Sunday, April 10, 2022

தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் தெரியாத 9ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள்

தமிழ் தெரியாத 9ம் வகுப்பு படிக்கும் 

மாணவ, மாணவிகள் ! 

55 ஆண்டுகளாய் திராவிடியார் 

சிந்தனையாளர் ஆட்சியில் தமிழின் நிலை

தமிழக அரசு பள்ளிகளில், கடந்த மாதம், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட திறனாய்வு தேர்வில், 20 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர், தாய்மொழியான தமிழை கூட முழுமையாக எழுதவும், படிக்கவும் தெரியாத நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த பள்ளிக்கல்வித்துறை, அம்மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க உத்தரவிட்டுள்ளது.
 
தமிழகத்தில், இரு ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசு நிதியுதவியுடன் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கம் செயல்படுத்தப்பட்டது. இதில், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தவும், மாணவர்கள், பள்ளிக்கு வராமல் இடையில் நிற்றபதை குறைக்கவும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
55 ஆண்டுகளாய் திராவிடியார் சிந்தனையாளர்கள் ஆட்சியில் தமிழின் நிலை
தமிழக அரசு பள்ளிகளில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களில், எட்டாம் வகுப்பு வரை, "ஆல்பாஸ்' செய்யப்பட்டு வரும் மாணவர்கள், ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெற முடியாமல், பள்ளியில் இருந்து நின்று விடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இடைநிற்றலை தடுத்து நிறுத்த, கடந்த கல்வியாண்டின் இறுதியில், ஒவ்வொரு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கும், ஒரு தொகுப்பூதிய ஆசிரியர் நியமிக்கப்பட்டார். இவர் மூலம், ஒன்பதாம் வகுப்பில், கற்பதில் இடர்பாடு உள்ள மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, நான்கு மாதம் வரை பள்ளி நேரம் தவிர்த்து, சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டது. 

20 முதல், 30 சதவிகித மாணவர்கள்:


இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கத்தின் சார்பில், தமிழகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட, 96 பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறிவுத்தேர்வு நடத்தப்பட்டது. இதில் தமிழை எழுதவும், படிக்கவும் தெரிகிறதா எனவும், கணிதத்தில் மிக அடிப்படையான எண்கள், கூட்டல், கழித்தல், வகுத்தல் உள்ளிட்டவைகளை சோதிக்கும் வகையிலும், வினாத்தாள் தயாரிக்கப்பட்டது. இதில், 20 முதல், 30 சதவிகித மாணவர்கள், தாய்மொழியான தமிழை கூட பிழையின்றி, எழுதவும், படிகக்கவும் முடியாத நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கணிதத்திலும் இதே நிலையே நீடிக்கிறது. அடிப்படையான தமிழ் தெரியாத நிலையில், இவர்களால் அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களையும் கற்றுக்கொள்ள முடியாது. ஆங்கிலத்தின் நிலையோ கேட்க தேவையே இல்லை. 

இதனால், அதிர்ச்சியடைந்த பள்ளிக்கல்வித்துறை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உள்ள, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை தமிழ், படிக்கவும், எழுதவும் செய்து, அதில் பிழையோடு எழுதும் மாணவர்களை தனித்தனியே கண்டறிந்து, பள்ளி வாரியாக பட்டியல் தயார் செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் இப்பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு, அதே பள்ளியில், அனைத்து பாட ஆசிரியர்களையும் கொண்டு, மாலையில் ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
நவம்பர், 30ம் தேதிக்குள் இம்மாணவர்கள் தமிழை எழுதவும், படிக்கவும் தெரிந்து கொள்ளும் வகையில் பயிற்சியை தீவிரமாக நடத்த வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. சுயநிதி பள்ளிகளில் ஒன்றிரண்டு ஆண்டுகளில், அனைத்து மாணவர்களும் தமிழ், ஆங்கிலத்தை பிழையின்றி, எழுதவும் படிக்கவும் செய்யும் சூழலில், அரசு பள்ளிகளில், ஒன்பது ஆண்டு படித்த மாணவர்கள், தாய் மொழியான தமிழை கூட பிழையின்றி படிக்க முடியவில்லை என்ற நிலை, ஆசிரியர்களை மட்டுமின்றி, பெற்றோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பல ஆண்டுகளாக நீடித்து வரும், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் நிலை தெரிந்த பின், அவற்றை மூடி மறைக்காமல், நிலைமையை ஒப்புக்கொண்டு, அவர்களை கரையேற்றுவதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்துவரும் பள்ளிக்கல்வித்துறையின் நடவடிக்கை ஆசிரியர்களிடையேயும், பெற்றோரிடையேயும் பாராட்டை பெற்றுள்ளது.தமிழ் முழுமையாக கற்றுக்கொண்டால் மட்டுமே, தமிழ் வழிக்கல்வியில் படிக்கும் போது மற்ற பாடங்களையும் தவறின்றி படிக்க முடியும். அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் வராது என்ற நிலை மாறி, தமிழும் தெரியாது என்ற நிலை வருவதற்குள், தீவிர நடவடிக்கை அவசியம்.

"ஆல் பாஸ்' காரணமா? :


தமிழகத்தில், எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும், "ஆல் பாஸ்' என்ற முறையில் அடுத்த வகுப்புக்கு அனுப்பப்படுகின்றனர். இதனால், படிக்க தெரியாத மாணவர்கள் கூட, எட்டாம் வகுப்பு வரை வந்துவிடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களிடம் காணப்படுகிறது.இப்படிப்பட்ட மாணவர்களை கொண்டு, ஒவ்வொரு ஆசிரியரும், பத்தாம் வகுப்பில், 100 சதவிகித தேர்ச்சி விகிதத்தை தர வேண்டும் என, கல்வித்துறையால் விரட்டப்படுவதும், எங்களுக்கு ஒரு சோதனையாகவே உள்ளது. துவக்கப்பள்ளியில் இருந்து வெளிவரும் ஒவ்வொரு மாணவனும், எழுத, படிக்கவும், கணிதத்தின் அடிப்படை விசயங்களை தெரிந்து கொண்டது குறித்து உறுதிப்படுத்திய பின்பே, மேல்நிலைப்பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதற்கு துவக்கக்கல்வியை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெயர் குறிப்பிட விரும்பாத மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறினார்.

No comments:

Post a Comment

சசி தரூர்: ‘சட்டவிரோத இந்திய குடியேறிகளை நாடு கடத்த அமெரிக்காவுக்கு முழு உரிமை உண்டு.

Shashi Tharoor: ‘US is entirely entitled to deport illegal Indian immigrants… I’m only unhappy they sent them in military plane’ Senior Cong...