பாகிஸ்தானில் இந்து பெண் பூஜா சுட்டுக் கொலை: 'கடத்த முடியவில்லை' என்பதால் துப்பாக்கியால் சுடப்பட்டார்
பூஜா குமாரியின் நெருங்கிய உறவினரான அஜய் குமார் பிபிசி உருதுவிடம், "இந்த சம்பவத்திற்குப் பிறகு, பூஜா எதிர்ப்பின் அடையாளமாக மாறிவிட்டார். இப்போது எங்கள் இதயங்களில் அவரைப்பற்றிய மதிப்பு உயர்ந்துவிட்டது," என்றார்.
குற்றம் சாட்டப்பட்ட மூவரும் தனது மகளைக் கடத்துவதற்காக வீட்டிற்குள் நுழைந்ததாகவும், ஆனால் எதிர்த்தபோது அவர்கள் பூஜாவைக் கொன்றதாகவும் பூஜா குமாரியின் தந்தை சாஹிப் ஆதி, சக்கர் போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கில் குற்றம் சாட்டியுள்ளார்.
காவல்துறை உயர் மட்டத்தில் இந்த விஷயத்தை விசாரித்து வருகிறது, அதன் ஒவ்வொரு அம்சமும் மறுபரிசீலனை செய்யப்பட்டு வருகிறது, மேலும் மீதமுள்ள குற்றம் சாட்டப்பட்டவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பூஜாவின் கொலை உள்ளூர் இந்துக்களை கோபப்படுத்தியது. கூடவே அப்பகுதி முஸ்லிம்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பூஜாவின் வீட்டிற்கு திரண்டு வந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்று பூஜாவின் உறவினர் அஜய் குமார் கூறினார்.
'எதிர்ப்புத்தெரிவித்ததால் கொலை'
கொலையாளிகள் ஒரு துணிச்சலான பெண்ணைக் கொன்றுள்ளனர். முழு பகுதியிலும் சமூகத்திலும் பூஜா ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார் என்று அஜய் குமார் கூறினார்.
"பூஜாவை அந்தப்பகுதியில் எல்லோருக்கும் பிடிக்கும். அனைவரையும் பூஜா கவனித்துக் கொண்டார். எல்லோரும் அவரை பாராட்டினார்கள். பூஜா தனது தந்தைக்கு எப்படி ஆதரவாக இருந்தாள் என்பதற்கு அவரை உதாரணம் காட்டினார்கள். சிறுவயதில் இருந்தே அவர் வித்தியாசமானவர். சாதாரண குழந்தை போல அவர் இருக்கவில்லை. மிகவும் தைரியமானவர், துணிச்சலானவர்."
வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்டவர் பூஜா குமாரியின் பக்கத்து வீட்டுக்காரர். அவர் செல்வாக்கு மிக்கவர் மற்றும் பணம் படைத்தவர். பூஜா மற்றும் அவரது தந்தை சாஹிப்பின் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தது.
குற்றம் சாட்டப்பட்டவர் பூஜா குமாரியை நீண்ட காலமாக பின்தொடர்ந்து வந்ததாகவும், அவரை அடிக்கடி தொல்லைப்படுத்தியதாகவும், அஜய் குமார் கூறினார். கொலையாளி எனக் கூறப்படும் நபர் முன்பு நெரிசலான சந்தையில் பூஜாவிடம் தவறாக நடந்து கொண்டார். அதன் பிறகு காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறை நடவடிக்கை எடுத்தபோதிலும், அந்த நபருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
சம்பவத்தன்று பூஜாவின் தந்தை வீட்டை விட்டு வெளியே சென்றபோது, குற்றம் சாட்டப்பட்டவர் தனது மற்ற இரண்டு கூட்டாளிகளுடன் வீட்டிற்கு வந்து பூஜாவை கடத்த முயன்றதாக அஜய் குமார் கூறுகிறார்.
"ஆனால், பூஜா மிகவும் தைரியமானவர். அவர் எதிர்ப்பு தெரிவித்தார். அவர்கள் மூன்று பேர், பூஜா தனியாக இருந்தார். அப்போது பூஜா துணி தைத்துக்கொண்டிருந்தார். கத்தரிக்கோல் வைத்திருந்தார். பூஜா அதே கத்தரிக்கோலை ஆயுதமாகப் பயன்படுத்தினார். அவரை கட்டுப்படுத்த முடியாததால், குற்றம் சாட்டப்பட்டவர் பூஜாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
'மகள் அல்ல மகன்'
தனக்கு ஆறு மகள்கள் உள்ளனர், மகன் இல்லை என்று பூஜா குமாரியின் தந்தை பிபிசியிடம் தெரிவித்தார்.
"பூஜாவை படிக்க வைக்கும் அளவுக்கு எனக்கு வசதி இருக்கவில்லை. வீட்டுச் செலவுகளை சமாளிக்கவோ, பூஜாவின் பள்ளிக்கூடச்செலவை ஏற்கவோ என்னால் முடியவில்லை. அதனால்தான் பூஜா எப்போதும் வீட்டிலேயே இருந்தாள்."
தன் மூத்த மகள் பூஜா, சிறு வயது முதலே தனக்கு உதவி செய்ய விரும்பியதாக அவர் கூறினார்.
பூஜா விலையுயர்ந்த ஆடைகள் போன்றவற்றை ஒருபோதும் ஆசைப்பட்டதில்லை. எதுவும் வேண்டும் என்று கேட்டதில்லை என்று சாஹிப் ஆதி தனது மகளை நினைவு கூர்ந்தார்.
"சிறிது வளர்ந்ததும், 'நான் உங்கள் மகன், நான் உங்களுடன் வேலைக்கு வருவேன்," என்று பூஜா சொல்வாள். ஆனால், அவளை கூலி வேலைக்கு எப்படி அழைத்துச்செல்ல முடியும். அவளுக்கு தையல், எம்ப்ராய்டரி மிகவும் பிடிக்கும். அதனால், வீட்டிற்கு அருகில் ஒரு தையல்-எம்பிராய்டரி க்ளாஸில் அவளை சேர்த்தேன்."
பூஜா தனது தையல்-எம்பிராய்டரி படிப்பை முடித்த பிறகு, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தையல்-எம்பிராய்டரி வேலை செய்யத் தொடங்கினார் என்று சாஹிப் கூறினார்.
"அவளுடைய கைகளில் திறமை இருந்தது. யார் ஒரு முறை அவளிடம் தைக்கக் கொடுத்தார்களோ, அவர்கள் மீண்டும் மீண்டும் அவளிடமே வந்தார்கள். அவள் முன்னேறத் தொடங்கினாள். அவளால் படிக்க முடியவில்லை, ஆனால், தனது சகோதரிகளை பள்ளியில் சேர்த்தாள்," என்றார் அவர்.
பூஜா வேலை செய்யத்தொடங்கிய பிறகு தன்னுடைய ஆதரவாக மாறிவிட்டார் என்று அவர் சொன்னார்.
"என் தங்கைகளுக்கு அண்ணன் இல்லையென்றால் என்ன, நான் அவர்களுக்கு அண்ணன், உங்களுக்கு மகன் என்று பூஜா கூறினாள்."
நான் வீட்டில் இல்லாவிட்டாலும் மனம் கலங்க மாட்டேன், ஏனென்றால் வீட்டில் எல்லாவற்றையும் பூஜா பார்த்துக் கொள்வாள் என்ற மன உறுதி எனக்கு இருந்தது என்று பூஜாவின் தந்தை கூறினார்.
"எனக்கு வயதாகிவிட்டது, ஆனால் பூஜாவின் கடின உழைப்பு எனக்கு வலிமையைக் கொடுத்தது. ஆனால், இப்போது எனக்கு மீண்டும் வயதாகிவிட்டதாகத் தோன்றுகிறது," என்று வருத்தத்துடன் கூறுகிறார் சாஹிப் ஆதி.
No comments:
Post a Comment