Tuesday, June 7, 2022

மணல் அள்ளிய கெடிலம் ஆறில் மூழ்கி 4சிறுமி உட்பட 7 பேர் மரணம்

கெடிலம் ஆற்று தடுப்பணையில் குளிக்க சென்ற ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

 
மிகச் சாதாரணமாக தமிழகத்தில் மட்டும் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான அப்பாவி சிறுவர், சிறுமியர் மற்றும் பெண்களின் உயிர்கள் பறிபோகிறது.
ஒவ்வொரு விடுமுறை தினங்களிலும் தமிழக தினசரிகளில் வெளியாகும் தவிர்க்க முடியாத செய்தி
"கண்மாய், ஆறு, ஏரி, குவாரிகளில் நிறைந்திருக்கும் தண்ணீர் என நீர்நிலைகளில் குளிக்க சென்று விளையாட்டுத்தனமாக ஆழமான பகுதிகளில் சென்று மீள முடியாமல் நிகழும் உயிரிழப்புகள்".
இதற்கு முக்கிய காரணம் பெற்றோர்களின் அஜாக்கிரதை.
நீர்நிலைகளில் உயிரிழப்புகளை தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் உயிரிழப்புகள் ஏற்படும் காரணங்கள் குறித்தான விழிப்புணர்வும் மிகவும் அவசியம்.
* கிராமப்புறங்களில் மட்டுமே நீச்சல் பழகுவது என்பது அடிப்படை தேவை என்று கற்று தரபடுகிறது.
* நகர்புறங்களில் விவசாய தொடர்பற்ற பகுதிகளில் இந்த விழிப்புணர்வு சுத்தமாக கிடையாது.
* நமது பள்ளி பாடத் திட்டங்கள் நீர்நிலைகள் பற்றிய அடிப்படை விஷயங்களை தேவையான அளவு பேசுவது இல்லை.
* நீர் நிலைகளில் எந்த மாதிரியான சூழலில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்பது பற்றியும் அவற்றினை தடுப்பது எப்படி என்பது குறித்த போதனைகள் கிடையாது.
* நீர்நிலைகளில் தெரிந்தோ அல்லது தெரியாமலோ சிக்கி கொண்டால் அதில் இருந்து மீள்வதற்கு செய்யப்பட வேண்டிய குறைந்த பட்ச முயற்சிகள் குறித்து பெரும்பாலான மக்களுகளுக்கு ஏதும் தெரிவதில்லை.
* மிகவும் முக்கியமாக முறையாக நீச்சல் தெரியாத நிலையில்
மூடப்பட்ட அல்லது பயன்பாட்டில் இல்லாத கல் குவாரிகள் மற்றும் நீர் தேக்கங்களில் இறங்கி குளிக்கும் அல்லது விளையாடும் முயற்சிகளை அறவே தவிர்க்க வேண்டும் என்பதை போதுமான அளவுக்கு மக்களிடம் சென்று சேர்ப்பதில்லை.
* சுற்றுலா செல்லும் இடங்களில் உள்ள நீர்நிலைகள் அழகாகவும், அமைதியாகவும் தோன்றினாலும் அதற்கு பிறகு ஆபத்தும் காத்திருக்கிறது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
* தடுப்பணைகளின் கீழ்பகுதி கற்களால் நிரம்பி இருக்கும். எனவே எப்போதும் டைவ் அடிக்க முயற்சிக்க கூடாது.
* நீச்சல் தெரியாத நிலையில், நமக்கு பரீட்சயம் இல்லாத இடங்களில் உள்ள நீர்நிலைகளின் ஆழம் குறித்த எந்த விபரமும் தெரியாத பட்சத்தில் இடுப்பளவு தண்ணீரை தாண்டி உள்ளே செல்லவே கூடாது.
* பெண்களை கவரவோ அல்லது விளையாட்டு வேடிக்கைகள், வீரத்தை காண்பிப்பதன் காரணமாகவோ நீர்நிலைகளில் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதை முற்றிலும் நிறுத்த வேண்டும்.
* நீச்சல் தெரிந்திருந்தாலும், நீச்சல் தெரியாத நண்பர்கள், உறவினர்களுடன் பயன்பாட்டில் இல்லாத கல் குவாரிகளில் குதித்து விளையாடுவதோ, குளிப்பதோ மரணத்தை வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பதற்கு சமம்.
* நீர்நிலைகளின் ஆழம் மற்றும் உள்ளிருக்கும் பாறை அமைப்புகள் மற்றும் இடுக்குகள் குறித்து எவருக்கும் தெரியாது. அதனால் தெரியாத இடங்களில் டைவ் அடிப்பது நீங்கள் ஆபத்தை இருகரம் நீட்டி வரவேற்பதற்கு சமம்.
* எப்போதும் ஞாபகம் வைத்திருக்க வேண்டிய விஷயம், நன்கு பயிற்சி பெற்ற சிலரால் மட்டுமே மூன்று நிமிடங்களை தாண்டி மூச்சை இழுத்து நிறுத்த முடியும். மற்றப்படி ஒரு நிமிடத்தை தாண்டுவது கடினம்.
* நீர்நிலைகளில் சிக்கி கொண்டு இறப்பிற்கு முக்கிய காரணம் பயம் கலந்த அதிர்ச்சி.
அந்த பயத்திலேயே என்ன செய்வது என்று தெரியாமல் தண்ணீரை உட்கொண்டு மூச்சு திணறி இறப்பவர்களே மிகவும் அதிகம்.
* நீச்சல் தெரியாமலேயே சிக்கி கொண்டாலும் கூட பிறரின் உதவி கிடைக்கும் வரை நம்மால் கை கால்களை லேசாக ஆட்டி கொண்டு நீரை விலக்கி
முயன்றால் பத்து நிமிடங்களுக்கு மேல் மிதக்க முடியும். அதைப்பற்றி யாரும் போதிப்பதே கிடையாது.
* மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம்
நீர் நிலைகளில் நமது ரத்த சொந்தங்கள் சிக்கி தவித்தால் கூட
காப்பாற்றும் விதமாக நமக்கு நீச்சல் தெரியாத நிலையில் உடனே குதிக்கும் முன்பாக அழுத்தத்தால் உள்ளே இழுக்கும் பேன்ட் சட்டையை கழற்றி எறிந்து விட்டு குதிக்க வேண்டும் என்பதை மறந்து விட கூடாது.
கூடுதலாக கவனம் செலுத்த வேண்டிய விஷயம் கயிறு அல்லது சேலையை பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதா என்ற நொடிப்பொழுது சிந்தனை.
* மீட்க செல்லும் போது, நீரில் சிக்கி கொண்டு தவிப்பவர்கள் நம்மை பிடித்து கொள்கிறேன் என்ற பெயரில் பயத்தில் நம்மை இழுப்பார்கள் அல்லது நம் மீது தொற்றி கொள்ள முயற்சிப்பார்கள். நமக்கும் நீச்சல் தெரியாத பட்சத்தில் நமக்கும் உயிர் பறிபோகும் வாய்ப்புகள் உள்ளன.
* நீரில் சிக்கி தவிப்பவர்களை ஒவ்வொருவராகவே காப்பாற்ற முயற்சிக்க வேண்டும். குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுத்து காப்பாற்ற வேண்டும். மூழ்கி கொண்டு இருப்பவர்களை முடிந்தவரை தலைமுடியை நன்றாக பற்றி இழுக்க வர வேண்டும். வலித்தாலும் பரவாயில்லை.
* ஒருவேளை காப்பாற்ற பட்ட பிறகும் மூர்ச்சையாகி இருந்தால்,
குப்புற படுக்க வைத்து வயிற்றை அமுக்கி நீரை வெளியேற்றுவது, கால்களை சூடாக தேய்த்து விடுவது, வாயில் ஊதி செயற்கை சுவாசம் கொடுத்து ஆசுவாசப்படுத்துவது போன்ற முதற் கட்ட வேலைகளை செய்ய வேண்டும்.
* அப்புறம் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம்
மணல் திருட்டால் ஏற்படும் அபாயகரமான பள்ளங்கள்.
இயல்பாக தோன்றும் ஆற்றில், நீர் வறண்ட காலங்களில் மணல் கொள்ளைகள் நிகழும். அப்படி தோண்டி அள்ள பட்ட இடங்களில் ஆழம் அதிகமாக இருக்கும்.
நீச்சல் தெரியாத நிலையில் குளிக்க செல்லும் நமது உறவுகள்
முதலில் ஜாலியாக உள்ளிரங்குவார்கள், ஆனால் சாதாரணமாக சில அடிகள் நீரில் நடக்கும் போது படிப்படியாக ஆழம் அதிகரித்து வரும். அதனால் கணுக்கால், முட்டி, இடுப்பு, நெஞ்சு என்று கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரில் ஆழம் அதிகரிக்கும்.
மணல் திருட்டின் காரணமாக அங்கே பள்ளங்கள் இருந்தால் திடீரென சில அடிகள் ஆழம் அதிகரிக்கும், நம்மால் கால் ஊண்றி நிற்க முடியாது. நொடியில் மூழ்கி, கத்த முயன்று தண்ணீரை குடித்து பயத்தில் தத்தளிக்க தொடங்குவோம்.
நீச்சல் தெரிந்த யாரேனும் அல்லது நீச்சல் தெரியாவிட்டாலும் விவரமாக உள்ள யாரேனும் நிமிடங்களில் நமக்கு உதவ முன்வரவில்லை என்றால் நமது முடிவு கண்ணுக்கு தெரியும்.
அந்த கண நேரத்தில் தண்ணீரை குடித்து விடாமல் மூச்சை இழுத்து பிடித்து , கை கால்களை அசைத்து மிதக்க முயற்சி செய்து கொண்டு
முடிந்தவரை சப்தம் இட்டு கத்தி உதவி கேட்டு, காப்பாற்ற யாராவது வரும் வரை காத்திருக்க வேண்டும்.
அல்லது மிதக்கும் வகையில் இருக்கும் எதையாவது பற்றி கொண்டு தப்பிக்க முயற்சி செய்ய வேண்டும்
அல்லது துணிச்சலாக கால்களை ஆட்டி கொண்டே, கைகளில் நீரை விலக்கி நீச்சல் அடிக்க முயற்சித்து ஆழமற்ற பகுதிக்கு வர வேண்டும்.
நீர்நிலைகளில் வேடிக்கையாக நாம் போடும் விளையாட்டு நொடிப்பொழுதில் நமது இறுதி பயணமாகும் ஆபத்துகள் எப்போதும் உண்டு என்பதை அனைவரும் தெரிந்திருக்க வேண்டும்.
நிச்சயமாக வயது வித்தியாசம் இல்லாமல் நீர்நிலைகளில் சூழ்ந்திருக்கும் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வு கிராமங்கள் மற்றும் நகரங்கள் தோறும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
நீர்நிலைகள் இருக்கும் பகுதிகளில் எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட வேண்டும்.
கிணறு, கைவிடப்பட்ட குவாரிகளில் இறப்புகள் நேர்வது கவனகுறைவால்.
ஆனால் ஆறு, கண்மாய், ஏரிகள் போன்றவற்றில் பல உயிர்கள் பறிபோக காரணம் மணல் கொள்ளையால் ஏற்படும் பள்ளங்கள். இங்கு நிகழும் உயிரிழப்புகள் கொலைகளுக்கு சமானம்.
"ஆழத்தை வெளிக்காட்டாமல் அமைதியும், அழகும், 'ஈர்ப்பும்' உள்ள 'எதிலும்(?)' ஆபத்து நிறைந்திருக்கும். கரையேறியவர்கள் சிலர், சிக்கி தவிப்பவர்கள் பலர், உண்மை தானே."
வைரவேல் சுப்பையா

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா