தமிழக தொல்லியல் துறை 6 புதிய கல்வெட்டு நூல்களை வெளியிட்டுள்ளது. அதில் தொகுதி XVIII இல் உள்ள கல்வெட்டு. Seshadri Sridharan
வேலூர் விரிஞ்சிபுரம் மார்கபந்து ஈசுவரர் கோவில் கோபுர வலப்புறம். திருச்சுற்று உட்புறம் உள்ள 12 வரி கல்வெட்டு.
ஸுபமஸ்து
ஸ்வஸ்தி ஸ்ரீமன் மஹா இராஜாதிராஜ பரமேஸ்வரரான வீர ப்ரதாப தேவராய மஹாராஜ ப்ரி
திவிராஜ்யம் பண்ணி அருளானின்ற ஸகாப்தம் 1347 மேல் செல்லா னின்ற விஸ்வாஸுவ
வருஷம் பங்குனி மாதம் 3 நாள் ஷஷ்டியும் புதன் கிழமையும் பெற்ற அநிழத்து நாள் படைவீட்டு இராஜ்யத்து
அஸேஷவித்ய மஹாஜநங்களும் அகர்க புஷ்கரணி கோபிநாத ஸந்நிதியிலே
தர்ம்மஸ்தாபந ஸமய பத்ரம் பண்ணி குடுத்தபடி இற்றை நாள் முதலாக இந்த
ப் படைவீட்டு ராஜ்யத்து ப்ராஹ்மணரில் கன்னடிகர், தமிழர், தெலுங்கர், இலாளிர் முதலா
ன அஸேஷ கோத்ரத்து அஸேஷ ஸூத்ரத்தில் அஸேஷ ஸாகை யில் வாசிகளும் விவாஹம் பண்
ணுமிடத்து கந்யாதாநமாக விவாஹம் பண்ணக்கடவராகவும் கந்யாதாநம் பண்ணாமல்
பொன் வாங்கிப் பெண் குடுத்தால் பொன் குடுத்து விவாஹம் பண்ணினால் இராஜ தண்டத்துக்கும் உட்பட்டு
ப்ராஹ்மண்யத்துக்கு புறம்பாகக்கடவாரென்று பண்ணிந தர்ம்ம ஸ்தாபந ஸமய பத்ரம். இப்படிக்கு அஸேஷ வித்ய ம
ஹாஜநங்கள் எழுத்து.
அசேஷ - aśēṣa (अशेष).—a (S) That leaves no remainder; all, the whole; ஒருவரையும் விலக்காமல் எல்லாரையும் உட்படுத்து; வித்ய - வானியல், மருத்துவம், வேதம் முதலாய பிரிவுகள்; சூத்திரம் - நூல், இதாவது இருக்கு, இயசுர், அதர்வண, சாம; சாகை - உட்பிரிவு, sect.
விளக்கம்: சக ஆண்டு 1347 (கி.பி. 1425) குறிப்பிடப்பட்ட வீரபிரதாப தேவராயர் ஆட்சியில் வேலூர் வட்டத்தில் அடங்கிய படைவீட்டு பிராமணர்கள் தமக்குள் செய்து கொண்ட மத உடன்படிக்கை அல்லது சட்டம் இது. இக்கல்வெட்டின் மூலம் கன்னட விசயநகர ஆட்சியில் தமிழ்ச் சமூகம் சந்தித்த சிலபல சங்கடங்கள் நன்கு தெளிவாகின்றது.
பிராமணரில் பலர் இந்த புதிய வழக்கமான கன்னியா சுல்கம் என்ற தட்சணையால் திருமணம் செய்ய முடியாமல் அல்லலுற்றது புலனாகிறது. இந்த கொடிய வழக்கத்தை கொன்று ஒழிக்க ஒரு புதிய மதச்சட்டத்தை இயற்றினர். எல்லா புலத்து கல்வியை சார்ந்த பிராமணப் பெருமக்கள் குளக்கரையை ஒட்டி அமைந்த கோபி நாதர் கோவிலில் அறம் நிறுத்த மத ஆவணம் செய்து கொடுத்தனர்.
திருமணம் செய்ய பொன் தருவது (கன்னிகா தட்சணை) முறைகள் சாஸ்திர அடிப்படை இல்லாமல் இடையில் நுழைந்ததை நிறுத்த எழுந்த ஒப்பந்தம்/சட்டம்
இதன்படி "இன்று முதல் இந்த படைவீட்டு பகுதியில் வாழும் கன்னட, தமிழ், தெலுங்கு, இலாளி பிராமணர்களில் எல்லா கோத்திரத்தாரும், எல்லா வேத நூல் சார்ந்தவரும், எல்லா உட்பிரிவினரும் திருமணம் செய்யுங் கால் திருமணத்தை மணப்பெண் தான முறையில் தான் திருமணம் செய்ய வேண்டும். இவ்வாறு அல்லாமல் பொன் பெற்று பெண் கொடுப்பது அதே போல பொன் கொடுத்து பெண் பெறுவது என்பது அரச தண்டனைக்கு உரிய குற்றம் ஆகும். அது பிராமண வாழ்க்கை முறைக்கு அப்பாற் பட்டதாகவும் கொள்ளப்படும் என்று அறம் நிறுத்த மத ஆவணம் செய்தோம். இது எல்லா புலத்து கல்வியை சார்ந்த பிராமணப் பெருமக்கள் ஒப்பெழுத்து".
பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - தொகுதி XVIII, பக்கம் 24-25.
No comments:
Post a Comment