி, இவ்வளவு கடுமையான விமர்சனங்கள், கேலிப் பேச்சுகள், அவமதிப்புகள், கொச்சைப்படுத்தலுக்கு என்ன நியாயப்பாட்டைக் கதைசொல்லி முன் வைக்கிறார்? “நூற்றுக்கு 90% இந்துக்கள் இருக்கும் நாட்டில் 40% கல்வி நிறுவனங்கள் கிறிஸ்தவர்கள் கையில் இருக்கின்றன. இயேசு, சிலுவை, மன்னிப்பு, ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்று அவர்கள் போதிக்கிறார்கள். அதனால், ஒருவன் வேதக்காரர்கள் நடத்தும் கல்லூரிகளில் படித்து வெளியே வரும்போது இம்மிகூட அறச்சீற்றமே இல்லாத பொம்மையாக வருகிறான்” என்கிறது ஒரு பாத்திரம். “மீதி 60% கல்வி நிலையங்களிலிருந்து வருபவனிடம் எவ்வளவு அறச்சீற்றம் இருக்கிறது?” என்று கதைசொல்லி இடையீடு செய்ய மறுக்கிறார். “2% கிறிஸ்தவர்கள் 40% கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கிறார்கள், நிர்வகிப்பவர்களெல்லாம் மரக்கட்டைகள், ராஜா மாதிரி வாழ்கிறார்கள், எல்லா ஊர்களிலும் வேதக்கோயில்கள் வந்துவிட்டன, பத்துப் பேர் சேர்ந்து ஜெபக்கூட்டம் நடத்துகிறார்கள், இந்தியா சிலுவை நாடாக மாறப் போகிறது” என்று அடுக்கடுக்காகப் பேசுகிறது. உடன் இருக்கும் கதாபாத்திரங்கள் இவற்றை ஆமோதித்துத் தலையை மட்டும் ஆட்டுகின்றன.  கூடவே, கம்யூனிஸ்ட்டுகளைப் போலிகள் ஆக்கி விடுகிறார். மார்க்ஸியம் படிக்கும் மாணவன் கையில் ஆயுதத்தைக் கொடுத்து விடுகிறார். பெரியாருக்கும் காந்திக்கும் திராவிடக் கட்சிகளுக்கும் ஆங்காங்கே கீறல்களைப் போட்டுவிடுகிறார். கூடவே, நேரடியாகவும் மறைமுகமாகவும் இரண்டு மதங்களையும் ஒப்பிட்டு ஒன்றை உயர்வாகவும், மற்றொன்றைக் குறைவுபட்டதாகவும் பேசிக் கொள்கிறார். விளைவாக, கதைசொல்லி ஆதரிக்கும் சித்தாந்தம் பூதாகரமாகி நிற்கிறது.

‘அறம் செய்ய விரும்பு’ என்ற வரியோடு நாவல் முடிகிறது. அறம் என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை மதிப்பிழக்கச் செய்ததில் நவீனத் தமிழ் இலக்கியத்துக்கு முக்கியமான பங்கு உண்டு என்பது தனிக் கதை. சோ.தர்மன் இந்த நாவலை எழுதத் தொடங்கும்போது அவர் முன்னால் பல அறரீதியான கேள்விகள் இருந்தன. இந்து மதப் பின்புலம் கொண்ட அவர் தன்னுடைய நாவலில் கிறிஸ்தவம் குறித்து விமர்சனபூர்வமாக எழுதும் முடிவை எடுக்கும்போது எப்படியான மொழியை வரித்துக்கொள்ள வேண்டும்? இது அவர் முன் இருந்த அடிப்படையான முதல் கேள்வி. சிறுபான்மை மதம் என்பதால் தன்னுடைய குரல் உள்ளிருந்து ஒலிக்கும் ஒன்றாக இருக்க வேண்டியது எந்த அளவுக்கு அவசியம்? தனது விமர்சனபூர்வமான அணுகுமுறை கிறிஸ்தவர்களின் சீர்திருத்தத்துக்கு உதவிகரமாக இருக்கப் போகிறதா? கிறிஸ்தவர்கள் மீது முன்வைக்கும் கடுமையான விமர்சனங்களுக்கு என்ன நியாயப்பாட்டைக் கதைப்பிரதி வரித்துக் கொள்ளப் போகிறது? சுயவிமர்சனம் செய்துகொள்பவர்களுக்கே இப்படியான தார்மீகம் மிக முக்கியம் எனும்போது மாற்றுச் சமூகத்தினரை அணுகும்போது ஒரு எழுத்தாளருக்குக் கூடுதல் பொறுப்பு அவசியமாகிறது. அதெல்லாம் பொருட்படுத்தப்படவில்லை.

நாவல் ஒரு பிரச்சினைக்கான தீவிரமான விவாதத்தை, தீவிரமான சிந்தனையை முன்னெடுக்க விரும்பவில்லை. மாறாக, சமூக வலை தளங்களில், டீக்கடைகளில் நடக்கும் திண்ணைப் பேச்சுகள்போல் பொதுப்புத்தி அபிப்ராயங்களையே கதாபாத்திரங்களும் கதைசொல்லியும் வெளிப்படுத்துகின்றனர். அனுபவசாலிகளின் மொழியும், நிறைய படிக்கும் அறிவுஜீவிகளின் மொழியும் அப்படியாகவே வெளிப்படுகின்றன. அவை எந்த வகையிலும் ஆக்கபூர்வமான விவாதத்தை முன்னெடுக்கவில்லை என்பதுதான் துயரகரமானது. விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு எந்த அமைப்புகளுமே கிடையாதுதான்; ஆனால், விமர்சகரின் குவிமையமும் அக்கறையும் எங்கே திரண்டிருக்கின்றன என்பதுதான் கேள்வி. மேலும், நாவலில் வரும் இந்துக்களெல்லாம் நேர்மறை குணம் கொண்டவர்களாகவும், கிறிஸ்தவர்களெல்லாம் எதிர்மறை குணம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். இலக்கியம் என்பது கதாபாத்திரங்களைக் கறுப்பு-வெள்ளைக் கோணத்தில் அணுகுவதா என்ன? சாகித்ய அகாடமி விருது பெற்ற ஒரு எழுத்தாளர் இப்படியாக இலக்கியத்தை அணுகுவது உண்மையில் துரதிர்ஷ்டவசமானது. கறுப்பு-வெள்ளையாகப் பாத்திரங்களை அணுகும்போது நமக்குத் தவிர்க்க முடியாமல் ஒரு கேள்வி எழுகிறது: இது இலக்கியமா அல்லது பிரச்சாரமா என்பதுதான் அது. பிரச்சாரம் என்றால் அது யாருக்கான பிரச்சாரம்?

கருத்தமுத்துவின் முதற் காமம் ஜெஸ்ஸியில் நிகழ்கிறது. ஆனால் அது கிறித்தவ மதத்தை அறிதலும்கூட. உடலை, காமத்தை ஒறுக்கும் ஒரு மதத்தைக் காமத்தினூடாக அறிதல். அந்த அனுபவத்தின் பின்னணியாக அமைகிறது பழைய ஏற்பாட்டுப் பைபிளின் வரி: ‘சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு. இஸ்ரவேலரே ஆர்ப்பரியுங்கள். எருசலேம் குமாரத்தியே நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு. உன் ஆக்கினைகளை அகற்று. திறந்த உடலைக் களிப்பாக்கு.'
https://rengasubramani.blogspot.com/2020/09/blog-post.html
இத்தகைய கதைக்கருக்களை எழுதத் தொடங்கியதுமே தமிழ் எழுத்தாளனுக்குக் கைநடுக்கம் தொடங்கிவிடும். பலநூறு முற்போக்கு இடக்கரடக்கல்களால் ஆனது நம் புனைவிலக்கியச் சூழல். பல்வேறு சாதிய அடியோட்டங்களால் அலைக்கழிக்கப்படுவது. இவை இரண்டுக்கும் நடுவே ஒருவகையான ‘சமநிலையை’ பேணிக் கொள்ளவே நம் படைப்பாளிகள் எப்போதும் முயல்கிறார்கள்.

சோ. தர்மன் ஒரு கிராமத்துக்காரருக்கே உரிய ‘வெள்ளந்தித்தனத்துடன்’ நேரடியாகப் பிரச்சினைகளின் மையம் நோக்கிச் செல்கிறார். ஆய்வாளனுக்குரிய தகவல் நேர்த்தியுடன் கலைஞனுக்குரிய நுண்ணிய நோக்குடன் ஒட்டுமொத்தமான சித்திரத்தை உருவாக்குகிறார்.

கருத்தமுத்து ஒரு ஆணாக, குடிமகனாக ஆவதன் நிதானமான மலர்தலை இதன் கதையோட்டம் காட்டுகிறது. நாவல் தொடங்கும் போது மூன்று வகையான அகப்புறச் சூழல்களை அவன் எதிர் கொள்கிறான். ஒன்று கல்வி, இன்னொன்று மதம், இணையாகவே காமம். ஒவ்வொன்றையும் அவன் தன்னளவில் புரிந்துகொள்கிறான். இந்த மூன்றும் ஒன்றுடன் ஒன்று பின்னி உருவாகியிருக்கும் ஒரு பெரும் பரப்பைச் சென்றடைகிறான்.

 சோ.தர்மனின் 'பதிமூனாவது மையவாடி' In வாசிப்பு Monday, June 21, 2021

 https://djthamilan.blogspot.com/2021/06/blog-post.html
சிறுவர்கள், பதின்மர்களாகி இளைஞர்களாவது பற்றி நிறைய நாவல்கள் வந்திருக்கின்றன. சோ.தர்மனின் 'பதிமூனாவது மையாவாடி' கருத்தமுத்து என்கின்ற சிறுவன் இளைஞனாகும் பருவத்தைப் பின்பற்றிப் போகின்றது. ஊரிலிருந்து ஒன்பதாம் வகுப்புப் படிப்பதற்காய் கிறிஸ்தவப் பாடசாலைக்குப் போகும் கருத்தமுத்து விடுதியில் தங்குகின்றான். அங்கிருந்து அவனது வாழ்வு படிப்பு என்பதோடு அல்லாது, மனிதர்களை, புதிய சூழலை அறிவதென வெவ்வேறு திசைகளில் நீள்கிறது. விடுதியிற்கு அண்மையில் அமையும் மையவாடி அவன் வாழ்க்கையின் பெரும்பாடங்களைக் கற்றுக்கொள்ளும் போதிமரத்தைப் போல அமைகின்றது. அங்கு பிணங்களை எரிக்கும் அரியான் பல்வேறு விடயங்களில் மிகச் சிறந்த ஓர்  'ஆசிரியராக' அமைகின்றார்.

பாடசாலைக் காலத்திலே ஒரு சில பாதிரிமார்களையும், கன்னியாஸ்திரிகளையும் கண்டுகொண்டாலும், இந்துப் பின்னணியில் வந்த கருத்தமுத்துக்கு பாதர்மார்களின் சுரண்டல்களும், கன்னியாஸ்திரிகளின் பாலியல் வறட்சியும் கண்களுக்கு அதிகம் உறுத்துகிறது. கர்த்தரரின் பொருட்டு மக்களுக்குச் சேவை செய்ய வந்த அவர்களின் செயற்பாடுகள் பற்றி தொடர்ச்சியாக விமர்சனம் வைக்கப்படுகின்றது. கருத்தமுத்து தனக்கான காமத்தைக் கண்டுகொள்கின்ற மூன்று பெண்களும் கிறிஸ்தவப் பின்னணியில் இருப்பதும் தற்செயலாகவே அமைந்தென்றே வாசிப்பு மனம் எண்ணட்டுமாக.

பாதிரிமார்கள் குடும்பப் பெண்களின் வாழ்வில் விளையாடுகிறார்கள். சாமர்த்தியமாய் குடும்பங்களைப் பிரிக்கின்றார்கள். அதிகார வேட்கையில் மக்களுக்கான சேவையைச் செய்யாது தமக்குள் அடிபடவே பொழுதுகளைப் பார்க்கின்றார்களென கருத்தமுத்துவினூடாக சோ.தர்மன் ஒரு சித்திரத்தை வாசிக்க வைக்கின்றார். அதன் உச்சபட்சமாக 2% இருக்கும் கிறிஸ்தவர்கள், நாட்டில் 40% கல்வி நிறுவனங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றார்களென பிரச்சாரம் போல அடிக்கடி கதாபாத்திரங்கள் அலுக்குமளவுக்கு பேசிக்கொள்கின்றார்கள்.

இத்தனைக்கு அப்பாலும் ஏதோ ஒருவகையில் சாதியாலோ அல்லது வசதி வாய்ப்பில்லாமலோ ஒரு இந்துவைக் கல்வி கற்பதற்கான வசதிகளைக் கொடுத்துக்கொண்டிருப்பது ஒரு கிறிஸ்தவ பாடசாலை என்பதைப் போகின்றபோக்கில் -அழுத்தமாக அதைப் பேசாது கதைக்காது- கடந்து போகின்றபோதுதான் நாவலின் 'அரசியல்' உறுத்தச் செய்கின்றது.

கருத்தமுத்துவினூடாகவும், அவர் சந்திக்கும் பாத்திரங்களினூடாகவும் கிறிஸ்தவ நிறுவனங்கள் விமர்சனம் செய்யப்படுவது தவறுமல்ல. நிறுவனமாக்கப்படும் எந்த மத/கல்வி அமைப்பும் பின்னர் அதிகாரத்திற்குள்ளும், பாலியல் சிக்கல்களுக்குள்ளும் மாட்டுப்படுவது கிறிஸ்தவ மதத்தில் மட்டுமில்லை, புத்தமடலாயங்களிலும் நடைபெறுபவைதான். இந்து மதத்தில் நடைபெறுபவற்றை எல்லாம் சொல்லவேண்டியதில்லை. இந்து மதம் ஒர் முழுமையான அதிகாரத்திற்குள் (வத்திக்கான் போன்று) இல்லாதிருப்பதால் இந்தளவுக்கு ஊழல்களும் சுரண்டல்களும் நடைபெறுவதிலிருந்து ஒரளவுக்குத் தப்பியிருந்தாலும், நமது சாமியார்களின் கதைகளையும், காமகோடிகளின் அறிவுரைகளையும்  தொடர்ந்து அறிந்தபடியேதானே இருக்கின்றோம்.

நிறுவனப்பட்ட மதங்களான கிறிஸ்தவம் போன்றவை விமர்சனங்களிலிருந்து தப்பவேண்டியதில்லை. ஆனால் அதை அரசியல் பிரச்சாரமாக்காமல் இயல்பிலே கதையைச் சொல்லிச் சென்றிருந்தால் இந்த நாவல் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இறுதியில் ஏஞ்சல் தனது கன்னியாஸ்திரி ஆடையைத் துறந்து சேவைக்காகவும், கருத்தமுத்துக்காகவும் திருச்சபையிலிருந்து வெளியே வருகின்றார். இவ்வாறான ஒரு சில சம்பவங்கள்தான் இந்த நாவலை ஒரளவு சாய்வின்றி வாசிக்க முடிகின்றது. இந்த நாவலில் இடதுசாரி நம்பிக்கையுள்ளவர்களாய் வரும் இளைஞர்களை ஆயுதங்களை மறைத்துவைத்திருக்கும் வன்முறையாளர்களாக மட்டும் சித்தரித்து பொலிஸ் ஜீப்புக்களில் ஏற்றப்படுபவர்களாக காட்டப்படுவது சற்று அச்சமூட்டுவதுங்கூட.  பாஞ்சாலைத் தொழிலாளியாக (அறிமுகத்தில்) 20 வருடங்களாக இருந்த சோ.தர்மனா இப்படியெல்லாம் எழுதுவது என்று நமக்கு வியப்பு வருகின்றது.

சோ.தர்மனின் 'கூகை' வாசித்தபோது நானடைந்த வியப்பு இன்னும் மறக்காமல் இருக்கின்றது. 'சூல்' கொஞ்சம் வாசிக்கத் தொடங்கியவுடன் என்னை உள்ளிழுக்காதுவிட்டதனால் நிறுத்திவைத்திருக்கின்றேன். 'பதிமூனாவது மையவாடி' பிரச்சாரத்தன்மைக்கு முன்னிடம் கொடுத்ததால் கலைத்தன்மையை அதன்போக்கிலே இழந்துவிடுகின்ற அபாயத்தையும் அடைகிறது.

ஒருவர் தன் மதத்தை எப்படி நேசிக்கின்றார் என்பது இன்னொரு மதத்தின் மீதான சகிப்புத்தன்மையில் இருக்கிறது என்று கூட ஒருவகையில் மதிப்பிட்டுக்கொள்ளலாம். இன்னொரு மதத்தை வெறுத்துக்கொண்டு, நாம் சார்ந்திருக்கும் மதங்களை எப்படியேனும் காப்பாற்றிவிடமுடியாது. அதனால் எந்த ஆன்மீக ஈடேற்றந்தான் நடந்துவிட முடியும்? ஒரு மத நம்பிக்கையாளரை விட இலக்கியவாதிக்கு நிச்சயம் விரிந்த மனதுதான் இருக்கும். இங்கே சோ..தர்மன் ஓர் இலக்கியவாதியாக அல்ல, ஒரு மத நம்பிக்கையாளராக தன்னை நிரூபிக்க முயற்சித்து தோற்றுக்கொண்டிருக்கின்றார் என்பதுதான் சோகமானது. அது அவருக்குரிய அடையாளம் இல்லை என்பதை நாம் மட்டுமில்லை அவரது இலக்கிய மனமும் நன்கறியும்.


பதிமூனாவது மையவாடி - சோ. தர்மன்
தூர்வை, கூகை, சூல் ஆகிய நாவல்களை எழுதிய சோ.தர்மன் அவர்களின் அடுத்த நாவல் பதிமூனாவது மையவாடி.  ஜெயமோகன் முன்னுரையுடன் வெளிவந்துள்ளது. முன்னுரை நாவலை எந்த கோணத்திலிருந்து படிக்கலாம் என்பதை மெலிதாக காட்டுகின்றது. எனக்கென்னவோ, வேறு ஒரு கோணத்தில் யாரும் படித்துவிட வேண்டாம் என்ற முன்னெச்சரிக்கை போலதான் தோன்றுகின்றது. தமிழ்ஹிந்து நாவலைப்பற்றி மிக எதிர்மறையான விமர்சனத்தை எழுதியிருந்தது. நாவலைப் பற்றியல்ல நாவலாசிரியரைப் பற்றி.சூல் நாவலுக்கு சாகித்திய அகடமி விருது கிடைத்ததும் இந்நாவலில் கிறிஸ்தவமத நிறுவனங்களைப் பற்றிய விமர்சனங்கள் வந்ததும், வழக்கம் போல அவருக்கு சங்கி பட்டம் கட்டிவிட்டார்கள். விட்டால் இனி கோவிலுக்கு செல்பவன், நெற்றியில் விபூதி வைப்பவன் என அனைவருக்கு இந்த பட்டம் கிடைக்கும். முட்டாள்கள்.

ஒரு சிறுவன் எப்படி ஒரு இளைஞனாக மாறுகின்றான் என்பதுதான் நாவல். கருத்தமுத்து உருளக்குடி கிராமத்திலிருந்து படிப்பதற்காக கிராமத்தை விட்டு வெளியே செல்கின்றான். பாடப்படிப்புடன் உலகத்தையும் கற்று கொள்கின்றான். சமூகம் அவனுக்கு கற்று கொடுக்கின்றது. அவனுக்கு வரும் குழப்பங்கள் அதிர்ச்சிகள் வழியாக அவன் மெதுவாக கற்று கொள்கின்றான். கல்வி, மதம், காமம், களவு, அன்பு எல்லாம் அவனுக்கு அனுபவங்களாக கிடைக்கின்றன. அதை அவன் எப்படி பயன்படுத்தி கொள்கின்றான்? எதைப் பெற்று கொள்கின்றான் என்பதுதான் நாவல்.

முன்னுரையில் ஜெயமோகன் கல்வியே ஒருவன் தன் தடைகளை விட்டு வெளியேறும் வழி என்பதே இந்நாவலின் அடிநாதம் என்பது போல சொல்கின்றார். ஓரளவுதான் அது சரி. கல்விதான்  ஒருவனை எவ்வித தளைகளிலிருந்தும் அகற்றும். சமூக ஏற்றதாழ்வோ, பொருளாதார ஏற்றதாழ்வோ அனைத்தும் அறிவின் முன் அடங்கிதான் போக வேண்டும். அது இந்நாவலின் மிக மெலிதான ஒரு சரடு. ஆனால் தலைப்பை பின்தொடர்ந்தால் நமக்கு கிடைப்பது நாவலின் முக்கிய சரடான நிறுவனமயமாக்கப்பட்ட மதமும், அதனுள் இருக்கும் முரண்கள், பிரச்சனைகளும்.


கருத்தமுத்துவின் மத நம்பிக்கையை ஒட்டிய குழப்பம் ஏன் அவன் அம்மா சிலநாட்களில் கோவிலுக்குள் வருவதில்லை என்பதில் ஆரம்பிக்கின்றது. அவனது நண்பன் நீங்கள் எல்லாம் சைத்தனை வணங்குபவர்கள் எனும் போது மறுத்து பேச முடிவதில்லை. அதே மனம் கடவுள் இல்லை என்பதையும் பின்னால் ஏற்று கொள்கின்றது. அங்கிருந்து மெதுவாக நகர்ந்து சக மனிதர்களுக்கு ஏதாவது செய்தால் போதும் என்று நிற்பதில் நாவல் முடிகின்றது. 
மதம், கடவுள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எப்போதும் வளரும் மனத்தில் குழப்பங்களைத்தான் ஏற்படுத்தும். கேள்வி கேட்கும் வயது எதையும் கேள்வி கேட்கும். ஹிந்துமதம் கேள்விகளை அனுமதிக்கும் மதம். நான் சொல்வதை சொல்கின்றேன். நீ உன் அறிவால் ஆராய்ந்து முடிவு செய் என்றுதான் கண்ணனே சொல்கின்றான். ஹிந்துமதம் அனைவரும் ஒன்று, அனைவருக்கு ஒரே வழி என்று சொல்வதில்லை. ஒருவர் செல்லும் வழி, இன்னொருவருக்கு சாத்தியமில்லாமல் போகலாம். வரையாடு செல்லும் வழியில் மனிதன் செல்ல முடியாது, யானை செல்லும் வழியிலும் ஓரளவுதான் மனிதன் செல்ல முடியும். மீறினால் எங்காவது ஏதாவது உடையும். ஏன் செல்ல முடியாது என்று கேள்விக்கு சில சமயம் பதில் கிடைக்காத போது குழப்பம் வருகின்றது. அந்த குழப்பமே மற்றவர்களுக்கு சாதாகமாகி ஒரு சராசரி ஹிந்துவை குழப்ப முடிகின்றது.

பெங்களூரில் சிவாஜிநகரிலிருந்து இந்திராநகர் பஸ்ஸில் ஒரு நாள். எனக்கு பின்னால் ஒரு கிறிஸ்தவர். சிவாஜி நகர் சர்ச்சிற்கு வந்தவர் போல. பிங்க் கலர் சட்டை அதை உறுதி செய்தது. அருகிலிருந்தவரிடம் மிக சத்தமாக மதம் மாற்றுவதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். "நாம ஒவ்வொருத்தரும் குறைஞ்சது நாலு பேருக்காவது ஆண்டவரோட ப்ளெஸ்சிங்ஸ கொண்டு போகனும்". விடாமல். என்னால் தாங்க முடியவில்லை எவ்வளவு நேரம்தான் அவரது ஆண்டவரைப் பற்றியே கேட்பது. பக்கத்து வரிசை சீட்டில் அமர்ந்திருந்த ஒரு இஸ்லாமிய பெரியவர் அவரும் இதை எல்லாம் கேட்டு கொண்டிருந்தார். என்னைப் பார்த்து ஒரு விதமான புன்னகை செய்தார் விடு விடு அவங்க அப்படித்தான் என்பது மாதிரி. கூட வேலை செய்யும் ஒரு பெண்ணிடம், ரயிலில் பார்த்த பத்தாவது நிமிடம் பைபிளை பற்றி பேச ஆரம்பித்த பெண்ணை பற்றி கூறும் போது இது எப்படி இவர்களால் எப்போதும் மதத்தை கட்டி அழமுடிகின்றது என்றுதான் தோன்றியது. நாவல் ஏன் என்று கொஞ்சம் காட்டுகின்றது. பல கல்வி சாலைகள் அவர்கள் கையில். அங்கு அவர்கள் மதத்தை பற்றி போதிக்கின்றார்கள். ஒவ்வொரு குடும்பமும் ஒரு சர்ச்சுடன் பிணைக்கப்பட்டுள்ளது. பிறகு எப்படி அதைப் பற்றி பேசாமல் இருப்பார்கள். 

ஆனால் ஹிந்துக்கள் மெதுவாக மதத்தை விட்டு விலகி செல்கின்றார்கள். முன்பு எல்லாம் ஒவ்வொரு சமூகத்தவர்களும் அவர்களுக்கு என்று தனிக்கோவில் திருவிழா என்று செய்வார்கள். அது இல்லாமல் ஒன்று கூடி வேறு ஏதாவது ஒரு பெரிய கோவில் திருவிழாவில் பங்கு வகிப்பார்கள். அனைத்தும் தேய்ந்து வருகின்றது. 

கருத்தமுத்து எங்கும் தன் மதத்தை பற்றி மற்றவர்களிடம் பேசுவதில்லை, அதைப்பற்றி அதிகம் நினைப்பதில்லை. அவனைப் பொறுத்தவரை அவனது மத நம்பிக்கை எப்போதாவது கோவிலுக்கு போய் நெற்றியில் நீறு பூசுவதுடன் சரி. இதுதான் இன்று வரை ஒரு சராசரி ஹிந்து இளைஞனின் நிலை. அவனுடன் பள்ளியில் இணையும் ராயப்பன்; அவனுக்கு அவன் மதம் என்பது உடன் இருக்கும் ஒன்று. எப்போதும் அதைப் பற்றி நினைப்பவன். ஞாயிறு தோறும் சர்ச் போவது, பைபிள் படிப்பது என்று அவனுடன் கலந்த ஒன்று. மிக எளிதாக அவனால் நீங்கள் சாத்தானை வணங்குபவர்கள் என்று முத்துவிடன் கூற முடிகின்றது, வா வந்து ஜபம் செய் என்று அழைக்க முடிகின்றது, தாயத்து வாங்க நினைப்பவனை இயேசுவின் சொரூபத்தை வாங்கி கழுத்தில் மாட்ட வைக்கின்றது. ராயப்பனின் குடும்பம் அதை அடுத்த கட்டம் நகர்த்துகின்றது. பைபிள் வாங்கி கொடுக்கின்றது. சர்ச்சுக்கு கூட்டிட்டு வா ஃபாதர்கிட்ட ஆசீர்வாதம் வாங்கட்டும் என்கின்றது. பல மதமாற்றத்தின் பிண்ணனி இப்படித்தான் இருக்கின்றது.

சிறுபான்மை கல்வி கூடங்களில் நடக்கும் பல ஊழல்களை கருத்தமுத்து வழியாக போட்டுடைக்கின்றார். சமீபகாலங்களில் பல சர்ச்களில் நடைபெறும் முறைகேடுகள், பாலியல் அத்துமீறல்கள் பற்றிய விஷயங்களை படிப்பதால் பெரிய அதிர்ச்சி இல்லை, தைரியமாக எழுத ஒருவர் இருக்கின்றாரே என்றுதான் தோன்றுகின்றது. 

துறவு என்பதன் விளக்கமே அனைத்தையும் துறப்பது. ஆனால் கிறிஸ்துவ மதத்தின் துறவிகள் மீது பல கடினமான விமர்சனங்களை வைக்கின்றார். துறவி எனபவனின் உணவு இவ்வளவு கைப்பிடிதான் இருக்க வேண்டும் என்று மகாபாரதம் கூறுகின்றது. மாணவனுக்கு மட்டுமே அளவில்லை. ஆனால் பாதிரியார்களின், கன்னியாஸ்திரிகளின் வாழ்க்கை முறை, சாதரணர்களை விட ஒரு படி மேலாக இருக்கின்றது. அவர்கள் எதை துறந்தார்கள் என்ற கேள்வி எழுகின்றது. குடும்பத்தை மட்டுமா? 

கருத்தமுத்துவுடன் நட்பாக இருக்கும் ஒரு கன்னியாஸ்திரி, தன் அங்கியை உதறி ஒரு சாதரண பெண்ணாக செல்வதில் நாவல் முடிவடைகின்றது. வாழ்வின் அர்த்தம் என்ன என்பதை அவள் கருத்தமுத்துவிடம் கண்டு கொள்கின்றாள், இறுதியில் வரும் ஒரு பறவை அவளை பறக்க செய்கின்றது.

நாவலாசிரியர் கிறிஸ்துவ மதத்தை இழிவு செய்துவிட்டார் என்பது போல சில விமர்சனங்கள் கண்ணில் பட்டன. மேலோட்டமாக படிக்கும் போது இது கிறிஸ்துவ மதத்தின் மீதான விமர்சன நாவல் என்றே தோன்றும். ஆனால் கிறிஸ்து மீதோ, பைபிள் மீதோ எவ்வித விமர்சனமும் இல்லை. மதத்தை ஒரு நிறுவனமாக வைத்து நடத்தப்படும் அட்டூழியங்களைத்தான் விமர்சித்துள்ளார். 

குறிப்பாக கத்தோலிக்கர்கள் சேவை என்ற பெயரில் மக்களிடமும், அரசிடமும், வெளிநாட்டவரிடமும் அடிக்கும் கொள்ளையைத்தான் மிக தைரியமாக விமர்சிக்கின்றது. கிறிஸ்துவ மதத்தின் மீது எவ்வித விமர்சனமும் இல்லை. பைபிள் வாசகங்களை பல இடங்களில் பயன்படுத்தி இருக்கின்றார். ஆனால் எங்கு தவறாக பயன்படுத்தவில்லை. சொல்லப்போனால் சில இடங்களில் அட பைபிளை படித்து பார்த்தால் கூட என்ன என்று தோன்றிவிட்டது (தீவிர மதமாற்றிகள் படித்தால் ஒரு புத்தகம் பார்சல் அனுப்பிவிட போகின்றார்கள். வேண்டாம். வேதங்களையும், உபநிஷத்துகளையும், புராணங்களையும் படிக்கவே ஆயுள் போதாது. அவ்வளவு ஏன் பாரதத்தையும், ராமாயணத்தையும் படிக்கவே ஆயுள் போதாது என்னும் போது, இது எதுக்கு என்ற எண்ணம் உடனே வந்துவிட்டது).

சோ. தர்மனின் மிக எளிமையான மொழி இது ஒரு சாதரணமான, யதார்த்தமான நாவல் என்பது போன்ற பாவனையை காட்டி பல விஷயங்களை ஒளித்து வைத்து கொள்கின்றது. தோண்டி எடுத்து கொள்வது வாசகனின் பொறுப்பு. தலைப்பே சாட்சி.

No comments:

Post a Comment

-ஈ.வே.ராமசாமி நாயக்கர் பேச்சு - செயல் பைத்தியக்காரத்தனமானது- உச்ச நீதிமன்ற தீர்ப்பு

உச்ச நீதிமன்ற தீர்ப்பு -ஈ.வே.ராமசாமி நாயக்கர்  பேச்சு - செயல் பைத்தியக்காரத்தனமானது, தொடர்ந்தால் மாநில அரசு தடுக்க நடவடிக்கை