Monday, June 20, 2022

சிதம்பரம் கோயிலை அரசு கையகப்படுத்தியது உச்ச நீதிமன்றம் ரத்து

சிதம்பரம் கோயிலை அரசு எடுத்த நடவடிக்கை ரத்து

6 ஜனவரி 2014  தமிழகத்தில் புகழ்பெற்ற கோயிலான, சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசு கையகப்படுத்தியதை இந்திய உச்சநீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.

https://www.bbc.com/tamil/india/2014/01/140106_chidambaramtemple

சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அரசே நிர்வகிக்க பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசின் ஆணையையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இக்கோயிலை கையகப்படுத்தியதை எதிர்த்து கோயிலின் தீட்சிதர்கள் தொடுத்த மேல் முறையீட்டில் இவ்வாறு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த டிசம்பர் 2013-ல் நடைபெற்ற இந்த வழக்கின் வாதங்களின் போது அரசு தரப்பு தேவையான விளக்கங்களை அளிக்கவில்லை, ஆனால் பிரதிவாதிகளின் தரப்பில் இந்த கோயில் பொதுச் சொத்து என்றும் அதனால் வரவு செலவு கணக்குகள் ஒளிவுமறைவு இன்றி தெரிவிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.

பின்னர் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சௌஹான், பாப்டே ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கின் தீர்ப்பினை ஒத்திவைத்தது.

தற்போது வெளியாகியுள்ள தீர்ப்பில் கோவிலின் நிர்வாகத்தில் பல முறைகேடுகள் நடைபெறுவதாக கூறி, கோயிலை அரசு கையகப்படுத்த முனைவது சரியாகாது எனவும் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது

கோயில் நிர்வாகம் மீண்டும் தீட்சிதர்கள் கையில்

மேலும் கடந்த 2009-ல் திமுக ஆட்சி காலத்தின் போது தமிழக அரசால், கோயிலின் பணிகளை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட அரசாங்க அதிகாரியை நிரந்தரமாக நியமிக்கக்கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோயிலின் நிர்வாகத்தின் மீது புகார் கூறப்படும் பட்சத்தில், அந்தப் புகார்களை விசாரிக்க தற்காலிக அதிகாரிகளை நியமிக்க மட்டுமே உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஆனால் இந்த வழக்கில் ஒரு பிரதிவாதியான ஆறுமுகசாமி என்கிற சிவனடியார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோவிலன் பூங்குன்றன் பிபிசி தமிழோசையிடம் இந்த தீர்ப்பு குறித்து கருத்துத் தெரிவிக்கையில், இந்த தீர்ப்பை அடிப்படையாக வைத்து , சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் சொந்தம் கொண்டாட முடியாது என்றார். கோயிலின் வருமானத்தை அனுபவித்து கொள்வதற்கு மட்டுமே அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் முந்தய தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது, அவர்கள் கூறியுள்ள அந்த உயர்நீதிமன்ற தீர்ப்பில் தீட்சிதர்களுக்கு வருவாய் ஏற்படுத்தி தருவது குறித்தே விளக்கப்பட்டுள்ளது ஆனால் அதில் தீட்சதர்கள் கோவிலின் உரிமை கொண்டாடுவது குறித்த தகவல் எதுவும் இல்லை என்றும் அதனால் இதை அவர்களுக்கு சாதகமான தீர்ப்பாகக் கருத முடியாது என்று கூறினார்.

வழக்கின் ஒரு மனுதாரரான டாக்டர் சுப்ரமணியன் சுவாமியிடம் இது குறித்து கேள்வி எழுப்பியபோது, கோயிலின் உரிமை குறித்த தகவல் தேவையே இல்லை என்றும் கோயிலின் நிர்வாகம் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதே முக்கியமானது என்றும் தெரிவித்தார். ஆகையால் உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பின்படி தீட்சிதர்களே கோயிலின் முழு நிர்வாகத்திற்கும் பொறுப்பு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இனி கோயிலின் நிர்வாகத்திலும் அதன் செயல்பாடுகளிலும் தமிழக அரசு தலையிட முடியாது என்றும் கூறினார். குற்றச்சாட்டுகள் எழும் பட்சத்தில் மட்டுமே அவர்கள் தேவையான நடவடிக்கைகளை தற்காலிகமாக எடுக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை குறித்து சிதம்பரம் நடராஜர் கோவிலின் தீட்சிதர்களில் ஒருவரான சுந்தர தீட்சிதரிடம் கேட்டபொழுது, இந்த தீர்ப்பை இவர்கள் வரவேற்பதாகவும், மிகவும் மகிழ்ச்சி அளிக்க கூடிய இந்த தீர்ப்பினை தாங்களும், அங்குள்ள பொது மக்களும் கொண்டாடி வருவதாகவும் கூறினார்.

'சட்டப்பிரச்சினை முடிந்தாலும் அரசியல் பிரச்சினை தொடரலாம்'

இந்நிலையில் தமிழக அரசு இக்கோயிலினை ஏற்று நடத்திட உடனடியாக தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும் என தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சி கோரியுள்ளது. அக்கட்சியின் பொதுசெயலாளர் கி.வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சிதம்பரம் கோயில் பிரச்சினை பற்றிய சர்ச்சைக்கு சட்டரீதியான முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது ஆனால் அரசியல் ரீதியாக அவ்வப்போது பிரச்சினைகள் வரலாம் என்கிறார் சிதம்பரம் வழக்கறிஞரும் , பொது தீட்சிதர்கள் சங்கத்தின் முன்னாள் ஆலோசகருமான ஏ.சம்பந்தம்.

தீர்ப்பு குறித்து பிபிசிக்கு கருத்து வெளியிட்ட சம்பந்தம், தீர்ப்பை எதிர்ப்பவர்களுக்கு இருக்கும் ஒரே வழி, இதை மறு ஆய்வு செய்யக்கோருவதுதான் , ஆனால் அதில் அவர்கள் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும் என்று கூற முடியவில்லை என்றார்.

கோயிலைப் பொறுத்தவரை, அதை நிர்வகிக்கும் பொறுப்பு தீட்சிதர்களுக்கே இருப்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது என்றார் அவர். ஆனால் இதனால் கோயில் ஒரு பொதுச்சொத்து என்ற நிலை மாறுகிறதா என்று கேட்டதற்கு, நடராஜர் கோயில் ஒரு பொதுக் கோயில் என்ற விஷயத்தை எந்த ஒரு நீதிமன்றமும் மறுக்கவில்லை , கோயிலை நிர்வகிக்கும் உரிமை பற்றித்தான் சர்ச்சை நடந்து வருகிறது என்றார் அவர்.

ஆனால் சட்டரீதியாக இந்த வழக்கு இப்போது ஒரு முடிவுக்கு வந்தாலும், அரசியல் தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ப சிதம்பரம் கோயில் குறித்த சர்ச்சைகள் அவ்வப்போது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்றார் சம்பந்தம்.

 ஆர்ப்பாட்டம்

இதனிடையே, சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு ஏற்றதை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக, மனித உரிமைப் பாதுகாப்பு மையம் என்ற அமைப்பினர் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பலர் கைது செய்யப்பட்டதாக அந்த அமைப்பு கூறுகிறது.

No comments:

Post a Comment