பொ. வேல்சாமி
பொ.வேல்சாமி

ங்களைச் சந்தித்து வெகுநாட்கள் ஆகிவிட்டன. திராவிடச் சிறகுகள் என்ற அமைப்பின் சார்பில் கோவையில் நடைபெற்ற நிகழ்வில்
தோழர் செந்தலை ந. கவுதமன் அவர்களின் காணொளிப் பேச்சை இன்று பார்த்துக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் பேச்சில் அவரால் குறிப்பிடப்படுகின்ற அடிப்படைத் தரவுகளில் பல சரியானவைகளாக இல்லாமல் பிழையாக இருந்தன. சிறந்த வரலாற்று அறிஞர் என்று நண்பர்களால் பாராட்டப்படுகின்ற தோழர் செந்தலை ந கவுதமன் பேச்சைக் கேட்டு அதிர்ந்தேன். ஆதாரம் இல்லாத இத்தகைய பேச்சுகளை ஐயா அவர்கள் பேசுவது நியாயமா?

1. சர் வில்லியம் ஜோன்ஸால் (28.09.1746 – 27.04.1794) வடமொழி நூல்கள் எல்லாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதாகவும் அவரால் செய்யப்பட்ட அந்த ஆங்கில மொழிபெயர்ப்பு உடனடியாக ஜெர்மன் மொழியிலும் இத்தாலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டதாகவும் இவற்றின் விளைவாக வடமொழி பற்றிய அறிவு ஐரோப்பா முழுமையும் பரவ வாய்ப்பு ஏற்பட்டுவிட்டதாகவும் கூறுகின்றார். வில்லியம் ஜோன்ஸ் வடமொழி நூல்கள் எல்லாவற்றையும் மொழிபெயர்க்கவில்லை. அந்தக் காலத்தில் வேதங்கள் உள்பட பல முக்கியமான வடமொழி நூல்களைப் பற்றி ஐரோப்பியர்களுக்கு எதுவும் தெரியாது.