வாரணாசியில் நகரத்தாரின் நிலம் ஆக்கிரமிப்பு: 24 மணி நேரத்தில் மீட்டு தந்த பா.ஜ., அரசு
மே 18, 2022 சென்னை:வாரணாசியில், 240 கோடி ரூபாய் மதிப்புள்ள, நாட்டுக்கோட்டை நகரத்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை, 24 மணி நேரத்தில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு மீட்டுக் கொடுத்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில், நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தினருக்கு சொந்தமான சத்திரம் உள்ளது. காசி விஸ்வநாதர் கோவில் பூஜைக்கு தேவையான பூக்களை வழங்குவதற்காக, கங்கை கரையில், 63 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் நந்தவனத்தையும், நகரத்தார் அறக்கட்டளை அமைத்துள்ளது.
கடந்த, 1813-ல் வாங்கப்பட்ட இந்த நிலத்தை, சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் ஆக்கிரமித்திருந்தனர். இது தொடர்பாக புகார் கொடுத்த 24 மணி நேரத்தில், அம்மாநில அரசு, நிலத்தை மீட்டு கொடுத்துள்ளது.நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திர மேலாண்மை கமிட்டி நிர்வாகி முத்துக்குமார் கூறியதாவது:
வாரணாசி வரும் தமிழக பக்தர்கள் தங்குவதற்கான சத்திரம், காசி விஸ்வநாதர் கோவில் அபிஷேகத்திற்கு பசும்பால் வழங்குவதற்காக பசு மடம், கோவிலுக்கு பூக்கள் கொடுப்பதற்காக நந்தவனம் ஆகியவற்றை, நகரத்தார் சமூகம் நடத்தி வருகிறது.விஸ்வநாதர் கோவிலில் இருந்து 3 கி.மீ., தொலைவில் கங்கை கரையில், சிக்ரா என்ற இடத்தில், 63 ஆயிரம் சதுர அடியில் நந்தவனம் அமைக்கப்பட்டுள்ளது. 1813-ல் வாங்கப்பட்ட நிலத்தின் இப்போதைய சந்தை மதிப்பு, 240 கோடி ரூபாய்.
சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த கிருஷ்ணமோகன் முன்னா, ஆனந்த் மோகன் ஆகியோர், இந்த இடத்தை ஆக்கிரமித்து, திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விட்டு வந்தனர்.உள்ளூரில் செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால், அவர்களிடமிருந்து நந்தவனத்தை மீட்கும் முயற்சி வெற்றி பெறவில்லை. இதனால், ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் செலவில், பூக்களை வாங்கும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திர மேலாண்மை கமிட்டி தலைவர் ராமசாமி, செயலர் லட்சுமணன், பொருளாளர் சுப்பிரமணியன் ஆகியோர், இந்த நந்தவனத்தை மீட்கும் பொறுப்பை, என்னிடமும், அழகப்பன் என்பவரிடமும் ஒப்படைத்தனர். நாங்கள் இருவரும் வாரணாசி சென்று, பல்வேறு தரப்பினரை சந்தித்து, நந்தவனத்தை மீட்க முயற்சிகளை மேற்கொண்டோம். உரிய ஆவணங்களுடன், வாரணாசி மாநகர போலீஸ் கமிஷனர் சதீஷ் கணேஷிடம் புகார் அளித்தோம்.
வருவாய் துறை ஆவணங்களை சரிபார்க்க, ஒரு நாள் அவகாசம் கேட்ட அவர், 24 மணி நேரத்தில், ஆக்கிரமிப்பில் இருந்து நந்தவனத்தை மீட்டு கொடுத்தார். இதற்காக, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம்.
நந்தவனத்தில் உள்ள சிவன் கோவிலை சீரமைக்கும் பணியை துவங்கிஉள்ளோம். வரும் ஜூன் 16, 17-ல் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. நந்தவனத்தில் ஜூலை 22, 23, 24 ஆகிய தேதிகளில் நடக்கும் ருத்ர ஜெப யாகத்தில் பங்கேற்பதாக, யோகி ஆதித்யநாத் உறுதி அளித்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.
உ.பி வாரணாசியில், தமிழக சிவகங்கை மாவட்டம் நாட்டுக்கோட்டை நகரத்தாருக்கு சொந்தமான 63 ஆயிரம் சதுர அடி நிலம் காசி விஸ்வநாதர் ஆலய தினசரி புஷ்ப கைங்கர்யம் நிமித்தமான நந்தவனத்திற்காக கங்கைக் கரையில் 1813 ல் வாங்கப்பட்டது.
அது காலப் போக்கில் சமாஜ்வாதி ஆட்சியில் அந்த கட்சியின் செல்வாக்கான அரசியல்வாதிகளால் ஆக்ரமிக்கப்பட்டு திருமணங்கள் நடத்தப்பட்டு வாடகை வசூலிக்கப்பட்டு அவர்களால் அனுபவிக்கப்பட்டு, எவ்வளவோ முயன்றும் நகரத்தாரால் திரும்பப் பெற முடியாத நிலையில், ஆண்டுக்கு ₹ 20 லட்சம் செலவில் வெளியில் இருந்து புஷ்பங்கள் விலை கொடுத்து வாங்கப்பட்டு கைங்கர்யம் நிறைவேற்றப்பட்டு வந்தது.
கடந்த மாதம் நகரத்தார் சமூகம் இந்த ஆக்ரமிப்பு தொடர்பாக யோகி அரசின் வாரணாசி போலீஸ் கமிஷனரிடம் இது தொடர்பாக ஒரு புகார் கொடுக்க,
எண்ணி 24 மணி நேரத்திற்குள் மொத்த இடமும் ஒரு அங்குலம் கூட குறையாமல் ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டு தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தார் வசம் ஒப்படைக்கப்பட்டது… ஆச்சர்யம்… வெறும் 24 மணி நேரத்தில் ..,!!
No comments:
Post a Comment