Monday, May 9, 2022

7,000 ஆண்டு பழமையான நகர் -ராக்கிகர்கி & மயிலாடும்பாறை 4200 ஆண்டுகளுக்கு இரும்பு பயன்பாடு

 ஹரியானாவின் ராக்கிகர்கி பகுதியில், புதிய அகழாய்வு பணியை, இந்திய தொல்லியல் துறை துவங்கியுள்ளது. இங்கு, 7,000 ஆண்டுக்கு முன்பே, பழமையான நகர் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

ஹரியானாவில், ராக்கிகர்கி கிராமத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளில், ஹரப்பா நாகரிகம் குறித்து, பல தகவல்கள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன

.சுமேரிய, எகிப்திய நாகரிகங்களுக்கு அடுத்து, சிந்து சமவெளியில் தழைத்திருந்த ஹரப்பா நாகரிகமே, உலகின் மூன்றாவது பெரிய நாகரிகமாக கருதப்படுகிறது.  இது இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வரை பரவியிருந்தது.

நம் நாட்டில், பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், சில தகவல்கள் கிடைத்தாலும், ஹரியானாவின் ஹிசார் மாவட்டம் ராக்கிகர்கியில் தான் அதிக அளவில் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இங்கு, 7,000 ஆண்டுக்கு முன்பே, நகரப் பகுதிகள் மிகவும் சிறப்பான முறையில் திட்டமிடப்பட்டு கட்டப் பட்டது, ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. 

கட்டுமான தொழில் நுட்பங்கள், தற்போதுள்ளதை விட மேம்பட்டதாகவே இருந்துள்ளன. இங்கு, 5,000 ஆண்டுக்கு முன், ஒரு தங்க நகை தொழிற்சாலை செயல்பட்டதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இதுவரை நடந்துள்ள ஆய்வுகளில், மனித எலும்புக் கூடுகள், ஹரப்பா நாகரிகத்தின் போது மக்கள் பயன்படுத்திய பல பொருட்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில், புதிய ஆய்வுப் பணிகளை தொல்லியல் துறை துவங்கியுள்ளது. இம்மாத இறுதிக்குள் இதை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் கிடைக்கும் பொருட்களை காட்சிக்கு வைக்கவும் திட்டமிட்டுஉள்ளனர்.

ஹிசார் மாவட்டத்தின் மேற்கில் காக்கர் ஆற்றின் சமவெளியில் அமைந்த பண்டைய தொல்லியல் நகரமான ராக்கிகர்கி, சிந்துவெளி நாகரீகத்திற்கு முந்தைய காலத்தின் எச்சங்களைக் கொண்டது. 

பூமியில் அடியில் சரஸ்வதி நதி ஓடும் இடமும் இங்கு தான் உள்ளது..

80 - 105 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட ராக்கிகர்கி தொல்லியல் களம், ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ தொல்லியல் களங்களை விடப் பெரியதாகும்.

சிந்துவெளி நாகரீகத்திற்கு முந்தைய ராக்கிகர்கி தொல்லியல் களம்  6420 - 6230 BCE மற்றும்  4470 - 4280 BCE ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாகும். பின்னர் இப்பகுதியானது, 2600 - 1900 BCE-களில் உச்சத்திலிருந்த சிந்துவெளி நாகரீகத்தின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

ராக்கிகர்கி தொல்லியல் களம் 105 ஹெக்டேர் நிலப்பரப்பில் உள்ள ஏழு மலைக் குன்றுகளைக் கொண்டுள்ளது.

ராக்கிகடி தொல்லியல் களத்தை 2011 முதல் டெக்கான் முதுநிலை கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் மற்றும் அரியானா மாநில தொல்லியல் துறையும் இணைந்து தொடர்ந்து அகழ்வாராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. 

ராக்கி கர்கி தொல்லியல் களத்தில் கிடைத்த ஆறு தொல்பொருட்களை, 2014ல் கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு பரிசோதனை செய்ததன் மூலம், இத்தொல்லியல் களம்  6420 - 6230 BCE மற்றும் 4470 - 4280 BCE ஆகிய இரண்டு காலங்களுக்கு இடைப்பட்டது என அறியப்பட்டுள்ளது.

"மயிலாடும்பாறை "

வரலாற்றுலகில் தமிழர்களின் பாரம்பரியமும் பண்பாடும் பழமையும் மேலும் ஒரு அடி முன்னோக்கிச் சென்றுள்ளது..

மயிலாடும்பாறை அகழாய்வில் கிடைத்த இரும்பின் காலம்.. கி.மு.2127.. ஏறக்குறைய 4200 ஆண்டுகளுக்கு முன்... இந்தியாவின் மிகப்பழமையான இரும்பு பயன்பாட்டுக் காலம் இது. மனிதகுலத்தின் நாகரிகம் தொடங்கிய நிகழ்வுகளில் வெகு முக்கியமானது இரும்பு பயன்பாட்டை அறிதல்.

இரும்பு தாதுக்களை கண்டறிந்து .. அதை உலையில் இட்டு காய்ச்சி உருக்கி வடித்து பிரித்து இரும்பாக வார்த்து ... அதை அன்றாட மக்கள் பயன்பாட்டில் தேவையான கருவிகளாக வடித்து பயன்படுத்தும் உயர்ந்த நாகரீகத்தின் தோற்றம் இரும்பு காலத்தில்தான் துவங்குகிறது.

இந்த இரும்புக்காலத்தின் துவக்கம் தமிழகத்தில்தான் என்று தொல்லியல் சான்றுகள் மூலம் உறுதிசெய்யப்படுகிறது 

இந்த இரும்பின் பயன்பாடு குறித்து ஏராளமானத் தரவுகள் நமது சங்க இலக்கியங்களில் உள்ளன. இரும்பை கொல்லர் பட்டரையில் காய்ச்சும் முறைகொண்டு.. அந்த இரும்புக் கருவிகளை துரு பிடிக்காமல் பாதுகாக்கும் தொழில்நுட்பம் வரை சங்க இலக்கியம் கூறும்.

அவ்வாறான இரும்பால் ஆன கருவி ஒன்று மயிலாடும்பாறை அகழாய்வில் கிடைத்தது. அதன் காலமாக அறிவியல் கரிமக்கணிப்பு மூலம் 4200 ஆண்டு பழமை என்று நிறுவப்பட்டுள்ளது...

4200 ஆண்டிற்கு முன்பே... இரும்பு தொழில்நுட்பம் அறிந்த தமிழகம்..

தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு குறித்த ஆய்வு: வரலாற்றில் ஏன் முக்கியம்?

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்   பிபிசி தமிழ்  10 மே 2022 

கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களின் மீது நடத்தப்பட்ட காலக் கணிப்புப் பரிசோதனைகளின்படி, தமிழ்நாட்டில் 4,200 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்படுத்தப்பட்டது தெரியவந்திருப்பதாக தமிழ்நாடு தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மே ஒன்பதாம் தேதியன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 110 விதியின் கீழ் வாசித்த அறிக்கை ஒன்றின் மூலம் தற்போது தமிழ்நாட்டில் நடந்துவரும் தொல்லியல் ஆய்வுகளில் ஏற்பட்டிருக்கும் கண்டுபிடிப்புகள், முன்னேற்றங்கள் ஆகியவை குறித்துத் தெரிவித்தார்.

அதன்படி, தமிழ்நாட்டில் நடந்துவரும் தொல்லியல் ஆய்வுகளில் தற்போது மூன்று முக்கியமான தகவல்கள் குறித்து அவர் தெரிவித்தார்.  

முதலாவதாக, கீழடிக்கு அருகே அகரம் அகழாய்வுத் தளத்தில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை மகரந்தம் மற்றும் பைட்டோலித் முறையில் பகுப்பாய்வு செய்ததில், அங்கே நெற்பயிர்கள் பயிரிடப்பட்டிருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளது.

அடுத்ததாக, சிவகளை வாழ்விடப் பகுதியில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை ஆய்வு செய்ததில், அங்கே நீர் சென்றிருக்கக்கூடிய செங்கல் வடிகாலில் நன்னீர் சென்றிருப்பதும் தேக்கிவைக்கப்பட்ட நீர்நிலையிலிருந்து இந்த நீர் கொண்டு வரப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

மூன்றாவதாக, தமிழ்நாட்டில் இரும்பு பயன்பாட்டிற்கு வந்த காலம் குறித்த ஒரு முக்கிய தரவு தற்போதைய ஆய்வில் கிடைத்திருப்பதாக மாநில தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மயிலாடும்பாறை என்ற இடத்தில் ஈமச்சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் வாழ்விடப் பகுதியிலும் அகழாய்வுகள் மாநிலத் தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டன.

இந்தத் தொல்லியல் மேட்டின் வாழ்விடப் பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில், 104 செ.மீ. ஆழத்திலும் 130 செ.மீ. ஆழத்திலும் பல இரும்புப் பொருட்கள் கிடைத்தன. இந்த இரண்டு அடுக்குகளிலும் இருந்து பல கரிமப் பொருட்களும் கிடைத்தன. இதிலிருந்து இரண்டு கரிம மாதிரிகள் அமெரிக்காவிலுள்ள ப்ளோரிடா மாநிலத்தின் பீட்டா பகுப்பாய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு AMS (Accelerator Mass Spectrometry) என்ற முறையில் காலக் கணக்கீடு செய்யப்பட்டு, அதன் முடிவுகள் தற்போது பெறப்பட்டுள்ளன.

அதன்படி, ஒரு கரிமப் பொருளின் சராசரி மைய அளவீட்டுக் காலம் கி.மு. 1615 என்றும் மற்றொரு கரிமப் பொருளின் சராசரி மைய அளவீட்டுக் காலம் கி.மு. 2172 என்றும் தெரியவந்துள்ளது.

இதன்மூலம், தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4200 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்துவந்தது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மாநில தொல்லியல் துறை தெரிவிக்கிறது.

இரும்புக் காலத்தை அறிவது ஏன் முக்கியம்?

மனிதர்கள் இரும்பிற்கு முன்பாகவே தாமிரத்தை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். ஆனால், இரும்பின் அளவுக்கு தாமிரம் உறுதியான உலோகம் இல்லை என்பதால், வனங்களை அழித்து விவசாய நிலமாக்குவதில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. தவிர, தாமிரத்தைவிட இரும்பின் உருகும் வெப்ப நிலை அதிகம். அதற்கேற்ற உலைகளும் தாமிர காலத்தில் கிடையாது.

ஆகவே, ஒரு சமூகம் இரும்பின் பயன்பாட்டை அறியத் துவங்கியது என்றால், இரும்பை உருக்குவதற்கான தொழில்நுட்பத்தை அறிந்திருப்பதோடு, நாகரிகத்தின் அடுத்த கட்டத்திற்கும் நகரத் துவங்கியது என்பதைக் குறிக்கிறது. இதற்குப் பிறகு வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட சமூகம் உருவாகி, உபரி உற்பத்தி, செல்வம், இனக் குழுக்களுக்குத் தலைமை, அரசு ஆகியவையும் உருவாகத் துவங்கும்.

ஆகவேதான் இரும்புக் காலத்தின் துவக்கம் எப்போது ஏற்பட்டது என்பதற்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படுகிறது.

இந்தியாவில் இரும்புக் காலம் எப்போது துவங்கியது என்பதை அறிவதற்கான தொல்லியல் ஆய்வுகள் நீண்ட காலமாகவே நடந்து வருகின்றன. 1979ஆம் ஆண்டில் ராஜஸ்தானில் உள்ள அஹார் என்ற இடத்தில் கிடைத்த மாதிரிகளின் மூலம் இரும்புக் காலம் கி.மு. 1,300 என கண்டறியப்பட்டது. கர்நாடக மாநிலம் புக்காசாகராவில் சேகரிக்கப்பட்ட நான்கு கரிமங்களை ஆய்வு செய்ததன் மூலம் அங்கு இரும்பு உற்பத்திக் காலம் கி.மு. 1,530 என்று நிறுவப்பட்டது.

பின்னர், மத்திய கங்கைப் பள்ளத்தாக்கில் இரும்புத் தாது நிறைந்த ராய் பூரா என்ற இடத்தில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் அங்கு இரும்புக் காலம் கி.மு. 1700-1800 வாக்கில் இருந்திருக்கலாம் என உறுதிசெய்யப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மல்ஹார் மற்றும் வடக்கு கர்நாடகாவில் உள்ள பிரம்மகிரி ஆகிய இடங்களில் நடந்த ஆய்வுகளில் இரும்புக் காலம் கி.மு. 2,000 அளவுக்குப் பழமையானது எனத் தெரியவந்தது

படக்குறிப்பு,

இந்தியாவின் இரும்புக் காலம் குறித்த கால வரிசை பட்டியல்

ஆகவே, இந்தியாவின் பிற பகுதிகளில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்ட காலம் கி.மு. 2000 எனக் கருதப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் குறிப்பாக சேலம் பகுதியில் அதிக அளவில் இரும்புத்தாது கிடைத்தபோதிலும், இரும்பின் காலத்தை சரியாக உறுதிப்படுத்த முடியாத நிலையே இருந்தது.  

மேட்டூருக்கு அருகில் மாங்காடு என்ற ஊரில் உள்ள ஈமச்சின்னத்திலிருந்து சேகரிக்கப்பட்ட இரும்பு மாதிரியின் சராசரி அளவீட்டுக் காலம் கி.மு. 1510 என்று பெறப்பட்டது. தற்போதுவரை, தமிழ்நாட்டில் இரும்புப் பயன்பாடு இருந்த இடங்களில் மிகப் பழமையானதாக இந்த இடம் இருந்தது. இருந்தபோதும் இந்தியாவின் பிறபகுதிகளில் இரும்புக் காலம் இதற்கு முன்பே தோன்றியிருந்தது.

ஆகவே, தமிழ்நாட்டில் இரும்புக் காலத்தைச் சரியாகக் கண்டறியும் நோக்கிலான ஆய்வுகளின் மீதான ஆர்வம் நீடித்துவந்தது. ஆனால், தற்போது மயிலாடும்பாறையில் கிடைத்திருக்கும் முடிவுகளின்படி, இரும்புக் காலம் கி.மு. 2172வரை பழமையானது எனத் தெரியவந்துள்ளது.

மயிலாடும்பாறையில் தற்போது இக்காலக் கணிப்புச் செய்யப்பட்ட மண்ணடுக்குக் கீழாக மேலும் 25 சென்டி மீட்டர் அளவுக்கு பண்பாட்டு எச்சங்கள் காணப்படுவதாக தொல்லியல் ஆய்வில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், கறுப்பு - சிவப்பு வண்ணப் பானைகள் இரும்பு காலத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டன என்று முன்பு கருதப்பட்டது. ஆனால், தற்போது இம்மாதிரிப் பானைகள் புதிய கற்காலத்தின் பிற்பகுதியில் பயன்பாட்டிற்கு வந்திருக்கலாம் எனத் தெரிகிறது.

இந்தியாவில் இதுவரை இரும்புக்காலப் பண்பாடு நிலவிய கங்கைச் சமவெளி, கர்நாடக மாநிலம் உள்ளிட்ட 28 இடங்களில் ஏஎம்எஸ் காலக் கணக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த 28 முடிவுகளிலும் தற்போது கிடைத்துள்ள மயிலாடும்பாறையில் கிடைத்துள்ள ஆண்டுக் கணிப்பே காலத்தால் முந்தியது என்கிறது மாநிலத் தொல்லியல் துறை.

தமிழ்நாடு தொல்லியல் துறையின் அடுத்தகட்ட ஆய்வுகள்

சங்ககாலத் துறைமுகமான கொற்கையில் ஆழ்கடல் ஆய்வுக்கான முன்கள ஆய்வு இந்த மாதம் தொடங்கப்படவுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின்போது கண்டெடுக்கப்பட்ட ஏராளமான பானை ஓடுகளில் காணப்படும் குறியீடுகளுக்கும் சிந்துவெளி நாகரிக அகழாய்வுகளில் கிடைத்த முத்திரை எழுத்துகளுக்குமான உறவை ஒப்பீடு செய்து ஆய்வு செய்யும் திட்டத்தையும் தமிழ்நாடு தொல்லியல் துறை இந்தாண்டு முதல் மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும், கேரளாவின் பட்டணம், கர்நாடக மாநிலத்திலுள்ள தலைக்காடு, ஆந்திர மாநிலத்தின் வேங்கி, ஒடிசாவிலுள்ள பாலூர் ஆகிய பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ளவிருப்பதாக மாநிலத் தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மயிலாடும்பாறையில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அறியப்பட்ட பகுதியில் 2003ஆம் ஆண்டில் தமிழ் பல்கலைக்கழகத்தின் சார்பில் பேராசிரியர் கா. ராஜன் ஒரு அகழாய்வை மேற்கொண்டார். அந்த அகழாய்வில் நம்பிக்கை தரக்கூடிய தரவுகள் கிடைத்ததையடுத்து, தமிழ்நாடு தொல்லியல் துறை அங்கு புதிதாக அகழாய்வுகளை மேற்கொள்ள முடிவுசெய்தது.

No comments:

Post a Comment

'சிங்கம்' போன்ற படங்கள் ஆபத்தான செய்தியை அனுப்புகின்றன: பாம்பே உயர்நீதிமன்ற நீதிபதி

   Films Like 'Singham' Send Dangerous Message: Bombay High Court Judge https://www.newspointapp.com/news/india/films-like-singham-s...